Friday 19th of April 2024 09:52:54 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 69 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 69 (வரலாற்றுத் தொடர்)


இனவெறித் தீயில் எரிக்கப்பட்ட யாழ்.நூலகம்! - நா.யோகேந்திரநாதன்!

'புரட்சி என்பது தற்செயலாகவோ தன்னிச்சையாகவோ நடைபெறும் நிகழ்ச்சியல்ல. ஒருசில தனிமனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சியுமல்ல. ஆயுதம் தரித்த ஒரு குழுவோ அல்லது முற்போக்கான பெயரைக் கொண்ட அரசியல் கட்சியோ, காடுகளில் மறைந்து வாழும் ஒரு இயக்கமோ வீறு கொண்டு எழுந்து மேற்கொள்ளும் ஆயுதப் போராட்டம் புரட்சியாகி விடமுடியாது. புரட்சி என்பது பற்றி சில வரையறைகளை மாக்ஸிசம் வகுத்துள்ளது. இவற்றுக்குப் பின்னணியில் ஒரு தத்துவமும் அரசியல் பார்வையும் உண்டு. புரட்சிகள் கட்டளைப்படி நடப்பதுமில்லை: ஒரு குறிப்பிட்ட தருணத்தை ஒட்டி நடப்பதுமில்லை. அவை வரலாற்றுப் போக்கில் முதிர்ச்சியடைகின்றன. பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு காரணங்கள் முதிர்வடைந்து முனைப்படையும்போது உரிய நேரத்தில் புரட்சிகள் வெடிக்கின்றன'.

இது சோவியத் யூனியன் புரட்சிக்குத் தலைமை தாங்கி அந்த நாட்டை விடுதலை செய்து ஒரு புதிய உழைக்கும் மக்களின் அரசியலதிகாரத்தைக் கட்டியமைத்த மாமேதை லெனின் அவர்கள் புரட்சி பற்றியும், அவை வெடிக்கும் சந்தர்ப்பங்கள் பற்றியும் வெளியிட்ட கருத்துகளாகும்.

அவர் கூறியதைப் போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டமும் தற்செயலாகவோ, தன்னிச்சையாகவோ வெடித்த ஒரு புரட்சியல்ல. ஒரு சிலரினதோ, அல்லது ஒரு ஆயுதக் குழுவினதோ அல்லது ஒரு அரசியல் கட்சியினுடையதோ முயற்சிகளால் உருவானதல்ல. மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமான நில அபகரிப்புக் கலவரங்கள், கல்வியில் தரப்படுத்தல் என அடுக்கடுக்காகத் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டு வந்த அநீதிகளும் அரசியலமைப்புச் சட்டமூலம், சிங்களமும், பௌத்தமுமே அரியணை ஏற்றப்பட்டமையும் அதன் மூலம் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கியமையுமே தமிழ் மக்களை தமிழீழத் தாயகம் அமைப்பதைவிட மாற்று வழிக்கு இடமில்லை என்ற முடிவுக்குத் தள்ளின.

இவ்வாறு தனி நாட்டுக்கான தேவை தமிழ் மக்களுக்குச் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு ஒரு புரட்சியை நோக்கிய நிலைமைகள் முதிர்வடைந்து கொண்டு வந்த நிலையால் தென்னாசியாவின் தலைசிறந்த நூலகமும் தமிழ் மக்களின் அரிய அறிவுக் களஞ்சியமும் புலமைச் சொத்துமான யாழ். பொது நூலகம் எரித்தழிக்கப்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்களின் நேரடி வழிகாட்டலில் அரசாங்கப் பொலிஸாரால் இறக்குமதி செய்யப்பட்ட சிங்களக் காடையராலும் மேற்கொள்ளப்பட்ட இக்கொடூரப் பேரழிவு தமிழ் மக்களை சிங்களவருடன் இணைந்து வாழமுடியாது என்ற திட்டவட்டமான முடிவுக்கு வர வைத்ததுடன், அதற்கான பாதை ஆயுதப் போராட்டம் மட்டுமே எனவும் உணரவும் வைத்தது.

எனவே யாழ்.நூலக எரிப்பு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை விடுதலைப் போராட்டமாகப் பரிணமிக்க வைத்து ஒரு புரட்சிகரமான வரலாற்றுத் திருப்புமுனையை வெடிக்க வைத்தது என்பதை மறுத்துவிடமுடியாது.

யாழ்.நூலகம் எரிக்கப்படுவதற்கு முன்பே தமிழ் மக்கள் 1977ம் ஆண்டில் தனித் தமிழீழக் கோரிக்கைக்கு ஆணை வழங்கியிருந்தாலும்கூட பேச்சுவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வு எட்டப்படுமானால் அதை ஏற்கத் தயாராகவேயிருந்தனர். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் ஆயதப் போராட்ட வழியைத் தேர்ந்தெடுத்தமை என்பது ஒரு சிலரினதோ அல்லது சில குழுக்களுடையதோ எழுச்சி மட்டுமல்ல அது கடந்த காலத்தில் உருவாகி வளர்ச்சியடைந்து முனைப்புப் பெற்ற காரணங்களாலேயே உருவான புரட்சி என்பதையும், நூலக எரிப்பும் அதனுடன் இடம்பெற்ற ஏனைய வன்முறைகளும் அவை ஒரு விடுதலைப் புரட்சியை நோக்கிய பயணமே என்பதையும் தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ள வைத்தன.

எத்தனை கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் தலைகுனிந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமேயொழிய எதிர்ப்பைக் காண்பிக்க முயன்றால் அரச பயங்கரவாதம் மூலமே பதிலளிக்கப்படும் என்பதை 1977ன் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் முரசறைவித்தன.

1981ம் ஆண்டு மே 31ம் நாள் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றபோது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுட்டிருந்த பொலிஸார் மீது இனம் தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் இரு பொலிஸார் உயிரிழக்கின்றனர். ஒருவர் படுகாயமடைகிறார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பொலிஸார் நாச்சிமார் கோவில் தேரை எரித்ததுடன், கோவிலையும் தீ மூட்டி எரிக்கின்றனர். சுற்றியிருந்த வீடுகள், கடைகள் நொருக்கப்படும் தீயிடப்பட்டும் அழிக்கப்படுகின்றன. வீடுகளுக்குள் இருந்தவர்களில் நால்வர் வெளியே இழுத்துவரப்பட்டுச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

அவர்களின் வெறியாட்டம் யாழ். மத்திய பகுதியை நோக்கி நகர்கின்றது. பழைய சந்தைப்பகுதி, நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி, வர்த்தக நிலையங்கள் என்பன தீயிட்டு எரிக்கப்படுகின்றன. யாழ். பஸ் நிலையத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலை உட்படச் சகல கடைகளும் எரிக்கப்படுகின்றன.

யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு தாக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது. அவரும் மனைவி பிள்ளைகளும் பின்புற மதிலேறிக் கடந்து தப்புகின்றனர்.

அந்த வன்முறைக் கும்பல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினசரிப் பத்திரிகையான 'ஈழநாடு' காரியாலயத்தில் புகுந்து அதன் பிரதம ஆசிரியர் கோபால ரத்தினத்தை நையப் புடைத்துவிட்டு அதையும் தீ மூட்டி எரிக்கின்றனர். நிறுவனத்தின் அச்சகமும் முற்றாக நாசமாக்கப்படுகிறது.

இக்கொடுமைகள் நிகழும்போது அமைச்சர்களான சிறில் மத்யூ, காமினி திசாநாயக்க ஆகியோர் அண்மையிலுள்ள யாழ்ப்பாண வாடி வீட்டிலேயே தங்கியிருந்தனர். அதுமட்டுமின்றி இரவோடிரவாக கொழும்பிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட காடையர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர்.

மே முதலாம் நாள் பகலில் வீதிகளால் செல்பவர்கள் தாக்கப்படுவது உட்படப் பல வன்முறைகள் இடம்பெறுகின்றன. அன்று இரவு பத்து மணியளவில் தமிழ் மக்களின் இதயத்தையே ஈட்டியால் குத்திய அந்த கொடிய வன்முறை ஆரம்பிக்கப்படுகிறது.

யாழ்.பொது நூலக முன்றலில் வந்திறங்கிய பொலிஸார், காடையர்கள் ஆகியோரைக் கொண்ட ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பல் காவலாளியை அடித்துத் துரத்தி விட்டு நூலகத்துக்குள் புகுந்து கொள்கின்றனர். வாசிப்போர் பகுதி, இரவல் வழங்கும் பகுதி, ஆவணப் பகுதி, ஆய்வுப் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நூல்கள் எடுத்து வெளியே போடப்பட்டுத் தீ மூட்டப்படுகின்றன. புத்தகங்கள் மட்டுமின்றி புராதன ஓலைச் சுவடிகள், பெரியார்களால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் யாழ்ப்பாணத்தில் தொடக்க காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் என அனைத்துமே எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் எழுதப்பட்ட பரராஜசேகரம் என்ற மருத்துவ நூலும், ஆறுமுகநாவரால் மொழி பெயர்க்கப்பட்ட பைபிளின் கையெழுத்துப் பிரதி, யாழ்ப்பாண வைபவ மாலையின் மூலப் பிரதி என்பனவும் தீயிடப்பட்டன.

பல பெரியார்கள் தங்கள் முதுசங்களாகப் பரம்பரைபரம்பரையாகப் பேணிப் பாதுகாத்துவந்த ஏட்டுப் பிரதிகள், நூல்கள், ஆவணங்கள் என்பவற்றைப் பொது நூலகத்துக்கு வழங்கியிருந்தனர். அந்த அரிய சொத்துகளும் அழிக்கப்பட்டன.

தீ கட்டிடமெங்கும் பரவி கண்ணாடி ஜன்னல்கள் வெடித்துச் சிதறுகின்றன. இதனைக் கேள்வியுற்றுத் தடுத்து நிறுத்தவென வந்த மாநகர சபை ஆணையாளரும், பணியாளர்களும் மிரட்டி அனுப்பப்படுகின்றனர்.

நூலகம் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட தாவீது அடிகளார் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழக்கிறார். அதன் வாசகரான அரியாலையைச் சேர்ந்த முன்னாள் பாடசாலை அதிபர் ஒருவர் நூலகம் எரிக்கப்பட்டதைப் போய்ப் பார்த்ததுமே மனநோயாளியானார். இச் சம்பவத்தால் முழு யாழ்ப்பாண மக்கள் மனங்களிலும் பெரும் ஆவேச உணர்வு பொங்கியது.

இது 1933ல் யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு வாடகைக் கட்டிடத்தில் சில பெரியார்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு 1959ல் அன்றைய யாழ்ப்பாண மேயர் துரையப்பாவின் முயற்சியால் சொந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. 1980ல் இதை சர்வதேச நூலகங்களின் தரத்துக்கு உயர்த்தும் முகமாகப் பல வழிகளிலும் நிதி சேகரிக்கப்பட்டது. ஆரம்ப நிதியாக யாழ். மாநகர சபையால் ஒரு லொத்தர் சீட்டிழுப்பு நடத்தப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றிப் பல தனவந்தர்களும், பெரியார்களும் நிதியை அள்ளி வழங்கினர். லோங் அடிகளார் என்ற கிறீஸ்தவ மதகுரு அமெரிக்கா சென்று அங்குள்ள தேவாலயங்கள் முன்பாகத் தன் அங்கியை ஏந்தி மடிப்பிச்சை வேண்டி நிதி சேகரித்தார். இது பிரமாண்டமான திராவிட சிற்பக்கலை முறையில் அமைக்கப்பட்டது. இதிலிருந்த 97,000 புத்தகங்கள் உட்பட ஓலைச் சுவடிகள், ஆவணங்கள், ஏனைய பல சேகரிப்புகள் அன்றிரவு எரிக்கப்பட்டன.

அடுத்தநாள் காலையில் எத்தனையோ அறிஞர்கள், பெரியோர்கள் முயற்சியில் உருவாக்கப்பட்ட தென்னாசியாவின் மிகப் பெரும் நூலகம் வெறும் இடிபாடுகளாக மாறிப் புகைந்து கொண்டிருந்தது.

உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரி என வர்ணிக்கப்படும் ஹிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தின்போது லண்டன் மாநகரத்துக்குக் குண்டு அனுப்பும் போது பிரித்தானியாவின் அறிவுக் களஞ்சியமான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தி விடக்கூடாதெனக் கட்டளையிட்டானாம். ஆனால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கெனச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அமைச்சரவையின் இரு அமைச்சர்களின் வழிகாட்டலில் அரச பொலிஸாரால் தமிழ் மக்களின் புலமைச் சொத்தான யாழ்.நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இக்கொடுமை தொடர்பாக சர்வதேச அளவிலும் சிங்கள அறிஞர்கள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் ஜே.ஆர்.ஜயவர்த்தனவோ எதுவும் நடவாதது போன்று அமைதியாய் இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக எவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்றைய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர, திஸ்ஸபாலசூரிய, பேராசிரியர் சரத் சந்திர, வைத்திய கலாநிதி கொலம்பஹே நடேசன் கியூசி ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேசிய இணக்கப்பாட்டுக்கான குடிமக்கள் குழு ஒரு தேசம் என்ற வகையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் நடத்திய இந்தக் குற்றத்துக்கு நாம் பிரயாசித்தம் தேடவேண்டுமெனவும், அரசாங்கமே இத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டுமெனவும் வலியுறுத்தியது.

சர்வதேசச் சட்டவியலாளர்கள் ஆணைக்குழு இந்த நூலக எரிப்பு பொலிஸாராலேயே மேற்கொள்ளப்பட்டதெனவும் இது யாழ்ப்பாண மக்களின் கற்றல் மற்றும் கலாசாரம், கற்றலுக்கான விருப்பம் ஆகியவற்றின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட போர் என்றும் தெரிவித்திருந்தது. சர்வதேச மன்னிப்புச் சபை இச்சம்பவம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கியமை கவலைக்குரியதெனத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

வன்முறைகள் அத்துடன் முடிவடைந்துவிடவில்லை. மே 2ம், 3ம் திகதிகளில் சுன்னாகம் சந்தைக் கட்டிடம் எரிக்கப்பட்டதுடன், யாழ்.நகரில் அமைந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயமும் எரியூட்டப்பட்டுப் பல ஆவணங்கள் வீதியில் போட்டுக் கொளுத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆறுமுகநாவலர், கம்பர், திருவள்ளுவர், ஒளவையார், சங்கிலியன் ஆகியோரின் சிலைகளும் உடைத்து நொருக்கப்பட்டன.

இவ்வாறு 3 நாட்களாக பேரழிவுகள் நடத்தப்பட்டபோதும், அவசர காலச் சட்டமோ, ஊரடங்குச் சட்டமோ பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனவெறித் தீயில் நூலகம் எரிக்கப்பட்டது உட்பட மேற்கொள்ளப்பட்ட கலாசார, பொருளாதார அழிப்பு என்பன தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை விடுதலை போராட்டமாக உந்தித் தள்ளிய ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE