Tuesday 19th of March 2024 03:22:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடக்கம்: சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடக்கம்: சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்!


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் இன்று முதல் தொடங்குகிறது.

துபாயில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.

இந்த நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.

இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

இதன்படி ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2-வது கட்ட பகுதியில் துபாயில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் (அதாவது 30-வது லீக் ஆட்டம்) 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோத உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ருதுராஜ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, டோனி (கேப்டன்), ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது ஹேசில்வுட்.

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, ஆடம் மில்னே அல்லது நாதன் கவுல்டர்-நிலே, ஜெயந்த் யாதவ் அல்லது ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், பும்ரா.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE