Saturday 20th of April 2024 01:56:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலங்களை கொண்டு செல்வதற்கான நிதியுதவி!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலங்களை கொண்டு செல்வதற்கான நிதியுதவி!


கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் உடலங்களை மின்தகன நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்குரிய நிதியுதவி ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் அமைப்பின் ஊடாக நேற்றைய தினம் (2021.09.14) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் வழங்கிவைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்தகன மயானம் இல்லாத சூழலில், கொரோனாப் பெருந்தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை வவுனியா (பூந்தோட்டம்) , கெக்கிராவ, அனுராதபுரம், பொலனறுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்கு இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்தே பணம் அறவிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இந் நோய்த்தொற்றுக் காலத்தில் தொழில் வாய்ப்புக்களையும், வருமான மூலங்களையும் இழந்து பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன் கருதி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் (Toronto Voice of Humanity) அமைப்பிற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அவ் அமைப்பின் இயக்குனர்களான, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) தலைவர் திரு.துரைராஜா, மற்றும் கனடா, உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அமரர் ஊர்திக்கான எரிபொருட்செலவுக்கென ஒருலட்சம் ரூபா நிதியுதவி கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனால், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செல்வராஜா சுகந்தனிடம் கையளிக்கப்பட்டது.

அதேவேளை இவ்வருடம் டிசெம்பர் மாதம் வரை, கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் மரணமடைபவர்களின் உடலங்களை இலவசமாக மின்தகன நிலையங்களுக்குக் கொண்டுசெல்வதற்குரிய முழுமையான போக்குவரத்துச் செலவினை தான் ஏற்பாடு செய்துதருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் உறுதியளித்துள்ளார்.

மேற்படி நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி நகர வட்டார அமைப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை ஆனந்தவடிவேல் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்திய சாலையின் வைத்தியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

அதேவேளை தற்போது கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பயன்பாட்டிலுள்ள அமரர் ஊர்தி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் (Toronto Voice of Humanity) அமைப்பின் 17 லட்சம் ரூபா நிதிப்பங்களிப்பில் 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE