Monday 18th of October 2021 12:45:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 61 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 61 (வரலாற்றுத் தொடர்)


1977 பொதுத் தேர்தலும் தனிநாட்டுக் கோரிக்கையும்! - நா.யோகேந்திரநாதன்!

'1976 மே மாதம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மகாநாட்டில் இந்த நாட்டிலுள்ள தமிழ் தேசத்தின் எதிர்காலம் பற்றி மாற்றியமைக்கப்பட முடியாத முடிவு ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைமைகளுக்கான எனது அறிவுரையானது எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள். நாங்கள் கசப்புணர்வினைத் தவிர்த்துவிட்டு அமைதியாகப் பிரிவோம். இது இரு தேசங்களும் சமத்துவத்தின்பால் இணங்கிச் செல்ல இது உதவும். தமிழ் மக்களுக்கு வேறு மாற்று வழியில்லை. இளைய தலைமுறையினருக்கிடையே கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. அதனை இனியும் வளரவிடக்கூடாது. வளரவிட்டால் அது பெரும் முரண்பாட்டில் சென்று அந்நியத் தலையீட்டுக்கு அவசியப்பாடு வரைச் செல்லும். ஆகவே இதனை அமைதியான முறையில் தீர்ப்பது அவசியம். சத்தியமே இறுதியில் வெல்லும் என நாம் உறுதியாக நம்புகிறோம். பொறுமை என்னும் யுத்தத்தில் நாம்வெற்றி பெறுவோம்'.

இது 1977 மார்ச் 26ம் திகதி திருகோணமலை இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். இனப்பிரச்சினை நியாயபூர்வமாகத் தீர்க்கப்படாவிட்டால் அந்நிய நாடுகளின் தலையீடு ஏற்படும் என்ற விடயத்தை அவர் அன்றே எதிர்வு கூறியிருந்தார்.

1977ல் இடதுசாரி ஐக்கிய முன்னணியை விட்டு வெளியேறி விட்ட நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கியஸ்தர்களும் அரசாங்கத்தை விட்டு படிப்படியாக வெளியேறிக் கொண்டிருந்தனர். இவ்வெளியேற்றங்கள் 1977ல் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்த நிலையில் அரசாங்த்துக்குப் பல நெருக்கடிகளை உருவாக்கியது.

அந்த நிலைமையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேச்சுகளை நடத்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். இக்கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 26.02.1977 அன்று இடம்பெற்றது.

இதில் அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் கருத்தில் எடுக்கமுடியாதெனவும் ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார் எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையில் சமரசத்துக்கு இடமில்லை எனவும் ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வெதனையும் ஒரு இடைக்கால ஏற்பாடாக ஏற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார். அதையடுத்து 1977.03.18ம் நாள் இடம்பெற்ற 2ம் சுற்றுப் பேச்சுகளில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமிழ்மொழி உபயோகம், அதிகாரப் பரவலாக்கம் என்பன தொடர்பாக இணக்கம் தெரிவித்ததுடன் தரப்படுத்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் சம்மதித்தார். சந்திப்பு சுமுகமாக இடம்பெற்று முடிவடைந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் சில நாட்களிலேயே திருமதி ஸ்ரீமாவோவின் வாக்குறுதிகளை நம்பமுடியாதென தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அதையடுத்து 25.03.1977ல் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டிலே திரு.செல்வநாயகம் அவர்கள் மேற்படி உரையை நிகழ்த்தியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுகளின் போதும் சரி அதன் பின்பு இடம்பெற்ற திருகோணமலை மாநாட்டின் போதும் சரி திரு.செல்வநாயகம் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எந்தவித சமரசத்துக்கும் இடமில்லையெனத் திட்டவட்டமாகத் தெரிவித்தபோதிலும் கூட ஒரு இடைக்காலத் தீர்வாக சில விட்டுக் கொடுப்புகளுக்குத் தயாராயிருந்தார். இது அவரின் மிகப் பெரும் புத்திபூர்வமான காய் நகர்த்தல் எனக் கருதப்பட்டது.

ஆனால் அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அவர் உயிரோடு இருக்கவில்லை. திருமலை மாநாடு இடம்பெற்று சில நாட்களில் அவரை ஏற்கனவே பாதித்திருந்த 'பார்க்கின்ஸ்' நோய் காரணமாக 3 நாட்கள் கோமாவில் கிடந்த பின்ப 26.04.1977ல் உயிரிழந்தார்.

அவரின் மரணம் இன, மத. கட்சி பேதங்களைக் கடந்த முழுத் தமிழ் மக்களையுமே சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மரணச் சடங்கின்போது யாழ். நகரமே முழுமையாக மக்களால் நிறைந்திருந்தது.

நாடாளுமன்றத்தில் 06.09.77 அன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றபோது அப்போதைய பிரதமர் ஜே.ஆர்.ஜயவர்த்தன, 'என்னுடைய சமுதாயத்துக்கோ வேறெந்தச் சமூகத்துக்கோ செல்வநாயகம் தம்மைக் கைவிட்டார் என்று சொன்ன ஒருவரைக் கூட நான் கண்டதில்லை', எனக் குறிப்பிட்டிருந்தார்.

1965 – 1970 காலப் பகுதியில் டட்லி – செல்வா உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாவட்ட சபையைத் தன்னால் வழங்க முடியாதென டட்லி சேனநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்த பின்பும்கூட அந்த ஆட்சிக்கு இறுதிவரை தமிழரசுக் கட்சியினர் ஆதரவளித்த விடயத்தை நினைவு கூர்ந்து ஜே.ஆர். இக்கருத்தை வெளியிட்டிருக்கலாம்.

எப்படியிருந்தபோதிலும் ஐ.தே,கட்சியினரால் மட்டுமின்றி அவரின் அரசியல் எதிரிகளால்கூட மிகவும் மதிக்கப்படும் தலைவராகச் செல்வநாயகம் விளங்கினார் என்பது மறுக்கமுடியாது. தமிழ் இளைஞர்களால் கொலை செய்யப்பட இலக்கு வைக்கப்பட்ட அமைச்சர் குமாரசூரியர் கூட ஒருமுறை செல்வநாயகம் அவர்கள் அவரைச் சந்திக்கச் சென்றபோது 'லிப்ற்' வேலை செய்யாத நிலையில் செல்வா அவர்கள் படியேற வருவதை அறிந்து உடனே தானும் மாடிப்படிகளால் இறங்கி வந்து அவரைக் கைத்தாங்கலாக மேலே அழைத்துச் சென்றார். அதுமட்டுமின்றி காங்கேசந்துறைக்கு ஒரு தபாலகம் வேண்டுமென்று செல்வநாயகம் வைத்த கோரிக்கையை உடனடியாகவே நிறைவேற்றி வைத்தார்.

திரு.செல்வநாயகம் அவர்களின் மறைவின் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் யார் என்ற பிரச்சினையில் சர்ச்சைக்கே இடமிருக்கவில்லை. தளபதி என்று அழைக்கப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஏற்கனவே மூத்த தலைவரான மு.திருச்செல்வம் 22.11.1976லும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம் 09.02.1977லும் காலமாகி விட்டனர். வட்டுக்கோட்டை மாநாட்டை அடுத்து தொண்டமானும் த.வி.கூட்டணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகி விட்டார். அதன் காரணமாக செல்வநாயகத்துக்கு அடுத்தவராகக் கருதப்பட்டவரும் இளைஞர்களின் அபிமானத்தைப் பெற்றவருமான அ.அமிர்தலிங்கம் த.வி.கூட்டணியின் தலைவரானார்.

அடுத்தவாரம் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படாத நிலையில் அவர்களுடன் பேசுவதில் எவ்வித பயனுமில்லையென்றே அமிர்தலிங்கம் கருதினார். எனவே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுகளைத் தொடர விரும்பவில்லை.

இந்த நிலையில் தொண்டமான அவர்கள் ஐ.தே.கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குமிடையேயான ஒரு பேச்சுவார்த்தையைத் தனது கொழும்பிலுள்ள வீட்டில் ஏற்பாடு செய்தார்.

இப்பேச்சுகளின்போது அமிர்தலிங்கம் தாம் தமது கோரிக்கைகளைத் தேர்தல் நேரத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் தற்சமயம் மீண்டும நாட்டில் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தாம் தமிழ் மொழியின் அந்தஸ்து, சிங்களக் குடியேற்றங்கள், தரப்படுத்தல், மலையக மக்களின் பிரஜாவுரிமை என்பன தொடர்பான தீர்வு பற்றிப் பேசவுள்ளதாகவும் தெரிவித்தனர். அவற்றை ஏற்றுக்கொண்ட ஐ.தே.கட்சி அவை பற்றித் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவுள்ளதாகவும் தெரிவித்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தென்னிலங்கைத் தொகுதிகளில் போட்டியிடாத போதிலும் அங்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தனர். கொழும்பு, அனுராதபுரம் ஆகிய இடங்களை நிரந்தர குடியிருப்பகளாகக் கொண்டு கணிசமான தமிழர்கள் குடியிருந்தனர். மேலும் அரசாங்க ஊழியர்கள், பெரும் மொத்த விற்பனை உரிமையாளர்கள், சில்லறைக் கடை உரிமையாளர்கள், உணவகங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், மலையகத் தமிழர்கள் எனக் கணிசமான தமிழர்கள் தென்னிலங்கையில் பல ஊர்களிலும் வாழ்ந்தனர். அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது. எனவே ஜே.ஆர்.ஜயவர்த்தன தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில வாக்குறுதிகளைச் சேர்ந்ததன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவை ஐ.தே.கட்சிக்கு உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடதுசாரிகளின் வெளியேற்றம் மூலமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் விலகல் மூலமும் கணிசமானளவு பலவீனமடைந்திருந்தது. அதுமட்டுமின்றி லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து இடதுசாரி ஐக்கிய முன்னணி என்ற பெயரில் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டன. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே கூடுதலாக வசைபாடி தங்கள் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இன்னொருபுறம் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ரோஹண விஜயவீர உட்பட ஜே.வி.பி. தலைவர்களை விடுவிப்பதாக வாக்குறுதியளித்தன் மூலம் ஜே.ஆர்.ஜயவர்த்தன பெருமளவு இளைஞர்களின் ஆதரவையும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவையும் தனது பக்கம் திரட்டிக் கொண்டார்.

சிங்களப் பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலவீனங்கள் காரணமாகவும் இடதுசாரிகளின் துரோகங்கள் காரணமாகவும் ஜே.ஆர். வெகுலாவகமாகவும் புத்திசாலித்தனத்துடனும் ஐக்கியப்படக்கூடிய சகல சக்திகளையும் தன்னுடன் ஐக்கியப்படுத்தவும் எதிரிகளின் முகாமுக்குள் குழப்பங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியும் ஐக்கிய தேசியக் கட்சியை வேகமாகவும் உறுதியாகவும் வெற்றியை நோக்கி முன் நகர்த்தினார்.

அதேவேளையில் வடக்குக் கிழக்கில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏற்படுத்திய பேரலை தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒரு அசைக்க முடியாத வலிமையான சக்தியாக உருவாக்கியிருந்தது.

ஆனாலும் கிளிநொச்சி, கோப்பாய், மானிப்பாய், உடுப்பிட்டி ஆகிய இடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கணிசமான ஆதரவு இருக்கத்தான் செய்தது.

கிளிநொச்சியில் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தபால் தந்தித் திணைக்களம், வீடமைப்புத் திணைக்களம், ஆசிரியர் தொழில் என்பவற்றில் 3,000க்கு மேலான வேலை வாய்ப்புகளை வழங்கியிருந்தார். மேலும் பின்தங்கிய பகுதிகளுக்கான பஸ் சேவைகள், பாலங்கள், வீதிகள் போன்ற அபிவிருத்திகள், நவீன சந்தை, நகர மண்டபம் எனப் பல அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொண்டிருந்தார். விவசாய உற்பத்திப் பொருட்களுக்குக் கூடுதலான விலை கிடைத்ததன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் கணிசமாக உணர்ந்திருந்தது.

இதேபோன்று மானிப்பாயில் வினோதனும், உடுப்பிட்டியில் கே.ரி.ராஜசிங்கமும் கணிசமான வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்ததுடன் பல சேவைகளையும் செய்திருந்தனர்.

அக்காலப் பகுதியில் குமாரசூரியரின் ஆதரவாளர்கள் மீது கிளிநொச்சியில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களும் பதில் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் இரு தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டுச் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடுவிலில் வினோதன் மீது மேலும் ஒரு கொலை முயற்சித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர் உயிர் தப்பிவிட்டார்.

ஒருபுறம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பரந்த ஆதரவு இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், துரோகிகள் பட்டம் சூட்டப்பட்டு அவர்கள் மேல் வன்முறைகள் ஏவி விடப்பட்டன.

இவ்வாறு வடக்கில் தமிழீழ அலையும், தெற்கில் ஜே.ஆர்.அலையும் ஓங்கியிருந்த அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது தேர்தல் இடம்பெறும் முன்பே தெளிவாகத் தெரிந்தபோதிலும் வடக்கிலும் தெற்கிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பகிரங்கமாக இறங்கி வேலை செய்ய முடியாதளவுக்கு அவர்கள் மேல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஜனநாயகவாதி எனத் தன்னைக் கூறிக்கொண்ட ஜே.ஆரும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஜே.ஆருக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறிக் கொண்ட அமிர்தலிங்கமும் தேர்தல் வெற்றிக்கு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடத் தயங்கவில்லை.

ஜே,ஆர்.ஜயவர்த்தனவினதும் அமிர்தலிங்கத்தினதும் ஜனநாயகத்தின் போலித்தன்மையை அவர்கள் தங்கள் தேர்தல் வெற்றிகளுக்காக அரசியல் போட்டியாளர்கள் மீது வன்முறைகளை ஏவி விட்டதன் மூலம் எம்மால் புரிந்து கொள்ளமுடியும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE