Friday 19th of April 2024 08:53:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றனர்!

கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றனர்!


பலவிதமான வாக்குறுதிகளை அள்ளிவீசி தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று பதவிக்கு வந்தவர்கள் இந்த கொடுங்கோல் ஆட்சியுடன் இணைந்திருந்து கொண்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கு பாதகமாக தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும்போது அதற்கு உடந்தையாக செயற்படுவதுடன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்நகர்த்திக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம்.இங்கு தமிழ் மக்களின் தனித்துவத்தினை பேணுகின்ற கட்சியின் பிரதிநிதித்துவம் எதிர்கொண்டுள்ள சவால்கள், அரசாங்கத்துடன் இணைந்துள்ள இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைக்ககூடிய பலவிதமான நன்மைகளை, அவர்களுக்குரித்தான விடயங்களை ஏதோ தங்களின் சட்டப்பைகளுக்குள் இருந்து எடுத்துக் கொடுப்பதைப்போன்ற காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். இது இந்த நாட்டின் பிரஜைகளாக பெறக்கூடிய உரித்துடைய விடயங்கள். இதனை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று இந்த நாட்டிலே தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் இந்த நாட்டினை எந்தவிமாக ஆட்சிசெய்கின்றது என்பது அனைவரும் அறிந்தவிடயம். விசேடமாக தமிழ் பிரதேசங்களிலே எவ்வாறு பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பதவிக்கு வந்தவர்கள் தங்களது வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாதவர்களாக மீண்டும் மீண்டும் வாக்குறுதிகள் மட்டும் வழங்கும் சூழ்நிலை தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் அண்மைக்காலத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்கின்ற சில நடவடிக்கைகளை மையமாக வைத்து, அதில் எந்த குற்றமும் இல்லாதபோதிலும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜராக்கப்படும்போது கூட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனால் அவர்களுக்கு பிணைகூட எடுக்கமுடியாத சூழ்நிலையிருக்கின்றது.

இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்ற அரசியல்வாதிகள் இந்த மாவட்டத்திலிருந்தாலும் இவ்வாறான அநியாயங்கள் எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியாக அபகரிக்கப்படுகின்றன. இது குறித்து நாங்கள் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து சூழ்நிலைகளை அவதானித்திருக்கின்றோம். ஓரிரு விடயங்களில் நீதிமன்றத்தினை நாடியிருக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குபவர்களின் செயற்பாடுகள் எதனையும் காணமுடியாதுள்ளது.

தமிழ் மக்கள் இவ்வாறானவர்களை தொடர்ந்தும் ஆதரிக்கப்போகின்றார்களா? பலவிதமான வாக்குறுதிகளை அள்ளிவீசி தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று பதவிக்கு வந்தவர்கள் இந்த கொடுங்கோல் ஆட்சியுடன் இணைந்திருந்து கொண்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கு பாதகமாக தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை இந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும்போது அதற்கு உடந்தையாக செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று ஆட்சியில் உள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் நன்மைக்காக செயற்படுகின்ற அரசாங்கமென்று எவராலும் சொல்லமுடியுமா? தமிழ் மக்களுக்கு தீங்கிழைக்கின்ற, தமிழ் மக்களின் உரிமையினை மறுக்கின்ற, தமிழ் மக்களை விசேடமாக அடக்குமுறைக்குள்ளாக்கின்ற ஆட்சியாளர்களுடன் தமிழ் மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள் ஒட்டிக்கொண்டிருப்பது குறித்து தமிழ் மக்கள் தீர்மானமான முடிவுகளை எடுக்ககூடிய நேரம் வந்திருக்கின்றது.

இந்த நாட்டில் பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் உரிமைக்குரலாக செயற்படும் இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மையான கட்சி. அந்த கட்சியுடன் தொடர்ந்து பயணியுங்கள். இடைக்காலத்தில் வெவ்வேறு வாக்குறுதிகளை நம்பி போனவர்களும் அந்த மாயையிலிருந்துவிடுபட்டு எங்களோடு வந்து சேர்ந்து செயற்படுங்கள். எங்களது இருப்பினை, எங்களது உரிமையினை நாங்கள் முதலில் பாதுகாப்போம். அதிலிருந்துதான் எங்களுக்கான மிகுதியான விடயங்கள் கிடைக்குமே தவிர எங்களது உரிமையினை விற்று பிழைக்கின்ற நடவடிக்கையினை நாங்கள் செய்யமாட்டோம்.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மோசமாக பாதிக்கப்படுவதற்கு வெவ்வேறு கட்சிகள் பிரிந்து நின்று செயற்பட்டதும் ஒரு காரணம். தேர்தல் முடிந்த கையுடன் உடனடியாக அனைவரும் ஒரு குடையின் கீழ் சேருவது என்பது கடினமான விடயம். ஆனாலும் மக்களின் நன்மை கருதி தமிழ் தேசிய கட்சிகளில் பிரதானமான கட்சியென்ற அடிப்படையில் அனைவரையும் ஒன்றுசேர்க்க வேண்டியதன் தேவை எங்களிடத்தில் இருக்கின்றது. இவை குறித்து நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்துள்ளோம். இது தொடர்பில் பலவிதமான முயற்சிகள் நடைபெறுகின்றன.

இன்றுள்ள சூழ்நிலையில் நாங்கள் எதிர்நோக்கியுள்ள ஒவ்வொரு சவாலுக்கு முகம்கொடுக்கின்றபோது எங்களை பிரிந்து சென்றவர்களையும் இணைத்துதான் நாங்கள் அதற்கு முகம்கொடுக்கின்றோம். அதற்கான முன்னெடுப்புகளை நாங்களே செய்கின்றோம். தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று பலவீனமடைந்திருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் அதிகரித்துள்ளது. இன்றைய ஆட்சிக்காலத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதற்கு நாங்கள் செயற்படுவது குறித்தும் மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் செய்ததுபோதாது என்ற அதிர்ப்தி இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை முற்றாக மாறியுள்ளது. கடுமையான அடக்குமுறைக்குள் செல்லும்போது இதன் வித்தியாசத்தினை மக்கள் உணரமுடிகின்றது.

எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தினை கவிழ்க்க முயற்சிக்கவேண்டாம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். எந்த அரசாங்கமாகயிருந்தாலும் அது மக்களுக்கு விரோதமானதாகயிருந்தால் அதனை எதிர்ப்போம். அரசாங்கத்தினை எதிர்க்ககூடாது என்ற கொள்கை எங்களுக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை.

பதவியில் இருப்பவர்கள் அரசாங்கத்தினை சேர்ந்த கட்சியாகும். அவர்களுடன்தான் சில விடயங்கள் தொடர்பில் பேசமுடியும். அதனை நாங்கள் முன்னெடுக்கின்றோம். அரசாங்கத்துடன்தான் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியும். ஆனால் அரசாங்கத்துடன் பேசுவது என்றால் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படக்கூடாது என்ற முன்நிபந்தனை வைத்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE