Wednesday 24th of April 2024 04:52:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
வட்டுக்கோட்டை தீர்மானம் - 02 ஈழத்தமிழருக்கா? இந்தியாவின் நலன்களுக்கா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

வட்டுக்கோட்டை தீர்மானம் - 02 ஈழத்தமிழருக்கா? இந்தியாவின் நலன்களுக்கா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


1976ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் என்று கருதப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் ஈழத்தமிழரின் அரசியல் இருப்பில் நிரந்தரமான வலிமையை ஏற்படுத்தியிருந்தது. ஈழத்தமிழர் சிறுபான்மையினர் என்றும் வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் என்றும் கருதப்பட்ட நிலையை மாற்றி ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்திய தந்தை செல்வாவும் அவரது தீர்மானமும் கடந்த 45 வருடங்களாக நிலையான வடிவத்தை ஏற்படுத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் பிரகாரமும் மாக்சிச சிந்தனையின் பிரதிபலிப்பாகவும் தேசிய இனங்களின் பிணக்குகளுக்கு தீர்வாகவும் சுயநிர்ணயம் என்ற கோட்பாடு உதயமாகியது. அத்தகைய சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டே வட்டக்கோட்டை தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அத்தகைய தீர்மானத்தை இதுவரை எத்தகைய தரப்பும் கேள்வியின்றி பின்பற்ற முயன்றது. இக்கட்டுரை வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு பற்றிய உண்மை தன்மையையும் அதன் பின்னாலுள்ள அரசியலையும் தேட முயலுகிறது.

01.08.2021அன்று சென்னைப்பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு கற்கை துறையின் (International Relations) பணியாற்றிய பேராசிரியர் ராமு மணிவண்ணனின் ஒருங்கிணைப்பில் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் தமிழகம்-ஈழ தமிழரசியல் தலைமைகள் இணையவழி உரையாடலொன்றை ஏற்பாட செய்திருந்தது. இந்த உரையாடலின் கருப்பொருள் 'ஈழத்தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடி தலையீடு காலத்தின் கட்டாயம்' என்பதாக அமைந்திருந்தது. இதில் உரையாடிய தமிழக-ஈழத்து அரசியல் தலைமைகள் ஆரோக்கியமான உரைகளும் ஈழத்தமிழர் வரலாற்றில் ஈழத்தமிழர் எதிர்கொண்ட துயரங்களையும் சிலாகித்த உரையாடியிருந்தனர். அவ்உரையாடலில் உரையாற்றிய அனைத்து தரப்புக்களும் முன்வைத்த பதிவுகளில் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன் முன்வைத்த வாதங்கள் காத்திரமிக்கவையாக காணப்பட்டது. இந்த மாநாட்டில் மூன்று பிரதான விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. அவற்றினூடாகவே இவ்இணையவழி மாநாட்டின் இலக்கு வெளிப்படுகின்றது. அதனை முழுமையாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, ஈழத்தமிழரின் புவிசார் அரசியல் என்பது உரையாடலில் பிரதான அம்சமாக இருந்தது. ஈழத்தமிழரின் அரசியல் இருப்பு ஏதொவொரு வகையில் புவிசார் அரசியல் மையவாத கருத்தியலாக வளர்ச்சியடைந்துள்ளது. அத்தகைய புவிசார் அரசியல் சக்தியாக இந்தியாவே கருதப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்குள்ளும் நலனுக்குள்ளும் அகப்பட்டள்ள ஈழத்தமிழர் தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் யாவுக்கும் தீர்வாக இந்தியாவை கருதினார்கள். 34கி.மீ கடற்பரப்பால் பிரிக்கப்பட்டள்ள இலங்கைதீவும் தமிழகமும் இனவரைவியல் ரீதியாக ஒத்த வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டுள்ளது. இதனால் சிங்கள மக்களும், சிங்கள அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழரை தமிழகத்தின் நட்பு சக்தி என்பதை விட இந்தியர்களின் நட்பு சக்தி என்ற கருத்து நிலையை கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட முரண்பாடு இந்தியர்களின் இலங்கை தீவின் மீதான இராணுவ அரசியல் தலையீட்டுக்கும் வழிவகுத்திருந்தது. இதனை எதிர்கொள்ளும் விதத்திலேயே ஈழத்தமிழரின் அஹிம்சைப்போராட்டத்தையும் அதன் பின்னான ஆயுத போராட்டத்தையும் இந்தியர்கள் ஊக்குவித்தனர். 1978ஆம் ஆண்டு திறந்த பொருளாதார கொள்கையூடாக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் புகழரணாக இலங்கை தீவையும் இந்து சமுத்திரத்தையும் மாற்றுவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தியர்கள் முறியடிக்க ஈழத்தமிழரே அவர்களது சுயநிர்ணயத்தை சுயமான வளர்ச்சிக்குள் வளர விடாது தீவிரப்படுத்தி வலிமையற்ற வளர்ச்சிக்கு வித்திட்டனர். இதனால் எழுந்ததே ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம். அத்தகைய ஆயுத போராட்டம் இந்தியர்களுடைய நலன்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுடைய கட்டுப்பாட்டையும் மீறுகின்ற போது அதனை அழித்தொழிக்க இலங்கை ஆட்சியாளர்களோடு கூட்டிணைந்தது மட்டுமன்றி பனிப்போருக்கு பின்னான உலக மாற்றத்தை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவுடனும் கூட்டுச்சேர்ந்து ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

இரண்டாவது, இந்திய அரசின் உடனடி தலையீடு என்பது எதற்கானது என்ற கேள்வி முதன்மையாக உள்ளது. ஈழத்தமிழரை முள்ளிவாய்க்காலில் அழித்து அடித்து நொறுக்கிய போது எவ்வித எதிர்வினையுமாற்றாத இந்திய அரசு எதற்காக இலங்கை மீது உடனடி தலையீடு செய்ய வேண்டுமென்பது ஈழத்தமிழரின் கேள்வியாக உள்ளது. அத்தகைய தலையீடு ஒன்றுக்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதா? அதாவது வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு காரணகர்த்தாக்களின் நோக்குகையில் ஈழத்தமிழர்களில் எத்தகைய தரப்பு ஆக்கிரமிப்பினை மேற்கொள்கிறது. அத்தகைய ஆக்கிரமிப்பை தென்னிலங்கை மேற்கொள்கிறதா? அல்லது சீன தேசம் மேற்கொள்கிறதா? 1987களில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது என்பதற்காக இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை இந்தியா கைச்சாத்திட்டது. தற்போது சீனா இலங்கையில் தலையீடு அதிகரித்து செல்கின்றது என்றும் இந்தியாவின் தென்பகுதியை சீனா கண்காணிக்க ஆரம்பித்துள்ளது என்பதையும் கருத்திற்கொண்டு இந்தியாவினது தேசிய பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய சூழலியே இந்தியாவின் தலையீடு இலங்கைக்கு அவசியமென்று இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் காரணகர்த்தாக்கள் கருதுகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் தலையீடு நீண்ட நெருக்கடியை இந்தியாவிற்கு ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்தவே இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற பெயரில் இந்தியாவை இலங்கையில் தலையீடு செய்ய அத்தகைய குழு கருதுகிறது. ஈழத்தமிழரின் அஹிம்சை போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றி தீவிர தலையீட்டை சாத்தியப்படுத்திய இந்தியா மீளவும் தமது நலனுக்காக தலையீட்டை விரும்புகிறது. அதற்கானதொரு சூழலை கருத்தியல் ரீதியில் வளம்படுத்தவும் இத்தகைய மாநாடுகளை நடாத்துவதனூடாக தென்னிலங்கை ஆட்சியாளர்களை அழுத்தங்களுக்குள் உட்படுத்தலாம் என்றும் தவறான கணிப்பீடுகளை இந்தியா மேற்கொள்கிறது. இந்தியாவின் இத்தகைய நகர்வுகள் பலவீனமானவை என்பதோடு தலையீட்டுக்கான எத்தகைய சூழலும் இல்லை என்பது யதார்த்தமானதாகும்.

மூன்றாவது, காலத்தின் கட்டாயம் என்ற வாதம் என்பது வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு கர்த்தாக்களின் நிலைப்பாடாகும். அத்தகைய காலத்தின் கட்டாயம் என்பது சீனா சார்ந்தது அன்றி தென்னிலங்கை சார்ந்தது கிடையாது. தென்னிலங்கைக்கும் புதுடில்லிக்குமான நட்புறவு மிகப்பலமானதும் பிரிக்க முடியாததொன்றாகவும் வளர்ந்துள்ளது. குறிப்பாக வர்த்தகத்திலும், கடல்ரீதியிலான வர்த்தகத்தொடர்பிலும், கடல்ரீதியிலான பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்களிலும் இரு நாடுகளும் மிக இறுக்கமான பிணைப்பினை கொண்டுள்ளது. ஏறக்குறைய நாற்பது வீதத்திற்கு மேற்பட்ட வர்த்தக ஏற்றுமதி இறக்குமதிகள் மும்பைக்கும் கொழும்புத்துறைமுகத்துக்குமிடையில் நிலவுகின்றது. அவ்வாறே கடற்பாதுகாப்பு ரீதியிலான ஒத்தழைப்புக்களும் உடன்படிக்கைகளும் இருநாடுகளுக்குமிடையில் அதிகமாக காணப்படுகிறது. இராஜசபாவின் இந்திய வெளிவிவகார பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்த கருத்தானது, 'இலங்கை தமிழர்களுக்கு சமாதானம், நீதி, அமைதி மற்றும் கௌரவமான வாழ்க்கை வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை இலங்கைக்கு நன்மையாக அமையும்' எனக்குறிப்பிட்ட விடயம் கடந்த இரண்டு ஆண்டுகால இந்தியா கூறி வரும் உச்சாடனமாகும். இதிலிருந்து விளங்கிக்கொள்ளக்கூடியதொரு விடயம் இந்தியா உறுதியாக இருக்கும் அவ்வறே உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும். ஈழத்தமிழரின் காலம் என்பது ஈழத்தமிழரின் சுயநிர்ணயத்தக்கான தீர்மானங்களல்ல சுயநிர்ணயத்தை அடைவதற்கான வழிமுறையாகும். அத்தகைய வழிமுறையை எட்டமுயாத அதற்கான வழிவரைபடங்களை வரைய முடியாத தலைமைகள் சுயநிர்ணயத்தை ஒன்று, இரண்டு, மூன்று எனக்கூறுபோட்டு தமது அரசியல் இலாபங்களை அடைவதற்காக செயற்பட முடியுமேயன்றி வேற எதனையுமே வட்டுக்கோட்டை இரண்டு தீர்மானத்தால் ஏற்படுத்த முடியாது.

எனவே, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் என்பது வட்டுக்கோட்டையில் முன்வைக்கப்பட்ட ஒரே ஒரு தீர்மானமே அடிப்படையானது. அதனை நினைவுகொள்வதும் அதனை நோக்கி அணிதிரள்வதும் அதற்கான தளத்தை சாத்தியப்படுத்தலாமேயன்றி அதன் வீரியத்தை குறைத்து பலவீனப்படுத்தி அணுகுமுறைகளுல் மாற்றங்களை செய்து அடைவதல்ல சுயநிர்ணயம். அதனைவிட அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான சுயபலத்தோடு அதன் மீதான அனைத்து அடக்குமுறைகளையும், ஆக்கிரமிப்புக்களையும் எதிர்கொள்ள முயல்வதே சுயநிர்ணயமாகும். மீளவும் இந்தியாவில் தங்கியிருத்தல், அமெரிக்காவில் தங்கியிருத்தல், உலகத்த்pல் தங்கியிருத்தல் என்ற மாயையை கைவிட்டு ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் தமது சுயத்தில் தங்கியிருப்பதனூடாகவே உண்மையான சுயநிர்ணயத்தை அடைய முடியும். கடந்த காலம் முழுவதும் இந்திய தேச நலனுக்காக ஈழத்தமிழர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். அத்தகைய நெருக்கடியே ஈழத்தமிழரின் தோல்விக்கான நெருக்கடியாக அமைந்தது. புதுடில்லி ஈழத்தமிழரை எப்படி கருதுகிறதோ அவ்வாறே தமிழகத்தையும் கருதுகிறது. ஈழத்தமிழரை முன்னிறுத்தி தமிழகம் புதுடில்லியை தனது அரசியல் அபிலாசைக்குள் கொண்டு வருவதற்கு பிரயோகம் செய்கிறது. ஈழத்தமிழருக்காக போராடும் தமிழக தலைமைகளும் தீக்குளித்த தமிழக உறவுகளும் சாதாரண பிரஜைகளே அன்றி அரசியல் தீர்மானமெடுக்கும் தலைமைகளோ, உயர் வர்க்கங்களோ, வர்த்தக கூட்டாளிகளோ இல்லை. புதுடில்லியுடன் உறவாடும் தமிழக அரசியல் தலைமைகளின் எண்ணங்களே ஈழத்தமிழ் அரசியல் என்பது புதுடில்லிக்கு சேவகம் செய்கின்ற அரசியலாகவே கருதுகின்றது. இந்தியாவின் உயர் இராஜதந்திரி ஒருவர் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு தெரிவித்த கருத்தொன்று இச்சந்தர்ப்பத்தில் நினைவு கொள்வது பொருத்தமானது. சீனாவின் இலங்கை மீதான தலையீடு பற்றிய வாதங்களை தமிழரசு கட்சியின் தலைமை முன்வைக்கும் போது அதனை இந்தியா பார்த்துக்கொள்ளும் என்றும் இந்தியாவிற்கு அதனை பார்த்துக்கொள்ள தெரியும் என்றும் கருத்துரைத்தார்.

எனவே வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு இந்தியாவின் நலனை மீண்டுமொருமுறை நிறைவேற்ற முயலுகின்றது என்பதை காட்டுறது. புதுடில்லியின் அனுமதியின்றி சென்னை இந்த மகாநாட்டை நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் புரிந்த கொள்ளுதல் அவசியமாகும்.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE