Wednesday 29th of September 2021 02:22:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
இன அழிப்பால் வரலாற்றைக் கறைப்படுத்திய கறுப்பு ஜுலை! - நா.யோகேந்திரநாதன்!

இன அழிப்பால் வரலாற்றைக் கறைப்படுத்திய கறுப்பு ஜுலை! - நா.யோகேந்திரநாதன்!


“யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்கள்) அபிப்பிராயங்கள் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. நான் இப்போது அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது. வடக்கின் மீது எங்களால் எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோசப்படுவார்கள்”.

இது அப்போது இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன 3,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 800 கோடிக்கும் அதிக பெறுமதியுள்ள தமிழர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டும், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு நோக்கியும் கடல் கடந்தும் அகதிகளாக இடம்பெயர வைத்துள்ளதுமான ஒரு பெரும் இனப் பேரழிவு பற்றி லண்டன் ரெலிகிராப் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்ட விடயமாகும்.

ஒரு தேசிய இனம் அழிக்கப்படுவது தொடர்பாக இன்னொரு தேசிய இனம் மகிழ்ச்சியடையுமென எவ்வித கூச்சமுமின்றி ஒரு நாட்டின் ஜனாதிபதி சர்வதேச ஊடகத்திற்குத் தெரிவிக்குமளவுக்கு இந்த நாட்டை ஒரு அநாகரீகமான இனவெறியே தலைமை தாங்கி வழிநடத்தியமையைப் புரிந்து கொள்ளமுடியும். இத்தனைக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியதன் அடிப்படையிலும், தொண்டமானின் ஆதரவு காரணமாகவும் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தென்னிலங்கையில் வாழ்ந்த வடக்குக் கிழக்கு தமிழ் மக்களும் மலையக மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வழங்கி, ஐ.தே.கட்சி 5/6 பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைத்தனர். அத்தகைய தமிழ் மக்களின் ஆதரவுடன் பெற்ற பெரும்பான்மையாலேயே ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தன்னை உருவாக்கிக் கொண்டார். அந்த ஆதரவுக்குத் தமிழ் மக்களுக்கு ஜே.ஆர். வழங்கிய நன்றிக் கடன் தான் இப்பேரழிவும் அது பற்றி அவர் வெளிப்படுத்திய பெருமையுமாகும்.

1983 ஜுலை 23ம் திகதி குருநகர் இராணுவ முகாமிலிருந்து மாதகல் நோக்கி ரோந்து சென்ற இராணுவ அணி மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 13 படையினர் கொல்லப்பட்டதுடன் இருவர் தப்பியோடி விட்டனர். அதனால் கோபமடைந்த சிங்கள மக்கள் தென்னிலங்கையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர் எனக் கூறப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல தின்னைவேலியில் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டது உண்மையாயினும் அதற்குப் பல நாட்களுக்கு முன்பே தமிழர் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன.

மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது கந்தர்மடம் வாக்குச் சாவடியில் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்படுகின்றனர். அதையடுத்து இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்தில் 4 தமிழர்கள் வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டுச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். 64 வீடுகள், 3 மினி பஸ்கள், 6 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், 36 சைக்கிள்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன.

02.06.1983 வவுனியாவில் புளொட் அமைப்பினர் விமானப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 2 சிப்பாய்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் சொந்த இடங்களான மினுவாங்கொட, கண்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் மீது இன வெறியாட்டம் நடத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1983 ஜூன் மாதம் படையினரின் உதவியுடன் திருமலையில் சிங்களவர் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்கள் 2 மாதம் நீடிக்கிறது. பலர் இடம்பெயர்கின்றனர். 01.07.1983 திருமலையில் இன அழிப்பை எதிர்த்து ஹர்த்தால் மேற்கொள்ளப்படுகின்றது.

03.07.1983ல் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் இராணுவத்தினரால் கொல்லப்படுபவர்களை விசாரணையின்றிப் புதைக்க அனுமதி சட்டபூர்வமாக வழங்கப்படுகிறது.

15.07.1983 கச்சாய் பகுதியில் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் சீலன் என அழைக்கப்படும் சார்ள்ஸ் அன்ரனி தன்னைத் தானே சுட்டு வீரச் சாவடைகிறான்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் மாணவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

02.07.1983 சுதந்திரன், சற்றடே ரிவியூ ஆகிய பத்திரிகைகள் தடை செய்யப்படுகின்றன. ஆசிரியர் கோவை மகேசன், தர்மலிங்கம் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.

20.07.1983 பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு வருகிறது.

22.07.1983 மூன்று மாணவிகள் படையினரால் பஸ்ஸில் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஒரு மாணவி தற்கொலை செய்கிறாள்.

இவ்வாறு இராணுவத்தினர் வடபகுதியெங்கும் திரிந்து வன்முறை வெறியாட்டங்களையும் கொலைகளையும் காரணமற்ற கைதுகளையும் நடத்திய நிலையில்தான் அவர்களைக் கட்டுப்படுத்துவதை விட வேறு வழியில்லை என்ற நிலை புலிகளுக்கு எழுகிறது.

சீலனின் வீரச்சாவும், மாணவிகள் கடத்தப்பட்டுக் கெடுக்கப்பட்டமையும் இராணுவத்தினரை அடக்க வேண்டிய ஒரு அவசரத் தேவையை உருவாக்கியது.

எனவே தின்னைவேலித் தாக்குதலுக்கு முன்பாகவே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டமையையும் அவற்றை நாடு பரந்தளவில் விரிவாக்கும் முகமாக அவசர காலச்சட்ட விதிகள், பத்திரிகைத் தணிக்கை போன்றவை மூலம் முற்தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டமையையும் உணர முடியும்.

மரணமடைந்த இராணுவத்திரின் உடல்கள் அனைத்தினதும் இறுதிக் கிரியைகள் பொரளை கனத்தை மயானத்தில் நடத்தப்படுமெனவும் 7.30 மணிக்கு அவை கொண்டு வரப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது. அவர்களின் பெற்றோர்களும் அங்கு கொண்டு வரப்படுகின்றனர்.

6.00 மணியளவில் கூட ஆரம்பித்த மக்கள் இரவு 7.00 மணியளவில் ஏறக்குறைய பத்தாயிரமளவுக்கு அதிகரிக்கிறது. அவர்களில் ஒரு சிலர் சடலங்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரிக் கோஷங்களை எழுப்பியவாறு இராணுவத்தினரைப் புதைக்கத் தோண்டப்பட்ட குழிகளை மூடியதுடன் இறுதிக் கிரியைக்கான பொருட்களையும் தூக்கியெறிந்து குழப்பங்களை விளைவிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் சடலங்கள் கொண்டுவரப்படாத நிலையில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கின்றன. 10 மணியளவில் சடலங்கள் இராணுவத் தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுப் பெற்றோர்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

அங்கிருந்து கலைந்த கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் அங்கு பெட்டிக் கடைகளுக்குள் தயாராக வைக்கப்பட்ட பெற்றோலை ஊற்றி பொறளை சந்தி வரையிலுள்ள தமிழரின் கடைகளை எரியூட்டியவாறு செல்கின்றனர். கண்ணில் காணப்படும் தமிழர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்படுகின்றனர். பொரளையெங்கும் கலவரம் தொடங்கி வர்த்தக நிலையங்கள், இல்லங்கள் எனத் தமிழர்களின் உடமைகள் எரியூட்டி அழிக்கப்படுகின்றன. ஏற்கனவே திட்டமிட்டபடி தெமட்டகொட, மருதானை, கிராண்ட்பாஸ், கொம்பனித்தெரு எனப் பல இடங்களுக்கும் பரவுகின்றன. மருதானை, குணசிங்கபுர, மாளிகாவத்தை ஆகிய பகுதியில் பிரேமதாசவின் கையாளான மாநகர சபை உறுப்பினர் சுகததாச தலைமை தாங்கி தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள் என்பவற்றை நடத்துகிறான்.

அன்றிரவு 2 மணியளவில் ஓய்வுக்கு வந்த கலவரம் 25.07.1983 அதிகாலை புறக்கோட்டையில் ஆரம்பமாகிறது. அங்குள்ள தமிழர்களின் மொத்த விற்பனை நிலையங்கள் அழிக்கப்படுகின்றன. திருப்பதி ஸ்ரோர்ஸ் என்ற மொத்த விற்பனை நிலையம் எரியூட்டப்பட்டு அதன் உரிமையாளர் அதற்குள் உயிருடன் தூக்கி வீசப்பட்டுக் கொல்லப்படுகிறார். ஒல்கொட் மாவத்தை, பிரிஸ்டல் கட்டிடம், பேர்ச் வீதி, பெஸ்லி வீதி என சகல இடங்களிலும் தமிழர்கள் மீதான கொலை, தீ வைப்பு, தாக்குதல்கள் என்பன தொடர்கின்றன. கடவத்தையில் ஒரு அம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு நோயாளி உயிருடன் எரிக்கப்படுகிறார்.

25.07.83 அன்று காலை வெறியாட்டம் வெள்ளவத்தை, தெஹிவளைப் பகுதிகளுக்குப் பரவுகிறது. சொய்சாபுரவில் உள்ள அடுக்கு மாடித் தொடர்களில் வாக்காளர் இடாப்பை வைத்துக்கொண்டு தமிழர்களை இனம் கண்டு தாக்குதல்களும் கொலைகளும் கொள்ளைகளும் இடம்பெறுகின்றன. அங்கு மட்டும் 82 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். வெள்ளவத்தையில் குடியிருந்த முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் கைகள் கட்டப்பட்டு வீதிக்கு இழுத்துவரப்பட்டுத் தாக்கப்படுகிறார். நிலைமையை அறிந்து அவரது முன்னாள் மெய்ப்பாதுகாவலர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மாக்ஸி பெர்னாண்டோ வந்து அவரைக் காப்பாற்றுகிறார். ஹெந்தலையிலுள்ள குணரத்தினத்துக்குச் சொந்தமான சினிமா ஸ்ரூடியோ எரிக்கப்படுகிறது. பல முக்கிய சினிமாப்படங்களின் மூலப் பிரதிகள் எரியூட்டி அழிக்கப்படுகின்றன. மகாராஜா நிறுவனம், சின்ரெக்ஸ் நிறுவனம் என்பனவும் எரித்தழிக்கப்படுகின்றன. இதனால் ஒன்றரை இலட்சம் பேர் வேலையிழக்கின்றனர். இத்தொழிலாளர்களில் அநேகமானவர் சிங்களவர் என்பது குறிப்பிடத்தக்கது. எரிக்கப்பட்டவற்றில் சிங்களப் படப் பிரதிகளும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 3 நாட்கள் கொழும்பே பற்றியெரிந்த நிலையிலும் 25.07.83 மாலை 6.00 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் ஊரடங்கு நேரத்திலேயே பொலிஸார் முன்னிலையிலேயே வன்முறைகள் இடம்பெற்றன.

ஊரடங்கு அமுலிலுள்ள நிலையிலும் பொலிஸார், படையினர் முன்னிலையில் புத்த பிக்குமார் வீதியில் இறங்கிக் கட்டளையிடக் காடையர் கூட்டம் அழிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். வெள்ளவத்தையில் கணவன், மனைவி, இருபிள்ளைகள் உட்பட ஒரு குடும்பத்தினர் ஒரு காருக்குள் வைத்து உயிருடன் எரித்துக்கொல்லப்ப டுகின்றனர்.

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதுடன் அதன் பிரதம செயலர் ஆப்பிரகாமின் கார் எரிக்கப்படுகின்றது. அவரின் செயலாளர் கே.வி. ஐயர் தாக்கப்பட்டு படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதுபற்றி அரசாங்கமோ, ஜனாதிபதியோ வருத்தம் தெரிவிக்கவோ தவறை ஒப்புக்கொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பிரதான நகரங்களிலும் தமிழரின் இரத்தத்தில் குளித்த இன வெறிக்கூட்டம் தனது கரங்களை மலை நாட்டை நோக்கி நீட்டுகிறது.

28.07.1983 அன்று பதுளை லுணுகல, நுவரெலியா ஆகிய பகுதிகளில் வெடித்த தமிழர்கள் மீதான வன்முறைகள் அன்று மாலைக்குள் மலையகமெங்கும் முழுவதுமே பரவி விடுகிறது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான தொண்டமான் கூட அவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அங்கு 300 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். 300இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 28,000 குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வடக்குக்கும், இந்தியாவுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

வத்தளை ஹெந்தளையில் அமைந்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் சகோதரியின் வீடு எரிக்கப்பட்டதுடன் நில அளவையாளரான அவரின் மைத்துனர் படுமொசமாகத் தாக்கப்பட்டார்.

அதேவேளையில் ஜுலை 25, 27ம் திகதிகளில். வெலிக்கடைச் சிறையில் சிங்களக் கைதிகளால் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தென்னிலங்கை நகரங்களிலும் சிறு நகரங்களிலும் மலையகத்திலும் தமிழர்களின் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருந்தபோது 29.07.1983 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது பற்றி எவ்வித ஆலோசனைகளும் முன்வைக்கப்பட வில்லை. மாறாக உடனடியாக நாடாளுமன்றத்தின் பிரிவினைவாதத் தடைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வளவு பேரழிவுகளை மேற்கொண்ட பின்பும் கூட தமிழ் மக்கள் பற்றி கவலைப்படப் போவதில்லையெனவும் இவற்றுக்காகச் சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள் எனவும் கூறிய ஒரு ஜனாதிபதிக்குத்தான் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற அமிர்தலிங்கமும் தொண்டமானும் ஆதரவளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உலக வரலாற்றில் இந்தக் கறுப்பு ஜுலை அழிக்க முடியாத கறையாக நிலைத்து விட்டது என்பதை மறுத்துவிட முடியாது.

அருவி இணையத்திற்காக :- நா.யோகேந்திரநாதன்

23.07.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE