Thursday 25th of April 2024 08:05:41 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 67 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 67 (வரலாற்றுத் தொடர்)


ஜனநாயகத்தின் பேரில் அமுலாக்கப்பட்ட அரச பயங்கரவாதம்! - நா.யோகேந்திரநாதன்!

'ஒரு நபர் ஒரு குற்றத்தோடு சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கும் உரிய காரணம் இருப்பதாகக் கருதப்பட்டால் அந்த நபரைக் கைது செய்யவும் ஒரு முறைக்கு 3 மாதம் என்ற அடிப்படையில் 18 மாதங்கள் தடுத்து வைக்கவும் முடியும். அவரை எங்கு தடுத்து வைப்பது என்பதைச் சம்பந்தப்பட்ட அமைச்சரே தீர்மானிப்பார். இவ்வாறான அமைச்சரின் உத்தரவுகளை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது. அவசர காலச் சட்டம் அமுலில் உள்ளபோது ஒரு நபரை எல்லையற்ற காலப்பகுதிக்குத் தடுத்து வைக்க அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. பொலிஸ்மா அதிபர் தீர்மானிக்கும் எந்த ஒரு இடத்திலும் தடுத்து வைக்கமுடியும். நீதிபதிக்கு முன்னால் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே ஒரு சாட்சியமாகப் பாவிக்கப்படமுடியும் என்ற 23(1) இலக்கச் சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் செல்லுபடியற்றதாக்கப்படுவதுடன் ஒரு பொலிஸ் உதவி அத்தியட்சகர் அல்லது அவருக்கு மேற்பட்ட பதவி வகிக்கும் ஒரு அதிகாரி முன்னிலையில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு சாட்சியாகக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் ஒரு நீதிமன்றம் மரண தண்டனை வழங்க முடியாது. அதிகூடிய தண்டனை ஆயுள் தண்டனையாகும்'.

இது ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் 1979 ஜூலை மாதம் 20 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய பகுதிகளாகும். இது தற்காலிக ஏற்பாடுகள் என நிறைவேற்றப்பட்ட போதிலும் 1982ல் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தைப் பற்றி 1984ல் சர்வதேசச் சட்டவியலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 'சட்டவாட்சியின் கீழ் இயங்கும் எந்தவொரு சுதந்திர ஜனநாயக நாட்டிலும் அமுலிலுள்ள எந்தச் சட்டமும் இலங்கையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு ஒப்பான அதிகாரங்களைக் கொண்டமையவில்லை. எந்தவொரு நாகரீக நாட்டிலும் குறித்த சட்டமிருக்குமானால் அது சட்டப் புத்தகத்தில் காணப்படும் அசிங்கமான கரும்புள்ளியாகும்' எனக் கண்டனம் செய்திருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் முன் வைக்கப்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது எனவும் ஜனநாயக விரோதச் சட்டமெனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது. எதிர்க்கட்சியின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஒரு நீண்ட கண்டன அறிக்கையை வெளியிடார். இறுதியில் அச்சட்டம் வாக்களிப்புக்க விடப்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவருமே எதிர்த்து வாக்களித்தனர். அதேவேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்களிப்பில் கலந்து கொள்ளாது வெளியேறிவிட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்த்து வாக்களிக்காமல் வெளியேறியமை இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியது. பகிரங்கமாக தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை நேருக்கு நேராக கண்டிக்க ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் அமிர்தலிங்கத்தின் ஆதரவு பெற்றிருந்த பிரபாகரன் அணியினர் அமிர்தலிங்கத்தின் மேல் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையான விமர்சனங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதேவேளையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி 12.07.1979 அன்று அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தார்.

இந்த இரு சட்டங்களும் பொலிஸாருக்கும் ஆயுதப்படையினருக்கும் கட்டற்ற அதிகாரங்களை வழங்கின. அதையடுத்து வடக்குக் கிழக்கிலும் கொழும்பிலும் தமிழ் இளைஞர்கள் மீது பெரும் மனித வேட்டை ஆரம்பித்தது.

இந்நடவடிக்கைக்கு 'ஒப்பரேஷன் யாழ்ப்பாணம்' எனப் பெயரிடப்பட்டு அதற்குப் பொறுப்பாகவும் யாழ்ப்பாணப் பிரதேசக் கட்டளைத் தளபதியாகவும் இராணுவத் தலைமைப் பீட ஆளணிப் பொறுப்பதிகாரியான திஸ்ஸ வீரதுங்க ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவால் நியமிக்கப்பட்டார். அவர் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள சகல அரச வளங்களும் வழங்கப்படுமெனவும் 31.12.1979க்கு முன்பு ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டது.

பிரிகேடியர் வீரதுங்க 'ஒப்பரேஷன் யாழ்ப்பாணம்' நடவடிக்கையை மேற்கொள்ள வந்த ஆரம்ப நாட்களிலேயே ஒரு இளைஞர் அணி அவருக்கு கோலாகலமான வரவேற்பை வழங்கியது. காங்கேசந்துறை வீதியில் ஏழாலைக்கு அண்மித்த பகுதியில் இராணுவ ஜீப் ஒன்றின் மீது கண்ணி வெடித்தாக்குதல் நடத்தப்பட்டது. அதனையடுத்து அங்கு குவிக்கப்பட்ட படையினர் கண்ணில் கண்ட ஆண்கள், இளைஞர்கள் அனைவரையும் பிடித்துச் சென்றனர். இராணுவ முகாமுக்குக்கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். சில நாட்களின் பின் சிலர் விடுவிக்கப்பட்டனர். சிலர் இராணுவ முகாமிலேயே காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டனர். சில இளைஞர்கள் காணாமற் போய்விட்டனர்.

பிரிகேடியர் வீரதுங்க தான் பதவியேற்ற நாளிலிருந்து வட பகுதியெங்கும் ஒரு கொடிய இராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார். எங்கும் எவ்வித காரணமுமின்றி கைது செய்து தடுத்து வைக்கப்படுவதும் கொடிய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதும் நாளாந்த சம்பவங்களாக மாறிவிட்டன. இளைஞர்கள் பகலில் வீதிகளில் இறங்க அஞ்சினர். இரவில் வீடுகளில் தங்காமல் ஒதுக்குப்புறமான பனங்காணிகளுக்குள் படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தகைய நெருக்கடி நிலையில் ஏராளமான இளைஞர்கள் ஆயுதக்குழுக்களையும் தேடி அவற்றில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இப்படியான நிலையில் தமிழ் மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் எவ்வித சமரச வழி மூலமும் தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிட்டப்போவதில்லையென்பதும் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியாது என்பதும் ஆயுத ஒடுக்குமுறையை ஆயுதப் போராட்டம் மூலமே முறியடிக்க முடியும் என்பதும் உறுதியாக்கப்பட்டது.

வடக்கில் நிலவிய இந்த பயங்கர நிலை தெற்கிலும் பதட்டமான ஒரு நிலையை உருவாக்கியது. இடதுசாரித் தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி.யினர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகவும் வடக்கில் இடம்பெறும் அநீதிகளுக்கெதிராகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்ட சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டப்போவதாகவும் மாவட்ட சபை மசோதாவைக் கொண்டு வரப்போவதாகவும் ஜே.ஆர். ஒரு ஊடகப் பேட்டியில் கூறியிருந்தார்.

அதையடுத்து பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவும் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் மக்களை அமைதி கொள்ளுமாறும் வதந்திகளை நம்பவேண்டாமெனவும் சில சமூக விரோத சக்திகள் இன்றைய நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துடிப்பதாகவும் அதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் இன நல்லுறவைப் பாதுகாக்கவும் அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பளிக்கவும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அமைதி வழியில் இணக்கப்பாட்டுடன் தீர்க்க முடியுமெனத் தாம் கருதுவதாகவும் வன்முறை வழியை எவரும் நாடவேண்டாமெனவும் நாகரீகமுள்ள மனிதர் என்ற வகையில் அமைதியான வழியில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கில் அரச பயங்கரவாதம் மூலம் கைதுகளும் சித்திரவதைகளும் காணாமற் போதல்களும் அதிகரிக்கும்போது அமிர்தலிங்கம், பிரேமதாசவுடன் இணைந்து இப்படியொரு அறிக்கையை வெளியிட்டது இளைஞர்களின் ஆவேசத்தை மேலும் கிளறி விட்டது.

வடக்கின் பல பகுதிகளிலும் 'துரோகி அமிர்தலிங்கம்' எனக் கையால் எழுதப்பட்ட சுவரோட்டிகள் இரவோடிரவாக ஒட்டப்பட்டிருந்தன.

ஆனால் கொழும்பில் ஜே.வி.பி., லங்கா சமசமாஜக் கட்சி, ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி, புரட்சிகர மாக்ஸிஸ்ட் கட்சி ஆகிய ஒன்றிணைந்து வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் நீக்கவும் கோரி 22.09.1979 அன்று மகஜர் ஒன்றை அனுப்பியதுடன் 1979 ஒக்டோபர் 2ம் திகதி கொழும்பில் பெரும் மக்கள் எழுச்சிப் பேரணியையும் நடத்தினர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி இம்மகஜரில் ஒப்பமிடவுமில்லை, பேரணியில் பங்குபற்றவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1979ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பிரிகேடியர் வீரதுங்க ஆயுதக் குழுக்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அதனால் 'ஒப்பரேஷன் யாழ்ப்பாணம்' நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் ஜனாதிபதிக்கு ஒரு 70 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக அறிவித்தபோதும் தமிழ் மக்கள் அதை அதிகரிக்கப்படப் போகும் அரச பயங்கரவாதத்தின் முன்னறிவித்தலாகவே பார்த்தனர்.

வடக்குக் கிழக்கில் தனது ஜனநாயக விரோத எதேச்சாதிகாரத்துக்கு எதிரான இளைஞர்களின் ஆயுத எழுச்சியை ஒடுக்க அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட ஜே.ஆர். தெற்கில் தனக்கு வலுவான எதிர்ப்பை வழங்கக் கூடிய மக்கள் ஆதரவு பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டும் வகையில் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

1970 முதல் 1977 வரை இடம்பெற்ற அதிகார துஷ்பிரயோகங்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஜே.ஆரால் மூன்று நீதியரசர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அது சட்டவலுவற்றதெனக் கூறி அதில் முன்னிலையாக திருமதி ஸ்ரீமாவோ மறுத்து விட்டார். அதையடுத்து 1978 டிசெம்பர் 19ல் இரு சட்டத்திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் விசாரணைகளில் திருமதி ஸ்ரீமாவோ முன்னிலையாகாத பட்சத்தில் ஆணைக்குழு அவரையும், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவையும் குற்றவாளிகளாகக் கண்டு அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில் 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் பெற்று திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஆகியோரின் குடியுரிமை 7 வருடங்களுக்குப் பறிக்கப்பட்டது.

இதில் அமிர்தலிங்கம் இத்தீர்மானத்துக்கு எதிராக உரையாற்றியதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்த்து வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜே.ஆர். ஸ்ரீமாவோ மீதான தனது தாக்குதலை அத்துடன் மட்டுப்படுத்தி விடவில்லை. அவர் தேர்தல் சட்டங்களில் கொண்டு வந்த திருத்தத்தின்படி குடியுரிமை பறிக்கப்பட்டவர்கள் வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தால் அவரின் தெரிவு செல்லுபடியாகாது எனவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ஸ்ரீமாவை அரசியல் அரங்கிலிருந்து தூக்கி எறிந்ததுமட்டுமின்றி அவருக்குள்ள மக்கள் ஆதரவு இன்னொருவருக்குப் போய்ச் சேர்வதும் தடுக்கப்பட்டது.

வடபகுதியில் ஆயுதக் குழுக்களை ஒடுக்குவது என்ற பேரில் மனிதகுல விரோதப் பயங்கரவாதச் சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலம் மனித வேட்டை ஆடியதும், தெற்கில் தன்னை முறியடிக்கும் வலிமை வாய்ந்த எதிரியான ஸ்ரீமாவோவை அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டியதும், ஜே.ஆரால் ஜனநாயகத்தின் பேரால் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பாவித்து நிறைவேற்றப்பட்ட அநீதிகள் என்பது முக்கியமான விடயமாகும்.

அவர் வடக்கிலும் தெற்கிலும் ஜனநாயகத்தின் பேரால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மூலமே சட்டபூர்வமாக அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்தமை அவரின் அரசியல் சாணக்கியம் என்றே கருத வேண்டியுள்ளது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE