Wednesday 29th of September 2021 02:38:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு விளிம்பு நாடுகளின் (IORA) ஒத்துழைப்பினால் சாத்தியமாகுமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு விளிம்பு நாடுகளின் (IORA) ஒத்துழைப்பினால் சாத்தியமாகுமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இந்தியாவும் தென்னாசிய நாடுகளும் பிராந்திய ரீதியில் அதிக முரண்பாடுகளை கொண்டதாக விளங்குகின்றன. சுதந்திர இந்தியாவின் பாகிஸ்தான் முரண்பட்டது போல் பனிப்போருக்கு பின்னான காலப்பகுதியில் ஏனைய தென்னாசிய நாடுகளும் இந்தியாவோடு முரண்பட்டு செயற்படுகிறன. அத்தகைய முரண்பாட்டை கையாளும் விதத்தில் 2014ஆம் ஆண்டு முதல் இந்தியா இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து இந்து சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு ஒன்றை பலப்படுத்தி வருகிறது. ஆனாலும் அத்தகைய ஒத்துழைப்பு பலவீனமானதாக அமைந்த போதும் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் இருநாடுகளதும் ஒத்துழைப்பு இந்தியாவிற்கு கிடைத்திருப்பதோடு மொரிசியஸ் தீவையும் அதில் தனது கடற்படை பலத்தை நிறுவுவதிலும் இந்தியா வெற்றி கண்டு வருகிறது. இக்கட்டுரை 04.08.2021 இலங்கை மாலைதீவு என்பவற்றுடனான இந்தியாவின் இணையவழி உரையாடல் ஏற்படுத்தியுள்ள முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.

இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உயர்மட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய இணையவழி மாநாட்டுக்கு இலங்கையின் இராணுவ தளபதியான சவேந்திர சில்வா தலைமை தாங்கினார். இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகத்தின் செயலாளர் ஷசாத் நூசின் வாஹித் ஆகியோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான நான்கு விடயங்களில் மூன்று நாடுகளும் ஒத்துழைப்பதாக இணங்கி உள்ளது. குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, ஆழ்கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு என்பவற்றில் மூன்று நாடுகளும் தமக்குள் ஒத்துழைப்பை பலப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட இம்மாநாடு இந்தியாவினதும் அதன் கடல் பாதுகாப்பினதும் முக்கியத்துவத்தை அதிகம் பிரதிபலிப்பதாக விளங்குகிறது. அதேநேரம் இப்பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் மாலைதீவு மற்றும் இலங்கையோடு சீனா கடல்சார் பொருளாதாரத்தில் கொண்டுள்ள ஈடுபாடும் இதற்கு பின்னாலுள்ள முக்கிய காரணமென்றும் வாதிடப்படுகிறது.

2020 டிசம்பரில் இடம்பெற்ற மாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பையும் குறிப்பாக புலனாய்வு பரிமாணத்தையும் முதன்மைப்படுத்தி இருந்தது. அத்தகைய மாநாட்டில் ஒவ்வொரு நாட்டினதும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டதோடு ஆறு வருடத்திற்கு பின்னரான சந்திப்பாகவும் காணப்பட்டது. அம்மாநாட்டில் கடல்சார் அழிவுகளிலிருந்து பாதுகாப்பினை ஏற்படுத்தல், ஆள் கடத்தலை தடுத்து நிறுத்துதல், குற்றச்செயல்களை தடுத்தல் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதத்தை ஒழித்தல், சைபர் தாக்குதலை தடுத்தல் என்ற தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் பிரகாரம் மூன்று நாடுகளுக்குமிடையில் விசேட யோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள், கூட்டுப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென இந்திய தரப்பு முன்மொழிந்திருந்தது.

இந்து சமுத்திர பிராந்திய பாதுகாப்பை அடிப்படை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இச்சந்திப்பு குவாட் நாடுகளையும் இப்பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்களில் ஈடுபடுத்துவதில் கரிசனை கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு இந்தியா தொடர்ச்சியான நெருக்கடிகளின் மத்தியிலும் மாலைதீவு மற்றும் இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்துவதில் அதிக கரிசனை கொண்டு இயங்குவதற்கான காரணங்களை விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும்.

முதலாவது, இந்து சமுத்திர பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கானது. ஏனைய சிறிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் தனித்துவமும் அதன் பாதுகாப்பு எல்லைகளும் பலமானதும் வலுமிக்கதாகவும் காணப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு சூழல் என்பது இந்தியாவின் இருப்பையும் அதன் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகவே அமையும். மாலைதீவும் இலங்கையும் இந்தியாவின் புவிசார் அரசியல் இருப்புக்கான கொல்லைப்புற நாடுகள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, சீனாவிற்கு எதிரான நகர்வு என்பது இந்து சமுத்திரத்தை நோக்கிய இந்தியாவின் நகர்வாகவே அமைந்திருத்தல் வேண்டும். இந்து சமுத்திரத்தினூடாக இந்தியாவை நெருக்கடிக்குள் உள்ளாக்க முடியுமென்று வல்லரசுகள் கணிப்பிட்டுள்ளன. அதாவது, இந்தியாவை பாதுகாப்பதும் இந்து சமுத்திரம். அதேவேளை இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்குவதும் இந்து சமுத்திரம் என்ற வகையில் சீனாவும் பிற வல்லரசுகளும் இந்து சமுத்திரத்தை கையாள முற்படுகிறன. அதனை தடுத்து நிறுத்தவதே இந்தியாவின் இன்னொரு உபாயமாகும்.

மூன்றாவது, குவாட் நாடுகளின் இந்தோ-பசுபிக் உபாயம் என்பது இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியான இலங்கையையும் மாலைதீவையும் உள்ளடக்கி உள்ளது. இந்தியாவின் தொடர்ச்சியான நகர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் அவுஸ்ரேலியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க போன்ற நாடுகள் மாலைதீவிலும், இலங்கையிலும் அதீத ஒத்துழைப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டு வருகின்றன. கடந்த 2020ஆம் அண்டுக்கு பின்னர் குவாட் நாடுகளில் பொருளாதார ஒத்துழைப்பு, இராணுவ ரீதியிலான பரிமாற்றம், கடன் மற்றும் நன்கொடை ஒத்துழைப்பு, கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஒத்துழைப்பு என பல்வேறுபட்ட பரிமாணங்களில் இத்தகைய உறவு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் குவாட் நாடுகளிடையே மாலைதீவு மற்றும் இலங்கை தொடர்பில் தூர நோக்கிலான ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒரு முகாந்திரமாகவே இந்தியா-இலங்கை-மாலைதீவு உறவினை கருதுகிறது.

நான்காவது, இந்தியா 2018இல் திட்டமிட்டு 2021இல் மொரிசியஸ் தீவுக்கூட்டத்தில் அகேலக தீவில் கடற்படை தளமொன்றினை இந்தியா கட்டமைத்து வருகிறது. இக்கடற்படை தளம் விமான ஓடுபாதைகளை கொண்டிருப்பதுடன் ஏறக்குறைய 3கி.மீ பரப்பளவில் இக்கடற்படை தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரதான இறங்கு துறைகளை கொண்ட புலனாய்வு தகவல்களை பரிமாற்றுவதற்கான வாய்ப்புக்களையும் மொசாம்பிக் கால்வாய் பகுதியிலிருந்து தென்மேற்கு இந்து சமுத்திரத்தை அண்டிய பிரதேசத்தை நோக்கி விமான மற்றும் கடற்படை விஸ்தரிப்புக்கான திட்டத்தை கொண்டு இக்கடற்படை தளத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. இது பெருமளவுக்கு இந்தியாவை இந்து சமுத்திரம் நோக்கிய விஸ்தரிப்பையும் சீனாக்கு எதிரான நிலைப்படுத்தலையும் இராணுவம் மற்றும் கடற்படை ரீதியிலான வாய்ப்புக்களையும் பலப்படுத்தக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே மொரிசியஸ் தீவு, சிசில்ஸ் தீவு போன்றவை இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் பார்வையாளர் அந்தஸ்த்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா சிசில்ஸ் தீவிலும் தனது கடற்படை உருவாக்கத்தை மேற்கொள்வதற்கான நகர்வுகளை அவதானிக்க முடிகிறது.

எனவே, 21ஆம் நூற்றாண்டின் ஆளுகை என்பது இந்து சமுத்திரத்தை மையப்படுத்தியது என்ற எண்ணத்திற்கேற்ப சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியும், குவாட் நாடுகளின் இந்தோ-பசுபிக் உபாயமும், இந்தியாவின் இந்து சமுத்திர பாதுகாப்பும் ஏறத்தாழ ஒரே இலக்கை அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படுகிறது. சீனாவுடனான இலங்கையினதும் மாலைதீவினதும் நட்புறவை தகர்த்து இந்தியா இந்து சமுத்திர பாதுகாப்பை உருவாக்கும் முயற்சியில் கரிசனை கொள்ள ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய 2005ஆம் அண்டு காலப்பகுதியில் சீனா தென்மேற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது கடற்படை விஸ்தரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அத்தகைய பலமான சூழலை சீனா கொண்டுள்ள போது இந்தியாவின் நகர்வு அதிக மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதும், மாலைதீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் இராஜதந்திர நகர்வுக்குள் இந்தியாவின் இலக்கு தோற்கடிக்கப்படுமா என்பதுவும் கேள்விக்குறிய ஒன்றாகும். குறிப்பாக இலங்கை ஆட்சியாளர்கள் புவிசார் அரசியல்ரீதியாக இந்தியாவுடன் ஒத்துழைத்தல் என்பது தவிர்க்க முடியாதென்பதை உணர்ந்து இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை ஓர் உபாயமாக முன்னிறுத்தியுள்ளது. மாலைதீவு அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளை செய்து கொண்ட போதும் சமதளத்தில் இலங்கை போன்று சீனாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் கடலியல் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை கொண்டுள்ளது. எனவே இந்தியாவினது இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு நோக்கிய இலக்கு என்பது இரு நாடுகளின் உபாயங்களுக்குள் அகப்பட்டுள்ளது என்பது மட்டுமன்றி குவாட் நாடுகளின் நலனுக்குள்ளும் தங்கியிருப்பது என்பதுவே யதார்த்தமான வாதமாகும்.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE