Friday 19th of April 2024 08:56:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
மாற்றத்துக்கான அரசியல்! - நா.யோகேந்திரநாதன்!

மாற்றத்துக்கான அரசியல்! - நா.யோகேந்திரநாதன்!


ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், மருத்துவத் தாதியர்கள் போராட்டம், கொத்தலாவலைப் பல்கலைக்கழகச் சட்டமூலத்துக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், அரிசி, மா, சீனி, எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பன காரணமாக மக்களிடம் வளர்ந்துவரும் கசப்புணர்வு போன்ற நிலைமைகள் இன்றைய ஆட்சியாளர்கள் மீது நாட்டு மக்கள் முற்றாகவே நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்துள்ளமையை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான போராட்டங்களை கொரோனா தனிமைப்படுத்தல் விதிகள் மூலமும் பொலிஸாரின் நடவடிக்கைகள் மூலமும் எதிர்கொள்ளப்படுகின்றன. பொலி்ஸார் ஆயுதப் படையினர் போராட்டங்களை ஒடுக்க மேற்கொள்ளும் வன்முறை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மேலும் மேலும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்து வருகின்றன.

இப்படியான நிலையில் அமரபுர மகாநாயக்கர் முத்தரட்டுவ தேரர், பேராசிரியர் வல்பொல சுமங்கல தேரர், தயான் ஜெயதிலக, பாக்கியசோதி சரவணமுத்து, விக்டர் ஐவன் போன்ற சில புத்திஜீவிகள் ஒரு மாற்றத்துக்கான தேவை பற்றிய உரையாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் முன்வைக்கும் மாற்றமானது பொதுஜன முன்னணியின் ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினதோ, ஐக்கிய மக்கள் சக்தியினதோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியினதோ ஆட்சியைக் கொண்டு வருவதற்கான குறுகிய மாற்றமாக நோக்கப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும். மாறாக ஒன்றுபட்ட மக்கள் சக்தியின் மூலம், எவர் ஆட்சியிலிருந்தாலும் அவர்களை சரியான திசையில் வழிநடத்துவதாகும்.

மலிவான இனவாத, உணர்வுகளைத் தூண்டித் தேர்தல் வெற்றிகளைப் பெறுவது வழக்கமாகிப் போய்விட்ட எமது நாட்டில் அது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால் நேர்மையான, உண்மையான தேசப்பற்றுள்ள மக்கள் நலன் சார்ந்த அக்கறையுள்ள புத்திஜீவிகள் மக்கள் சக்திக்கு தலைமையேற்கும் போது மாற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாவது காலந்தாழ்த்தினாலும் கடினமாக இருக்கப் போவதில்லை.

இவ்விடயத்தில் அண்மையில் கொழும்பில் உருவாக்கப்பட்ட இரு அமைப்புகள் சற்று நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளமையை அவதானிக்கமுடியும்.

ஒன்று மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மக்ஙகள சமரவீர அவர்கள் தலைமையிலான தூய தேசப்பற்றார்கள் இயக்கம், மற்றது முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம்.

இருவருமே எந்தெந்தக் கட்சிகளிலெல்லாம் அங்கம் வகித்தபோதிலும் ஊழல், மோசடிகளால் கறைபடுத்தப்படாத வர்களாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியானவர்களாகவும் இன, மதவாத அரசியலுக்குள் தோய்ந்து போகாதவர்களாகவும் விளங்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கள சமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவி வகித்தபோதும் இவரும் முன்னாள் அமைச்சர் சூரியப்பெருமவும் மஹிந்த ராஜபக்ச “ஹாய் அம்பாந்தோட்டை“ திட்டத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பெருந்தொகை பண மோசடியைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தியவர். அந்த நாட்களில் சூரியப்பெரும ஒரு வாகன விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மங்கள சமரவீர சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் இழப்புகளையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இயல்பு இவரிடம் உண்டு.

மங்கள சமரவீர அவர்கள் தூய தேசப்பற்றாளர் இயக்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தை நடத்திய பின்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியல்வாதிகள் தங்கள் சொந்தக் கொள்கைகளை முன் வைப்பதற்கு தேசபக்தி என்ற முழக்கத்தை விற்கிறார்கள் எனவும் தமிழ் தேசிய இனத்தையும் ஒன்றிணைத்து நடுநிலையான கொள்கைகளைப் பின்பற்றுவுதே உண்மையான தேசப்பற்று எனவும் சிங்கள பௌத்தத்தின் பேரால் தமிழ் மக்களைக் கொல்வதோ உரிமைகளை மறுப்பதோ தேசப்பற்றாகாது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பழைய இனவாத, மதவாதக் கோட்பாடுகள் தோல்வியடைந்து விட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கு ஒரு மாற்றத்தக்கான குரலை எம்மால் கேட்க முடிகிறது. இப்படியான ஒரு உரையைத் தெளிவாகவும் துணிச்சலாகவும் வேறு எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் இதுவரை முன்வைத்தது கிடையாது.

இதை நாம் ஒரு தோல்வியடைந்த அரசியல்வாதியின் குரல் எனத் தட்டிக் கழித்துவிட முடியாது. ஏனெனில் ரணில் – மைத்திரி நல்லெண்ண ஆட்சியின்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பான பிரேரணைக்கு அவர் அந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக அனுசரணை வழங்கியவர். ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் மருமகனும் அரசியல் வாரிசுமான ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்தின் கீழ் இப்படியான ஒரு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்வது அப்படியொன்றும் இலகுவான காரியமல்ல.

கடந்த காலங்களில் ஆட்சிமாற்றங்களில் இவர் முக்கிய சூத்திரதாரியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்க மஹிந்த ராஜபக்ஷ்வைப் பிரதமராக்க விரும்பாதபோதும் அவரை இணங்க வைத்து அவரைப் பிரதமராக்கிப் பின்பு ஜனாதிபதியாக வழிதிறந்து விட்டவர் இவரே. அது மட்டுமன்றி 2015இல் மஹிந்தவைத் தோற்கடித்து மைத்திரியை ஜனாதிபதியாக்கியதிலும் இவரே பிரதான சூத்திரதாரியாக விளங்கினார்.

இவ்வாறான ஆற்றலும் நேர்மையும் உள்ள ஒருவரிடமிருந்து இனப் பிரச்சினை தொடர்பாக ஒரு தெளிவான கருத்து சிங்கள மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அமைப்பின் பேரில் முன் வைக்கப்படுவது ஒரு சாதகமான அம்சமாகும்.

இவரால் முன்னைய ஆட்சி மீது மக்கள் வெறுப்புற்றுள்ள ஒரு நிலையில் இவர் முன்வைத்துள்ள கொள்கைகளுக்குப் பின்னால் பல்வேறுபட்ட தரப்புகளையும் அணி திரட்டமுடியும்.

அதேவேளையில் கரு.ஜயசூரியவினால் அமைக்கப்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியாகவே அமையவுள்ளதாகத் தெரிகிறது. இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் இனப்பிரச்சி்னைத் தீர்வு தொடர்பாக ஒரு திட்டவட்டமான கொள்கை வகுக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சிக் கூட்டணி என அமையும்போது மக்கள் விடுதலை முன்னணியோ சஜித் பிரேமதாசவோ, ரணில் விக்கிரமசிங்கவோ இனப் பிரச்சி்னை தொடர்பாக நியாயமான பார்வை கொண்டவர்களல்ல. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் வாக்குறுதிகளை வழங்குவதும் அவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கடைசியில் கைவிடுவதும் டட்லி சேனநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க என சகல தலைவர்களும் பின்பற்றும் பாரம்பரிய வழிமுறையாகும். ஐக்கிய மக்கள் சக்தியும் அதில் வழிவந்தவர்களே.

ஆட்சியமைக்கவும் ஆட்சியைத் தொடரவும் தமிழ்த் தலைமைகளைப் பயன்படுத்துவதும், பின் ஏமாற்றுவதும் அவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

எனவே கரு.ஜயசூரிய எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும் சமூக நீதிக்கான இயக்கம் தொடர்பாக மிகவும் விழிப்பாகவே தமிழர் தரப்பு இருக்க வேண்டியது முக்கியமாகும்.

எனினும் இரு தரப்பினரிடமிருந்தும் கைகள் நீட்டப்படும் நிலையில் தமிழர் தரப்பின் அடுத்த நகர்வு எப்படியிருக்கப் போகிறது என்பதுதான் கேள்வியாகும்.

தமிழர் தரப்பை நோக்கி யார் கைகளை நீட்டினாலும் அதை ஏற்பதினாலோ ஏற்க மறுப்பதனாலோ அதனால் தமிழ் மக்கள் பலன் பெறவேண்டுமானால் தமிழ் மக்களுக்கு ஒரு தலைமை வேண்டும். அத்துடன் அந்த தலைமையின் பின்னால் மக்கள் பலமான சக்தி்யாக அணி திரண்டிருக்கவேண்டும்.

துரதிஷ்டவசமாக அப்படி ஒரு நிலைமை இல்லையென்பது தான் கவலையளிக்கும் விடயம்.

2009 போர் முடிவுற்ற பின்பு தமிழ் மக்களின் தலைமையாகத் த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களாலும் ஏனைய தரப்பினராலும் பார்க்கப்பட்டது. ஆனால் 2020ன் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகத் தலைமை என்ற தகுதியை இழந்துவிட்டது. த.தே.கூட்டமைப்பு நேர்மையாகவும் உறுதியாகவும் தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களை முன்னெடுக்காத நிலையில் பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலையும் மக்களின் நம்பிக்கையிழக்கும் நிலையும் உருவாகின.

இன்று தமிழ்த் தேசியம் பேசும் சக்திகளே பல துண்டுகளாகவும் கூட்டணிகளாகவும் சிதறிப் போயுள்ளன. அதாவது தமிழ்த் தலைமைகளாலேயே தமிழ் மக்களின் பலம் சிதறடிக்கப்பட்டு விட்டது.

அதுமட்டுமின்றி பேரினவாத சக்திகளின் முகவர்கள் தமிழ் மக்களிடையே பலம் பெறும் நிலையும் உருவாகிவிட்டது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிக் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கச் சில முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அவை இன்னும் இழுபறி நிலைமையிலேயே உள்ளன. அப்படியொரு ஐக்கியம் உருவாவதை தமிழர் தரப்பில் சிலர் விரும்பாததாகவும் தெரிகிறது.

இப்படியான ஒற்றுமை தேர்தலை நோக்கியதாக மட்டும் அமையுமானால் அதில் எவ்வித பயனும் விளையப் போவதில்லை. மாறாக ஒரே சக்தியாக ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒரு தலைமையில் அணி திரண்டாலே எமது பேரம் பேசும் சக்தி வலிமை பெறும். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட வில்லை.

தென்னிலங்கையில் எமக்குச் சாதகமான சந்தர்ப்பங்கள் ஏற்ட்ட போதெல்லாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிய பெருமை எமது தமிழ்த் தலைமைகளுக்கு உண்டு.

தென்னிலங்கையில் உருவாகிவரும் மாற்றத்துக்கான அரசியலை உள்வாங்கித் தமி்ழ்த் தலைமைகள் தமது காலா வதியாய்ப் போன காலத்துக்கொவ்வாத வழிமுறைகளை மாற்றிப் புதிய பாதையில் பயணிக்கத் தவறினால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்வியாகவே அமைந்துவிடும்.

ஒரே தலைமையாக அணி திரண்டு ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் குறுகிய கால வேலைத்திட்டங்களை நீண்ட கால வேலைத் திட்டங்களை வகுத்து உறுதியாகவும் நேர்மையாகவும் பரந்துபட்ட தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்வதற்கு எமது தமிழ்த் தலைமைகள் தயாராகாத வரைக்கும் தென்னிலங்கையில் நிகழக்கூடிய அரசியல் மாற்றங்களை எமக்குப் பயனுள்ள விதத்தில் கையாள முடியாது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

அருவி இணையத்துக்காக : நா.யோகேந்திரநாதன்

10.08.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE