Monday 18th of October 2021 02:25:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
“இராஜதந்திர உத்தியால் இந்தியாவை வெற்றிகண்ட இலங்கை” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

“இராஜதந்திர உத்தியால் இந்தியாவை வெற்றிகண்ட இலங்கை” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இந்திய - இலங்கை உறவின் போக்கானது இராஜதந்திர ரீதியானதாகவே நகர்கிறது. இந்தியாவை கையாளும் திறன் இலங்கை ஆட்சித் துறைக்கு சாதாரணமானதாக அமைந்துள்ளதை கடந்த காலம் முழுவதும் அவதானிக்க முடிந்தது. இரண்டுமே அரசுகள் என்ற அடிப்படையில் செயல்படுவதுடன் வளங்கள் மற்றும் அளவுத் தன்மையில் பாரிய வேறுபாடு இரு அரசுகளுக்கிடையில் நிலவிய போதும் இராஜதந்திர ரீதியில் சமவலுவுடைய அரசுகளாகவே இரு தேசங்களும் காணப்படுகின்றன. அதிலும் இலங்கை இந்தியாவை விட தனது எல்லைக்குள் இராஜதந்திரத்தில் விஞ்சியுள்ளதை காணமுடிகிறது. இதற்கான ஆரம்பத்தை மகாநாமர் வரைந்த மகாவம்சத்தில் தொடங்கிய போதும் நவீன இலங்கையின் வெளியுறவின் தனித்துவத்தை பேராசிரியர் செல்ரன் கொடிகார ஏற்படுத்தியிருந்தார். இந்தியாவின் முக்கியத்துவத்தை கருதி அதனை கையாளுதலே இலங்கையின் கடந்த எழுபது வருட இராஜதந்திரமாகும். இக்கட்டுரையும் சமகாலத்தில் இந்தியாவை இலங்கை தனது இராஜதந்திர உத்தியால் வெற்றி கண்டுள்ளதை நிறுவுவதாக அமையவுள்ளது.

சமகாலத்தில் எழுந்த இந்திய - இலங்கைக்கு .இடையிலான உரையாடல்களை அவதானிக்கும் போது இலங்கையில் ஏற்பட்டுவரும் சீனாவின் பிரசன்னம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பது முன்மொழியப்பட்டுள்ளது. அதனை இந்திய கடற்படைத் தளபதி மட்டத்திலான அதிகாரிகளும் பின்பு இந்திய வெளியுறவுப் பேச்சாளரும் இலங்கைக்கபான இந்தியத் தூதுவரும் வெளிப்படுத்தியிருந்தனர். இதனைக் கண்காணிப்பதற்கு இந்தியா ஆளில்லாத விமானங்களை கொள்வனவு செய்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தார் என்பதும் வாசகர்களுக்குத் தெரிந்த விடயமே. அது மட்டுமன்றி இலங்கையின் கேந்திர நிலைகளை நோக்கி சீனா நுழைவதாகவும் குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்தது.

இதனை அடுத்து கடந்த இரு வாரமாக பேச்சுக்களும் கடற்படை கப்பல்களது கொழும்புத் துறைமுகம் நோக்கிய நகர்வுகளையும் இந்தியா மேற்கொண்டது. மேலும் இலங்கை மீனவர் மீதான தாக்குதால்களை இந்தியக் கடற்படை மேற்கொண்டதுடன் இலங்கை மீனவர்களை கைது செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் பேச்சுவார்த்தையும் நிகழ்ந்ததாக தகவல்கள் உண்டு. இதே நேரம் கேணல் ஹரிகரன் போன்றவர்கள் சீனா இலங்கையில் வர்த்தக நடவடிக்கையிலேயே ஈடுபடுவதாக கூறிவந்த நிலைமாறி கொழும்பு துறைமுக நகருக்குள் சீனா அதன் பிரசன்னத்தை வலுப்படுத்தும் நிலையில் இலங்கை அரசியல் செயல்பாடுகளிலும் அதன் செல்வாக்கை அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியும் என்று கூறும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி கேணல் ஹரிகரன் கொழும்புத் துறைமுக நகரத்தினால் தோற்றுவிக்கக் கூடிய பீதிவெறுமனே தென்னிந்தியாவுக்கு மாத்திரமானதல்ல. முழு இந்தியாவுக்குமானது என்றார். இதனால் ஒரு கொள்கைமாற்றம் ஏதும் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் இந்திய -இலங்கை வெளியுறவு அமைச்சுக்களின் பேச்சுவார்த்தையின் போது முடிபுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. அதனை சற்று விரிவாக நோக்குவோம்.

முதலாவது இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வெளியுறவு அமைச்சருடன் உரையாடிய விடயமாக இருதரப்பு மற்றும் பிராந்தியம் பற்றியதாக அமைந்திருந்தன இரு வெளியுற அமைச்சர்களுக்கும் இடையிலான உரையாடலில் நெருக்மான தொடர்பை (Close Touch) பின்பற்ற இலங்கை முன்வந்திருப்பதாக ருவிட்டரில் இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார். குறிப்பாக BIMSTEC மற்றும் IORA போன்ற பிராந்திய அமைப்புக்கள் பற்றி உரையாடப்பட்டதாகவும் அதற்கான ஒத்துழைப்பினை இலங்கை வழங்க முன்வந்திருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது வெளியுறவு மட்டத்திலான இலங்கை-இந்தியா உரையாடல் இலங்கை வெளியுறவு அமைச்சரால் வரவேற்கப்பட்டதுடன் இரு தரப்பு உறவுக்கான நெருக்கம் அதிகரித்தது எனவும் கொவிட் தொற்றுக்கு வழங்கிய தடுப்பூசிக்கு இலங்கைத் தரப்பு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தததையும் அவதானிக்க முடிந்தது. இலங்கை எப்போதும் இந்தியாவைக் கையாளுவதற்காக இத்தகைய உபாயங்களை பயன்படுத்துவது வழமையாக உள்ளது. இதனை ஒர் இராஜதந்திரமாக கருதலாமா என்பது சந்தேகமானதே. மாறாக இதனை உபாயமாகவே கருத முடியும். இலக்கை அடைவதற்கான உபாயமாகவே அமைந்துள்ளது. அதாவது தற்போதைய இலங்கை அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது தெளிவாகக் குறிப்பிட்டது இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்று. நடைமுறையில் அத்தகைய முதலிடத்தை சீனாவுக்கு வழங்கியதுடன் இந்தியாவுக்கு எதிரான கொள்கையையும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதனை இலங்கை ஒரு போதும் வெளிப்படையாக மேற்கொண்டது கிடையாது. அனைத்தையும் இரகசியமாகவே நகர்த்துகிறது.

மூன்றாவது சீனா-இலங்கைக்கிடையிலான வர்த்தக பொருளாதார மற்றும் கேந்திர நிலைகள் தொடர்பான உறவினை இந்தியாவுக்கு ஆபத்தானதென குறிப்பிட்ட இந்தியத் தரப்பு அத்தகைய இந்தியாவினது குற்றச்சாட்டுக்களை இலங்கை ஏற்றுக் கொண்டு இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக தெரிவித்த கருத்துக்களை அங்கீகரித்துக் கொண்டது. அதாவது இலங்கையின் உத்தரவாதப்படுத்தப்படும் விடயங்களை இந்தியா மாற்று விவாதமின்றி ஏற்கொண்டது.கடந்த காலத்திலும் இந்தியாவுக்கு உத்தரவாதங்களையும் உறுதிமொழிகளையும் இலங்கை வழங்கிவந்துள்ளது. அதன்படி நடந்து கொள்ள முன்வராத போதும் இந்தியா மீளவும் அதனை ஏற்றுக் கொண்டது. இதுவே இந்தியாவின் கொல்லைப்புறத்தில் சீனாவின் விஸ்தரிப்பு ஏற்பட காரணமாகியது.

நான்காவது இலங்கையில் இந்தியாவின் விரேத சக்தியாக விளங்கும் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் போது இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வெளியுறவு அமைச்சருடன் உரையாடியது பிராந்திய பாதுகாப்புப் பற்றியதாகவே உள்ளது. குறைந்த பட்சம் சீனாவின் பிரன்னம் தொடர்பில் அதிருப்தி நிலவுவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் குறிப்பிட்ட அளவுக்கேனும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகவில்லை. அப்படியாயின் சீன-இந்திய உறவு பாதித்துவிடக் கூடாதென்பதில் இந்திய வெளியுறவு அமைச்சர்' அக்கறையுடன் செயல்படுவதாகவே தெரிகிறது.அது மட்டுமல்லாது இலங்கை இந்திய உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் அக்கறை கொள்வதாகவே தெரிகிறது. இதில் சீனாவின் இலங்கை மீதான செல்வாககென்பது வெறுமையான அரசியல் பிரமைகளாகவே தெரிகிறது. அதனால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என இந்திய ஆளும்வர்க்கம் கருதுகிறது.

கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடு தொடர்பில் போட்டி நிலவுவதாக தகவல்கள் உண்டு. அதிலும் பிரித்தானியா அமெரிக்கா ஜப்பான மற்றும் இந்தியாவுக்கும் பிற நாடுகளின் கம்பனிகளுக்குமிடையில் போட்டி நிலவுவதாக தெரியவருகிறது. நிதி முதலீட்டுக்கான பிரயத்தனங்களை கொழும்புத் துறைமுகம் நோக்கி நாடுகள் போட்டியிட ஆரம்பித்துள்ளன. அது மட்டுமன்றி இந்திய துறைமுகங்களுக்கிடையிலான கடல் வர்த்தகத்தின் பெரும் பரிமாற்றம் கொழும்புத் துறைமுகத்துக்குள்ளாலேயே நிலவுகிறது. எனவே இவை எதுவும் பாதித்துவிடக் கூடாது என்ற நோக்கிலான உரையாடலாகவே இந்திய -இலங்கை வெளியுறவு அமைச்சர்களுக்கிடையில் நிலவியது. அதனை கொள்கை மாற்றம் என்றே அல்லது இலங்கைக்கு எதிரானதென்றே கருதுவது மிக மோசமான பலவீனமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை எப்போதும் இந்தியாவை கையாளுவதற்கு சில பொறிமுறைகளைக் கொண்டுள்ளது. குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வது ஒத்துழைப்பதென உத்தரவாமளிப்பது காலம் தாழ்த்துவது பிற்போடுவது பிற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவது. பொருளாதார நெருக்கடியையும் பொருளாதார உதவியையும் இந்தியாவிடம் கோருவது. மேற்குறித்த அனைத்தும் இந்தரியாவுக்கு போதுமானது. இந்தியா இலகுவில் பின்வாங்கி விடுவதுடன் இலங்கைக்கு நெருக்கடி கெபாடுத்தால் முழுமையாக விலகிவிடும் எனக் கருதுகிறது.

எனவே தற்போதைய இந்தியாவின் போக்கானது இந்திய ஆளும்வர்க்கத்தின் நலனாகும். அதனை அடைவதற்கான உரையாடல்களே நிகழுகிறது. அதனை இலங்கைக்கு எதிரானது எனக்கணக்கிடுவதை விடுத்து அதன் யதார்த்த அரசியலை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இலங்கையும் தனக்கான வாய்ப்புக்களை இடைவிடாது பயன்படுத்துவதுடன் இந்தியாவை கையாளும் திறனுடைய நாடாக விளங்குகிறது. இலங்கையிலிருந்து சீனாவை அகற்றுவற்கான வாய்ப்புக்கள் பலதடவை கிடைத்த போதும் இந்தியா அவற்றை தவறவிடுகிறது. இது இந்தியாவின் இயலாமை மட்டுமன்றி இந்திய ஆளும்வர்க்கத்திஜன் நலன்களை அடைவதற்கான அரசியலாகவே தெரிகிறது. அதாவது கம்பனிகளதும் பல்தேசியக் கம்பனிகளதும் கூட்டு அதிகாரத்துக்குள் இந்திய அரச இயந்திரம் அகப்பட்டுள்ளது. அதனால் இந்திய தேசியத்தை விட சந்தையும் வர்த்தகமும் நிதி முதலீடும் தொழில முதலீடு முதன்மையானதாக மாறியுள்ளது. அதுவே இன்று இந்திய தேசத்தின் நலன்களாக மாறியுள்ளது. இலங்கைத் தீவு முழுமையாக சீனாவிடம் கைமாறினாலும் இந்தியா ஆளும் தரப்பு அரசியல் மௌனத்தையே கடைப்பிடுக்கும். வேண்டுமாயின் வர்த்தக மற்றும் சந்தைவாய்ப்புக்கான நடவடிக்கைகளை இரு நாட்டுக்குமான உரையாடல் மூலம் பெற்றுக் கொள்ள விளையும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் .


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE