Thursday 18th of April 2024 11:45:49 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஈராக் கொரோனா மருத்துவமனை தீவிபத்தில்  பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரிப்பு!

ஈராக் கொரோனா மருத்துவமனை தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரிப்பு!


ஈராக் தெற்கு நகரமான நசீரியாவில் கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வந்த அல்-ஹுசைன் மருத்துவமனையில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தீவிபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 100-ஐக் கடந்துள்ளது.

இந்தத் தீவிபத்தில் சிக்கி 44 பேர் பலியானதாக உடனடியாக அறிவிக்கப்பட்டபோதும், மருத்துவமனையில் நடத்தப்பட்ட தேடுதலில் மேலும் பலரது சடலங்கள் மீட்கப்பட்டன. அத்துடன், காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பலரும் உயிரிழந்ததால் உயிரிழப்புக்கள் 94 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்.

ஒக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்குப் பின்னர் மருத்துவமனைக்கு வெளியே கூடிய மக்கள், அரசாங்கத்திற்கும் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், இந்தத் துயரத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் பதவி விலக வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது பேரழிவு. இது பொறுப்பு வாய்ந்த தரப்பினரின் தோல்வி. உயிர்களைப் பாதுகாக்க அவர்கள் தவறிவிட்டனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டிய நேரம் இது என ஈராக் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் அல்-ஹல்பூசி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈராக் மருத்வமனை ஒன்றில் ஒக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து அப்போதைய சுகாதார அமைச்சர் ஹசன் அல் தமீமி பதவி விலகினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் ஈராக்கின் சுகாதார சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பல ஆண்டுகளாக போர், புறக்கணிப்பு மற்றும் ஊழல் ஆகியவற்றால் நாடு மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

ஈராக்கில் இதுவரை 14 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 17,000 -க்கும் அதிகமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 மில்லியன் ஈராக்கியர்களில் இதுவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஒற்றை கொவிட் 19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE