Thursday 28th of March 2024 12:23:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்கா, ஆப்கான் படைகளில் அதி நவீன ஆயுதங்கள், விமானங்கள் தலிபான்கள் வசம்!

அமெரிக்கா, ஆப்கான் படைகளில் அதி நவீன ஆயுதங்கள், விமானங்கள் தலிபான்கள் வசம்!


ஆகஸ்ட் 15-ஆம் திகதி காபூல் தலிபான்களிம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்துக்கு அமெரிக்கா வழங்கிய அதி நவீன ஆயுதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் அத்தனையும் தலிபான்கள் வசமாகியுள்ளன.

இதன்மூலம் உலகில் விமானங்களைக் கொண்ட ஒரேயொரு பயங்கரவாத அமைப்பாக தலிபான்கள் மாறியுள்ளதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்களில் தலிபான்கள் அதிவீன ஆயுதங்கள் உள்ளிட்ட முழுமையான போர்க் கருவிகளுடன் காணப்படுகின்றனர். தாடி அல்லது பாரம்பரிய சல்வார் கமீஸ் ஆடை தவிர, ஒரு முழுமையான அரச படைகளில் இருந்து அவர்களை வேறுபடுத்த முடியவில்லை.

காபூல் தலிபான்களிடம் வீழ்ந்த பின்னர் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் அத்தனை பேரும் தங்களிடம் இருந்த ஆயுதங்களை கையளித்து தலிபான்களிடம் சரணடைந்தனர். இதன்மூலம் ஆயுதங்கள் அனைத்தும் தலிபான்கள் வசமாகின.

ஆப்கானிஸ்தான் விமானப்படை ஜூன் மாத இறுதி வரை தாக்குதல் ஹெலிகப்டர்கள் மற்றும் விமானங்கள் உட்பட 167 விமானங்களை இயங்கு நிலையில் கொண்டிருந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான விசேடஆய்வாளர் நாயகப் பிரிவு அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் அந்த 167 ஹெலிகப்டர்கள் மற்றும் விமானங்களில் எத்தனை முழுமையாகத் தலிபான்கள் வசமாகியுள்ளன எனத் தெரியவில்லை.

கந்தஹார் விமான நிலையத்தின் ஒடுபாதையில் ஆப்கானிஸ்தான் இராணுவ விமானங்கள் பல நிறுத்திவைக்கப்பட்டுள்ளமையை அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் காணமுடிகிறது.

ஹெராட், கோஸ்ட், குண்டுஸ் மற்றும் மசார்-இ-ஷெரீப் உட்பட மீதமுள்ள ஒன்பது ஆப்கானிஸ்தான் விமான தளங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இங்கு எத்தனை விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன? என்பது குறித்த தகவல்கள் இல்லை. இந்த விமான நிலையங்களில் இருந்து கைப்பற்றிய விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் படங்களை தலிபான்கள் ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் காபூலை தலிபான்கள் கைப்பற்ற முன்னரே சில விமானங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வேறு இடங்களுக்கு சென்றுவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலிபான்களிடம் விமானங்களை இயக்குவதற்கான திறன்கள் உள்ளதா? எனக் கேள்விகள் உள்ளபோதும் அதிநவீன துப்பாக்கிகள், துப்பாக்கிகள் மற்றும் வாகனங்களை கையாளும் அனுபவம் அவர்களுக்கு இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அத்துடன், விசேட பயிற்சிபெற்ற விமானிகள் உட்பட பல துறைசார் வல்லுநர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2003 முதல் 2016-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்கா தனது படைகளுடன் இணைந்து போராடிய ஆப்கானிஸ்தான் படைகளுக்காக மிகப் பெரிய அளவு இராணுவ ஆயுதங்கள், வாகனங்கள், தளபாடங்களை இறக்கியது. 358,530 வெவ்வேறு தயாரிப்பு துப்பாக்கிகள், 64,000 க்கும் மேற்பட்ட இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்களும் இறக்கப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன.

அமெரிக்கா 2017 இல் மட்டும் கிட்டத்தட்ட 20,000 M-16 ரக துப்பாக்கிகளை ஆப்கான் படைகளுக்கு வழங்கியது. அடுத்த ஆண்டுகளில் குறைந்தது 3,598 M-04 துப்பாக்கிகளும் வழங்கப்பட்டதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விமானங்களைக் கைப்பற்றுவது தலிபான்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை இயக்குவதும் பராமரிப்பதும் கடினமாக இருக்கும் என அமெரிக்கப் படைகளின் முன்னாள் ஆலோசகர் டாக்டர் ஜொனாதன் ஷ்ரோடன் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானில் கைப்பற்றியுள்ள விமானங்களை இயக்குவதில் தலிபான்களுக்கு நிபுணத்துவம் இல்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படை வீரரும் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு பேராசிரியருமான ஜோடி விட்டோரி தெரிவித்துள்ளார்.

ஆப்கானியப் படைகள் சரணடைவதற்கு முன்பு விமானங்கள் சிலவற்றை தகர்த்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அத்துடன், இந்த விமானங்களைப் பயன்படுத்தி தலிபான்கள் தாக்குதல்களை நடத்தும் உடனடி ஆபத்து இல்லை என்றும் அவர் கூறுகிறார்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE