Monday 18th of October 2021 01:23:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 64 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 64 (வரலாற்றுத் தொடர்)


இனப்பிரச்சினைத் தீர்வுக்குக் கதவை மூடிய புதிய அரசியலமைப்பு! - நா.யோகேந்திரநாதன்!

'இன்று நாங்கள் பெற்ற வெற்றியானது மக்களின் வெற்றி. தமிழீழத்துக்கான நீங்கள் வழங்கிய ஆணை இந்த ஆணையிலிருந்து நாங்கள் ஒரு போதும் விலகிச் செல்லமாட்டோம். சாத்வீகமான முறையில் இதனை அடைவது என்பது முடியாத காரியம். மகாத்மா காந்தியின் சாத்வீகமான போராட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ் எவ்வாறு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தாரோ அதேபோன்ற அணுகுமுறையை நாமும் கைக்கொள்ள வேண்டும் அதற்கான சரக்கு இங்கேதான் இருக்கிறது. ஐயாயிரம் இளைஞர்கள் ஆயுதமேந்தத் தயாராகுங்கள். நாங்கள் எங்கள் பதவிக் காலத்திற்குள் தமிழீழத்தைப் பெற்றுத் தருகிறோம்'.

இது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977 தேர்தலில் த.வி.கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றபோது அந்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக வல்வெட்டித்துறை ரேவடி மைதானத்தில் வெளியிட்ட கருத்தாகும்.

இந்த உரை அதில் பங்கு கொண்ட மக்கள் மத்தியில் பெரும் உணர்ச்சிப் பேரலையை உருவாக்கியது. போராளி பண்டிதர் உட்படப் பல இளைஞர்கள் தங்கள் கையைப் பிளேட்டால் கீறி வழிந்த இரத்தத்தில் அமிர்தலிங்கத்துக்கு இரத்தத் திலகமிட்டனர்.

பண்டிதர் அச்சுவேலியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் இறுதிவரை வீரத்துடன் போராடி உயிரிழந்த போராளியாவார்.

அமிர்தலிங்கம் இவ்வாறு உரையாற்றி ஒரு வருடம் முடிவதற்கு முன்பாகவே 1978 செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைச் சாத்வீகமான வழியில் அடைய முடியாதென்பது எவ்வித மயக்கத்துக்குமிடமின்றித் தெளிவுபடுத்தப்பட்டது.

1956ல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவால் தனிச் சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் சாதாரண சட்டமாகவே நிறைவேற்றப்பட்டது. அதை நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நீக்க முடியும். 1972ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சிங்களம் அரச கரும மொழி என்பதும் பௌத்தத்துக்கு முதன்மை இடம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இவற்றை நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையுடன் நீக்க முடியும். ஆனால் 1978 அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட சிங்களம் அரச கரும மொழி, பௌத்தத்துக்கு முதலிடம் என்பன உள்ளடக்கப்பட்ட 1978ம் ஆண்டின் அரசியலமைப்பை நீக்குவதானால் 2/3 பெரும்பான்மை மட்டுமின்றி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

சிங்களம் அரச கரும மொழி, பௌத்தத்துக்கு முதலிடம் என்பனவற்றுக்கு எதிராக சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது எக்காலத்திலும் சாத்தியமாக இருக்கப் போவதில்லை.

எனவே நாடாளுமன்ற வழிமுறைகளூடாகவோ பேச்சுவார்த்தைகள் பேரம் பேசல்கள் மூலமாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான கதவு 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் இறுக்கபூட்டப்பட்டு விட்டது. எனவேதான் தமிழ் மக்கள் மாற்று வழிகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதனால் தான் அமிர்தலிங்கம் வெற்றி விழா கூட்டத்தில் ஆற்றிய உரைக்கு அமைவாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி தமது பயணத்தை மாற்ற வேண்டிய தேவை எழுந்தது.

அவர் அக்கூட்டத்தில் விட்ட அழைப்பை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். அவர்கள் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான இடையூறுகளைத் தகர்க்கும் வகையில் தமது நடவடிக்கைகளை நகர்த்த ஆரம்பித்துவிட்டனர்.

குறிப்பாக இளைஞர் குழுக்களின் ஆயுத நடவடிக்கைகள் தொடர்பாகவும் வங்கிக் கொள்ளைகள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்தி போராட்டங்களை நசுக்கிவிட விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் விசாரணை என்ற பேரில் இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதை செய்வது, விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைப்பது, போராளிகள் எனக் கருதப்படும் இளைஞர்களின் சகோதர சகோதரிகள், பெற்றோரைக் கைது செய்து சித்திரவதை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

போராளிகள் இப்படியான பொலிஸாரை இலக்கு வைத்துத் தங்கள் ஆயுத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இந்த நிலையில் வங்கிக் கொள்ளைகள் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட பத்மநாதன் என்ற இன்ஸ்பெக்டர் தன் கடமை முடிந்து வீடு திரும்பும்போது ஒரு இளைஞர் அணியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் அருளம்பலம் கொலை முயற்சியைத் தடுக்க முயன்று காயங்களுடன் உயிர் தப்பியவராவார்.

அதையடுத்து போராளிகளைத் தேடிப் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கருணாநிதி, சார்ஜன்ட் சண்முகநாதன், இன்னுமொரு பொலிஸ் காவலர் சண்முகநாதன், வங்கிக் கொள்ளைகள் பற்றிய விசாரணை செய்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இளைஞர் குழுவினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

தொடர்ச்சியான இக்கொலைகள் பொலிஸ் திணைக்களத்தை ஆட்டம் காண வைத்தது. அதேவேளையில் அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கும்படி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தது. அதேவேளையில் போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட பஸ்தியாம்பிள்ளை என்ற இன்ஸ்பெக்டர் தேடுதல் வேட்டை என்ற பேரில் பொது மக்களையும் இளைஞர்களையும் துன்புறுத்துவதில் தீவிரமாயிருந்தார். தொலைவில் இவரின் ஜீப்பைக் கண்டாலே மக்கள் ஓடி ஒளிக்குமளவுக்கு இவரின் நடவடிக்கைகள் பயங்கரமாயிருந்தன.

1978ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் திகதி ஒரு போராளிகள் முகாம் மடு பெரிய பண்டிவிரிச்சானில் இயங்கி வருவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான பொலிஸ் குழு இரவோடு இரவாக அப்பிரதேசத்தைச் சுற்றிவளைத்தது. போராளிகள் ஒரு பகுதியினரைக் கைது செய்த நிலையில் இன்னொரு போராளி பொலிஸார் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்துப் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறான். மற்றப் போராளிகளும் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

அக்குழுவில் வந்த பஸ்தியாம்பிள்ளை, சார்ஜண்ட் பேரம்பலம், பொலிஸ் பாலசிங்கம், சாரதி சிறிசேன ஆகியோர் ஸ்தலத்திலேயே கொல்லப்படுகின்றனர்.

அதையடுத்து 1979 ஏப்ரல் 25ம் திகதி வீரகேசரிப் பத்திரிகையில் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலை, கருணாநிதி, சண்முகநாதன், குமார் ஆகியோரின் கொலைகள் என அனைத்துக் கொலைகளுக்கும் உரிமை கோரி புலிச் சின்னத்துடன் ஒரு கடிதத்தை விடுதலைப் புலிகள் வெளியிடுகின்றனர்.

இது அரசாங்கத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிலைமை கட்டுக்கு மீறிப் போவதை உணர்ந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன வன்முறைகளை இணக்கப்பாடு மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக தமது தரப்பிலும் வன்முறையை அதிகப்படுத்துகிறார்.

அதையடுத்து 1978ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி விடுதலைப் புலிகளையும் அதனை ஒத்த அமைப்புகளையும் தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்படுகிறது.

ஆனால் இத்தடை உத்தரவால் போராளிகளின் நடவடிக்கைகளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக 1978ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி இலங்கையின் புதிய அரசியலமைப்பு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து இதுவரை வடக்கில் இடம்பெற்றுவந்த ஆயுத நடவடிக்கைகள் தெற்குக்கும் விரிவடைந்தது. அவ்வரசியலமைப்பு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டமைக்கான தமிழ் மக்களின் வலிமையான எதிர்ப்பாக அதேதினத்தில் இரத்மலானை விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான 'அவ்ரோ' விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று இந்த அரசியலமைப்பு, 1956ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டத்தைவிட, 1972ம் ஆண்டின் அரசியலமைப்பைவிட தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதில் வலிமையானதாகவும் மாற்ற முடியாததாகவும் அமைந்திருந்தது. அதுமட்மின்றி பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கும் போதிலும் ஏனைய மதங்களுக்கான மத சுதந்திரம் உண்டெனத் தெரிவிக்கிறது. ஆனால் அடிப்படை உரிமைகள் தொடர்பான 15வது சரத்தின்படி பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், பொது ஒழுங்கு என்பனவற்றின் அடிப்படையில் மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் உரிமை கட்டுக்கப்படுத்தப்பட முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே இங்கு மொழியுரிமை மட்டுமின்றி மத உரிமையும் படுமோசமான முறையில் பறிக்கப்படமுடியும். இவ்வரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு 43 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் கூட இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை என்பது மட்டுமின்றி தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் பல்வேறு விதமான இன, மத ஒடுக்குமுறைகளை அனுபவித்து வருகின்றமையும் இன்று வரைத் தொடர்கின்றன.

1977ம் ஆண்டு தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது உரையாற்றிய அமிர்லிங்கம் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்கு வரும்படி அறைகூவல் விடுத்திருந்தார்.

இந்த அரசியலமைப்பு உருவாக்கத்தின் பின்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமாகவோ பேச்சுகள் மூலமோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படமுடியாது என்ற நிலையில் இளைஞர்கள் ஆயுத வழி மூலம் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் இவ்வரசியலமைப்பை எதிர்த்து நீண்ட உரையாற்றிவிட்டு வெளியேறி விட்டார். அவரை இவ்வரசியலமைப்புத் தொடர்பான குழு நிலை விவாதங்களில் கலந்து கொள்ள வைக்கும் ஐ.தே.கட்சியினர் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஏற்கனவே தாம் அஹிம்சை வழியில் போராடப் போவதாகக் கூறியதற்கமைய புதிய அரசியலமைப்புக்கு எதிராக சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு போன்ற போராட்டங்களை மகாத்மா காந்தியைப் போன்று நடத்தியிருக்கலாம்.

அப்படியான போராட்டங்கள் இடம்பெறும்போது போராளிகளின் நடவடிக்கைகள் அவற்றின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டிருக்கும். எடுத்தவுடன் பயங்கரவாத நடவடிக்கை எனக் குற்றம் சாட்டிவிட முடியாது.

அவ்வாறு இரு முனைகளிலும் வெடிக்கும் போராட்டங்கள் நிச்சயம் மிகவும் சக்தி வாய்ந்தவையாக அமைந்திருக்கும்.

போராடியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்த பின்பும் உணர்ச்சிகரமான நாடாளுமன்ற உரைகளுக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணி தங்கள் போராட்டத்தை இறுக்கிக் கொண்டமை காரணமாக இளைஞர்களால் மட்டுமின்றித் தமிழ் மக்களாலும் ஒதுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE