Thursday 28th of March 2024 03:51:14 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்றுறுதி!

தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்றுறுதி!


இந்தியாவில் திரிபுபெற்ற டெல்டா வைரஸின் புதிய திரிபாக அடையாளம் காணப்பட்டிருக்கும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றுடன் தமிழ்நாட்டில் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கிவிடாத நிலையில் தற்போது டெல்டா பிளஸ் வகை வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங், இந்தியாவின் 12 மாநிலங்களில் 48 நபர்களுக்கு டெல்டா பிளஸ் வகை பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும். தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு இந்த வகை கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் உள்ளதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு இந்திய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரோனா வைரஸ்களின் மரபணுக்களை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக 12 நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 'இன்சாகோக்' அமைப்பு டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாக பரவுவதாகவும், நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்புத் சக்தியை குறைத்தல் ஆகிய தன்மைகளுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், இந்த மூன்று மாவட்டங்களில் நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும், கொரோனா பரிசோதனைகளை பரவலாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை தேவையான அளவு இன்சாகோக்’ அமைப்பின் கீழ் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷண் கேட்டுக் கொண்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE