Sunday 24th of October 2021 06:36:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 73 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்

எங்கே தொடங்கியது இன மோதல் - 73 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்


முதலாவது ஜனாதிபதி தேர்தல்! - நா.யோகேந்திரநாதன்!

'நான் கோபத்தையும் விடக் கவலையில் பேசுகிறேன். அண்மையில் வடக்கு, தெற்கு, மத்தி என நாடெங்கிலும் நடைபெற்ற சம்பவங்களானவை நாம் பின்பற்றும், போதிக்கும் மதமானது எங்கள் மக்களிடையே செல்வாக்குச் செலுத்தவில்லை போலவே தெரிகிறது. எனது கட்சியினர் சிலரே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெற்ற வன்முறைகளையும் கொலைகளையும் வன்புணர்வுகளையும் எரியூட்டல்களையும் ஊக்குவிக்கும் வகையில் பேசியமை எனக்குக் கவலையளிக்கிறது. நான் தலைமையேற்றுள்ள கட்சி பற்றி நான் பெருமை கொள்ளத்தக்கதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் நான் தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கி விடுவது தான் சிறந்தது. அதன் பிறகு பல இனங்கள், பல சாதிகள், பல மதங்கள் கொண்ட இந்த நாட்டின் பிரச்சினைகளை அப்பாவி மக்கள் மீது வன்முறையைக் கொண்டு தீர்ப்பது என்று நினைப்பவர்கள் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளலாம்'.

இது 1981ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ம் திகதி இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன மிகவும் கண்டனத்துடன் வெளியிட்ட கருத்துகளாகும்.

'போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்' எனவும் வடபகுதி மக்களின் உணர்வுகளைப் பற்றித்தான் கவலைப்படப் போவதில்லையெனவும் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாலோ, சொத்துக்கள் அழிக்கப்படுவதாலோ சிங்கள மக்கள் மகிழ்ச்சியடையவார்கள் எனவும் பகிரங்கமாகவே எவ்வித கூச்சமுமின்றிக் கூறிய ஜே,ஆர்.ஜயவர்த்தன இப்படியும் கூறியிருப்பாரா என்ற சந்தேகம் எழத்தான் செய்யும்.

1977ல் யாழ்.நகரமே எரிக்கப்பட்டும், மக்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் அதைத் தடுத்து, நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி அவற்றில் ஈடுபட்ட பொலிஸார் மீதோ இராணுவத்தினர் மீதோ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை 1981ல் இரு அமைச்சரவை அமைச்சர்கள் தலைமையில் யாழ்.நகர் எரியூட்டப்பட்டும், யாழ்.நூலகம் எரியூட்டப்பட்டும் தமிழ் மக்கள் மீது பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டபோதும் அவற்றைத் தடுத்து நிறுத்தவில்லை. அவற்றை மேற்கொண்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல ஒரு வார்த்தை கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அமிர்தலிங்கம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் மீது துவேசம் பொழியப்பட்டபோதுகூட அதை ஜே.ஆர். தடுத்து நிறுத்தவில்லை.

அப்படியெல்லாம் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டபோது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாய் இருந்தும் ஜே.ஆர்.ஜயவர்த்தன தடுத்து நிறுத்தாதது மட்டுமின்றி மறைமுகமான ஆதரவையும் வழங்கினார்.

அவர் இப்படி ஐ.தே.கட்சியின் செயற்குழுவில் தெரிவித்திருப்பார் என்பது நம்பமுடியாத விடயம் தான். ஆனால் அவர் தெரிவித்திருந்தார். அதற்கான முக்கிய காரணமும் இருந்தது.

அவர் இரு விடயங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருந்தது.

1977, 1981 ஆகிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற யாழ்.நூலக எரிப்பு உட்பட இன அழிப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக சர்வதேச சட்டவாளர் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை நிறுவனங்கள் பலவும் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன. எனவே இக்கலவரங்கள் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் இடம்பெற்றவையென சர்வதேச மட்டத்தில் நம்ப வைக்க வேண்டியிருந்தது.

அதேவேளையில் அரசியலமைப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்து குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதில்தான் தமிழ் மக்களினதும் மலையக மக்களினதும் வாக்குகளில் ஒரு பகுதியையாவது பெற வேண்டுமானால் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியாக வேண்டிய ஒரு தேவை இருந்தது.

எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இப்படி ஒரு உரையை ஆற்றிவிட்டு வானொலிகளிலும் மும்மொழிப் பத்திரிகைகளிலும் பெரிதாக வெளியிட ஏற்பாடு செய்திருந்தார். வடக்குக் கிழக்கு மக்களின் வாக்குகளை அமிர்தலிங்கத்தை வைத்தும், மலையக மக்களின் வாக்குகளைத் தொண்டமானையும் வைத்து பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டார்.

எனவே 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு நிறைவேற்றிய பின்பான முதலாவது ஜனாதிபதித் தேர்தலை ஒக்டோபர் 27ம் திகதி நடத்துவதாக அறிவித்தார்.

இவ்வாறு தேர்தல் திகதி வெளியிடப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பாக ரெலோ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கை தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் வலுக்க ஆரம்பித்தது.

தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த குட்டிமணி ஏற்கனவே வங்கிக் கொள்ளைகள், பொலிஸார் மீதான கொலைகள் என்பன தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவர். இவரும் தேவன் என்ற போராளியும் கடற்கரையில் ஆயதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டால்தான் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுடன் நடத்தி வந்த பேச்சுகளுக்கு அது இடையூறாக அமைந்து விடுமென அமிர்தலிங்கம் நம்பினார். எனவே 1978ம் ஆண்டு அரசியலமைப்பைத் தாங்கள் ஏற்காத நிலையில் அதன் அடிப்படையில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் த.வி.கூட்டணி போட்டியிடுவது தவறு எனக் கோரி மறுத்து விட்டார். அதேவேளையில் ஜே.ஆர். தனக்கு ஆதரவளிக்கும்படி அமிர்தலிங்கத்திடம் கோரியிருந்தார்.

ஜே.ஆருக்கு அதரவு வழங்கினால் தனது அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்பதைத் தெரிந்திருந்த அமிர்தலிங்கம் தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போவதாக அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஹெக்டர் கொப்பேகடுவவும் போட்டியிட்டனர். தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். அதேவேளையில் சமசமாஜக் கட்சியின் சார்பில் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் ஜே.வி.பி.யின் சார்பில் ரோஹண விஜேவீரவும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைக்கவேண்டிய வாக்குகளையே பகிர்ந்து கொள்வார்களாதலால் இவர்கள் போட்டியிடுவதற்கு ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சில பிரமுகர்கள் மூலம் நிதியுதவி, வாகன உதவி உட்படப் பலமுறைகளில் ஆதரவு வழங்கினார்.

1981ம் ஆண்டு மலையகத்தில் ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மூலம் பெரும் பாதிப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன் ஏராளமானோர் வடக்குக் கிழக்கை நோக்கி இடம்பெயர்ந்தனர். ஆனால் தொண்டமான் 1982 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆருக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்.

தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தால் அதுகூட ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குச் சாதகமாக அமையும் என்பது முக்கிய விடயமாகும். 1977 வரை ஸ்ரீமாவோ ஆட்சியிலிருந்தபோது ஹெக்டர் கொப்பேகடுவவே விவசாய அமைச்சராக இருந்தார். அக்காலப்பகுதியிலேயே உணவு உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டதன் காரணமாக வெங்காயம், மிளகாய், மரவள்ளி, உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு அதிக விலை கிடைத்ததால் வடபகுதி விவசாயிகள் வசதிபடைத்தவர்களாக மாறியிருந்தனர். ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உபஉணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் வடபகுதி விவசாயிகள் பழைய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். எனவே வடபகுதி விவசாயிகள் கொப்பேகடுவவுக்கு வாக்களிப்பார்களாதலால் தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தால் அது ஜே.ஆருக்கே நன்மை பயக்கும். அதேவேளையில் குமார் பொன்னம்பலம் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் இலங்கை முழுவதுமுள்ள தமிழ் மக்களின் ஆணையைத் தமீழீழக் கோரிக்கைக்கு பெற்றுக்கொள்ளவேயெனத் தெரிவித்திருந்தார்.

தமிழீழக் கோரிக்கையை ஒருபுறம் தள்ளி விட்டு ஜே.ஆருடன் சமரச அரசியலை மேற்கொண்டு வந்த அமிர்தலிங்கத்துக்கு அது இடையூறாக இருக்குமென்ற அச்சம் ஏற்பட்டது.

பகிஷ்கரிப்பு என்ற ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முடியுமென ஜே.ஆர். அமிர்தலிங்கம் இருவரும் நம்பினர்.

இவ்வாறு ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தந்திரோபாய அடிப்படையில் விரிக்கப்பட்ட சதிவலையின் கீழ் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் குறிப்பிட்ட காலத்துக்கு இரண்டு வருடங்கள் முன்பதாகவே 27.10.1981 அன்று இடம்பெற்றது.

இத்தேர்தல் பிரசார காலத்தின்போது ஜே.ஆர்.ஜயவர்த்தன அரச வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களைத் தனக்குச் சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அத்துடன் லேக் ஹவுஸ் நிறுவனப் பத்திரிகைகளும், உபாலி நிறுவனப் பத்திரிகைகளும் தவச, ரைம்ஸ் பத்திரிகைகளும் தீவிரப் பிரசாரத்தில் இறங்கின.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகங்கள் கொப்பேகடுவவுக்கு ஆதரவாகப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவை பரவலாக மக்களைச் சென்றடையவில்லை. எனினும் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' பத்திரிகை கொப்பேக்கடுவவுக்கு ஆதரவான பிரசாரத்தை மேற்கொண்டது. தமிழரசுக் கட்சியின் 'சுதந்திரன்', தேர்தலைப் புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுத்தது.

'அத்த' பத்திரிகை மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஏடு என்ற வகையில் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் காத்திரமான பங்கை வகித்தது. இந்த நிலையில் அத்த பத்திரிகை பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறப்பட்டுத் தடை செய்யப்பட் டது.

இவ்வாறு தனது வெற்றியை நோக்கித் தனது அரச அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தித் தேர்தல் நடவடிக்கைகளை ஜே.ஆர். வழி நடத்தினார்.

அதேவேளையில் வடபகுதி வாக்குகளைப் பற்றி அவர் பெரிதாகக் கவலைப்படவில்லை. யாழ்ப்பாண முற்றவெளியில் ஒரேயொரு பொதுக் கூட்டத்தை நடத்தியிருந்தார். ஆனால் அவரின் வருகையையொட்டி கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் எங்கும் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டன. அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் கட்டப்பட்ட 'சிகரம்' இனந்தெரியாதவர்களால் விழுத்தப்பட்டது. அதில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டாலும் அது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானமென்றே ஜே.ஆர்.கருதினார்.

1982 ஒக்டோபர் 22ல் தேர்தல் ஆணையாளரால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஜே.ஆர்.ஜயவர்த்தன 52.9 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். அதேவேளை ஹெக்டர் கொப்பேகடுவ 39.04 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேவேளை ரோஹண விஜேவீர 2,73,682 வாக்குகளையும் கொல்வின் ஆர்.டி.சில்வா 58,523 வாக்குகளையும் வாசுதேவ நாணயக்கார 17,005 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்த மூவருக்கும் கிடைத்த வாக்குகளும் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு விழ வேண்டிய வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விதத்தில் ஜே.ஆரின் வெற்றிக்கு இவர்களும் துணைபோயினர் என்பது கவனிக்கத்தக்கது.

வடபகுதியில் வழங்கப்பட்ட வாக்குகளில் 48.03 வீதமான வாக்குகளைக் குமார் பொன்னம்பலமும் 33.8 வீதமான வாக்குகளை ஹெக்டர் கொப்பேகடுவவும் பெற்றிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பகிஷ்கரிப்புக் கோரிக்கை படுதோல்வியில் முடிந்தது. அது மட்டுமின்றி தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது என்ற செய்தியும் வெளிப்படுத்தப்பட்டது. வடபகுதி மக்கள் 91.3 வீத வாக்குகளை ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு எதிராக போட்டதன் மூலம் தங்கள் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளில் 62 வீதமான வாக்குகள் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கே கிடைத்தன. தொண்டமானின் தீவிர பிரசாரம் காரணமாக மலையக மக்கள் ஜே.ஆருக்கே வாக்களித்தனர்.

இவ்வாறு சகல விதங்களிலும் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தி ஜே.ஆர்.ஜயவர்த்தன அப்போதைய பதவிக் காலத்தில் எஞ்சியிருந்த 2 வருடங்களும் தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட அடுத்த பதவிக் காலத்தின் 6 வருடங்களுமாக 8 வருடங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதிகாரம் செலுத்த வழியை ஏற்படுத்தி விட்டிருந்தார்.

அதேவேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுகள் ஒன்றரை வருடங்களைக் கடந்து விட்ட போதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஜனாதிபதி பேச்சுகளை தொடர்வது குறித்து அக்கறைப்படாது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சி ஆட்சியமைப்பது தொடர்பாக முயற்சிகளில் இறங்கினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினர், தமிழ் மாணவர் பேரவை ஆகியன தமிழர் விடுதலைக் கூட்டணி குமார் பொன்னம்பலத்துக்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்ளவேண்டும் என அமிர்தலிங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தபோதும் அவர் அதை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ஏற்கனவே தமிழ் மக்களின் நம்பிக்கையைப் படிப்படியாக இழந்து வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றாகவே தமிழ் மக்களால் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகியது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE