Wednesday 29th of September 2021 02:37:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
இன்னொரு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் இந்தியத் தலையீடும்! - நா.யோகேந்திரநாதன்!

இன்னொரு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் இந்தியத் தலையீடும்! - நா.யோகேந்திரநாதன்!


இந்தியாவின் சுதந்திரதினம் நினைவு கூரப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்தியத் தமிழகத்தில் இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு என்ற அமைப்பினால் ஈழத் தமிழர்களின் சுதந்திரம் பற்றி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மெய்நிகர் கலந்துரையாடல் ஈழத் தமிழர் புவிசார் அரசியலில் உடனடி இந்தியத் தலையீடு என்ற தொனிப் பொருளில் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் ஆதரவாளர்களும் இலங்கையிலுள்ள சிலரும் கலந்து கொண்ட போதிலும் இலங்கையின் முக்கிய மூன்று தமிழ் தலைமைகளும் கலந்து கொள்ளவில்லை. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டிருந்த அதேவேளையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கடித மூலம் தனது கருத்துக்களைச் சமர்ப்பித்திருந்தார்.

இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா அல்லது இது நிறைவேற்றப்படப் போவதற்கான முன்னோடி நடவடிக்கையா என்பது பற்றியோ தெரியவில்லை. அப்படியானாலும் அந்தத் தீர்மானம் எது என்பது பற்றியோ தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஆனால் இக்கலந்துரையாடலின் தொனிப் பொருளைப் பார்க்கும்போது இது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு பற்றியதாக அமைந்துள்ளதை விளங்கிக் கொள்ளமுடிகிறது.

அண்மையில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் சில அழுத்தங்களை மேற்கொள்ள இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டதா அல்லது இந்தியாவின் நிலைப்பாட்டைத் தமிழர் மத்தியில் நியாயப்படுத்தும் முகமாக இது அமைந்துள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

1976ஆம் ஆண்டு பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதான அம்சம் தமிழீழக் கோரிக்கை. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பிரகடனம்.

ஆனால் இந்தியா என்றுமே பிரிவினையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டதில்லை. இலங்கையின் ஒற்றையாட்சிக்குள்ளேயே இனப் பிரச்சினைத் தீர்வை மேற்கொள்ளவே முயன்றுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமும் 13வது திருத்தச் சட்டமே முன்வைக்கப்பட்டது. கடந்த வருடம் ஜெனிவாவில் இடம்பெற்ற 49வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் மூலமே தீர்வு காணப்படவேண்டுமென அழுத்தமாகத் தெரிவித்திருந்தது.

எனவே இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு இந்தியாவிடம் அதற்கு மேலாக எதிர்பார்க்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. அதாவது தமிழீழக் கோரிக்கைக்கு அதரவான ஒரு நிலைப்பாட்டைப் புவிசார் அரசியல் சூழ்நிலைகளூடாக நகர்த்த வேண்டுமென எதிர்பார்க்கிறதா?

இதுகாலவரை ஈழத்தமிழர் விவகாரத்தை வெவ்வேறு தரப்பினரும் புவிசார் அரசியலில் தமது அரசியல் நலன்களுக்குச் சாதகமாக அதாவது இலங்கை அரசைத் தமது கட்டை மீறிப் போகாத வகையில் கையாளவே பயன்படுத்தி வந்துள்ளனரேயொழிய ஈழத்தமிழ் மக்களின் நலன் சார்ந்து அல்ல என்பது வரலாறாகும். இந்த நிலையில் இந்தியாவிடம் பயனுள்ள நகர்வுகளை எதிர்பார்க்க முடியுமா?

ஏதாவது ஒரு தரப்பின் நலன்களும், ஈழத்தமிழர்கள் நலன்களும் ஒரே புள்ளியில் சந்திக்கும்போதே எமக்குச் சாதகமான பலன்களை எட்டமுடியும். அப்படியான ஒரு நிலைமை உருவாவதானால் தமிழ் மக்களின் நலன்களில் விசுவாசமும் உறுதியும் கொண்ட தலைமை, தந்திரோபாயமான நகர்வுகளுடன் இலக்கை நோக்கி முன்னேறும் ஒரு தலைமை வேண்டும். எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதைச் சரியாக இனம் காண்பதும், எதிர்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளை எமக்குச் சாதகமாகக் கையாள்வதும் பொது எதிரிக்கெதிராக ஐக்கியப்படக்கூடிய சகல சக்திகளுடன் ஐக்கியப்படுவதும் முக்கியமான விடயமாகும்.

ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் எப்போதாவது இது பற்றிச் சிந்தித்திருப்பார்களா எனக் கேட்கப்பட்டால் இல்லையென்ற பதிலையே எதிர்பார்க்கமுடியும்.

இவ்விடயத்தில் எமது தலைமைகள் இலங்கையின் ஆட்சியாளர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொள்ளவேண்டும். முதலாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாரால் முன்வைக்கப்பட்டதோ அவர்களாலேயே அது சீர்குலைக்கப்பட்டது என்ற உண்மையை நாம் முதலில் மனம் திறந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்கு உள்ளாகவே அதை நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று தலைவர்களில் ஒருவரான தொண்டமான் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஏற்பட்ட முதல் ஊனமாகும்.

1980ல் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு நேரெதிராக இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாவட்ட அபிவிருத்திச் சபை மசோதாவுக்கு ஆதரவு வழங்கியது.

தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக நழுவல் போக்கைக் கையாண்ட அதேவேளையில் இளைஞர் அணிகள் தமிழீழக் கோரிக்கையை இறுகப்பற்றியதுடன் அந்த இலக்கை அடைய ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். தமிழ் போராளிகளை ஒடுக்க ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனித வேட்டையை எதிர்த்துப் போராளிக் குழுக்கள் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த நிலையில் அமிர்தலிங்கம், அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து இன நல்லுறவைப் பாதுகாக்கவும் அனைத்துக் குடிமக்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்க்க முடியுமெனவும் வன்முறையை நாட வேண்டாமெனவும் நாகரீகமுள்ள மனிதர்கள் என்ற முறையில் பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்க்க முடியுமெனவும் கூட்டறிக்கை ஒன்றை விடுத்தார். அதாவது தமிழீழக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் செயற்பட்ட போராளிகளின் கரங்களைக் கட்ட முயன்றார் என்பது முக்கிய விடயமாகும்.

இவ்வாறு தங்கள் தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி அதைச் சிதைக்கும் வகையில் தேர்தல் வெற்றியின் பின் செயற்பட ஆரம்பித்தது.

ஆனால் போராளிக் குழுக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுக்கும் முகமாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உறுதியுடனும் தீவிரமாகவும் மேற்கொண்டனர். அவற்றின் காரணமாக ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியா இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன் மூலம் 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் கூட ஆயுதப் போராட்டத்தைப் பயன்படுத்தியே வட்டுக்கொட்டைத் தீர்மானத்துக்கு மாறாக ஒற்றையாட்சியின் கீழான மாகாண சபை முறை முன்வைக்கப்பட்டது.

தற்சமயம் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கொள்கையையே கொண்டுள்ளது.

எனவே முதலாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் எல்லோராலுமே கைவிடப்பட்ட அநாதையாகிவிட்டது. அந்த நிலைமையை ஏற்படுத்துவதில் இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கிய பங்கு வகித்துள்ளமையை மறுத்துவிட முடியாது.

அப்படியான ஒரு வரலாற்றுப் பின்னணியில் இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு என குழு அமைக்கப்பட்டு அது அதன் தலைமையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் உடனடித் தலையீட்டைக் கோரியுள்ளது.

நாம் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன ஈழத் தமிழர் புவிசார் அரசியலில் இந்தியத் தலையீடு நிச்சயம் இருக்கும். அது இலங்கைத் தமிழர்கள் சார்ந்ததல்ல.

தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம், இந்து சமுத்திர நாடுகளில் சீனப் பட்டுப்பாதைத் திட்டம் இவற்றை முன்கொண்டு செல்வதில் சீனா இலங்கையை ஒரு முக்கிய தளமாகப் பாவிப்பதை தடுப்பதை நோக்கமாகக்கொண்டே அமெரிக்க இந்தியத் தரப்பினர் காய்களை நகர்த்தி வருகின்றனர். அதற்கமைவாகவே இந்தோ பசுபிக் ஒப்பந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அவ்வகையில் இலங்கையைக் கட்டுப்படுத்தக் கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினை கையாளப்பட்டு வந்தது. அது இனியும் கையாளப்படும்.

எனவே இலங்கைத் தமிழர் விவகாரம் தங்கள் நலன் சார்ந்து இந்தியாவாலும் அமெரிக்காவாலும் பயன்படுத்தப்படுவதை நியாயப்படுத்தவே அதாவது இந்தியத் தலையீடு மக்களின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகிறதென தமிழ் மக்களை நம்ப வைக்கவே இந்த உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகும்.

ஆனால் இன்றைய புவிசார் நிலைமையில் நாம் எதையும் அலட்சியம் செய்து விடமுடியாது. எனவே இந்நடவடிக்கையில் உள்ள எமக்குச் சாதகமான அம்சங்களில் காலூன்றி நின்று நாம் பயனடையும் விதத்திலான தந்திரோபாய முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். அதற்கு நேர்மையான, இலட்சியப் பற்றுள்ள தலைமை எமக்குத் தேவை.

ஆனால், எமது தலைமைகளோ அமெரிக்காவையோ இந்தியாவையோ ஐரோப்பிய ஒன்றியத்தையோ தீர்வு பெற்றுத் தரும் மீட்பாளர்களாகக் கருதிக் காத்திருக்கிறார்கள். தேர்தல்களை இலக்கு வைத்து உணர்ச்சி பொங்கும் வசனங்களைக் கொட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவின் மேற்படி நடவடிக்கையும் இவ்வாறு அமைந்து விடக்கூடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

17.08.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடுபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE