Tuesday 23rd of April 2024 08:07:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
“பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை - சபையில் பட்டியலிட்டார் ரணில்!

“பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை" - சபையில் பட்டியலிட்டார் ரணில்!


இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒரே கனத்தில் வெடித்துச் சிதறினால் ஆட்சியிலுள்ள அரசாங்கம் மாத்திரமன்றி, நாடாளுமன்றமும் இல்லாமல் போகும் நிலைமையே ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர், ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றாமல் இராணுவ மயமாக்கலை பின்பற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரான இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது கன்னி உரையை நடத்தி இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா அரச நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை தற்போது ஆவணங்களில் சரிவர குறிப்பிடப்படவில்லை என்ற தகவலை அம்பலப்படுத்திய அவர், தற்போதைய நிலைமையில் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய பிரச்சினை உருவாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் இன்று செல்வந்தர்களுக்கு வரிநிவாரணம் அளித்திருக்கின்றது. வறியவர்களுக்கு பட்டியைக் கொடுத்துள்ளது. இன்றைய நிலைமை என்ன? 2019ஆம் ஆண்டில் அந்நிய செலாவணி இருப்பு 700 கோடி டொலர்கள் இருந்தன. இன்று 400 கோடி டொலர்களை விடவும் அது குறைந்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டிய 300 கோடி ரூபாவை வேறு தேவைக்காக அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. இந்த பணம் எமது அறிக்கைகளில் உள்ளடக்கப்படவில்லை. வணிக வங்கிகளிலும் உள்ள கடன்கள் அறிக்கைகளில் இல்லை. இந்த மாத இறுதியில் 100 கோடி டொலர்கள் கடன் செலுத்த வேண்டியிருப்பதோடு மேலும் 200 கோடி டொலர் நிலுவையில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 78 கோடி டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாலும் இந்த வருடத்திலா அல்லது அடுத்தவருடத்திலா கிடைக்கும் என்பறு சந்தேகமே. சார்க் சொப், பங்களாதேஷிடமிருந்தும் கடன் பணம் கிடைக்கவுள்ளது, எனினும் இந்த இடத்திலிருந்து மேல் எழும்புவது எப்படி? இந்த நிலைமையிலிருந்து மேலே எழுவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் அல்லது 10 வருடங்கள் செல்லும் என பலரும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் இன்று தெளிவுபடுத்தவில்லை. அரசாங்கத்திடம் திட்டமும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் பேச்சுவார்த்தையை அரசாங்கம் நடத்தவேண்டும். பசளை, எரிபொருள், கல்வி என பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் ஓரணியில் வெடித்தால் அரசாங்கம் மாத்திரமல்ல, இந்த நாடாளுமன்றமும் இல்லாமல் போய்விடும். இன்று கோவிட் தொற்று ஒழிப்பிற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தோல்வியடைந்துள்ளது. அரசியலமைப்பிற்கமைய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கே இதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். 03,04 மற்றும் 43ஆவது பிரிவுகளில் அரசியலமைப்பில் காணப்படுகின்றது.

எனினும் அமைச்சரவைக்கு ஏன் இந்த அதிகாரத்தை வழங்கவில்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தில் கோவிட் ஒழிப்பிற்கான விசேட ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏன் அப்படிப்பட்ட குழுவை அமைக்கவில்லை? ஆனால் இராணுவத் தளபதியே இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளர்களுக்கு அமைச்சர் அல்லது அமைச்சரவையே கட்டளைகளை வழங்க முடியும். ஆனால் இன்று ஒட்டுமொத்த இராணுவ மயமாக்கலே இடம்பெறுகின்றது. ஜனநாயக நாட்டில் அமைச்சரவை, சிவில் அதிகாரம், இராணுவ அதிகாரம் என்று இருந்தாலும் இராணுவ அதிகாரத்தை மாத்திரமே பயன்படுத்தி நாட்டை ஆட்சிசெய்கின்றார்கள். இது பிழையாகும். நான் இராணுவத் தளபதியுடன் எந்த மோதலிலும் இல்லை. மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியிருந்தாலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இராணுவத்தையே அரசாங்கம் பயன்படுத்துகிறது. இந்த ஜனநாயக மற்றும் அரசியலமைப்புப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்த நான் கோரிக்கை விடுக்கின்றேன்”)

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிமசிங்க கூறிய கடன்தொகை முரண்பாட்டுக் குறிப்புக்கள் குறித்து “Verité Research” என்கிற கணிப்பு நிறுவனமொன்று உறுதிசெய்து கருத்து வெளியிட்டுள்ளது.

சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் குறித்து “Verité Research” என்ற நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணையின்மூலம் இலங்கை பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய தகவல் பதிவுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா, நாடு என்ற வகையில் அந்தந்த நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்கள், எந்த நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற தெளிவான தகவல்கள் இன்மை, அரச வெளிநாட்டுக் கடன் அளவு உண்மையான தொகையை விட குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளமை மற்றும் சில வெளிநாட்டுக் கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோது அவை காணாமல் போயுள்ளமை ஆகிய மூன்று பரபரப்பை ஏற்படுத்தும் காரணிகள் இந்த “Verité Research” நிறுவனத்தினால் நடத்தப்பட்டுள்ள விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட மூலங்களை குறிப்பிடுதலின் கீழ் அரச கூட்டுத்தாபனங்கள் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்களில் சேர்க்காமை காரணமாக 2019ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவிற்கு செலுத்த வேண்டிய முழு கடன் தொகையின் அளவானது உண்மையான அளவினைவிடவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த வருடத்தில் சீனாவுக்கு சுமார் 5429 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என்ற போதிலும், 3387 டொலர்களாக அது அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக திறைசேறியிடம் இருந்து 2007-2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் 2014ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காத் துறைமுக அதிகார சபையின் கணக்கிற்கு மாற்றப்பட்டு, மீண்டும் 2017ஆம் ஆண்டில் திறைசேறியின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதுவும் விசாரணையில் புலப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கடன் அளவானது 2019ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய மிகுதிக் கடன் தொகையானது, திறைசேறியின் கணக்கிலோ அல்லது துறைமுக அதிகார சபையின் கணக்கிலோ குறிப்பிடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE