Wednesday 29th of September 2021 12:57:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 68 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 68 (வரலாற்றுத் தொடர்)


மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு ஆதரவளித்த தமிழர் விடுதலைக் கூட்டணி! - நா.யோகேந்திரநாதன்!

'தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தந்தை செல்வாவின் உறவினர்கள் சிலரும் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவை நம்பவேண்டாம் எனவும் 'மாக்கியவல்லியான' அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லையெனவும் ஆலோசனை வழங்கினர். ஆனால் நான் இறுதிவரை ஜே.ஆர்.மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அவரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மாவட்ட அபிவிருத்திச் சபைகளை முறைப்படி நடைமுறைப்படுத்தும் எண்ணம் அவருக்கில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியை அரசியல் களத்தில் தன்னுடன் அணைத்து வைத்திருக்கும் ஒரு கைங்கரியமாகவே அவர் இதை மேற்கொண்டிருக்கலாம். எது எப்படியிருப்பினும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்பது தமிழ், சிங்கள இன முரண்பாட்டை அமைதி வழியில் தீர்ப்பதற்கான ஒரு ஆரம்பமாக அமைய முடியுமென நான் நம்பினேன்'.

இது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மருமகனும் முக்கிய தமிழ் புலமையாளர்களில் ஒருவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் நோக்குடன் ஒரு மாவட்ட அபிவிருத்தி சபையை அமைப்பது தொடர்பாக ஆராய ஜே,ஆர்.ஜயவர்த்தனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் கலந்து கொண்டவருமான பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் அவர்கள் இச்சபை பற்றியும் அதன் பலாபலன்கள் பற்றியும் வெளியிட்ட கருத்து. அந்த ஆணைக்குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் கலந்து கொண்ட ஏ.ஜே.வில்சன், நீலன் திருச்செல்வம் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்த பின்பு அது தொடர்பாக அதிருப்தியான கருத்துக்களையே வெளியிட்டனர். ஆனால் இம்மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டபோது அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்களின் எதிர்ப்பையும் மீறி அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

1977ல் இந்தியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அதையடுத்து 1978 ஒக்டோபரில் இந்திய விஜயத்தை மேற்கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன மொரார்ஜி தேசாயை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார். 1979 பெப்ரவரி 4 சுதந்திர தினத்தில் மொரார்ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது உரையில் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமிர்தலிங்கம் தாங்கள் சர்வகட்சி மாநாடு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாகவும் இந்திய மத்தியஸ்தத்தை இலங்கை அரசு ஏற்குமானால் அதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசு இந்திய மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டாலே அதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென இந்தியப் பிரதமருக்குத் தெரிவிக்குமளவுக்கு அமிர்தலிங்கம், ஜே.ஆரை நம்பினார் என்பதைத் தெளிவாகவே அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வகையில் ஜே.ஆரை வில்சன் போன்றோர் நம்பாத போதிலும், தான் நம்பி மாவட்ட சபை மசோதாவுக்கு ஆதரவளித்ததில் ஆச்சரியமில்லை.

1979 ஜூலை மாதத்திலிருந்து பிரிகேடியர் திஸ்ஸவீரதுங்க தலைமையில் வடபகுதியில் பெரும் மனித வேட்டையை நடத்தி இளைஞர்களையும் பொது மக்களையும் காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்துச் சித்திரவதை செய்தும் காணாமற் போகச் செய்தும் பெரும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஜே.ஆர். மாவட்ட அபிவிருத்திச் சபை அமைக்கும் முயற்சிகளில் இறங்குகிறார். 1979 ஆகஸ்ட் மாதத்தில் உள்ளுராட்சி முறையை ஆராய்வதுடன் மாவட்ட அபிவிருத்தி சபையை ஸ்தாபித்து அதன் அமைப்பு முறைகள், இயங்கும் வழிவகைகள் என்பன பற்றி ஆராய, ஜே.ஆர். தனது உறவினரான ஓய்வுபெற்ற நீதியரசர் விக்டர் தென்னக்கோன் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். அதில் ஏ.ஜே.வில்சன், நீலன் திருச்செல்வம் ஆகிய இருவரும் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் நியமிக்கப்படுகின்றனர்.

அதையடுத்து இளைஞர்களை வன்முறையைக் கைவிடும்படி கோரி பிரேமதாச –அமிர்தலிங்கம் கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது.

இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய விடயம், அந்த ஆணைக்குழுவில் பங்கு கொள்வதற்கோ அல்லது வன்முறைகளைக் கைவிடும்படி கூட்டறிக்கை விடவோ முன் நிபந்தனையாக அமிர்தலிங்கத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டுமென்றோ வடக்கில் நடத்தப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்றோ கோரிக்கைகள் முன் வைக்கப்படவில்லை.

இது எவ்வளவு தூரம் தமிழ் மக்களிடமும் இளைஞர்களிடமும் வெறுப்பை வளர்ந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

1979 ஆகஸ்டில் தொடங்கிய அமர்வுகள் 1980 பெப்ரவரியில் நிறைவு பெற்றன. அதன் தலைவரான விக்டர் தென்னக்கோன், எஸ்.ஜீ.பி. பண்டிதரத்ன, ஏ.எம்.அமீர், எம்.ஏ.அஸீஸ் போன்றவர்கள் சட்டவாக்க அதிகாரம், நிதி அதிகாரம், நிர்வாக அதிகாரம், பகிர்வு போன்ற வில்சனால் முன் வைக்கப்பட்ட சில முக்கிய விடயங்களை முற்றாகவே நிராகரித்தனர். இறுதியில் மாவட்ட அபிவிருத்திச் சபை மாவட்ட அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் சபை என்றளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

மாவட்ட அமைச்சர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான் ஏ.ஜே.வில்சன் இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். ஆனாலும் இனமுரண்பாட்டை அமைதி வழியில் தீர்க்க இதை ஆரம்பமாகக் கொண்டு அதற்கு ஆதரவு வழங்கும்படி தமிழர் விடுதலைக் கூட்டணியினரைக் கேட்டுக்கொண்டார்.

1980 ஆகஸ்ட் எட்டாம் நாள் மாவட்ட அபிவிருத்தி சபைகள் மசோதா பிரதமர் பிரேமதாசவால் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது பூரண ஆதரவை வழங்கினர்.

அவ்வகையில் 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தல் திகதியாக நிர்ணயிக்கப்பட்டது.

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்துடன் சமரசம் செய்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, நவலங்கா சமசமாஜக் கட்சி, சீன சார்புக் கம்யூனிசக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'யு.என்.பி.எதிர்ப்பு முன்னணி' தன் ஆயுளை 4 மாதங்களுடன் முடித்துக்கொண்டது.

மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலை ஐ.தே.கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய சகல கட்சிகளும் பங்கு கொள்ளாமல் பகிஷ்கரித்தன.

அவ்வகையில் வடக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் பொட்டர் நடராசா என அழைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தலைமையில் ஒரு அணியினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் தியாகராஜா தலைமையில் ஒரு அணியினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் இளைஞர்களின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் போட்டியிடக் களமிறங்கினர். 1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது தியாகராஜா வட்டுக்கோட்டையில் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் இளைஞர்கள் இத்தேர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நேரடியாகவே இறங்கினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினரின் வலியுறுத்தலின் அடிப்படையில் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டுத் தமிழ் மக்கள் மத்தியில். போராளிகளால் பரவலாக விநியோகிக்கப்பட்டது. தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி கோரி கைகளால் எழுதப்பட்ட சுவரொட்டிகளும் இரவோடிரவாக வட பகுதியெங்கும் ஒட்டப்பட்டன.

இன்னொருபுறம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டத்தில் அமிர்தலிங்கம் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. கூட்டத்தில் தேர்தலைப் பகிஷ்கரிக்கமாறு கோரி இளைஞர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதுமட்டுமின்றி கூட்டத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்க வேண்டுமெனக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறான ஒரு கொந்தளிப்பான நிலையில் அமிர்தலிங்கம் கூட்டத்தில் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார்.

அதில் அவர் தமிழ் மக்கள் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அரசாங்கம் அமுல்படுத்துமெனவும் தாம் அதை ஏற்பதன் மூலம் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார். அந்நேரத்தில் வெளியே சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இளைஞர்கள் தங்கள் நடவடிக்கைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த ஆரம்பித்தனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் அமிர்தலிங்கத்தின் உருவப் பொம்மையைத் தியிட்டு எரித்தனர்.

அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தியாகராஜா அவர்கள் 24.05.1081ல் பொன்னாலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தை முடித்து விட்டு புறப்பட்ட வேளையில் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் சுடப்படுகிறார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைகிறார்.

இச்சம்பவம் தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட்ட அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்திருந்தது. இளைஞர் அணிகள் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவான மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனவும் தியாகராஜா மூலம் த.வி.கூட்டணிக்கு எதிரான வாக்குகளைத் திரட்டி வெற்றிபெறமுடியமென எதிர்பார்த்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு இக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆனாலும் எப்படியாவது யாழ்ப்பாணத்தில் வெற்றிபெறவேண்டுமென உறுதி பூண்டிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அமைச்சர்களான சிறில் மத்யூ, காமினி திசாநாயக்க ஆகியோர் தலைமையில் பாதுகாப்புச் செயலர், மேலதிக பாதுகாப்புச் செயலர், அமைச்சரவைச் செயலாளர் ஆகியோர் கொண்ட மேல் மட்டக் குழுவையும் அவர்களுக்குத் துணையாக 500 பொலிஸாரையும் 30.05.1981 அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்புகிறார்.

சிறில் மத்தியூ எவ்வளவு மோசமான இன வெறியர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன வெறி கக்கும் இரு நூல்களை எழுதிவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் இனத் துவேஷத்தைப் பரப்பியவர். இவர் கைத்தொழில் அமைச்சராகப் பதவியேற்று குறுகிய காலத்துக்குள்ளாகவே காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையையும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையையும் இழுத்து மூடியவர். இது பற்றி அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது பரந்தனில் குளொரின் உற்பத்தி செய்வதற்கான செலவினத்தைவிட மலிவான விலையில் வெளிநாடுகளிலிருந்து அதை இறக்குமதி செய்யமுடியுமெனப் பதிலளித்தவர். இந்த இரு ஆலைகளும் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலையிழந்தனர் என்பது முக்கிய விடயமாகும்.

தேர்தலுக்கு நான்கே நான்கு நாட்கள் இருந்த நிலையில் இனவெறி உணர்வு கொண்ட அமைச்சர்கள் தலைமையில் பாதுகாப்பு மேல் மட்டத்தினரும் 500 பொலிஸாரும் அனுப்பப்பட்டமை ஏதொவொரு விதமான ஆபத்து ஏற்படுவதற்கு அறிகுறியாகவே தோன்றியது.

அடுத்த நாள் மே 31ம் திகதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர் எரிப்புடன் தொடங்கிய பொலிஸாரின் வன்முறைகள் யாழ்.மத்திய பகுதியெங்கும் பரவி எரியூட்டல் முதல் துப்பாக்கிச் சூடுகள் வரைப் பேரழிவுகளின் ஆரம்பமாகியது.

மே முதலாம் திகதி இரவு ஆசியாவின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ். நூலகத்தைத் தீக்கிரையாக்கித் தங்கள் அநாகரீகத்தை உலகுக்கு வெளிப்படுத்தினர்.

தமிழ் இளைஞர்களினதும் தமிழ் உணர்வாளர்களினதும் எதிர்ப்புகளை மீறித் தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு ஆதரவளித்தமைக்கான பலாபலன் தமிழ் மக்களுக்கு ஈடுசெய்யப்படமுடியாத இழப்புகளாகவே ஜே.ஆர்.அரசினால் வழங்கப்பட்டது ஒரு படுமோசமான வரலாற்றுப் பதிவாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE