Thursday 18th of April 2024 07:26:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
இராணுவ மயமாக்கல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அவசர நிலைப்பிரகடனம் - NIKKEI Asia!

"இராணுவ மயமாக்கல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அவசர நிலைப்பிரகடனம்" - NIKKEI Asia!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் அவசரகால நிலையை பிரகடனம் அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ள அதேவேளை, இறக்குமதியாளர்களும், வர்த்தகர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இந்த அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால் அவசரகால நிலையின் கீழான கட்டுப்பாடுகள் விநியோக நெருக்கடியை உருவாக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த நடவடிக்கை நாட்டிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் ii ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், ஆகஸ்ட் 30-ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சு அதிகாரிகளை ஒருவர் பின் ஒருவராகச் சந்தித்து அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் முடிவை மீளாய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை மறுத்துள்ள அரசு, நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வசதியாகவே இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது.

சாதாரண பொதுமக்களின் மத்தியில் இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல என்ற நியமிக்கப்பட்டுள்ளமை எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று இந்த விடயத்தில் எதிர்ப்புக்களை மேலும் தூண்டியுள்ளது.

ஜனநாயக நாடான இலங்கையில் சிவில் மற்றும் பொது சேவைகளை கையாளத் தேவையான சிவில் அமைப்புக்கள் உள்ளன. நெருக்கடி நிலைகளை இவ்வாறான குழுக்களே கையாளுகின்றன என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நிக்கே ஏசியாவிடம் கூறினார்.

அரச நிறுவனங்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

துரதிருஷ்டவசமாக, இந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர் சிவில் சேவை நிறுவனங்களை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. இராணுவத்தினரையே முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார். இதனால் தகுதியுள்ள பல சிவில் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச 2019 -இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் தனக்கு நம்பகமான இராணுவ அதிகாரிகளையே உயர் பதவிகளுக்கு நியமித்துள்ளார்.

இலங்கையின் கொவிட் பணிக்குழு தலைவராகக் கூட இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் சுங்கத் திணைக்களம், துறைமுக அதிகார சபை போன்றவற்றிலும் இராணுவத்தைச் சோ்ந்த பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் பணிக்குழுவில் சுகாதார நிபுணர்கள் மற்றும் வைரஸ்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களே பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பொருத்தமற்ற நபர்களை பொருத்தமற்ற பதவிகளில் ஜனாதிபதி நியமித்துள்ளார் என எரான் விக்கிரமரத்ன கூறினார்.

அவசரகால நிலை, உள்நோக்கத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கவே இது வழிவகுக்கும் என அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் சதித் திட்டத்தை முறியடிக்க அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

இதேவேளை, அவசர நிலை அறிவிக்கப்பட்ட மறுநாள் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 29,900 மெட்ரிக் தொன் சீனி கண்டுபிடிக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

இதற்கிடையில் இறக்குமதியாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உணவுப் பொருட்களை சேமித்து வைத்திருக்க முடியாது என அரசாங்கம் குறிப்பிடுவது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிக்கே ஏசியாவிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத சீனி இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாங்கள் எப்போதும் பொருட்களைச் சேமித்து வைத்து அவற்றை தேவைகளின் அடிப்படையில் விநியோகிப்போம். இந்நிலையில் நாங்கள் களஞ்சியப்படுத்தியுள்ள பொருட்களைக் கைப்பற்றுவது நியாயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது இறக்குமதியாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். கடந்த வாரம், ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ஒரு டொலருக்கு எதிராக 204 ரூபாவை எட்டியது. ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாணய பெறுமதி 7.5% சரிந்துள்ளது.

01 கிலோ சீனிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையை 125 ரூபாவாக அரசாங்கம் நிர்ணயித்தது. ஆனால் தற்போது தற்போது சீனி ஒரு கிலோ 210 முதல் 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அது 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் பால்மா, சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. ஊடரங்கு உத்தரவுக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

அந்நியச் செலாவணி இருப்பைப் பேணும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆடப்பரப் பொருட்களுக்காள இறக்குமதி தடையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஒரு சிரேஷ்ட வழக்கறிஞர் தற்போதைய உணவு நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் எனத் தெரிவித்தார். இரசாயன உரத்தை திடீரென தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. இயற்கை உர பாவனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் விவசாயப் பொருட்களின் குறைந்த அறுவடைக்கு இது வழிவகுத்தது எனவும் அவா் தெரிவித்தார்.

பொருட்களுக்கான தேவை அதிகரித்து, அதேநேரம் உற்பத்தி குறைவடையும்போது பொருட்களை விலை அதிகரிப்பது இயல்பே எனவும் அவர் கூறினார்.

அவசரகால விதிமுறைகளின் கீழ் வர்த்தகர்கள் பொருட்களைச் சேமித்து வைப்பது ஒரே இரவில் குற்றமாக்கப்பட்டது என அவா் சுட்டிக்காட்டினர்.

இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் எப்பொழுதும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்திருப்பது இயல்பானது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கை கடுமையானது எனவும் அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை மாதத்தில் 2.8 பில்லியன் லொலராகக் குறைந்தது. 2020 இறுதியில் இது 5.6 பில்லியன் லொலராக இருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி இறக்குமதித் தடை அரசால் நியாயப்படுத்தப்படுகிறது.

தொற்றுநோயால் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி தடைபட்டதால் இலங்கை பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.

நாட்டில் சீனி இறக்குமதிக்கு வருடாந்தம் 40 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

உலகின் சீனி நுகர்வில் இலங்கையர்கள் முதலிடத்தில் உள்ளனர். சராசரியாக இலங்கையில் ஒருவர் ஆண்டுதோறும் 32 கிலோ சீனியை பயன்படுத்துகிறார். வளர்ந்த நாடுகளில் இது நபரொருவருக்கு சராசரியாக 15 கிலோவாகும். அண்டை இந்தியாவில் சராசரி தனிநபர் நுகர்வு 20 கிலோவாகவுள்ளது.

ஆனால் இலங்கையின் சீனி நுகர்வுத் தேவையில் 8% முதல் 10% மட்டுமே உள்நாட்டில் பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை இறக்குமதியால் ஈடுசெய்யப்படுகின்றன என்று அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா சீனி நிறுவனத்தின் தலைவர் ஜனக நிமலச்சந்திர கூறினார்.

இதற்கிடையில் இலங்கை எதிர்கொண்டுள்ள டொலர் கையிருப்பு நெருக்கடியை சமாளிக்க பொருளாதார விடயங்களில் இராணுவத்தை ஈடுபடுத்தத் துவையில்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

அவசர நிலை பிரகடனத்தால் நாட்டில் முற்று முழுதாக ஜனாதிபதியே ஆட்சியே நடைபெறும் என்பதால் இது சர்வாதிகாரத்துக்கு வித்திடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியுடைய கையிற்கு சென்றடைந்துள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் அவா் கூறினார்.

மூலம் - https://asia.nikkei.com/

தமிழில் அருவி இணையத்துக்காக – மதிமுகன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE