Wednesday 29th of September 2021 01:40:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழரசியல் தரப்புக்களின் போலித்தனமான அரசியல் நகர்வுகள் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

தமிழரசியல் தரப்புக்களின் போலித்தனமான அரசியல் நகர்வுகள் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


ஜெனீவா 48வது கூட்டத்தொடர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குழப்பத்துக்குள் தள்ளியதாக ஊடகப்பரப்பில் விவாதமொன்று நடைபெறுகிறது. அதனை நிராகரிக்கும் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள இதர தமிழ் கட்சிகள், இவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டுச்செயற்பாடென விமர்சித்துவருகின்றன.

மறுபக்கத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூவரடங்கிய குழு ஜெனீவா கூட்டத்தொடருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும், அதனை அவர்களே தாம் மேற்கொள்ளவில்லையெனவும் சில ஊடகங்கள், முன்பின் முரணாக செய்தி வெளியிடட்டு வருகின்றன.

அதேநேரம் தமிழரசுக்கட்சி ஏகமனதாக முடிவெடுத்து ஏனையவர்களை அவ்விடயம் பாதிக்காத வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கையொப்பமிட்டு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமன்றி இத்தகைய அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய கடிதம் காலங்கடந்ததென்றும் அவை எதுவும் ஜெனீவா கூட்டத்தொடர் அறிக்கையிடலுக்கு முன்னர் கிடைப்பதற்கான வாய்ப்பில்லையெனவும் அவை எத்தகைய விளைவையும் ஏற்படுத்தாதெனவும் ஜெனிவாவில் இயங்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரையும் தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் தமிழ் அரசியல் தரப்பினர்களின் தூரநோக்கற்ற அரசியல் உத்திகளையும் போலித்தனமான நகர்வுகளையும் அடையாளப்படுத்துவதாக அமைய உள்ளது.

2009களுக்கு பின்னர் பல ஜெனீவா கூட்டத்தொடர்கள் இலங்கை தமிழர்கள் மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டத்தொடர்கள் ஒவ்வொன்றும் தமிழரசியல் தலைமைகளால் தவறாகவே அணுகப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் நலன்களுக்காக இயக்கப்படும் ஜெனீவா கூட்டத்தொடரை தமிழரசியல் தலைமைகள் தமிழருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாதது மட்டுமன்றி தமிழ்த்தேசிய பரப்பில் பயணித்த ஒரு சில தலைவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நலனை அங்கீகரித்து செயற்படுவதனால் அத்தகைய கூட்டத்தொடர்கள் ஒரு ஆரோக்கியமான பயன்தரு விளைவை ஏற்படுத்தவில்லை. ஏறக்குறை 48வது கூட்டத்தொடர் தமிழர்களுடைய பிரச்சினை மிகப்பலவீனமான நிலைக்குள் உச்சரிக்கப்படுவதோடு வெளியிடப்படும் அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதும் அங்கீகரிப்பதுமாக அமைய வாய்ப்புள்ளதென ஜெனீவாவிலிருந்து இயங்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் அடுத்துவரும் கூட்டத்தொடர்கள் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட முஸ்லீம்கள் தொடர்பாகவும், இராணுவ ஆட்சி முறை தொடர்பாகவும் மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பாகவும் முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு தமிழர் விவகாரம் உலக அரங்கிலிருந்து விடுபட்டு போவதற்கான சூழலை உருவாக்கியது தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் பாரிய பங்குண்டு. அதற்கான சூழலையும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் அவதானித்தல் அவசியமாகும்.

முதலாவது, தமிழ் அரசியல் தலைமைகளிடம் சமகாலத்தில் நிலவுவது போல் அவர்களது கடந்த காலமும் அறிக்கையிடலுக்கான கால தாமதம் என்பது ஒர் அரசியலாகவே கருதப்பட்டுள்ளது. அதிலும் கட்சி அரசியல் நலன், தனிப்பட்ட அரசியல் நலன் முதன்மையானதாக காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய அரசியலை விடுத்து அனைத்து தமிழ்த்தரப்பும் தேர்தலையும், வாக்குகளையும், தமது அரசியல் எதிர்காலத்தையும் மாத்திரமே கருதி செயற்படுகின்றனர். அதனால் ஜெனீவா அரங்கை பரபரப்பு அரசியலுக்கான அரங்காகவும், பிரச்சாரத்துக்கான அரசியல் அரங்காகவும், அறிக்கையிடும் அரசியல் அரங்காகவும் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் திட்டமிடலோடு, தகவல்களை திரட்டி, புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டு செயற்பாடு எதனையும் ஒரு தரப்பும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரு பிரத்தியேக செயலாளருக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்குகின்றது. அத்தகைய செயலாளரூடாக கடந்த 12ஆண்டுகளில் எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தகவல் திரட்டியதாகவோ, ஜெனீவாவுக்கான அறிக்கையிடல் செய்ததாகவோ, குரல்மூல அறிக்கைகளூடாக ஆதாரப்படுத்தியதாவோ எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே தமிழ்த்தேசிய அரசியலில் பணி புரியம் தமிழ் அரசியல் தரப்பினர் கடந்த காலத்தில் விட்டுச்சென்ற பலவீனங்களே எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சர்வதேச அரங்கில் நியாயாதிக்கம் பெற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் பயணிக்கும் கட்சிகளிடையே தமிழ் மக்கள் மீதான கரிசனையை விட தமக்கிடையிலான மோதலும், அம்மோதலினால் எதிரிக்கு சேவையாற்றும் மனோநிலையே அதிகமாக உள்ளது. இதனால், ஜெனீவா கூட்டத்தொடருக்கான நடவடிக்கைகளை கூட்டாக ஒன்றினைந்து முன்வைக்காது, தனித்தோ, வேறுவேறுபட்ட தீர்மானங்களை முன்வைப்பதன் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் ஒற்றுமை இல்லாத தலைமைகளும் அவர்களின் செயற்பாடுகளும் எனும் எண்ணப்பாங்கை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய முரண்பாடான கருத்து நிலை தீர்வை வழங்கும் தரப்பு விலகி செல்வதுக்கு மட்டுமன்றி, சர்வதேச அரசுகள் தங்கள் நலன்களை இலகுவில் சாத்தியப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

மூன்றாவது, சமகாலத்தில் எழுந்திருக்கும் அடிப்படை பிரச்சினை கட்சிக்குள் நிலவும் முரண்பாடு மட்டுமன்றி ஏனைய கட்சிகளோடு கொண்டிருக்கின்ற ஜனநாயகமற்ற, தான்தோன்றித்தனமான, முன்பின் யோசனையற்ற உபாயங்கள் ஏதும் வகுக்காத நிலைமைகளே ஜெனிவா தொடர்பான இழுபறிக்கு அடிப்படையாகும். ஓர் அரசியல் கட்சி அடிப்படையில் ஜனநாயக பண்புகளை கொண்டிருப்பது மட்டுமன்றி கூட்டுத்தீர்மானங்களின் முடிவுகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.

ஆனால் தமிழரசியல் தரப்பில் அத்தகைய ஆரோக்கியமான நிலை காணப்படுவதில்லை. தனிக்கட்சிகளுக்குள் கட்சிகளின் கூட்டை ஏற்படுத்துகின்ற போதும் அவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதில்லை. இதனால் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை வௌ;வேறு கோணத்தில் தனிக்கட்சி நலனுக்கும் விருப்புகளுக்குள்ளும் உட்படுத்தி அணுகுகின்ற போக்கு ஜெனீவா அரங்கை தோற்கடிக்க வைத்தமைக்கான காரணமாக கொள்ள முடியும். குறிப்பாக சாட்சியங்கள் இன்மையால் இனப்படுகொலையை நிறுவ முடியாது என்று வாதிக்கும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை எவ்வாறு தமிழ் மக்களின் தீர்வை சாத்தியப்படுத்த முடியுமென்பது கேள்விக்குரியதாகும். ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைக்கான பேரவையின் பணியாளர்கள் குறிப்பிடுவது போல் சாட்சியங்களை தேடி கண்டறிந்து அவற்றை ஆதாரப்படுத்தி சமர்பிக்க வேண்டிய தரப்பே ஆதாரங்கள் இல்லையென குறிப்பிடுவது தமிழரசியல் தரப்பின் வங்குரோத்து தனமாகவே தெரிகிறது. ஆதாரங்களை தேடுகின்ற தரப்பே அதற்கான வாய்ப்புக்களை நிராகரிக்கின்றது. இதுவே ஜெனீவா அரங்கின் நெருக்கீட்டுக்கு அடிப்படையான அம்சமாகும்.

நான்காவது, ஜெனிவாவிற்கு தமிழரசியல் கட்சி முன்வைத்துள்ள உள்ளடக்கத்தின் சாராம்சம் 2010ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலாளர் பான்கி மூன் காலப்பகுதியில் நிகழ்ந்த விசாரணைகளை அடிப்படையாக கொண்டு அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் எட்டுவதற்காக கடந்த 12ஆண்டுகளாய் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட விடயங்களை 13பக்க அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. அதில் ஆதாரப்படுத்தும் விதத்தில் தகவல்களும், நிறுவனக்கட்டமைப்புக்களும், புள்ளிவிபரங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு எதிர்காலத்தில் சுமுகமான நிலைமையை ஏற்படுத்தும் விதத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களோடும், முஸ்லீம்களோடும் இயைந்து பயணிக்கும் அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைத்து பயணிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உண்மையில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கின்ற கட்சிகள் அரசாங்கத்தில் அறிக்கையிலுள்ள அம்சங்களின் உண்மைத்தன்மையை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரியப்படுத்துவதே அவசியமான பணியாகும். அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட அநேக விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவோ அல்லது முழுஐமயாக பின்பற்றப்படவோ இல்லை என்பதை ஆதாரங்களுடன் பதிலறிக்கையிடுதலே அவசியமான அரசியலாகும். குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழு தொடர்பில் அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டதற்கு மாறான செய்முறைகளே நடைமுறையில் காணப்படுகிறது. அவ்வாறே ஏனைய விடயங்களையும் புள்ளிவிபரரீதியாக அடையாளம் கண்டு பதிலறிக்கை இடலே முக்கியமானது. அதைவிடுத்து இரண்டு பக்க கடிதத்தில் தமிழ் மக்களின் மத்தியில் பரபரப்பு அரசியலை உருவாக்கி ஜெனீவா அரங்கை வெறும் அரசியல் களமாக அடையாளப்படுத்துவது மிகமோசமான அரசியல் கலாசாரமாகும். இது மக்களை ஏமாற்றுவதோடு ஊடகங்கள் மத்தியில் தமது இயங்குதிறனை அடையாளப்படுத்துவதாக தெரிகிறது. இத்தகைய போலி நிகழ்வுகள் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கான அணுகுமுறையாக கொள்ள முடியாது. இத்தகைய போலித்தனங்களே ஜெனீவா அரங்கின் தோல்விக்கு மூலாதாரமாகும்.

ஐந்தாவது, நல்லாட்சி அரசாங்கத்தோடு தமிழ்த்தேசிய அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து பயணித்த போது ஜெனீவா அரங்கில் காலநீடிப்புக்கான வாய்ப்புக்களை மீண்டும் மீண்டும் வழங்குவதில் எந்தவித தூரநோக்குமற்று அரசாங்கத்தின் மீது மாத்திரம் கரிசனை கொண்டு செயற்பட்டனர். அத்தகைய காலநீடிப்பே இன்றைய நெருக்கடிக்கு அடிப்படையாகும். 2012களில் இருந்த சூழலை 2015ஆண்டுக்கு பின்னரான சூழல் முற்றாகவே மாற்றியிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான செய்முறை தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் காலநீடிப்புக்கு உள்ளானது. இத்தகைய காலநீடிப்பு படிப்படியாக தமிழருக்கு சாதகமான ஜெனீவா அரங்கு கைவிட்டு போக வழிவகுத்துள்ளது. நல்லாட்சிக்காலம் முழுவதும் தமிழர்களின் அரசியல் பிரயத்தனங்கள் அனைத்தும் தென்னிலங்கைக்கு சேவை செய்வதாகவும் பிராந்திய சர்வதேச நலன்களுக்கு இசைவு பெறுவதாகவும் அமைந்திருந்தது. இதனை சரியான முறையில் உத்திகளோடு பயன்படுத்தியிருந்தால் இன்றைய துயர்கரமான நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

எனவே, பிராந்திய சர்வதேச அரசியல் சூழல் ஏற்படுத்தியிருந்த வாய்ப்புக்களை தமிழ் தரப்பு தனது போலித்தனத்தினால் இழந்துள்ளது. தமிழரசியல் தரப்பு ஜெனீவாவை நோக்கிய நகர்வு என்பது கையறு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதென்பது தமிழரசியல் தரப்புக்களால் இயலாதது மட்டுமன்றி பிராந்திய சர்வதேச சக்திகளின் எதிர்கால உத்திகளால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதற்கான வாய்ப்பினை இலங்கை அரசாங்கம் வழங்குமா? என்பதே இன்றுள்ள கேள்வியாகும். சீனா, இந்தியா, அமெரிக்கா என்ற மூன்று சக்திகளுக்கிடையிலான புரிதலை இலங்கை அரசாங்கம் சரியாக கையாளும் சூழல் நீடிக்குமாயின் தமிழர் விவகாரம் உலக அரங்கிலிருந்தோ, பிராந்திய அரசியல் களத்திலிருந்தோ விலகுவதற்கான வாய்ப்பை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிநிலை தவிர்க்க முடியாததாக அமையும்.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE