Wednesday 29th of September 2021 02:19:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை மீதான மேற்குலகின் நெருக்கடியை  கையாளுவாரா புதிய வெளியுறவு அமைச்சர்?

இலங்கை மீதான மேற்குலகின் நெருக்கடியை கையாளுவாரா புதிய வெளியுறவு அமைச்சர்?


இலங்கை அரசாங்கம் பல நெருக்கடிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியும், கொரோனா பெருந்தொற்று நெருக்கடியும் பாரிய சவால்மிக்க சூழலை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்று ஆளுந்தரப்பின் எதிர்கால அரசியலையே கேள்விக்குள்ளாக்கி வருகிறது. அவ்வாறே ஜெனீவா விவகாரமும் சர்வதேச மட்டத்தில் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கும் பாரிய நெருக்கடியாக மாறி வருகிறது. இவற்றை கையாளும் உத்தியோடு அமைச்சரவை மாற்றங்களை அவற்றிற்குரித்தான இராஜதந்திர நகர்வுகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதில் மிகப்பிரதான விடயமாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கைமாற்றப்பட்டு இருப்பதன் நோக்கம் எது என்பதை விளங்கிக்கொள்வதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.

எதிர்வரும் செப்ரெம்பர் - 13ஆம் திகதி 48வது ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முன்னெடுக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. அத்தகைய நிகழ்வுக்கு முன்னரே பிரித்தானிய இரு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை முன்னெடுத்துள்ளது. ஒன்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றியுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஆணைக்குழுவுக்கு ஒதுக்குவது தொடர்பில் பிரித்தானிய கவனம் எடுக்குமென பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டொமினிக் ட்ராவ் தெரிவித்துள்ளார். இரண்டு, இலங்கையின் பொலிஸாருக்கு பயிற்சி அளித்துவந்த பிரித்தானியாவின் ஸ்கொட்லான் யாட் அதனை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது என்பதை பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எலியற் கொல் பேர்ன் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த இருசெய்திகளும் பிரித்தானியாவின் நகர்வை வெளிப்படுத்துவதோடு கடந்த ஜெனிவா அரங்கையும் பிரித்தானியாவே வழிநடத்தியது என்ற அடிப்படையில் இலங்கை மேற்கு நாடுகள் மீதான கையாள்கையை புதிய தளத்தில் ஆரம்பித்துள்ளது. அதாவது அமைச்சரவை மாற்றத்தில் உள்நாட்டு அரசியலில் எற்பட்டுவரும் வங்குரோத்து நிலையை கையாள முயன்றதோடு மறுபக்கத்தில் மேற்கு நாடுகளை கையாளும் பொறிமுறையையும் அத்தகைய அமைச்சரவை மாற்றத்தின் மூலம் அடையாளப்படுத்தி உள்ளது. கல்வி அமைச்சராக இருந்த ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவை நோக்கி வழிவரைபடத்தோடு புறப்பட்டது போல் ஜி.எல்.பீரிஸின் முகம் மேற்கு நாடுகளை குறிப்பாக பிரித்தானியாவை கையாளும் முகமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இதனை சற்று விரிவாக நோக்குவோம்.

முதலாவது, ஜி.எல்.பீரிஸ் ஒரு புலமையாளர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பதவிகளிலும் சட்டத்துறையிலும் தேர்ச்சி உடையவர் என்பதோடு அரசியல்ரீதியிலான அனுபவமும் கொண்டவர் என்ற அடிப்படையில் வெளிவிவகார அமைச்சராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். அவரது சட்டப்புலமையும், அரசியல் ஆளுமையும் ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுமுகமாக்குவதற்கான உபாயத்தை தருமென இலங்கை ஆட்சியாளர்கள் கணித்துள்ளனர். இலங்கையின் இனப்பிரச்சினையை ஒரு சட்டப்பிரச்சினையாகவும் பொருளாதாரப் பிரச்சினையாகவும் வடிவமைக்க முயலும் இலங்கை ஆட்சியாளர்கள் அதனை நியாயப்படுத்த ஜி.எல்.பீரிஸ்ன் முகத்தை முன்னிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

இரண்டாவது, ஜி.எல்.பீரிஸினது மேற்கு நாடுகளுக்கு ஏற்ற வகையிலான அவரது தோற்றம் தனித்துவமானது. குறிப்பாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆசிய பாரம்பரியங்களோடு இலங்கையின் அடையாளத்தையும் அரைகுறை சோசலிசத்தின் எச்சத்தையும் பிரதிபலிப்பவராக விளங்கும் போது பீரிஸ் பிரித்தானியரின் மரபுகளுக்கு உட்பட்ட ஆடை அணிகலன்களையும் ஆங்கில மொழி அதீத தேர்ச்சியையும் கொண்டவராக விளங்குவார் என்பதே தென்னிலங்கை ஆட்சியாளர்களது எதிர்பார்ப்பாகும். பீரிஸின் மொழியும் அவரது உடல் மொழியும் பிரித்தானிய உட்பட்ட மேற்கு நாடுகளை ஈர்த்துக்கொள்வதற்கான உபாயமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். இதன்மூலம் இலங்கைக்கு எதிரான அணுகுமுறையை பிரித்தானியரிடமிரந்து மட்டுப்படுத்த முடியுமெனவம் குறைந்தபட்சம் கால அவகாசத்தை கோரி பெற்றுக்கொள்வதன் மூலம் அதனை வெற்றிக்கொள்ளலாமென கருதுகின்றனர்.

மூன்றாவது, புதிய வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் பல பேச்சுவார்த்தை களங்களை எதிர்கொண்டவர். குறிப்பாக விடுதலைப்புலிகளுடனான ஆறு கட்டப் பேச்சுக்களின் போது கலந்து கொண்டதோடு தலைமை பேச்சாளராகவும் செயற்பட்டிருந்தார். அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் பிரதான ஆலோசனைகள் வழங்கியதோடு சட்டரீதியான உரையாடல்களை கொண்டு செல்லவும் பீரிஸ் காரணமாக இருந்தார். எறக்குறைய அப்பேச்சுவார்த்தையினை கையாளும் பிரதான பங்காளியாக ஜி.எல்.பீரிஸ் செயற்பட்டமையே அவரை வெளிவிவகார அமைச்சராக அடையாளங்காட்டியது.

நான்காவது, மகிந்த ராஜபக்ஸாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை கையாண்டுள்ளார். குறிப்பாக, மேற்கு நாடுகளாலும் இந்தியாவினாலும் முன்வைக்கப்பட்ட ஜெனிவா தீர்மானங்களை கையாளுவதில் பெரும் பங்காற்றியிருந்தார். அவரது வெற்றிகரமான வெளியுறவுக்கொள்கையே உள்நாட்டில் தமிழர் தரப்பையும் சர்வதேசத்தில் மேற்கையும் கையாளும் இராஜதந்திர செய்முறையை வெளிக்காட்டி இருந்தது. அதுவொரு கால நீடிப்பையும் ஒத்திவைப்புக்களையும் இலங்கைக்கு வழங்க உதவியது.

ஐந்தாவது, ஜி.எல்.பீரிஸினது வெளிவிவகார கொள்கை சீனாவை முன்னிறுத்தி இந்தியாவையும் மேற்கையும் கையாளும் பொறிமுறையை அதிகம் வெளிப்படுத்தியவராகவும், லக்ஸ்மன் கதிர்காமருக்கு பின்னர் உலக நாடுகள் மத்தியில் பிரபல்யமான வெளிவிவகார அமைச்சராகவும் விளங்கினார். அதுமட்டுமன்றி பீரிஸ் இலங்கை-சீன உறவை பலப்படுத்துவதிலும் அதேநேரம் மேற்கு நாடுகளை கையாளுவதிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

எனவே தான் அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சராக்கியதன் மூலம் இலங்கை தமிழருக்கு ஆதரவான மேற்கு நாடுகளை கையாளுவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவை கையாள மிலிந்த மொறகொட-இன் வழிவரைபடம் அமைவது போல் அமெரிக்காவை கையாள திருகோணமலை 33000ஏக்கர் வழங்கப்பட்டது போல் பீரிஸை முன்னிறுத்தி ஐரோப்பிய நாடுகளை குறிப்பாக பிரித்தானியாவை கையாளும் உத்தியை இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எற்கனவே மிலிந்த மொறகொடவால் ஸ்தாபிக்கப்பட்ட பாத்பைன்டர் அமைப்பு பிரித்தானியாவை நோக்கி தனது உரையாடலை ஆரம்பித்துள்ள சூழலில் பீரிஸ் ஜெனீவாவையும் மேற்கையும் கையாளும் இராஜதந்திரரீதியாக அடையாளப்படுத்தியுள்ளார்.அவர் அமெரிக்க தூதுவர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரை சந்தித்து உரையாடியதுடன் மேற்குக்கும் தமிழ் தரப்புக்சுகும் இடையில் செயல்படும் ஆளுமையாக கருதப்படுகின்றார். அவரது வெளியுறவுக்கான வருகை அதிக மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை தந்துள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE