Tuesday 16th of April 2024 06:33:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்!

தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வது பிரிவுக்கமைய அமைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைச் சபை, தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வது பிரிவுக்கமைய, ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனைச் சபையில் ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

இந்தச் சபையானது, பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, இவர்களுக்கான விடுதலைப் பொறிமுறையினை கண்டறிந்து, ஜனாதிபதிக்கான பரிந்துரை ஆலோசனையைச் செய்யுமென்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, நீண்டகாலமாக ஆலோசனைச்சபை ஒன்று நியமிக்கப்படாத காரணத்தினால், கைதிகள் தங்களது பிரச்சினைகளை இச்சபையிடம் முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று, ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

• இந்த முன்னேற்ற முன்னெடுப்பினை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ‘குரலற்றவர்களின் குரல் அமைப்பு’ வரவேற்கின்றது. மேலும், ஆலோசனைச் சபையின் செயற்கருமங்கள் எப்போதும் போல் காலத்தால் அள்ளுண்டு போகாது, ‘தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்’ என்று இவ் அமைப்பு எதிர்பார்க்கின்றது.

• கடந்த 2020 பெப்ரவரியில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடம் ‘விரைவில் ஆணைக் குழுவொன்றை அமைத்து அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’ என்று கூறியிருந்தார்.

• கடந்த காலத்தில் ஜே.வி.பி கைதிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அன்றைய ஜனாதிபதியால் ‘நீதி அதிகாரம் கொண்ட ஆணைக் குழு’ ஒன்று நிறுவப்பட்டது.

• இந்நிலையில் தற்போது, வர்த்தமானியிடப்படாத ‘ஆலோசனைச் சபை’ ஒன்றையே தற்போதைய ஜனாதிபதி நியமித்துள்ளார்.

• எவ்வாறாயினும் பெயரிடப்பட்டுள்ள, சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களின் தெரிவானது, எமக்கு நம்பிக்கையினை தருகின்றது.

• குறிப்பாக, கடந்த காலத்தில் பதில் சட்டமா அதிபராக கடமையாற்றிய சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் அவர்கள், தமிழ் அரசியல் கைதிகளுக்கெதிரான பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகள் தொடர்பில் நன்கு பரிச்சயம் கொண்டவராக விளங்கியிருந்தார். அது மட்டுமன்றி, கொழும்பு- மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை கோரி உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது, 2015 /10/ 15 அன்று அவர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று, நீதிஅமைச்சருக்கு முன்னால், பல தீர்வுப்பொறிமுறைகளை செயற்படுத்துவதாக கூறியிருந்தமை, நினைவுமீட்டத்தக்கது.

• நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை குழுவானது, முடிந்தளவுக்கு சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து,சூழ்நிலைக் கைதிகளான அவர்களது உண்மை நிலையினை அறிந்து, பரிந்துரைகளை முன்வைப்பதே சாலப் பொருத்தமாக இருக்குமென்று நாம் நம்புகின்றோம்.

தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், குறைந்த வேகத்திலாவது அசையத் தொடங்கியிருப்பது சிறந்த விடயமே. இந்த நற்கருமத்தை முழுமைப்படுத்துவதன் மூலம் அரசின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு ஈடேறும் என நம்பலாம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE