Monday 18th of October 2021 12:58:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 63 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 63 (வரலாற்றுத் தொடர்)


சர்வாதிகாரத்தை நோக்கிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி! - நா.யோகேந்திரநாதன்!

'புதிதாக விடுதலையடைந்து வளர்ந்துவரும் நாடுகளின் மக்கள் காலனி ஒடுக்குமுறையால் விளைந்த பெருங்கேடுகளை ஒழிப்பதற்கு முயன்றுவரும் இக்காலத்தில் அந்நிய ஏகபோகங்கள் இந்நாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தமது மூலதனங்களைப் பயன்படுத்தி தமது பொருளாதார ஆதிக்கத்தை முடிவின்றித் தொடர எத்தனிக்கின்றன.

ஏகபோகங்கள் செல்வம் திரட்டிக் கொள்வதற்காகவும் தொழிலாளர் இயக்கத்தையும் தேசவிடுதலை இயக்கத்தையும் நசுக்குவதற்காகவும் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடுப்பதற்காகவும் அரச ஏகபோக முதலாளித்துவமானது ஏகபோகங்களின் பலத்தையும் அரசின் பலத்தையும் ஒன்றிணைத்து ஒரு பொறிமுறையை உருவாக்குகிறது.'

இது சோவியத் ரஷ்ய அரசியல் பொருளாதார ஆய்வாளரான லெவ் லியோன்டிக் அவர்களால் ஏகாதிபத்திய சக்திகள் எவ்வாறு தேசிய எழுச்சிகளையும் தேச விடுதலைப் போராட்டங்களையும் ஒடுக்கித் தமது பொருளாதார மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவும் உள்ளுர் மூலதனப் பொருட்களையும் மனித உழைப்புச் சக்தியையும் மலிவான விலையில் கொள்ளையிடவும் தங்கள் பலத்தையும் அரசின் பலத்தையும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்குகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கையில் ஏகபோக மேலாதிக்க சக்திகள் இரண்டு விதமான பிரதிகூலங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

ஒன்று –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ நிறுவனங்களின் தேசிய மயம், இறக்குமதித் தடைகள், உள்ளுர் கைத்தொழில், சிறுகைத்தொழில், விவசாய உற்பத்திகளின் வளர்ச்சி போன்ற விடயங்கள் நாட்டை ஏகபோக சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியது.

அடுத்தது, வடக்குக் கிழக்கு மக்களின் தலைமை கடந்த காலங்களில் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு கொண்ட பாராளுமன்ற ஜனநாயகவாதிகளின் கையிலேயே இருந்தது. வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிநாட்டுப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தமிழ் மக்களுக்கான பழைய தலைமைகள் செல்வாக்கிழந்து போய்க்கொண்டிருந்த நிலையில் ஆயுதம் தாங்கிய புரட்சிகர இளைஞர்களைத் தமது தலைமையாகத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகியது.

எனவே இந்த இரு நிலைமைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை முறியடித்து தெற்கிலும் வடக்குக் கிழக்கிலும் மீண்டும் மீண்டும் ஏகபோக முதலாளித்துவ மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதானால் ஒரு வலிமையான, சர்வாதிகாரத்தன்மையுள்ள ஒரு அரசாட்சிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டியிருந்தது.

அதுவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய 1978ம் ஆண்டின் புதிய அரசியலமைப்பாகும்.

1977ம் ஆண்டு தேர்தல் நிறைவடைந்ததும் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடிய வன்முறைகளும், ஒரு மாதத்திற்குள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளும் ஜே.ஆர்.ஜயவர்த்தன மேற்கொள்ளப்படவிருந்த அடுத்த கட்ட நடவடிக்கைக்கான முன்னறிவித்தலும், ஒரு விதமான தனது எதிர்ப்பு சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையுமாகவே கருதப்படவேண்டியுள்ளது.

இரு வாரங்கள் நாட்டில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த வன்முறைகள் ஊரடங்குச் சட்டத்தின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்பு 1977 செப்டெம்பர் 22ம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அமுலாக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக முன்வைக்கப்பட்டது.

அதன்படி 1972ம் ஆண்டின் குடியரசு யாப்புக்கு இரண்டாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்த்தன 1978ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் நாள் பதவியேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்களெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் 1978ம் ஆண்டு பெப்ரவரி 4ம் நாளிலிருந்து ஜே.ஆர்.ஜயவர்த்தன முடி சூடப்படாத சர்வாதிகாரியாகப் பிரகடனம் செய்து கொண்டார்.

இப்பாரிய மாற்றம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் பலவீனமடைந்திருந்த ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும் அதற்கெதிராக தெற்கில் எழக்கூடிய மக்கள் போராட்டத்தை நசுக்கவும், வடக்குக் கிழக்கில் முகிழ்ந்து கொண்டிருந்த தேசிய விடுதலை எழுச்சியை முனையிலேயே கிள்ளி விடவும் பிற்போக்கு சக்திகளுக்குத் தேவைப்பட்டது.

1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் தனது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேவையை நிறைவேற்றியதை அடுத்து ஜே.ஆர். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கான ஒரு அரசியலமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அதில் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் மைத்திரிபால சேனநாயக்கவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எஸ்.தொண்டமானும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அதில் இணைந்து கொள்ளும்படி விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துவிட்டது.

தேர்தல் காலத்தில் சர்வ கட்சி மாநாடு மூலமாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வாக்களித்த ஜே.ஆர். அதைப் புறம்தள்ளும் விதமாக நடந்து கொண்டார். எனினும் புதிய அரசியலமைப்பு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமெனவும் அதனால் அக்குழுவில் பங்கு கொள்ளும்படியும் ஜே.ஆர்.கேட்டுக்கொண்டார். தனிநாட்டுக் கோரிக்கைக்குத் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் உருவாக்கத்தில் பங்கு கொள்வது தங்கள் கொள்கைகளையே தாங்கள் கைவிட்டதாக மாறிவிடும் என்ற நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணி அக்குழுவில் இணைய மறுத்துவிட்டது.

சில அமர்வுகளின் பின்பு இக்குழுவில் தொடர்ந்து செயற்படமுடியாதென அறிவித்துவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வெளியேறி விட்டது.

அவ்வகையில் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பு ஐ.தே.கட்சி, தொண்டமான் கூட்டில் உருவான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால் 1978 செப்டெம்பரில் தொண்டமான் அரசாங்கத்தில் இணைந்து கொண்டு கிராமப்புற கைத்தொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவ்வகையில் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பு ஐ.தே.கட்சி அரசாங்கத்தால் மட்டுமே தயாரித்து நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கையிலேயே பெரும் தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டமானுக்கு தோட்டத் தொழிலாளர்கள் நலன்களை பேணத்தக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வழங்கப்படவில்லை. அதற்கு ஒரு சிங்கள தோட்டமுதலாளியான எம்.டி.எச்.ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார். இதிலிருந்தே சிங்கள ஆட்சியாளர்களிடம் அடிபணிந்து போனாலும் தமிழர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாது என்பதையும் அதேபோல் தமிழ் தலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்காகத் தமிழ் மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்கத் தயங்குவதில்லை என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.

இப்புதிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த அதேவேளையில் பாதுகாப்பு அமைச்சையும் திட்டமிடல் அமைச்சையும் தனது கைகளிலேயே எடுத்துக் கொண்டார். அதாவது மீண்டும் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்தை நாட்டுக்குள் கொண்டுவரவும் அதற்கு எழக்கூடிய எதிர்ப்புகளை அடக்கவும் அவருக்குத் திட்டமிடல் அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் தேவைப்பட்டன. அதேவேளை வடக்குக் கிழக்கில் எழுச்சி பெற்றுவந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும், ஏகபோகங்களின் வருகையால் எழக்கூடிய தொழிலாளர் போராட்டங்களை நசுக்கவும் அவர் தன்னை அரசியல் ரீதியாகவும் ஆயுதப்படைகளின் மீதான அதிகாரத்தின் மூலமும் லாவகமாக ஒரு சர்வாதிகாரியாக உருவாக்கிக் கொண்டார்.

1978ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1978 ஓகஸ்ட் 31ம் நாள் சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் புதிய அரசியரமைப்பு நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அது ஜனாதிபதி தீர்மானிக்கும் தினத்திலிருந்து அமுலுக்கு வருமெனவும் அறிவித்தார்.

அதன்படி 07.09.1978 தொடக்கம் புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது.

அவ்வரசியலமைப்பின் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறை மாற்றப்பட்டு மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரத் தேர்தல்முறை அமுலுக்கு வந்தது. அத்தேர்தல் முறையின் கீழ் எந்தவொரு கட்சியும் 2/3 க்கு அதிகமான பெரும்பான்மையைப் பெறுவது மிகச் சிரமமாதலால் தனது அரசியலமைப்பு மாற்றப்படாமலிருக்கவே அவர் விகிதாசாரத் தேர்தல் முறையைக் கொண்டு வந்தார்.

அவர் எதிர்காலத்திலும் தன்னுடைய ஏகபோக சக்திகளின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வாய்ப்புகளை வேறு யாராவது மாற்றி விடக்கூடாதென்பதற்காகவே அத்தகைய ஏற்பாடுகளை உருவாக்கினார். எனினும் தற்சமயம் அவ்வரசியலமைப்புச் சட்டம் 44 வயதையடைந்து விட்ட நிலையில் 20 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன.

ஆனாலும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கத்துக்குள் இலங்கையைக் கட்டுப்படுத்தும் அடிப்படைக் கொள்கையில் எவ்வித மாற்றமுமில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட காலத்திற்குள் நாட்டின் எதிர்காலத்தையே திசை மாற்றக்கூடிய புதிய அரசியலமைப்பு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டமை ஐ.தே.கட்சி ஆதரவாளர்களால் பெரும் வெற்றியாகவே கருதப்பட்டது. தென் பகுதி முழுவதும் ஒரு கொண்டாட்ட மனநிலை உருவாக்கப்பட்டது.

இப்படியான பெரும் மகிழ்ச்சிச் சூழ்நிலை அன்றைய தினமே கொழும்பில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினால் நிலைகுலைந்து போனது. கொழும்பு இரத்மலானையில் உள்ள விமான நிலையத்தின் ஓடு பாதையில் நின்றிருந்த 'அவ்ரோ' விமானம் போராளிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியில் ஐ.தே.கட்சியினர் கொண்டாடிக் கொண்டிருந்த போதே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகாலவரை வடக்குப் பகுதியிலேயே இடம்பெற்று வந்த போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் கொழும்பை எட்டிவிட்ட நிலையில் அது ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

அதன் காரணமாக இதுவரை வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளும், கைதுகளும் தெற்குக்கும் விஸ்தரிக்கப்பட்டன. கொழும்பில் இளைஞர்கள் நடமாடவோ அல்லது தங்கவோ அச்சப்படும் நிலை உருவாகியது. ஏற்கனவே இன அழிப்புக் கலவரம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் பொலிஸ், இராணுவ நடவடிக்கைகள் மூலமும் பெரும் துன்பத்திற்குத் தொடர்ந்தும் உள்ளாக்கப்பட்டனர்.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் நிறைவேற்று அதிகாரம் ஒரு கொடிய சர்வாதிகாரமாகத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. வடக்குக் கிழக்கிலும் தெற்கிலும் தேடுதல் வேட்டைகளும் கைதுகளும் அதிகரிக்க ஆரம்பித்தன.

புதிய அரசியலமைப்பின் மூலம் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வாதிகாரியாக ஜே.ஆர்.ஜயவர்த்தன தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE