Thursday 18th of April 2024 05:04:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு!

புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு!


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர், கொழும்பு - கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

நியூசிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகராக மைக்கல் எட்வர்ட் எப்பல்டன், கியூபா மக்கள் குடியரசின் தூதுவராக அன்ட்ரஸ் மாசெலோ கரிடோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவே இதுவரையில் இலங்கை விவகாரங்கள் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டு வந்தன. இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்தி, இலங்கையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக, மைக்கேல் எட்வர்ட் எப்பல்டன் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் சபையில், இலங்கைக்கு கியூபா அளித்துவரும் ஆதரவை, ஜனாதிபதி கியூப தூதுவரிடம் தெரிவித்து பாராட்டினார். இலங்கைக்கும் தங்களது நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளைப் புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்குத் தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக, புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

கொவிட் தொற்றுப் பரவலின் ஆரம்பம் முதல் அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து, ஜனாதிபதி புதிய தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.

காலநிலை மாற்றத்துக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், ஒரு விசேட செயலணியை அமைத்து, முறையான ஒரு திட்டத்தின் கீழ், ஒரு நாடு என்ற வகையில் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களையும் ஜனாதிபதி விளக்கினார்.

சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம், 2030ஆம் ஆண்டாகும் போது புதுப்பிக்கத்தக்க சக்திவள மூலங்களில் இருந்து நாட்டின் எரிசக்தி தேவைகளில் அதிக சதவீதத்தைப் பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மனிதாபிமான நடவடிக்கைக்குப் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து, அப்பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிடுவதன் மூலம் விளங்கிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தூதுவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே, தலைமை நெறிமுறை அதிகாரி துஷார ரொட்ரிகோ, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டிஆரச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE