Friday 29th of March 2024 04:33:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பார்வையில் தடம் மாறும் இலங்கைத் தமிழர் விவகாரம் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பார்வையில் தடம் மாறும் இலங்கைத் தமிழர் விவகாரம் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


செப்டெம்பர் முதல் வாரங்களில் தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதப்பொருளாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் அமைந்திருந்தது. இதில் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையினுள் தமிழ் அரசியல் தரப்பால் பகிரப்பட வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்பட்டது. தமிழ்த்தேசிய கட்சிகள் சிதறுண்டு தங்கள் கடிதங்களையும் அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புக்கள் 48வது கூட்டத்தொடரில் கொண்டிருந்தது. செப்டெம்பர்-13 பேரவையின் உயர் ஸ்தானிகர் மிசெல் பச்லெட் இலங்கை விவகரம் தொடர்பிலான தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இக்கட்டுரை அவரின் வாய்மூல அறிக்கை வெளிப்படுத்தும் உள்ளார்ந்த அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மிசெல் பச்லெட்ன் இலங்கை விவகாரம் தொடர்பிலான வாய்மூல அறிக்கை வெளியான போது, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி வழங்கியுள்ளதாகவும், ஈழத்தமிழர்களுக்கு நலனான அறிக்கை அமைந்துள்ளதெனவும் தமிழ் ஊடகப்பரப்பில் அதிகம் பேசப்பட்டது. இதற்கு மறுவளமாக ஈழத்தமிழர்களின் நலன் புறந்தள்ளப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் அறிக்கையாக அமைந்துள்ளதெனவும் வாதங்கள் வெளிவருகின்றன. இங்கு வழமை போலவே அரசியலின் உள்நோக்கங்களை தேடாது, மிசெல் பச்லெட்ன் அறிக்கையினை பொதுவெளியில் நம்பிக்கையூட்டும் விதத்தில் உரையாடப்படுகிறது. ஆனால் மிசெல் பச்லெட்ன் அறிக்கையின் உள்நோக்கங்களை தேடுதல் அவசியமாகும்.

முதலாவது, மனித உரிமைகள் பேரவை இலங்கை விவகாரம் தொடர்பில் கடந்த காலங்களில் அணுகியிருந்த விடயங்களிலிருந்து மாறுபட்டு சென்றுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது, கடந்த காலங்களில் பேரவை இலங்கை விவகாரத்தில் தனித்து வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பிரச்சினைகளேயே முதன்மைப்படுத்தி அணுகியிருந்தது. ஆனால் தற்போது தென்னிலங்;கையில் காணப்படும் இராணுவ ஆட்சியையும் அதன் பிரசன்னத்தயும் அதனால் இலங்கை தீவுக்கு முழுமையாக ஏற்படக்கூடிய நெருக்கடி பற்றிய விமர்சனங்களையே வாய்மூல அறிக்கையில் முதன்மைப்படுத்தி உள்ளார். இலங்கையில் கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வாக நிலைமாறுகால நீதி வழங்குவதாகக் கூறிக் கொண்டு பேரவையூடாக தீர்மானங்களை மேற்கு நாடுகள் நிறைவேற்றியிருந்தன. ஆனால் 48வது கூட்டத்தொடரில் இலங்கையின் நல்லாட்சியை உறுதிப்படுத்தும் பொறிமுறைகளையே அதிகம் பரிந்துரைத்ததுடன் முன்மொழிவுகளை செய்துள்ளனர். குறிப்பாக, இலங்கையின் சிவில் சமூகங்களின் செயற்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிப்பதனையே பச்லெட்ன் வாய்மூல அறிக்கை முதன்மைப்படுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜனாதிபதி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடிய விடயத்தை முதன்மைப்படுத்தியுள்ளார். அத்தகைய விடயங்களை ஆர்வத்துடன் கவனிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது சிவில் சமூக அமைப்புக்கள் பற்றிய உரையாடல்களை ஜெனிவா அரங்கின் 48வது கூட்டத்தொடர் இலங்கை விவகாரம் பொறுத்து அதிக கரிசனை கொள்ள ஆரம்பித்துள்ளது.

இரண்டாவது, இராணுவமயமாக்கலினால் ஏற்படும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் பாதிப்புக்கள், சமூகப் பொருளாதார நெருக்கடி பற்றிய சவால்களுக்கு மத்தியில் மேலும் சிக்கலடைந்திருப்பதை தாம் அவதானிப்பதாகக் பச்லெட் கூறுகின்றார். துரதிருஷ்டவசமாக, மனித உரிமை பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் நீதித்துறை துன்புறுத்தல் ஆகியவை தொடர்வது மட்டுமல்லாமல், அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மதத்தலைவர்களின் பரந்த அளவிலான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அமைதியான போராட்டங்களை மற்றும் நினைவுகூரல்களை அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து தண்டனை வழங்குவதை தாம் கவனிப்பதாக வாய்மெழி மூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது, சிவில் சமூகக் குழுக்கள் மீதான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாகவும் அதனால் மக்கள் மத்தியில் அச்சமேற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட பச்செல், விரிவான விவாதங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அதனால் வரைபை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நான்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்தை தாம் வரவேற்றுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சிவில் சமூக செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் எனும் உரையாடலை மையப்படுத்தியதாகவே ஆணையாளரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. அதனால் 48வது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட கருத்துக்களை பிரிட்டன் ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ச்சியாக வழங்கும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தனது ருவிற்றர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கடந்த காலங்களில் முன்மொழிந்த பிரிட்டனின் போக்கில் பாரிய மாற்றத்தை அடையாளப்படுத்தகிறது. இலங்கை தமிழருடைய இனப்பிரச்சினை சிவில் சமூக பிரச்சினையாக மாறியுள்ளதை காட்டுகின்றது.

மேற்கு நாடுகளை பொறுத்தவரை சிவில் சமூகங்களின் உருவாக்கமும் அவற்றின் பணிகளும் கீழைத்தேச நாடுகளில் மேற்கின் அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யக்கூடியவை என கருதுகிறது. சிவில் சமூகங்களின் கட்டமைப்பிற்கூடாக கீழைத்தேச நாடுகளின் அரசியல் பொருளாதார சமூக இருப்பை நிர்ணயிக்க முடியுமென்ற வாதங்களும் அவர்களிடம் மேலோங்கி உள்ளது. அரசியல் சிந்தனையாளரான கிராம்சி குறிப்பிடுவது போல் சமுக உறவுகளெனும் மேல்கட்டுமான பகுதிதான் சிவில் சமூகம். அத்தகைய சிவில் சமூகம் உற்பத்தியுடன் இணைந்த உறவுகளையும், ஒடுக்குமுறை உறவுகளையும், தனியார்வகை உறவுகளையும் மையப்படுத்தியதென வாதிடுகிறார். இத்தகைய மையப்படுத்தலே இலங்கையின் 2015ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கட்டமைப்பாகும். அதனையே மீளக்கட்டியெழுப்ப ஐ.நா மனித உரிமைகள் பேரவையூடாக மேற்குலகம் முயலுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

48வது கூட்டத்தொடரின் நடப்பு சர்வதேச அரசியலில் சிவில் சமூகங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளமை புலனாகிறது. குறிப்பாக மேற்குநாடுகள் நீண்டகாலமாக சமூக நிறுவனங்களூடாக உலக அரசுகளை கையாண்டு வந்துள்ளது. அவ்வகை ஒரு நிறுவனமமே ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பாணியிலேயே இலங்கையிலும் சிவில் அமைப்புக்களூடாக அரசியலை கையாளும் பொறிமுறைக்கான தளத்தை சர்வதேச சக்திகள் ஊக்குவிக்க எத்தனிக்கின்றன. இதனையே ஜெனிவா களமும் உறுதி செய்கின்றது. எனவே சர்வதேச நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் இலங்கை மீதான கரிசனையை தமிழர்களின் அரசியலுக்கு அப்பால் தமது நலன்களுக்கு ஏற்ப கையாள முனைகின்றது. ஆனால் வெளித்தோற்றத்தில் தமிழர்களின் இனப்பிரச்சினையே இலங்கை மீதான ஆதிக்கத்தில் பிரயோகிக்க காரணியாக உள்ளது. அத்தகைய தமிழர்களின் பிரச்சினையை காரணமாக கொண்டு இலங்கை அரசியலின் நகர்வுகளை மேற்கு நாடுகளுக்கு ஏற்ற வகையில் பிரயோகப்படுத்த ஐ.நா மனித உரிமை பேரவை முகவராக விளங்குகின்றது. கடந்த ஒரு தசாப்தங்களாக இவ்வகை அரசியலையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நகர்த்தி வருகிறது. அத்தகைய பொறிமுறையை ஏற்றுக்கொண்ட தமிழரிசியல் தரப்புக்கள் தமது கட்சி அரசியல் நலனுக்காகவும் தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காவும் அதனை அம்பலப்படுத்தாது இயைந்து பயணிக்கின்ற தன்மையை பின்பற்றி வருகின்றது. இத்தகைய துயரமே ஜெனிவா களத்தினூடாக ஈழத்தமிழர்கள் இனிவரும் காலத்திலும் அனுபவிக்க வேண்டிய துயரம் ஏற்படும். தமிழரசியல் தரப்பு ஜெனிவா களத்தை சரியான முறையில் கையாள்வதற்கான திட்டமிடலையோ உபாயங்களையோ வகுக்காது செயற்படுமாயின், எதிர்காலத்தில் முள்ளிவாய்க்காலின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர்கள் முற்றாகவே இலங்கைக்கான அரசியலை முதன்மைப்படுத்திக்கொண்டு தமது அரசியல் நலன்களை நிறைவேற்றும். போர்க்குற்றம், மனித உரிமை, மனிதாபிமானச்சட்டம் போன்றவற்றிற்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை விவகாரத்துக்கான ஜெனிவா களம் சிவில் சமுக பிரச்சினைகளை 2021ஆம் ஆண்டு முதன்மைப்படுத்தியுள்ளது. இவற்றிற்கு பின்னால் இலங்கை ஆட்சியாளர்களின் இராஜதந்திர உத்திகளும் மேற்கு நாடுகளின் உபாயங்களும் எவ்வளவு முக்கியமானதாக அமைந்திருந்ததோ அந்தளவிற்கு இவ்விடயம் பலவீனமடைவதில் ஈழத்தமிழரசியல் தலைமைகளும் காரணமானவர்களே.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE