Thursday 25th of April 2024 11:49:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
எரிபொருள் விலையுயர்வும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும்! - நா.யோகேந்திரநாதன்!

எரிபொருள் விலையுயர்வும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் திடீரென மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையுயர்வு காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய அவலநிலை எழுந்தது. உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்கள் போன்றவற்றின் விலையேற்றங்கள், போக்குவரத்து, மீன்பிடி போன்ற தொழில்களில் ஏற்பட்ட பாதிப்புகள் என மக்கள் நெருக்கடிகளால் திக்குமுக்காட வேண்டிய நிலை ஏற்பட்டது. சர்வதேசத்தில் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றம் காரணமாகவே இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும்கூட மக்கள் இதன் தாக்கத்துக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை உருவாகியது.

ஏற்கனவே அரிசி, சீனி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் நிலையேற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு, வேலையில்லாப் பிரச்சினை, இராணுவமயமாக்கப்பட்டு வரும் சிவில் நிர்வாகம், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்றல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் மூலம் இலவசக் கல்விக்குக் குந்தகம் விளைவித்தல் என்பன காரணமாக நாட்டின் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் எரிபொருள் விலையுயர்வு தொடர்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே எரிபொருள் விலையுயர்வுக்கு உதய கம்மன்விலவே காரணமெனவும் அவரால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அதுவெனவும் அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுசன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் குற்றம் சாட்டியிருந்தார். அது அமைச்சரவையின் தீர்மானமேயொழியத் தனது சொந்த முடிவல்ல என அவர் பதிலளித்தபோதும் பொதுசன முன்னணியில் உள்ள சிலரும் அதன் கூட்டுக் கட்சிகளில் உள்ள சிலரும் அவர் மீது கண்டனங்களைப் பொழிந்தனர்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ள ஒரு சிலரின் ஆதரவு கிடைக்கக்கூடுமென்ற எதிர்பார்ப்பும் இருந்தது. எப்படியிருந்த போதிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் எவையும் தென்படவில்லை.

ஆட்சியிலுள்ள ஒரு அரசாங்கத்தின் மீதோ அல்லது அதன் அமைச்சரின் மீதோ கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது மிகக் குறைவான சந்தர்ப்பங்களிலேயே சாத்தியமாகும்.

அப்படியாக ஆட்சியை அகற்ற முடியாதென்பது தெரிந்தபோதிலும் நம்பிக்கையில்லாதத் தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது நாடாளுமன்றத்தை மேடையாகப் பயன்படுத்தி அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தர்க்கபூர்வமான விவாதங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களை எழுச்சி பெற வைப்பதாகும். ஆனால் தற்சமயம் அமைச்சர் உதயன் கம்மன்விலவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் அந்த இலக்கைக் கூட எட்டித் தொடவில்லை என்பது தான் பெரும் பரிதாபம்.

பொது அமைப்புகள், ஆசிரியர்கள், அதிபர்கள், தொழிற்சங்கங்கள், தாதியர்கள் தொழிற் சங்க அமைப்புகள் எனப் பலதரப்பட்ட சக்திகளும் அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இராணுவ மயப்படுத்தலுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உதய கம்மன்விலவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இத் தரப்பகளை ஒன்று திரட்டி ஒரே சக்தியாக அணி திரட்டிக் கூர்மைப்பத்தி முன்னெடுத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதாவது அரசாங்த்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் வகையிலும் மக்கள் அமைப்புகளினதும் தொழிற் சங்கங்களினதும் போராட்டங்களை ஒன்றிணைத்து நெறிப்படுத்தும் வகையில் இது அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் இப்பிரேரணை மூலம் எதிர்விளைவே கிடைத்துள்ளது. அதாவது எதிர்க்கட்சிகள் கூட இவ்விடயத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்து, மக்களுக்குத் தலைமை தாங்கிச் செல்லும் வகையில் இப்பிரேரணை விவாதங்களும் வாக்கெடுப்பும் அமைந்திருக்கவில்லை. மாறாக அரசாங்கம் இன்னும் பலமான நிலையிலேயே உள்ளது என்ற செய்தியையே இவை வெளிப்படுத்தியுள்ளன.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிருமான ரணில் விக்கிரமசிங்க இப்பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றி அரசாங்கத்துக்கு எதிரான ஆணித்தரமான கருத்துக்களை முன் வைப்பதற்குப் பதிலாக இப்பிரேரணைக்கு ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதாவது இப்பிரேரணை அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராகவன்றி அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே அந்தத் திருத்தமாகும். அரசாங்கத்தின் ஒரு அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் ஒரு பிரேரணை அரசாங்கத்துக்கு எதிரானதுதான் என்பதை அறியாத அறிவிலியல்ல அவர். ஆனால் அவர் இப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தமைக்கு ஏதோவொரு உள்நோக்கம் இருந்துள்ளதாகக் கருதப்பட்டது. அதன் காரணமாகவே ரணில் அரசாங்கத்துக்குச் சாதகமாக நடப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அது மட்டுமின்றி ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்களும் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சில உறுப்பினர்களும் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அதாவது இப்பிரேரணையை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்க்கட்சியினரைக் கூட ஒன்று திரட்டமுடியவில்லை.

அதுமட்டுமன்றி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக பொதுசன முன்னணியின் பொதுச் செயலாளர் சாஹல காரியவசம் உதய கம்மன்விலவைக் குற்றஞ்சாட்டிய நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங்கத்துக்கு எதிராக அல்லாமல் உதய கம்பன்விலவுக்கு எதிராகக் கொண்டு வருவதன் மூலம் சாகல போன்றவர்களின் ஆதரவு பிரேரணைக்குக் கிடைக்கக்கூடுமெனக் கருதியிருக்கலாம். அப்படிக் கருதியிருந்தால் அது ராஜபக்ஷ சகோதரர்களின் திறமையைப் புரிந்து கொள்ளமுடியாத சிறுபிள்ளைத்தனமாகும்.

எப்படியிருப்பினும் அரசாங்கக் கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்த முடியும் என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பு வெறும் கனவாகிப் போய்விட நடைமுறையில் எதிர்க்கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டமையே கிடைத்த விளைபலனாகும்.

148 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கும் அரசாங்க தரப்பு 152 வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தை மக்கள் முன் பிரகடனம் செய்துள்ளது.

இந்த நிலைமை நிச்சயமாக இன்று போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் தங்கள் கடமையை முடித்து விட்டனர்.

எரிபொருள் விலையுயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு, இராணுவ மயமாக்கல் என்பன தொடர்பாக தமிழ் மக்கள் குறிப்பாக மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை எமது பிரச்சினைகளை முன் வைப்பதற்கும் அவற்றுக்கு சிங்களத் தரப்பின் ஒரு பகுதியினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு எதுவுமில்லையென்பது போன்று அமைதி காத்துவிட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர், ஐ.தே.கட்சி, ஜே.வி.பி., தமிழ் தலைமைகள், முஸ்லிம் கட்சிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்து அதன் அடிப்படையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன் வைக்கப்பட்டிருந்தால் அது பலமானதாகவும் சக்தி மிக்கதாகவும், மக்கள் போராட்டங்களுக்குத் தலைமையேற்று வலுச் சேர்க்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் நலன்களை விடக் கட்சிகளின் நலன்கள் முன்னிலைப்படுத்தப்படும்போது மக்கள் நலன்கள் தொலைதூரத்துக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதையும் கட்சியின் நலன்களும் குன்றிப் போய்விடும் என்பதும் உணரப்படும்வரை அநீதிகள் ஆட்சி செய்வதைத் தவிர்த்துக் கொள்ளமுடியாது. எதிர்கட்சிகளின் சுயநலன்கள் கலந்த அரசியலே ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சிக்குப் பலம் சேர்க்கும் ஊட்டச் சத்து வழங்கிகளாக உள்ளன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அருவி இணையத்திற்காக :- நா.யோகேந்திரநாதன்

27.07.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE