Thursday 25th of April 2024 09:34:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 65 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 65 (வரலாற்றுத் தொடர்)


தமிழர்கள் மீதான பொருளாதாரப் போர்! - நா.யோகேந்திரநாதன்!

'யூ.என்.பி. ஆட்சிக்கு வந்ததும் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த சில கொள்கைகளை மாற்றத் தொடங்கியது. போலியான சோசலிச பெயர்ப் பலகையைப் போட்டுக்கொண்டு அந்நிய ஏகாதிபத்தியக் கம்பனிகள் குறிப்பாகத் தேசங்கடந்த கொம்பனிகள் எமது பொருளாதாரத்துக்குள் நுழைந்து சுரண்டுவதற்கு வழி திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கை ஒன்றைப் பிரகடனம் செய்து பெருந்தொகையான ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்தது. இப்போது எமது நாட்டில் இப்பொருட்கள் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளன. முந்திய அரசாங்கம் கடைப்பிடித்த இறக்குமதிக் கொள்கை மாற்றப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் பாவனைப்பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இறக்குமதிகளை முற்றாகத் தடை செய்தும், தடை அடிப்படையிலான வரிகள் விதித்தும் வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. ஐ.தே.கட்சி அரசாங்கம் அதன் கொள்கையால் கொஞ்சநஞ்சமிருந்த தொழிற்துறைக்குச் சாவு மணி அடித்தது. விவசாயத்திலும் இப்படியே முந்திய அரசாங்கத்தின் கீழ் மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உபஉணவுப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தது. உள்ளுர் விவசாயிகள் குறிப்பாக வடபகுதி விவசாயிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டுக்குத் தேவையான உபஉணவுப் பொருட்களை உற்பத்தி செய்தனர். ஆனால் ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த உணவுப் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது. முன்னைய ஆட்சியில் செல்வந்தராக விளங்கிய விவசாயிகள் மீண்டும் ஏழைகள் ஆகினர்'.

இவை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) தலைவரும் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான அமரர் நா.சண்முகதாஸன் எவ்வாறு இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிய பயணம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் சீர்குலைக்கப்பட்டது என்பதைத் தனது 'ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகள்' என்ற நூலில் குறிப்பிட்ட சில முக்கிய விடயங்களாகும்.

1972ம் ஆண்டின் அரசியலமைப்புக்குத் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் நாடாளுமன்றத்தாலோ அமைச்சரவையாலோ கட்டுப்படுத்த முடியாத சர்வாதிகாரியாகவும் நிலை நிறுத்திக்கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன தமிழ் மக்களின் மொழியுரிமை, ஏனைய மதத்தினரின் மத உரிமை என்பன மீண்டும் இலகுவில் பெற்றுக்கொள்ளமுடியாதபடி 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் உடைக்க முடியாத பூட்டைப் போட்டிருந்தார்.

அடுத்த கட்டமாக அவரால் முன்வைக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை மூலம் தமிழ் மக்களின் விவசாயப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

திறந்த பொருளாதாரக் கொள்கையின் காரணமாகக் கட்டற்ற வகையில் இடம்பெற்ற இறக்குமதிகள் நாடு முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள், சிறு தொழில் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் எனப் பல தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்கிய போதும், அமரர் சண்முகதாசன் அவர்கள் குறிப்பிட்டது போன்று வடபகுதி விவசாயிகளே பெருமளவு பாதிப்புக்குள்ளாகினர்.

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டதாரியான லலித் அத்துலத் முதலி வர்த்தக அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். அவர் அதிகாரத்துக்கு வந்ததும் மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உப உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீமாவோ அரசாங்கம் விதித்திருந்த இறக்குமதித் தடையை உடனடியாக நீக்கினார். அதன் காரணமாக அப்பொருட்கள் சந்தையில் குவிந்தன.

1977க்கு முன்பு ஒரு றாத்தல் 40 ருபாவாக இருந்த செத்தல் மிளகாயின் விலை ஆட்சி மாற்றத்தின் பின்பு ஒரு கிலோ எட்டு ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. இவ்வாறு ஏனைய உபஉணவுப் பொருட்களின் விலையும் படுமோசமாக வீழ்ச்சியடைந்தன. அதேவேளை உரப் பசளைக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட ஒரு அந்தர் பசளையின் விலை 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக உயர்ந்தது.

விவசாயத்தின் மூலம் கல்வீடுகள் கட்டியும், உழவு இயந்திர போக்குவரத்து வாகனங்கள் வாங்கியும் செல்வச் செழிப்பாய் வாழ்ந்த வடபகுதி விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். மிளகாய் விலையை நம்பி கூடுதலாகத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட பலர் தங்கள் வாகனங்களை மட்டுமின்றி காணிகளைக் கூட விற்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வாகனங்கள் உதிரிப் பாகங்கள் என்பவற்றின் இறக்குமதித் தடை மூலம் சிறு கைத்தொழில்கள் வளரும் வாய்ப்புகளும் பெருகியது. முன்னைய வாகனத் திருத்தகங்கள் பல உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறின. பழைய கார்கள் புதிய பொலிவுடன் வீதியில் ஓட ஆரம்பித்தன. வாகனங்கள், உதிரிப் பாகங்கள். இறக்குமதித் தடை நீக்கப்பட்டதும் இச்சிறு கைத்தொழில்கள் அனைத்தும் கைவிடப்படவேண்டிய நிலை எழுந்தது.

இது மட்டுமின்றி மின்தறி நெசவாலைகள், அலுமினியத் தொழிற்சாலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், கூரைத் தகடு உற்பத்தி, ஓடு செங்கல் உற்பத்தி என வடக்கில் மேலோங்கியிருந்த கைத்தொழில் உற்பத்தி நிலையங்கள் இறக்குமதித் தடை நீக்கத்துடன் இழுத்துமூட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் கிராமங்களில் இயங்கிய கைத்தறி நெசவாலைகளும் கைவிடப்பட்டன.

ஒரு காலத்தில் மட்டக்களப்பு சாரம் உட்படக் கைத்தறி உற்பத்திகளுக்கும் பாய் வகைகளுக்கும் தனி மரியாதை இருந்தது. ஜே.ஆர். ஆட்சியில் அவையும் கைவிடப்பட்டன.

இவ்வாறு ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சியில் தமிழ் மக்களின் மொழியுரிமை, மத உரிமை என்பன அரசியலமைப்பு மூலம் பறிக்கப்பட்டதுடன் விவசாயம், சிறுகைத்தொழில், கைத்தொழில் உற்பத்தி என்பன திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டன.

1977 தேர்தலில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு சமாந்தரமான முறையில் தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவைக் கோரியிருந்தார். இரண்டு சுற்றுப் பேச்சுகள் நடந்த பின்பு திருமதி ஸ்ரீமாவை நம்பமுடியாது எனக் கூறிவிட்டு தொண்டமானின் அனுசரணையுடன் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுடன் பேச்சுக்களை நடத்தினர். அதில் அ.அமிர்தலிங்கம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தார். அந்த ஆதரவின் அடிப்படையில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஐ.தே.கட்சிக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர். அதன் காரணமாகவே 5/6 பெரும்பான்மையைப் பெற்று ஜே.ஆர். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

திருமதி ஸ்ரீமாவோ ஆட்சியை விழுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஐ.தே.கட்சியை ஆட்சிப் பீடமேற வழிவகுத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வளவு கூடுதலாகப் பறிக்க முடியுமோ அவ்வளவு தூரம் பறித்து ஜே.ஆர். தனது ஜனநாயகம் பற்றித் தெளிவுபடுத்தினார்.

அவர் தனது ஒடுக்குமுறைகளைத் தமிழ் மக்கள் மீது மட்டுமின்றி சாதாரண சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுவர்த்தகர்கள் மீதும் விரிவுபடுத்தினார்.

தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வந்த இலங்கையில் அந்நிய முதலீட்டாளர்களை அழைத்து ஏகாதிபத்தியப் பொருளாதார வலைப்பின்னலில் இலங்கையை இணைக்கும் முகமாக திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுலுக்குக்கொண்டு வந்தார். அந்நிய நிறுவனங்களின் தொழில் நிறுவனங்களை அமைக்க வரியற்ற வர்த்தக வலயத்தை கட்டுநாயக்காவில் உருவாக்கினார்.

இலங்கையில் ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும் சம்பளம் இந்தியாவில் இரண்டுமடங்கும், சிங்கப்பூரில் ஐந்து மடங்கும் வழங்கவேண்டும்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் தடை செய்யப்பட்டது. அதேபோன்று இலங்கையின் குறைந்த நாணயப் பெறுமதி காரணமாக மின்சாரம், போக்குவரத்து என்பனவற்றையும் மலிவாகப் பெறமுடியும். அதன் காரணமாக ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுநாயக்காவில் தொழிற்சாலைகளை நிறுவின.

இவ்வாறு ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரம் மேலோங்கிய நிலையில் உள்ளுர் உற்பத்திகள் நலிவடைந்தன. பல தொழில் நிலையங்களை மூடிவிடும் நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இலங்கையின் போக்கு தலைகீழாக மாறவே வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்ல ஆரம்பித்தது. பணக்காரருக்கும் ஏழைகளுக்குமுள்ள இடைவெளி விரிவடைந்து சென்றது. உதாரணமாக 75 சதம் விற்ற பாணின் விலை 3 ரூபா 10 சதமாக உயர்ந்தது. தபால் கட்டணம் 15 சதத்திலிருந்து 75 சதமாக உயர்ந்தது.

1977ல் 8 ரூபாவாக இருந்த 1 அமெரிக்க டொலரின் பெறுமதி 1980ல் 72 ரூபாவாக உயர்ந்தது.

இவ்வாறான பின்னடைவுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதை ஜே.ஆர். நன்கு அறிந்து கொண்டார். அதை வெற்றி கொள்ள அவர் தீர்மானித்த வழி தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதும், தனது அரசியல் எதிரிகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதுமேயாகும்.

அவர் தனது அதிகாரத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும், அதற்கு வரக்கூடிய இடையூறுகளை நசுக்கவும் இரு வழிகளைத் தேர்ந்தெடுத்தன.

தென்னிலங்கையில் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக உருவாகிவரும் எதிர்ப்பை ஒன்று திரட்டித் தலைமையேற்று தேர்தல் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து ஜே.ஆரை பதவியிலிருந்து அகற்றும் ஆற்றலும் மக்கள் செல்வாக்குமுள்ள ஒரேயொரு தலைவராக விளங்கியவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மட்டுமே என அவர் புரிந்து கொண்டிருந்தார். எனவே ஸ்ரீமாவோவை அரசியலரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தனக்குத் தென்னிலங்கையில் எழக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கமுடியுமென நம்பினார்.

அடுத்து வடக்கில் கிழக்கில் வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் இளைஞர் குழுக்களின் ஆயுத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தனது ஆட்சியை ஆட்டம் காணவைக்கும் என்பதையும் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். 1978ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட ஒரு வருடத் தடை அவர்களின் வளர்ச்சியைத் தடை செய்யப் போதுமானதல்ல என்பதையும் உணர்ந்து கொண்டார்.

எனவே பயங்கரமான ஒடுக்குமுறைச் சட்டத்தின் மூலம் போராளிகளை மட்டுமின்றி பொது மக்களையும் வேட்டையாடி ஒரு அதியுயர் அச்சுறுத்தல் சூழலையும் உருவாக்கத் திட்டமிட்டார்.

இப்படியான ஒரு பயங்கர சூழலை ஏற்படுத்துவதன் மூலம் போராளிகளுக்கு பொது மக்கள் ஆதரவளிக்கும் நிலையைத் தவிர்த்து அவர்களைத் தனிமைப்படுத்திவிட முடியுமென எதிர்பார்த்தார்.

எனவே தெற்கில் தனக்குப் போட்டியாகவுள்ள திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறிப்பதன் மூலம் அவரை அரசியலரங்கிலிருந்து அகற்றி விடவும், வடக்குக் கிழக்கில் எழுச்சி பெறும் ஆயுதப் போராட்டங்களை அடக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுலுக்குக்கொண்டுவரவும் திட்டமிட்ட வகையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

வடக்குக் கிழக்கு மக்கள் மீது பொருளாதாரப் போரைத் தொடுத்ததன் மூலமும் விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய இளைஞர் அணிகளுக்கும் ஒரு வருடத் தடை விதித்ததன் மூலமும் தமிழ் மக்களின் எழுச்சியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தோல்வியடைந்த அவர் மனித நீதிக்கும் சர்வதேச நியமங்களுக்கும் உட்படாத ஒரு பயங்கரமான சட்டத்தின் மூலம் ஒடுக்க முடிவு செய்தார்.

ஆனால் அத்தகைய நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை அவரால் பெறமுடியவில்லை என்பது மட்டுமின்றி எதிர்விளைவுகளையுமே சந்திக்க வேண்டிய நிலை எழுந்தது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE