Tuesday 23rd of April 2024 08:55:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவின் சிந்துஷாட்ரா நீர்மூழ்கிக்கப்பல் தூத்துக்குடி துறைமுகம் நோக்கிய வருகை வெளிப்படுத்தும் செய்தி? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

இந்தியாவின் சிந்துஷாட்ரா நீர்மூழ்கிக்கப்பல் தூத்துக்குடி துறைமுகம் நோக்கிய வருகை வெளிப்படுத்தும் செய்தி? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


தென்னாசிய அரசியலில் இந்தியா-சீனா போட்டி தன்மை அதிகரித்து வருகின்ற நிலைமையை அவதானிக்க முடிகிறது. ஏறக்குறைய சீனாவின் வலு மேலோங்கியுள்ளதாகவே விமர்சனங்கள் எழுகின்றன. இது இந்தியாவின் பாதுகாப்பையும் தென்னாசியாவில் இந்தியா மேலோங்கியுள்ள நிலையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. தென்னாசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியா தனது தனித்துவத்தை இழந்திருப்பதோடு அதற்காக போட்டியிடுகின்ற நாடாக மட்டுமே தற்போது விளங்குகின்றது. ஆனால் ஊடகப்பரப்பில் இந்தியா பொறுத்து நம்பிக்கைகளும் அதன் பலம் சீனாவிற்கு சமமாக இருப்பதாகவும் வாதங்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கின்றது. இலங்கைத்தமிழர்களை பொறுத்தவரை இந்தியா மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகாத நிலையில் பிராந்திய ரீதியில் இந்தியாவின் பலத்தை சீனா எதிர்கொண்டு வளர்ந்துவிட்டது என்ற எண்ணப்பாங்கு காணப்படுவது தவிர்க்கமுடியாததாகும். இதன் நோக்கு நிலையிலேயே தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி இந்திய நீர்மூழ்கிக்கப்பலின் நகர்வு பற்றிய செய்தி முக்கியத்துவப்படுகிறது. இக்கட்டுரையில் அத்தகைய செய்தியின் உண்மைத்தன்மையை தேட முற்படுகிறது.

இந்தியாவின் தென்பகுதியின் இலங்கையின் கடற்பரப்புக்கு அண்மையில் அமைந்துள்ள வா.உ.சிதம்பரநார் துறைமுகத்தில் ஐ.என்.எஸ் கட்டப்பொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் இந்திய நீர்மூழ்கி நிலைநிறுத்தி உள்ளது. இந்தியாவின் வலுமிக்க நீர்மூழ்கிகளில் ஒன்றான சிந்துஷாஸ்ட்ரா எனும் நீர்மூழ்கி கப்பல் போர் ஒத்திகைக்காகவோ அல்லது தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காகவோ அல்லது எண்ணெய் நிரப்பிக்கொள்வதற்காகவோ அல்லது அடிப்படை தேவைகளை நிரப்பீடு செய்வதற்காக நிறுத்தி இருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந் நீர்மூழ்கி அடுத்தவரும் ஒருவார காலப்பகுதியில் (19.07.2021-25.07.2021) தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் இச்செய்தி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய கடற்படை சார்பில் அதிகாரபூர்வ செய்திகள் எவையும் வெளியாகவில்லை. ஆனால் ஊடகப்பரப்பில் இச்செய்தி அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி அண்மைக்கால கட்டத்தில் விரிவாக்கப்பட்டதோடு கடலோர பாதுகாப்பை பலப்டுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு தளங்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும் இப்பிராந்திய கடற்பரப்பில் சீனாவின் நகர்வை கண்காணிப்பதற்கும் ஆளில்லாத விமானங்களையும் மற்றும் விமானங்களையும் இந்தியா கண்காணிப்பில் ஈடுபடுத்தப்போவதாகவும் சில திட்டமிடல்களை முன்வைத்தள்ளது. அதேநேரம் நாகபட்டினம் முதல் கன்னியாக்குமாரி வரையிலான கிழக்கு கடற்கரைசாலை இராணுவ தளபாடங்களை எளிதாக பரிமாற்றிக்கொள்ள சாலை விஸ்தரிப்பு திட்டத்தை உருவாக்கியதோடு தேவையேற்படும் போது போர்விமானங்களை இச்சாலைகளிலும் இறக்குவதற்கும் இந்திய பாதுகாப்பு தரப்பு திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகிறது. இதுமட்டுமன்றி இந்தியாவினுடைய தென்பகுதியில் அமைந்திருக்கும் அணுமின்நிலையங்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி ஏவுதளங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் விதத்தில் இந்தியா கரிசனை கொள்ள வேண்டிய நிலை எற்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்களில் காட்டப்பட்டுள்ள முக்கியத்துவத்தக்கு ஈடாக இந்திய நீர்மூழ்கிக்கப்பல்களின் தூத்துக்குடி வருகையினால் கடற்பிராந்தியத்திலும் தென்னாசிய நாடுகள் மத்தியிலும் சீனாவின் பிரவேசத்தை கட்டுப்படுத்த முடியுமா? என்ற கேள்வி இயல்பானது. இதனால் சீனா தனது நகர்வுகளை மட்டுப்படுத்தி கொள்ளுமா? என்பதுவும் பிரதான அம்சமாக உள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமாகும்.

முதலாவது, தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி இந்திய நீர்மூழ்கியின் நகர்வு அவசியமானதும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளமைக்கான காரணம் புவிசார் அரசியல் ரீதியில் சீனாவின் பிரசன்னம் தடுப்பதற்கானதாகவே அமைந்திருத்தல் வேண்டும். இந்தசமுத்திரத்தின் மிகமுக்கியமான கடற்பிரதேசமாக விளங்கும் வங்காள விரிகுடாவை அண்டி சீனாவின் கடற்படை நடமாட்டமும் நீர்மூழ்கிகளின் வருகையும் கடந்த ஒரு தசாப்தகாலமாக நிகழ்ந்து வருகிறது. ஆனால் ஊடகப்பரப்பும் பத்தி எழுத்துக்களும் அதுதொடர்பில் அதிக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. இதனை இந்தியா எதிர்கொள்ளுதல் என்பது அதற்கெதிராக கடற்படை பலத்தையும், இராணுவ பலத்தையும் நிலைநிறுத்தி சீனாவின் இராணுவ நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அத்தகைய தகவல்களின் வெளிப்பாடு. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகளோ அல்லது உபாயங்களோ காலம் பிந்திய நகர்வுகளையே முன்னெடுத்தமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இரண்டாவது, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒருவாரத்தில் நகர முயலும் நீர்மூழ்கிக்கப்பலால் பரபரப்பை ஏற்படுத்தலாமே அன்றி இந்தியாவால் நிரந்தர பாதுகாப்பை ஏற்படத்துவது கடினமானதாகவே அமையும். அதாவது மாலைதீவு, இலங்கை, மியான்மார் போன்ற பகுதிகளில் சீனாவின் கடற்பரப்பு மீதான பிரசன்னத்தை இந்தியாவால் தடுக்க முடியாது. எவ்வளவுக்கு இந்தியாவின் வடபகுதி கடற்படை தளங்கள் பாதுகாக்கப்படுகின்றதோ அதே அளவான முக்கியத்துவங்கள் தென்பகுதி துறைமுகங்களிலும் கடற்படை தளங்களிலும் இந்தியா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மூன்றாவது, தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பை பலப்டுத்தல் என்பத அந்தமான், நிக்கோபார் மற்றும் கொச்சி துறைமுகத்தை மாத்திரமின்றி தென்மாகாணங்களில் குவிந்துள்ள இந்தியாவில் தொமில்நுட்ப ஆற்றல் மையங்கள் பாதுகாக்க உதவும். அத்தகைய பாதுகாப்பு பொறிமுறையே மிகமிக அவசியமானதொன்றாக ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அல்லது மாலைதீவில் அல்லது மியான்மரில் சீனாவின் தலையீட்டை தடுப்பது என்பதற்கு அப்பால் இந்தியாவிற்குள் சீனாவால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளிலிருந்து மீளுதல் என்பது மிக அவசியமானதொன்றாக உள்ளது. எனவே அத்தகைய பாதுகாப்பு உத்திகளை இந்தியா மேற்கொள்கின்ற விதத்திலேயே தூத்துக்குடி நோக்கிய தனது நகர்வை திட்டமிட்டுள்ளது.

நான்காவது, இந்தியாவின் தென்பகுதியில் அமைந்திருக்கின்ற தொழில்நுட்ப மையங்களை நோக்கி சீனாவின் சைபர் தாக்குதல் மிகப்பிரதான நடவடிக்கையாக எதிர்காலத்தில் அமைய வாய்ப்புள்ளது. சீனாவின் சைபர் தாக்குதலால் உலக வல்லரசான அமெரிக்காவே நெருக்கடியை எதிர்கொள்கின்ற போது இந்தியா அதனை எதிர்கொள்வது மிகக்கடினமானதொன்றாக அமையும். 21ஆம் நூற்றாண்டு போர் என்பது சைபர் போர் என்றே பல இராணுவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அத்தகைய சூழல் ஒன்று அமையுமென்றால் இந்தியா பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக அண்டவெளி தொழில்நுட்பத்தையும், அணுமின் உற்பத்திகளும் குவிந்துள்ள தென்மாகாகணங்கள் தொழில்நுட்பம் மற்றும் மென் தொழில்நுட்ப தளத்திலும் இந்தியாவுக்குள் முன்னணி பெற்று இருப்பதனால் சீனாவின் நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும்.

ஐந்தாவது, இந்தியாவின் கிழக்கு நோக்கிய அல்லது தென்மாநிலங்களை நோக்கிய நகர்வானது தனது நிலத்தையும் எல்லைகளையும் பாதுகாக்கின்ற ஒரு சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிப்படுத்துகின்றது. பாரிய கண்காணிப்பையும் அவதானிப்புக்களையும் தொடர்ச்சியான உத்திகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்திய விமானப்படை கடற்படை தரைப்படை நகர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியா தேசத்தின் பாதுகாப்பை மட்டுமே பராமரிக்கும் நிலைக்குள் இந்திய இராணுவ நகர்வுகள் சாத்தியமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும் பெரும் குறைபாடுகளும் இந்தியா இராணுவம் கொண்டிருக்கின்றது என்ற செய்தியை தவிர்த்துவிட முடியாது.பிரான்ஸ் இடமிருந்து கொள்வனவு செய்த ரபால் போர் விமானங்களிலில் நிகழ்ந்த ஊழலை விசாரிக்க பிரான்ஸ் குழுவொன்றை அமைத்துள்ளது என்ற செய்தியை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

ஆறாவது, இந்தியாவின் தென்னாசிய நோக்கிய விஸ்தரிப்பு குறைபாடுகளும் இந்திய தேசிய பாதுகாப்போடு ஒப்பிடுகின்ற விதத்தில் இரண்டாம் நிலைக்கு உட்பட்ட அம்சமாகவே உள்ளது. தென்னாசிய நாடுகள் மீது உலகில் எந்த இராணுவமும் எத்தகைய நகர்வை மேற்கொண்டாலும் இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்லேடன் மீதான அமெரிக்க தாக்குதல் இதற்கானதொரு ஆரம்ப புள்ளியாகவே தெரிகிறது. அவ்வாறானதொன்றே ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க கூட்டுப்படை யுத்தம். இத்தயை நகர்வுகள் இதர தென்னாசிய நாடுகள் மீது நிகழ்ந்தாலும் அதனை தடுத்து நிறுத்தம் எந்தவொரு வழிமுறையும் இந்தியாவிடம் இல்லை என்பதுவே தூத்துக்குடி உட்பட கிழக்கு கடற்கரைசாலை விஸ்தரிப்பதன் மறைமுகச் செய்தியாகும்.

எனவே, சீனாவிற்கு எதிரான இந்தியாவின் முனைப்புக்கள் அனைத்தும் இந்திய தேசத்தை தக்க வைப்பதற்காகவே அன்றி தென்னாசியாக்கான பார்வை கிடையாது. அதன் ஒர் அங்கமே தூத்துக்குடி துறைமுகம் நோக்கிய இந்திய நீர்மூழ்கிக்கப்பலின் நகர்வு அமைந்துள்ளது. அதனால் பிராந்திய ரீதியிலான தலைமைக்குரிய வலுவை இந்தியா இழந்திருப்பதோடு அத்தகைய வெற்றிடத்தை சீனா நிரப்பியுள்ளதையும் மறுபக்கத்தில் தென்னாசிய நாடுகளின் பாதுகாப்பே இந்தியாவின் பாதுகாப்பு என்ற நிலை முடிவுக்கு வந்து இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதே இந்தியாவை பாதுகாக்கும் முறை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகம் நோக்கிய சிந்துஷாட்ரா-இன் வருகை ஊடகங்களில் பரபரப்பானமைக்கு காரணம் ஊடகத்தரப்பினரிடம் இந்தியாவின் எழுச்சி ஊக்குவிக்கப்பட வெண்டுமென்ற அவாவாகும். எனினும் அதனை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களோ, பாதுகாப்பு நிபுணர்களோ புரிந்து கொள்வதாக தெரியவில்லை. மாறாக மாற்று கருத்தை இந்தியாவின் எதிர்ப்புவாதமாக காட்ட முயலுவதனூடாக அவ்விடயத்தை நகர்த்தி செல்ல முயலுகிறார்கள். இதுவே தென்னாசியா மீதான இந்தியாவின் கொள்கை தோல்வியடைய காரணமாகவுள்ளது.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE