Monday 18th of October 2021 12:23:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் சீன கம்யூனிஸ்ட் கட்சி - நா.யோகேந்திரநாதன்

நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் சீன கம்யூனிஸ்ட் கட்சி - நா.யோகேந்திரநாதன்


கி.மு.4000 ஆண்டுகள் காலகட்டம் முதல் மாறி மாறி சீனாவை ஆட்சி செய்து வந்த மிங், சுங் அரச வம்சங்களின் ஆட்சியில் மருத்துவம், வானியல், தத்துவம், போர்க்கலை கடல் வாணிபம் எழுத்துப் பயன்பாடு என்பவற்றில் சிறந்து விளங்கியது. ஆனால் நிலப்பிரபுக்களின் கொடிய சுரண்டல் காரணமாகவும் யுத்தப் பிரபுக்களின் தொடர் யுத்தங்கள் காரணமாகவும் நாட்டில் மக்கள் மத்தியில் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடின. மேலும் வெள்ளப் பெருக்குகள் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வரட்சிகள் என்பன காரணமாக வருடாவருடம் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இவ்வாறு வறுமையிலும் துயரத்திலும் அவலச் சாவுகளிலும் உழன்று கொண்டிருந்த சீனா, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறு ஆண்டுகள் காலத்தலைமையில் பெற்ற அற்புத வளர்ச்சி காரணமாக இன்று உலகின் தலைசிறந்த பொருளாதார, வர்த்தக இராணுவ வல்லரசாக விளங்கி வருகிறது.

தற்சமயம் சீனாவின் பொருளாதாரம் செல்வாக்குக்குள் ஏறக்குறைய 100 உலக நாடுகள் உட்பட்டுள்ளன. சீனப் பங்குடமையில் இந்தோனேஷியா, வியட்நாம், ரஷ்யா, கம்பொடியா, லாவோஸ், இலங்கை ஆகிய நாடுகளில் 40 கைத்தொழில் பூங்காக்கள் இயங்கி வருகின்றன. ஒரே பாதை ஒரே மண்டல திட்டத்தால் மொத்தம் 64 நாடுகள் பயன்பெறுகின்றன. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு அமைவாக இந்து சமுத்திரத் துறைமுகங்களான பர்மாவின் சிற்வே, பங்களாதேஷின் சிட்டக்கங், பாகிஸ்தானின் கவுடார், இலங்கையின் அம்பாந்தோட்டை என்பன சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அது மட்டுமின்றி சீனா உள்நாட்டு உற்பத்தியில் உலகின் 4ஆவது இடத்தையும் வாங்கு திறனில் 2ஆவது இடத்தையும் ஏற்றுமதியில் 2வது இடத்தையும் இறக்குமதியில் 4வது இடத்தையும் வகிக்கிறது. மேலும் அணு ஆயுத வல்லரசாகவும் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் அனுப்புமளவுக்கும் சீனா உயர்ந்து நிற்கிறது.

இப்படியான பிரமாண்டமான சாதனைகள் சீன தேசம் இலகுவாகப் பெற்றுக் கொள்ளவில்லை. தலைவர் மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்டுகளும் சீன விடுதலைப் படையும் சீன மக்களும் தங்கள் உழைப்பையும் உதிரத்தையும் உயிர்களையும் அர்ப்பணித்து நடத்திய நீண்ட போராட்டங்களின் காரணமாகவே இந்த நிலைமை உருவாக்கப்பட்டது.

துன்பமும் இழப்புகளும் ஏமாற்றங்களும் துரோகங்களும் குறுக்கிட்ட போதிலும் உறுதி குன்றாது முன் நடந்த நூறு வருட காலத்தின் அறுவடையே இன்றைய மேன்மை நிலையாகும் என்பதை மறுத்துவிட முடியாது.

இலட்சோப இலட்சம் போராளிகள், செஞ்சேனையினர், தொழிலாளர்கள், விவசாயிகள் உயிர்களின் மீது கட்டியமைக்கப்பட்டதே இன்றைய வெற்றிகளாகும்.

1911ம் ஆண்டு ஜனநாயகவாதியான சன்யாட்சன் தலைமையில் நாடு பரந்து இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாகவும் யுவாங் சுங் சாய் என்ற யுத்தப் பிரபுவின் படை நடவடிக்கை காரணமாகவும் மிங் அரச வம்சவத்தின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. 2012ல் சன் யாட்சன், யுவாங்சுங் சாய் தலைமையில் கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டு மக்கள் சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்படுகிறது.

1916ல் யுவாங் சுங் சாய் மரணமடையவே ஆட்சியதிகாரம் சன் யாட்சன் தலைமையிலான கொமிடாங் வசமாகிறது. சன்யாட்சன் சோவியத் நாட்டின் உதவியுடன் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கிறார். 1920ல் சன்யாட்சனின் இறப்பையடுத்து அதிகாரத்துக்கு வந்த கொமின்டாங்கின் அடுத்த தலைவரான சியாங்கை சேக் சோவியத் உறவை முறியடித்ததுடன் தனது தலை நகரை நான்கிங் மாவட்டத்துக்கு மாற்றி மேற்கு நாடுகளின் தூதரகங்களைத் திறக்கிறான்.

சன்யாட்சனால் உருவாக்கப்பட்ட தேசிய அரசு ஏகாதிபத்திய சார்பு அரசாக மாற்றப்பட்ட நிலையிலேயே அதிலுள்ள முற்போக்காளர்கள் வெளியேறுகின்றனர்.

அப்படி வெளியேறிய 9 பேரைக் கொண்ட ஒரு குழுவினரால் ஒரு ஆற்றங்கரையில் நின்ற படகொன்றில் முதல் முதலாகக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அன்று 9 பேருடன் 1921ம் மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிதான் 100 ஆண்டுகளில் சீனாவை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை நோக்கிமுன் கொண்டு சென்றுள்ளது.

1921ல் ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஷங்காய் தொழில் நகரத்தை மையமாகக்கொண்டு பணியாற்றிய தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிக் குழுக்களை உருவாக்குகின்றனர். 'ஷங்காய் புரட்சி' எனப் பெயர் பெற்ற தொழிலாளர் புரட்சி 1927ல் வெடிக்கிறது. அப்புரட்சி சியாங்கை ஷேக்கின் படையால் ஒரு வாரத்துக்குள் ஒடுக்கப்பட்டதுடன் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். எஞ்சிய புரட்சியாளர்கள் தொலைதூரக் கிராமங்கைள நோக்கிப் பின்வாங்குகின்றனர். அப்புரட்சி தோல்வியில் முடிந்தாலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிப் பாதையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே மா ஓசேதுங் கியாங்ஷி மாகாணத்தை மையமாகக் கொண்டு விவசாயிகள் சங்கங்களை உருவாக்கியதுடன், இளைஞர்களைக் கொண்ட கெரில்லாக் குழுக்களையும் உருவாக்கினார். இக்குழுக்கள் நிலப்பிரபுக்களின் அடியாட்களை கெரில்லாப் போர் முறையில் தாக்கி அவர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றினர். சில கொடிய நிலப்பிரபுக்களை கைது செய்து விசாரணை நடத்தித் தண்டனையும் வழங்கினர். அதன் காரணமாக நிலவுடைமையாளர்கள் மாகாணத்தை விட்டு ஓடி விடவே நிலங்கள், கால்நடைகள் என்பன விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இந்நிலையில் பின்வாங்கிய புரட்சிக் குழுக்களுக்கு அது ஒரு பொருத்தமான தளப்பிரதேசமாக அமைகிறது. மாஓ சேதுங் புரட்சிக் குழுக்களையும் கெரில்லா அணிகளையும் ஒன்றிணைத்து செஞ்சேனை என்ற நிரந்தர விடுதலைப் படையை உருவாக்குகிறார். அயல் மாகாணங்களிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் வந்து செஞ்சேனையில் இணையவே அது ஒரு இலட்சம் பேர் கொண்ட படையணியாக மாறுகிறது.

இந்நிலையில் சியாங்ஷி மாகாணத்தைக் கைப்பற்ற சியாங்கை சேக் மேற்கொண்ட இரு சுற்றி வளைப்புகள் முறியடிக்கப்படுகின்றன. மூன்றாவதாக இடம்பெற்ற மூன்றடுக்குச் சுற்றி வளைப்பில் செஞ்சேனையால் நின்று பிடிக்க முடியாத நிலையில் முற்றுகையை ஒரு பக்கத்தால் உடைத்துக்கொண்டு 10,000 கி.மீ. நீளமான நீண்ட பயணத்தை மேற்கொண்டு வட சீனாவை நோக்கி நகர்கின்றனர்.

இடையிடையே வழி மறிப்புத்தாக்குதல்களை மேற்கொண்ட சியாங்கே ஷேக்கின் படைகளை வெற்றிகொண்டும் யுத்தப் பிரபுக்களின் படைகளைத் தோற்கடித்தும் பெரும் வனாந்தரங்கள், மலைகள், ஆபத்தான ஆறுகள் என்பனவற்றைக் கடந்தும் செஞ்சேனையினர் வட சீனா நோக்கி முன்னேறுகின்றனர். பாதையெங்கும் ஏராளமான விவசாயிகள் செஞ்சேனையில் இணைகின்றனர். நீண்ட பயணத்தின் போது பல செஞ்சேனை வீரர்கள் உயிரிழந்த போதும் 1 இலட்சம் பேருடன் புறப்பட்ட படை வடசீன எல்லையை அடையும்போது 5 இலட்சமாக உயர்ந்திருந்தது. வட சீனாவில் அதிகாரத்திலிருந்த பல யுத்தப் பிரபுக்கள் செஞ்சேனையிடம் சரணடைந்ததுடன், தங்கள் படைகளையும் அவர்களுடன் இணைத்துக்கொண்டனர்.

1934ல் ஆரம்பமான நீண்ட பயணம் 1935ல் நிறைவுபெற யெனான் மாகாணத்தைத் தலைநகராகக் கொண்டு வடமேல் மாகாணங்களில் விடுதலைப் பிரதேசங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில் 1937ல் சீனாவின் மீது ஜப்பான் ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கிறது. மாஓ சேதுங் தனது எதிரியான சியாங்கை சேக்குடன் ஜப்பானுக்கு எதிரான போரில் ஐக்கிய முன்னணி அமைக்கிறார். 1939ல் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அது சீனாவை விட்டு வெளியேறுகிறது. இச்சந்தர்ப்பத்தில் சியாங்கே சேக் மீண்டும் செஞ்சேனை மீது போர் தொடுக்கிறான். 9 வருடங்கள் தொடர்ந்த போரில் 5 இலட்சம் செஞ்சேனை வீரர்கள் கொல்லப்படுகின்றனர். இறுதியில் 1949ல் சியாங்கை சேக் படைகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட அவன் தாய்வானுக்குத் தப்பி ஓடி விடுகிறான்.

1949 ஒக்டோபர் 1ம் நாள் டியாங்மிங் சதுக்கத்தை தலைவர் மாஓ சேதுங் சீன மக்கள் குடியரசாகப் பிரகடனம் செய்கிறார்.

அத்துடன் சீனா சுபீட்சத்தை நோக்கிப் பாய்ந்து விடவில்லை. இன்றைய நிலையைச் சீன அடைய மீண்டும் மீண்டும் கடின உழைப்புடன் போராட வேண்டியிருந்தது. சீனா சுதந்திரம் பெற்றதுமே சோவியத் நாட்டின் உதவியுடன் ஐந்தாண்டுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் எனப் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தது.

விவசாய நிலங்களெல்லாம் கம்யூன் என்றழைக்கப்பட்ட அரச கூட்டுப் பண்ணைகளாக உருவாக்கப்பட்டு விவசாய உற்பத்தி முறைகள் திட்டமிட்டு முன்னேற ஆரம்பித்தன.

எனினும், 1958ல் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்குமிடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் காரணமாக சோவியத் நாடு தனது எல்லா உதவிகளையும் நிறுத்தியது.

இந்நடவடிக்கை சீனாவை ஒரு பயங்கர நெருக்கடி நிலைக்குத் தள்ளியது. 53 வீதமான மக்கள் கொடிய வறுமைக்கு முகம் கொடுக்க வேண்டிய அவல நிலை எழுந்தது.

எனினும் மாசேதுங்கோ கம்யூனிஸ்ட் கட்சியோ சீன மக்களோ மன உறுதியை இழந்து விடவில்லை. மாஓ மக்களை நோக்கி 'கடுமையாக உழைப்போம்; முன்னேறிப் பாய்வோம்' என அறைகூவல் விடுக்கிறார்.

அவர் நெருக்கடி ஏற்பட்டபோது உலக வங்கியிடமோ, சர்வதேச நாணய நிதியத்திடமோ, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமோ ஓடவில்லை. அவர் மக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றின் உந்து சக்தி என்ற கோஷத்துடன் மக்களை நம்பி மக்களையே களமிறக்கினார்.

கம்யூன்கள் விவசாய உற்பத்தியுடன் நின்று விடாது தமக்குத் தேவையான உரவகைகள், விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்கள் என்பனவற்றைத் தாமே தயாரித்தனர்.

தமக்குரிய வீடுகளைத் தாமே கூட்டாகக் கட்டினர். குதிரைகள், எருமை மாடுகள் முதலிய கால்நடைகளை முழுமையாகப் பயன்படுத்தினர். ஒவ்வொரு கம்யூன்களும் குறுகிய காலத்திலேயே தன்னிறைவு கொண்ட அமைப்புகளாக மாறின.

அடுத்து 'யாங்ஷியின் சீற்றத்தைக் கட்டுப்படுத்துங்கள்' என மக்களிடம் அறைகூவல் விடுத்தார். எவ்வித கனரக வாகனங்களுமின்றியே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 5 இலட்சம் மக்கள் இரண்டு வருடங்கள் உணவுக்கும் உடைக்கும் மட்டுமே பணியாற்றினர். சாதாரண உபகரணங்களைக் கொண்டே யாங்சிக்குக் குறுக்காக அணை கட்டப்பட்டு அதன் மீது வாகனப் பாதையும், ரயில் பாதையும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டன. அதன் காரணமாக விவசாயத்தில் பெரும் முற்பாய்ச்சல் ஏற்பட்டதுடன் சீனாவின் பெரும் பகுதி மின்சார மயமாக்கப்பட்டது. தரிசு நிலங்களெல்லாம் விளை பூமிகளாக மாறின. புதிய புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு உற்பத்தி பெருகியது.

இவ்வாறு தன்னிறைவுப் பொருளாதாரத்தை எட்டிய சீனா விளையாட்டுப் பொருட்கள், துணி வகைகள் என்பவற்றைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு வளர்ந்தது.

நாடு பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் கட்சிக்குள்ளும் அதிகார பீடங்களிலும் முதலாளித்துவப் போக்கு வளர்வதை அவதானித்த மா ஓ கலாசாரப் புரட்சியை 1966ல் ஆரம்பித்தார். 'விமர்சனம் – சுய விமர்சனம்' என்ற ஆயுதத்தின் மூலம் தீய சக்திகள் துடைத்தெறியப்பட்டனர். 1972 ஆம் ஆண்டில் சீனா ஐ.நா. மன்றத்தில் உறுப்புரிமை பெற்றதுடன் பாதுகாப்புச் சபை உறுப்பினராகவும் நியமனம் பெற்றது.

1976ல் மா ஓ மரணமடைய டென்சியாபெங் அதிகாரத்துக்கு வருகிறார். அவர் 1980ல் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகம் செய்ததுடன், ஷங்காய் துறைமுக நகரைச் சுதந்திர வர்த்தக வலயமாக்குகிறார்.

அதன் மூலம் அந்நிய முதலீடுகள் சீனாவில் குவிந்ததுடன், உலக வர்த்தகச் சந்தையில் சீனப் பொருட்களுக்குக் கேள்வி அதிகரித்தது. சீனாவில் ஏனைய நாடுகளை விட உற்பத்திச் செலவு குறைவாதலால் சீன பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. அங்கு வாழ்க்கைச் செலவு மிகமிகக் குறைவாதலால் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியே வழங்கப்படுவதாலும் மூலப் பொருட்களை சீனாவிலேயே பெறுவதாலும் சீனாவில் உற்பத்திச் செலவு மலிவாகவே உள்ளது.

அதேபோன்று மருத்துவத் துறையிலும் தமது பாரம்பரிய முறைகளையும் மேற்கத்தைய முறைகளையும் ஒன்றிணைத்து மருத்துவத் துறையில் பெரும் சாதனைகளைச் செய்து வருகின்றனர்.

இன்று சீனா உலக வல்லரசுகள் முன் தலைநிமிர்ந்து நிற்கிறதென்றால் சீனா மனித உழைப்புக்குக் கொடுக்கும் மதிப்பும் தன்னிறைவுப் பொருளாதார அடித்தளமுமேயாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 100 ஆண்டு காலப் பகுதியில் எத்தனையோ இடர்களையும் இழப்புகளையும் சந்தித்தபோதும் அதன் கொள்கைப் பற்றும் இலட்சிய உறுதியும் காரணமாக இன்று சீனாவை உலக வல்லரசுகளுக்குச் சவால் விடும் நாடாக உருவாக்கியுள்ளது என்பதை மறுத்து விடமுடியாது.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனாபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE