Saturday 20th of April 2024 08:45:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ் மக்களின் அரசியலில் அமைச்சரவை மாற்றங்கள்! - நா.யோகேந்திரநாதன்!

தமிழ் மக்களின் அரசியலில் அமைச்சரவை மாற்றங்கள்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கை அரசாங்கம் பலவிதமான தேசிய சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வினால் கொண்டு வரப்பட்ட போதிலும் முக்கியமாக இரு அமைச்சுகளில் அதாவது வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவற்றில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. அதேவேளையில் நிதியமைச்சில் ஏற்பட்ட மாற்றமும் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சம்பள உயர்வு கோரிய ஆசிரியர்களின் போராட்டம், உரப்பசளை இறக்குமதித் தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம், கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்ட மூலத்துக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், தாதியர் தொழிற் சங்கங்களின் போராட்டம், ரயில்வே நிலைய அதிபர்கள், பணியாளர்கள் போராட்டமென நாடு பரந்த அளவில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஒடுக்கும் வகையில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளும், பொலிஸாரின் வன்முறைகளும் பிரியோகிக்கப்பட்டாலும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்படியான நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விடம் இருந்த நிதியமைச்சு பஷில் ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் இப் போராட்டங்களுக்கு நியாயபூர்வமான தீர்வுகளைக் கண்டு அவற்றை முடிவுக்குக் கொண்டுவர உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி எடுக்கப்படுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

ஆனால் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு படுமோசமான அளவுக்குக் குறைவடைந்ததுடன் கடன் தவணைகளையும் வட்டியையும் கட்டுவதற்குக்கூட போதாத அளவுக்கு நாட்டின் தேசிய வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அவற்றைச் சமாளிக்க மேலும் மேலும் மக்களின் மீது வரிச் சுமை களை ஏற்றுவதும் நாட்டின் தேசிய வளங்கள் அந்நிய நாடுகளுக்கு விற்கப்படுவதுமே வழிமுறைகளாகக் கையாளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் உட்படப் பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஷில் ராஜபக்ஷ் ஒரு மீட்பராக சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்துவார் என்ற நம்பிக்கையும் வலுவிழந்து போய்க் கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் நாளாந்தம் பாதிக்கப்படுபவர்களினதும் இறப்பவர்களினதும் தொகை பல மடங்கால் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சுகாதார அமைச்சில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று செயலணியின் தலைவராக ஜனாதிபதியும் பொறுப்பதிகாரியாக இராணுவத் தளபதியும் அதிகாரங்களைத் தங்கள் கையில் வைத்திருக்கும் நிலையில் சுகாதார அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் சங்கங்கள் என மருத்துவத்துறை சார்ந்த சகலரும் நாட்டைச் சில நாட்களுக்காவது முடக்கும்படி விடுத்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. இப்படியான விடயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சரிடம் இல்லாதபோது அமைச்சரை மாற்றுவதால் பலன் கிடைக்குமா என்பதும் சந்தேகமே!

இவ்வாறு இந்த இரு அமைச்சுகளின் மாற்றங்களாலும் எவ்வித பலனும் இதுவரைக் காணப்படாத போதும் வெளிவிவகார அமைச்சில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் தொடர்பாக ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இலங்கை சர்வதேச மட்டத்தில் அரசியல், பொருளாதார மட்டங்களில் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வெளிவிவகார அமைச்சுக்கு ஒரு முக்கிய பொறுப்பு உண்டு.

அவ்வகையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆதாரங்களையும் ஆவணங்களையும் சேகரிக்கும் செயலணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய விதிகள் தொடர்பாக அண்மையில் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம், அமெரிக்க செனட் சபை ஆகியவை நிறைவேற்றிய தீர்மானங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் பிரதிபலிப்புக் கூட்டத் தொடரில் ஒலிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில்தான் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் பரிச்சயம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டு வரை இடம்பெற்ற விடுதலைப் புலிகளுடனான பேச்சுகளின் போது அவரே இலங்கை அரச குழுவுக்குத் தலைமை தாங்கிக் கலந்து கொண்டவர்.

'ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம்' என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் சம்மதிப்பது போன்று போக்குக்காட்டிக் காலத்தை இழுத்தடித்ததுடன், ரணிலுடன் இணைந்து மேற்கொண்ட சதி மூலம் விடுதலைப் புலிகளைப் பேச்சுகளிலிருந்து வெளியேற வைத்து, தீர்வு முயற்சிகளைக் குழப்பிய பெருமை அவருக்குண்டு.

மீண்டும் அவரே வெளிவிவகார அமைச்சராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் அனுசரணையுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுகள் முக்கியமானவை. இதில் ஜீ.எல்.பீரிஸ் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பஷில் ராஜபக்ஷ் தலைமையில் பேச்சுகளை நடத்தத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பு தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் விசனம் தெரிவித்துள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் இப்பேச்சுகளுக்கு அழைக்கப்படவில்லை.

இச் சந்திப்பு இரு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஒன்று எதிர்வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இறுக்கமான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் முன்வைக்கப்படும் போது இலங்கை அரசாங்க தரப்பினரால் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுகள் இடம்பெறுவதாகக் கூறி கால அவகாசம் கோரப்படலாம் அல்லது நடவடிக்கைகளின் வீரியத்தை மழுங்கடிக்க முயற்சிக்கப்படலாம்.

2010 ஆம் ஆண்டில் பஷில் ராஜபக்ஷ் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுகள் வருடக் கணக்கில் இழுபட்டும் எவ்வித தீர்வுமின்றிக் கைவிடப்பட்டமையை மறந்துவிட முடியாது.

இரண்டாவது சுமந்திரனுடன் பேச்சுகளை நடத்துவதன் மூலம் த.தே.கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையோ ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளையோ புறக்கணிப்பது அல்லது இரண்டாவது மட்டத்தில் பார்க்கப்படுவது தமிழர் தரப்பின் சக்தியைப் பலவீனப்படுத்துவதாகும்.

கடந்த காலங்களில் பங்காளிக் கட்சிகள் அலட்சியப்படுத்தப்பட்டமையே பல பிளவுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமாயமைந்ததை நாம் மறந்துவிட முடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இனப்பிரச்சினைக்குக் குறைந்தபட்ச தீர்வை எட்டுவதானால் கூட இலங்கை அரசாங்கத்துடன் தான் நாம் பேச வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் எமது பலமும் உறுதியும் நாம் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களுமே முக்கியமானவையாகும். அமெரிக்காவினதோ ஐரோப்பிய ஒன்றியத்தினதோ, இந்தியாவினதுடையதோ அனுசரணைகள் இரண்டாம் பட்சமானவையே. அவற்றைக் கூட வெற்றிகரமாகக் கையாள்வது எமது உறுதிப்பாட்டிலும் பலத்திலுமே தங்கியுள்ளது.

எனவே அமைச்சரவை மாற்றமும் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமையும் தமிழ் மக்களை மீண்டும் ஒரு ஏமாற்றும் வழிவகை என்பதைப் புரிந்து கொண்டு தமிழர் தரப்பு விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

24.08.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE