Tuesday 16th of April 2024 03:03:53 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவில் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலி;  பல பகுதிகளில் பேரிடர் அபாய எச்சரிக்கை!

சீனாவில் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலி; பல பகுதிகளில் பேரிடர் அபாய எச்சரிக்கை!


மத்திய சீன மாகாணமான ஹூபேயில் பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்தனர். அத்துடன், இந்தப் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மாகாணத்தின் வடக்கில் சுய்ஜோ நகரின் ஒரு பகுதியான லியுலின் நகரத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகின.

மாகாணத்தில் சில இடங்களில் 400 மில்லிமீற்றர் கடும் மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

மீட்புக் குழுவினர் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளான சுய்ஜோ, சியாங்யாங் மற்றும் சியோகான் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அவசர முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலை வரையான நிலவரப்படி ஹூபேயில் உள்ள 774 நீர்த்தேக்கங்களில் நீரின் கொள்ளளவு எச்சரிக்கை மட்ட அளவைத் தாண்டி அதிகரித்துள்ளது.

மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 3,600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 8,110 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் அழிவடைந்தன. இதனால் 108 மில்லியன் யுவான் ($ 16.67 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஏற்பட்ட வெள்ளப்பொருக்கால் சுமார் 80,000 பேர் இடம்பெயர்ந்தனர். கடந்த மாதம் ஹெனானில் பதிவான மழை - வெள்ளத்தால் 300 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இதேவேளை, யாங்சே ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பகுதிகளில் அடுத்த வாரம் வரை கனமழை நீடிக்கும் என்று சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மத்திய மாகாணங்களான ஹூபே, ஹுனான், ஹெனான் மற்றும் அன்ஹுய், தென்மேற்கில் சோங்கிங், சிச்சுவான் மற்றும் கைஜோ, கிழக்கு கடற்கரையில் ஜெஜியாங் ஆகிய இடங்களில் பேரிடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE