Wednesday 29th of September 2021 01:31:03 AM GMT

LANGUAGE - TAMIL
.
சேதனப் பசளை அறிமுகமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும்! - நா.யோகேந்திரநாதன்!

சேதனப் பசளை அறிமுகமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்த 07.07.2021 அன்று கெயிட்டியின் ஜனாதிபதியான ஜுவனஸ் மொய்ஸ் அவரின் இல்லத்தின் முன் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் இக்கொலை பயங்கரவாத இயக்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும் பின்பு நடத்தப்பட்ட விசாரணைகளின்படி இவரின் படுகொலைக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ.க்கும் சம்பந்தம் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய கொலையில் அமெரிக்க உளவு நிறுவனம் சம்பந்தப்பட்டிருக்குமானால் அதற்கான காரணம் என்னவென்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

2010ம் ஆண்டில் கெயிட்டியில் ஏற்பட்ட பெரும் பூகம்பம் காரணமாக 3 இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். 10 இலட்சம் பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். 18 இலட்சம் வீடுகள் அழிவுற்றன. கோப்பி, சோளம் போன்ற பயிர்களின் உற்பத்தியால் செழிப்புற்றிருந்த கெயிற்றி கடும் பஞ்சத்துக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தது. இந்த நிலையில் 2017ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அமெரிக்க ஆதரவாளரான மெரிட்றி விதை தானியங்களாகச் சேகரிக்கப்பட்ட சோளத்தை மக்களின் உணவுத் தேவைக்கு விநியோகித்து விட்டு விதை தானியமாக அமெரிக்காவிலிருந்து சோளத்தை இறக்குமதி செய்தார். மரபணு மாற்றப்பட்ட இவற்றிலிருந்து விதை தானியங்களைப் பெறமுடியாது. அதாவது ஒவ்வொரு வருடமும் விதை சோளங்களை அமெரிக்காவிலிருந்தே இறக்குமதி செய்யவேண்டும். அது மட்டுமின்றி இப்பயிர்களின் மகரந்தப் பரவல் மூலம் உள்ளூர்ச் சோளமும் விதை சோளத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலை இழந்து விடும். அதாவது கெயிட்டியின் முக்கிய பொருளாதார உற்பத்தியில் ஒன்றான சோள உற்பத்தி முற்றுமுழுதாகவே அமெரிக்க நிறுவனங்களில் தங்கியிருக்கவேண்டிய நிலை எழுந்தது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராயிருந்த ஜுனஸ் மொய்ஸ் விவசாயத்தை அமெரிக்க மயப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக நாடு பரந்த போராட்டங்களை முன்னெடுத்தார். இப்போராட்டங்கள் மெரிட்றியின் ஆட்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கின.

2017ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பதவிக்கு வந்த ஜுவஸ் யொய்ஸ் அமெரிக்காவின் பொருளாதார விலங்குகளை உடைக்க ஆரம்பித்தார். அதையடுத்து அமெரிக்கா அவரின் ஆட்சிக்குப் பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியது. எரிபொருள் விலையுயர்வு, விலைவாசி உயர்வு என்பனவற்றுக்கு எதிராக 2018 தொட்டு 2020 வரைத் தொடர் போராட்டங்கள் முடுக்கி விடப்பட்டன. எனினும் அவர் கெயிட்டியின் பொருளாதாரத்தை மீளக் கட்டியமைக்கப் பல இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தார். எனினும் அவர் கடந்த ஜுலை 7ம் திகதி படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

இதிலிருந்து ஏகாதிபத்திய சக்திகள் கைத்தொழில் உற்பத்தியை மட்டுமின்றி விவசாய உற்பத்தியையும் உலகளாவிய ரீதியில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இலங்கையில் இரசாயனப் பசளைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், அவை தற்சமயம் எமது விவசாயத்தின் தவிர்க்கமுடியாத தேவையாகவும் மாறிவிட்டமையும் இந்த ஏகாதிபத்திய ஆதிக்கத்தி்ன் ஒரு வடிவமேயாகும்.

எமது தொன்மையான விவசாய முறைகள் இயற்கையோடு இயைந்தவையாகவே அமைந்திருந்தன. 1950ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்களும், மத்தியதர விவசாய காணிகளிலான உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்ட பின்பே எமது நாட்டில் இரசாயனப் பசளைகள் அறிமுகமாகின. பரப்புக் கணக்கிலான நெல் உற்பத்தி ஏக்கர் கணக்கில் விரிவடைந்தமை இறக்குமதி பசளைகளின் தேவையையும் இயந்திர மயமாக்கத்தையும் உருவாக்கின.

எனினும் வடபகுதியில் குடியேற்றத்திட்டங்கள் கூட உடனடியாக இரசாயனப் பசளைகளுக்குள் இறங்கி விடவில்லை. ஒவ்வொரு விவசாயிகளின் காணியிலும் முன்புறக் காணி மூலையில் மாட்டுப்பட்டிகள் அமைந்திருந்தன. அவற்றில் சேரும் பட்டி எரு விவசாய உற்பத்திக்குப் போதுமானதாக இருந்தது. எனினும் குடலைப் பருவத்தில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக “யூரியா” பசளையை ஒருமுறை வீசுவதுண்டு.

ஆனால் இங்கும் காலப்போக்கில் மெல்லமெல்ல மாட்டுப் பட்டிகளும் காணாமற்போக விவசாயம் முழுமையாக இரசாயனப் பசளைகள் மயப்பட்டது. அதன்பின்பு கிருமி நாசினிகளின் தேவையும் ஏற்பட்டு விட்டன.

அதன் காரணமாக எமது விவசாயம் இறக்குமதி பசளைகள், கிருமிநாசினி என்பனவற்றில் தங்கியிருப்பது தவிர்க்கமுடியாததாகி விட்டது.

இதன்காரணமாக எமது உணவுப்பொருட்கள் நச்சு மயப்ப டுத்தப்பட்டு விட்டதென்ற குற்றச்சாட்டும் உண்டு. 2014 – 2015 காலப்பகுதியில் அனுராதபுரம், பொல்லனறுவ ஆகிய பகுதிகளில் கிருமிநாசினிகள், பாவனையால் நிலக்கீழ் நீர் மாசடைந்து 1/3 பகுதி மக்கள் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானமையை மறந்து விடமுடியாது.

அவ்வாறான நிலையில்தான் அரசாங்கம் இரசாயனப் பசளைகளைத் தடை செய்துள்ளதுடன், சேதனப் பசளை பாவனைக்கு ஊக்கமளித்து வருகிறது.

இந்நடவடிக்கை காலம் கடந்து மேற்கொள்ளப்படுகிறது என்றாலும்கூட ஒரு சுதந்திரமான விவசாய உற்பத்தியை நோக்கிய திசையில் செல்வதை வரவேற்காமல் இருக்கமுடியாது.

ஆனால், இப்படியான திட்டங்கள் யதார்த்த நிலைமைகள் தொடர்பான பூரண அறிவும், ஆய்வும் இல்லாமல் வகுக்கப்படும்போது வெற்றி பெறமுடியுமா என்பது சந்தேகமே.

எமது பாரம்பரிய விவசாய முறையில் மொட்டைக் கறுப்பன், சீனட்டி பச்சைப் பெருமாள் போன்ற நெல்லினங்கள் பாவனையில் இருந்தன. அவை வரட்சியைத் தாங்கி வளரத்தக்கவையாகவும் கூடுதலான ருசி, ஊட்டச்சத்து கொண்டவையாகவும் அமைந்திருந்தன. இரசாயனப் பசளைகள் பாவனைக்கு வந்த பின்பு அவை காணாமற் போக எம்.4ல் ஆரம்பித்து “பீ” ரக நெற்களுக்கு மாறிய பின்பு அதிக விளைச்சலை நோக்கிப் புதிய பதிய நெல்லினங்கள் களத்துக்கு வந்து விட்டன.

இவை சேதனப் பசளைகளுக்குப் பொருத்தமாக அமையுமா, போதிய விளைச்சலைத் தருமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இந்த இனங்கள் உருவாக்கப்படும்போது இரசாயனப் பசளைகளின் பாவனையை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை. மேலும் அவை கிருமி நாசினிகள் இன்றி நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்ப்படும் என்பதும் சந்தேகமே.

எனவே செயற்கைப் பசளையை முற்றாக நிறுத்துவதற்கு முன்பு சேதனப் பசளைகளுக்குப் பொருத்தமான நெல்லினங்கள் உற்பத்தி செய்யப்படுவதில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

உப உணவுப் பயிர்ச் செய்கையில் கூட முன்பிருந்த நீளமான கருஞ்சிவப்பு நிற தின்னைவேலிக் கத்தரிக்காயையோ, மட்டுவில் குண்டுக் கத்தரிக்காயையோ, பூசணிக் காய் வடிவிலமைந்த தக்காளிப் பழத்தையோ குரங்குவாலன் பயிற்றங்காயையோ காண முடிவதில்லை. மரக்கறிகளும் செயற்கைப் பசளைகளுக்கும் கிருமிநாசினிக்களுக்கும் ஏற்ற வகையில் தங்கள் வடிவங்களையும் தன்மைகளையும் மாற்றி விட்டன. இனி அவை சேதனப் பசளையில் உரிய பலனைத் தருமா என்பதும் சந்தேகமே. அதைவிட கோவா, பீற்றூட், கரட், பெரிய வெங்காயம் என்பனவற்றின் விதைகளும் இறக்குமதி செய்யப்படுபவையே. அவற்றிலிருந்து விதைகளைப் பெற முடியாது. அவை செயற்கைப் பசளையின்றிப் பலன் தருமா?

எனவே, நாம் இரசாயனப் பசளையிலிருந்து சேதனப் பசளைகளுக்கு மாற நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி பலவித நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்து வெற்றி கொள்ளவேண்டியுள்ளது.

இப்படியான முறையில் போதிய தயாரிப்புமின்றி, முன் தயாரிப்புகளும் ஆய்வு ரீதியான ஏற்பாடுகளுமின்றி “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்ற வகையில் செயற்படுவது படுகுழியில் விழுவதற்கொத்ததாகும்.

“பொஸ்பேற்” எமது மண்ணான வடமத்திய மாகாணத்தின் “எப்பாவெல” பகுதியில் விளையும் கனிமப் பொருள், எமது மண்ணில் விளையும் இந்த இயற்கை கனிமத்தை நாம் எமது சேதனப் பசளை உற்பத்தி ஆய்வுகள் மூலம் பயன்படுத்தமுடியும். ஆனால் நாமோ அந்த மலையையே அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுவிட்டு அவர்களிடம் உரப் பசளைகளைப் பணம் கொடுத்து வாங்குகிறோம். எனவே இவையெல்லாம் மறுபரிசீலணைக்குரிய விடயங்கள்.

வன்னியில் பொருளாதாரத் தடை, பசளைத் தடை என்பன விதிக்கப்பட்டிருந்தபோது “அமுதம்” என்றொரு பசளை உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்படியாக நிலைமாறுகால முயற்சிகளை மேற்கொள்ளும்போது எமது விவசாயப் பொருளாதாரம் தங்கள் கைகளை விட்டு நழுவிச் செல்வதை விரும்பாத ஏகாதிபத்திய சக்திகள் பலவிதமான நெருக்கடிகளைக் கொடுக்கும். அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்ளவும் தயாராயிருக்க வேண்டும்.

அடிப்படையில் நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்ள மேற்கொள்ளும் ஒரு தற்காலிக ஏற்பாடாக இல்லாமல், உண்மையாகவே தேசப்பற்றுடன், தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி இந்நடவடிக்கை எடுக்கப்படுமானால் இது நிச்சயம் வெற்றி பெறும்.

அருவி இணையத்திற்காக :- நா.யோகேந்திரநான்

03.08.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, அமெரிக்கா, உலகம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE