Thursday 25th of April 2024 03:38:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
அரசியல் கைதிகளின் விடுதலையும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்! - நா.யோகேந்திரநாதன்!

அரசியல் கைதிகளின் விடுதலையும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நிறுத்தப்படவேண்டுமெனத் தீர்மானம் எடுத்துள்ள நிலையில் கடந்த பொசன் பௌர்ணமி தினத்தன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே நிலைத்திருக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலேயே 16 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் சம்பந்தப்படாது வேறு குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட 77 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் ஒருவர்.

எப்படியிருந்தபோதிலும் அரசியல் கைதிகளில் 16 பேராவது விடுவிக்கப்பட்டது வரவேற்கத்தக்க விடயமாகும். இந்தப் பதினாறு பேரில் முன்னாள் போராளிகள் எவருமில்லை எனவும் இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு சில உதவிகளை வழங்கியமைக்காக ஏற்கனவே நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்களெனவும் இவர்களின் தண்டனைக் காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் ஒரு சிறிய காலப்பகுதி எஞ்சியிருக்கும் நிலையில்தான் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது வெகுவிரைவில் தண்டனைக் காலம் முடிவடைந்து இயல்பாகவே சில நாட்களில் வெளிவரவேண்டியவர்கள் தற்சமயம் பொசன் நாளில் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அப்படியானால் இந்தப் 16 பேரின் விடுதலையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பு வைக்கப்பட்ட ஒரு கண்துடைப்பெனவும் துமிந்த சில்வாவின் விடுவிப்பைப் பூசி மெழுக மேற்கொண்ட நடவடிக்கையெனவும் கருதப்படுவது தவிர்க்க முடியாததாகும்.

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வரவேற்றதுடன், அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏனைய தமிழ் தலைமைகளும் இதை வரவேற்றுள்ளபோதிலும் பெரிதான பிரதிபலிப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இந்த 16 பேரின் விடுதலையை விரும்பி வரவேற்றாலும் இது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

அதேவேளையில் பௌத்த அமைப்புகள், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, பொதுபல சேன, சிஹல உறுமய, விமல் வீரசன்ச போன்ற இனவாதத் தரப்புகள் தமிழ் கைதிகளின் விடுதலையை எதிர்த்துப் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கலாம். அந்த எதிர்ப்பு அலைக்குள் துமிந்த சில்வாவின் விடுதலை விவகாரத்தை அமுக்கி நீர்த்துப்போகச் செய்துவிடலாமன எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் இவ்விடயம் பற்றிப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

தமிழ்த் தரப்போ சிங்கள இனவாத சக்திகளோ அரசியல் கைதிகள் விடுதலையின் போலித்தனத்தை உணர்ந்து அது பற்றி அலட்டிக்கொள்ளாத நிலையில் துமிந்த சில்வாவின் விடுதலை ஆட்சியாளரின் உச்சந்தலையில் சம்மட்டி அடி போடத் தொடங்கியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் துமிந்த சில்வாவின் விடுதலை இலங்கையின் சட்டவாட்சியின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்று மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லச் அவர்கள் இவ்விவகாரம் தொடர்பாகக் கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

உள்ளூரில் ஐ,தே.கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட்ட பல அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் இலங்கை சட்டவியலாளர் சங்கம் என்ன சட்டத்தின் அடிப்படையில் துமிந்தவுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதெனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நீதியமைச்சர் அல் சப்ரி அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதுபற்றி அவர் தனக்கு எதுவுமே தெரியாதெனக் கையை விரித்து விட்டார்.

இது தொடர்பாக பாரத லக்ஷ்மன் குடும்பத்தினர் கருத்து வெளியிடும்போது நீதி கொல்லப்பட்டுவிட்ட ஒரு நாட்டில் சூரியன் உதிக்கப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு துமிந்த சில்வாவின் விடுதலை ஏனைய விடயங்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு அரசாங்கத்தைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது மட்டும் உண்மை. தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஒரே நேரத்தில் ஒரே நடவடிக்கை மூலம் ஏமாற்ற எடுத்த முயற்சி படுதோல்வியில் முடிவடைந்து விட்டது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் உள்ளவரை ஒருசில அரசியல் கைதிகளின் விடுதலையோ அல்லது வேறு எந்தவொரு கண்துடைப்பு நடவடிக்கையோ திருப்தியளிக்கப் போவதில்லை. ஏனெனில் இச்சட்டம் அமுலில் உள்ளபோது விடுவிக்கப்பட்டவர்களில் ஒருசிலர் வேறுவிதமாகப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் செயற்படுகிறார்கள் எனச்சொல்லிக் கைது செய்யப்படலாம். வேறு சிலர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர் எனவும் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படலாம். சித்திரவதைகள் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் அவர்களுக்கெதிரான சாட்சியங்களாகப் பயன்படுத்தப்படலாம்.

இப்படியான நடவடிக்கைகள் தற்சமயம் முஸ்லிம் மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இப்படியான பல சம்பவங்கள் நடந்துள்ளன.

1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒருவரை 18 மாதங்கள் வழக்குத் தொடுக்கப்படாவிட்டாலும் தடுத்து வைக்கமுடியும். ஆனால் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளபோது சந்தேக நபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காலவரையின்றித் தடுத்து வைக்கமுடியும்.

அவ்வகையிலேயே ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒருசிலவற்றை நிறைவேற்றியதாகப் பட்டியலிடும் முகமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. ஆனால் அது நீக்கப்பட்டபோது அதிலுள்ள சில விதிகள் பயங்கரவாதச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதாவது சந்தேக நபர்களை காலவரையறையின்றித் தடுத்து வைத்தல், ஒப்புதல் வாக்கு மூலங்களை சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தல் என்பனவே அவையாகும்.

எனவே ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல் கைதிகளை சாதாரண குற்றவியல் சட்டங்கள் மூலம் விடுதலை செய்யப்படுவதை மேற்கொள்ளத் தயாரில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இன்று அரிசி, பாண் உட்பட மரக்கறி வகைகள் என சகல பாவனைப் பொருட்களின் விலையுயர்வு காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பேர்ள் கப்பல் விபத்து காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, எரிபொருள் விலையுயர்வு என்பன காரணமாக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலை பரவி வருகிறது. அப்படியான ஒரு அலை வளர்ச்சியடையும்போது சிங்கள முன்னோடிகள் சிலர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்தால் ஆச்சரியமில்லை.

எனவே பயங்கரவாதத் தடை நீக்கப்படவேண்டும் என்பது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் தவிர்க்கமுடியாத தேவையாகவுள்ளது.

தற்சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் மேற்கொண்ட தீர்மானம் இதற்கு ஒரு வாய்ப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது தமிழ் அரசியல் தலைமைகள் இதுவொரு நல்ல ஆரம்பம் எனவும் ஏனைய அரசியல் கைதிகளும் இவ்வாறு விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அறிக்கைகளை வெளியிட்டு விட்டு ஓய்ந்து விடாமல் முஸ்லிம் தலைiமைகளுடன் ஒன்றிணைந்தும் சிங்கள மக்களின் மத்தியிலுள்ள நியாயபூர்வமான சக்திகளின் ஆதரவைத் திரட்டியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

உள்நாட்டில் எழுச்சி ஏற்படும்போது மட்டுமே வெளிநாடுகளின் அழுத்தங்கள் முழுமையான பயனளிக்கும் நிலை உருவாகும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அருவி இணையத்திற்காக :- நர்.யோகேந்திரநாதன்

29.06.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE