Wednesday 24th of April 2024 09:18:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
பஸில் - சம்பந்தன் விரைவில் சந்திப்பு: பீரிஸ் - சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்!

பஸில் - சம்பந்தன் விரைவில் சந்திப்பு: பீரிஸ் - சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்!


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தலைமையிலான அரசின் உயர்பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமான சந்திப்பை விரைவில் நடத்தவுள்ளது.

இந்தச் சந்திப்புக்கான பூர்வாங்க செயற்பாடுகளை இறுதி செய்யும் வகையில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கொழும்பில் மிகவும் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது. "அரச தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சந்தித்து உரையாடுவதாக இருந்தால் அது அரசியல் தீர்வை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டியது கட்டாயமாகின்றது. ஆகவே, அரசியல் தீர்வு விடயத்தில் எவ்விதமான விடயங்களை பரஸ்பரம் கலந்துரையாடலாம் என்பது தொடர்பில் முதலில் இணக்கப்பாடுகளை எடுக்காது சந்திப்புக்களையும் பேச்சுக்களையும் நடத்துகின்றமை காலத்தினை விரயமாக்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, அரசு இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்விதமான நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வது எமக்குள்ள முதலாவது கரிசனையாகவுள்ளது” என்ற தொனிப்பட சுமந்திரன் எம்.பி., அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரஸிடம் கருத்துக்களைப பகிர்ந்துள்ளார்.

அச்சமயத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், "அரசு புதியதொரு அரசமைப்பை உருவாக்குவதில் கரிசனை கொண்டுள்ளது. அத்துடன் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பூகோள பிராந்திய அரசியல் சூழமைகளுக்கு அமைவாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து நடைமுறைச்சாத்தியமானதும் தீர்க்கமானதுமான விடயங்களை முன்னெடுப்பதில் அதிகளவு கரிசனை கொண்டிருக்கின்றது" என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பதிலளித்துள்ளார்.

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது இறுதி வேளையில் கைவிடப்பட்டது. அச்சந்திப்பில் கலந்துரையாடப்பட இருந்த விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், விரிவான கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார். அக்கடிதத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் எமக்கு இடையிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகுவதாக இருந்தால் அது சிறந்ததாக இருக்கும்" என்று சுமந்திரன் எம்.பி. இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளையில், அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், "கூட்டமைப்புடனான பேச்சு விடயங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுடன் ஒப்படைத்துள்ளார். அவரே இந்த விடயங்களைக் கையாளவுள்ளார். உங்களுடன் பேசும் விடயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டு அடுத்தகட்டமாக அவர் தலைமையிலான அரச குழுவினருடன் நீங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கே அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன” என்று சாரப்பட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE