Sunday 24th of October 2021 07:16:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
சிறைச்சாலைகளின் பயங்கரம்! - நா.யோகேந்திரநாதன்!

சிறைச்சாலைகளின் பயங்கரம்! - நா.யோகேந்திரநாதன்!


உலக சிறைக் கைதிகள் தினமான 12.09.2021 அன்று வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் சென்ற காடையர்களால் மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்கள் போன்ற அத்துமீறல்களில் சிறைச்சாலைகள் முகாமைத்துவ, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவர்கள் ஈடுபட்டிருந்தார்.

அவர் தனது சகாக்களுடன் மதுபோதையில், கைத்துப்பாக்கியுடன் வெலிக்கடைச் சிறையுள் நுழைந்தபோது அவரைத் தடுக்க முயன்ற சிறை அதிகாரியை படு கேவலமான வார்த்தைகளால் திட்டி விட்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு தன்னிச்சையாகச் சென்று மரண தண்டனைக் கைதிகளைச் சந்தித்ததுடன் தன் சகாக்களுக்குத் தூக்கு மேடையையும் காண்பித்துள்ளார். மரண தண்டனைக் கைதிகளின் அறைகள், தூக்குமேடை என்பன பிரத்தியேக பாதுகாப்புக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அவ்விடங்களிலெல்லாம் மதுபோதையில் அட்டகாசம் புரிந்துள்ளார்.

அடுத்து அனுராதபுரம் சிறைக்குச் சென்ற அவர் அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளைக் கூண்டுகளை விட்டு வெளியே எடுப்பித்து, முழந்தாளில் நிற்க வைத்துள்ளார். அது மட்டுமின்றி ஒரு தமிழ்க் கைதியின் தலையில் துப்பாக்கியை வைத்துச் சுடப்போவதாக மிரட்டியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற சிறை அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ஒரு அமைச்சர் தனது பொறுப்பிலுள்ள ஒரு திணைக்களத்தின் சிறைக்கூடங்களில் அத்துமீறல்களை நடத்தி ஒரு பயங்கர நிலைமையை உருவாக்கினாரென்றால் இதில் அவரின் பங்கு, சிறை அதிகாரிகளின் பங்கு, சிறைச்சாலைகள் ஆணையாளரின் பங்கு, அரசாங்கத்தின் பங்கு என்பனவெல்லாம் எவ்வளவு என்பதும் இவற்றுக்குப் பொறுப்புக்கூறுவது யார் என்பதும் கேள்விகளாக எழுந்து நிற்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, சிறைச்சாலைகள் அமைச்சின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க ஆகியோர் இப்படியான சம்பவங்கள் எதுவும் இடம் பெற்றதாக பதிவுகள் எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் அமைச்சரோ இடம்பெற்ற சம்பவங்களை ஏற்றுக்கொண்டு தன் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார்.

எனவே, இவ்விடயத்தை மறைக்கவும் மறுக்கவும் இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்காமல் விடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைத் தெட்டத் தெளிவாகவே புரிந்து கொள்ளமுடிகிறது.

இலங்கைச் சிறைச்சாலைகளின் வரலாற்றில் இவ்விதமான சட்டவிரோத நடவடிக்கைகளும், அவைக்கு மேலாதிகமாகப் படுகொலைகளும் இடம்பெறுவதும் அவை பற்றிய விசாரணைகள் தவிர்க்கப்படுவதும், அப்படி விசாரணைகள் இடம்பெற்றாலும் அவை குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் கண்துடைப்புகளாக இருப்பதும் நடந்தேறியுள்ளன. இவற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் விடயத்தைப் பொருட்படுத்தப்படுவதில்லை. சில சமயங்களில் அவர்கள் பதவி உயர்வு பெறுவதுமுண்டு.

வெலிக்கடை இப்படியான படுகொலைகளின் பிரதான மையமாகவும் ஏனைய சிறைச் கூடங்கள் உபமையங்களாகவும் விளங்கி வந்துள்ளன.

1983 ஜுலை 27ம் திகதி வெலிக்கடைச் சிறையில் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 35 தமிழ் அரசியல் கைதிகள் வெட்டியும் குத்தியும் கண்கள் தோண்டப்பட்டும் ஆணுறுப்புகள் அறுக்கப்பட்டும் குடல்கள் உருவி எடுக்கப்பட்டும் படுகொடூரமான முறையில் சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டனர். அதே மாதம் 29ம் திகதி ஒரு வயோதிப மருந்துவர் உட்பட 18 பேர் மண்டை பிளக்கப்பட்டும் வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டனர். அங்கு 53 பேரும் கொல்லப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவுமில்லை, எவரும் தண்டிக்கப்படவுமில்லை.

2012ம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்திய சிங்களக் கைதிகள் தப்பியோட முயற்சித்தனரெனக் கூறப்பட்டு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு 25 கைதி்கள் கொல்லப்பட்டனர். கண்துடைப்பாக விசாரணைகள் நடத்தப்பட்டாலும் எவரும் தண்டிக்கப்படவுமில்லை, உயிரிழந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமெனக் கூறப்பட்டபோதும் அதுவும் நடக்கவில்லை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்கும்படி கோரிய கைதிகள் தப்பியோட முயன்றனர் எனக் கூறப்பட்டு அவர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதிலும் பல கைதிகள் கொல்லப்பட்டனர்.

வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தம்மை அநுராதபுரம் சிறைக்கு மாற்ற வேண்டாமெனக் கோரிப் போராட்டம் நடத்திய போது அனைவரும் அப்படியே வெலிக்கடைக்கு அள்ளிச் செல்லப்பட்டு அங்கு அடித்து நொருக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களில் டினோஜன் என்ற இளைஞர் 3 நாட்கள் கோமாவில் கிடந்து பின் உயிரிழந்தான். அவனின் மரணத்துக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.

இவ்வாறே பிந்துனுவெவ இளைஞர்கள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் 24பேர் சிறைச்சாலைக் காவலர்களின் உதவியுடன் உள்ளூர்வாசிகளால் அடித்தும் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டனர்.

அப்படியாக இலங்கைச் சிறைச்சாலைகளில் படுகொலைகள் இடம்பெறுவதும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பதும் நீண்டகால வரலாறாக விளங்கி வருகிறது. இப்படியான ஒரு பின்புலம் லொஹான் ரத்வத்தைக்கு சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபடும் துணிச்சலைக் கொடுத்திருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

அதுமட்டுமின்றி இவ்விடயங்கள் தொடர்பாக இரு முக்கிய விபரங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும்.

ஒன்று, ஒரு சிறைச்சாலையில் இடம்பெற்ற ஒரு சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாகப் பதிவுகள் எதுவுமி்ல்லையென சிறைகளுக்கு பொறுப்பாயுள்ள சிறைச்சாலை ஆணையாளரும் அதன் ஊடகப் பேச்சாளரும் தெரிவித்திருந்தமையானது மேற்படி சம்பவத்தை மறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை தொடர்பான பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் அவர்களின் மோசடி முயற்சி அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

அடுத்தது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் கட்டளைக்கமைய ரத்வத்தை தனது சிறைச்சாலைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தாலும் அவர் ஏனைய ரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு இயந்திரத்தின் முக்கிய ஒரு அலகான சிறைச்சாலையின் சட்ட திட்டங்களைப் பகிரங்கமாகவே நிராகரித்த ஒருவர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகிப்பது இலங்கையின் அரசியலமைப்பையே அவமதிக்கும் ஒரு கேலிக்கூத்தாகும்.

அதேவேளையில் அவரின் சகல பதவிகளும் பறிக்கப்பட வேண்டுமெனவும் அவரின் கைத்துப்பாக்கிக்கான அனுமதி இரத்துச் செய்யப்படவேண்டுமெனவும் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறுமா என்பது சந்தேகமே! அப்படி ஒரு பகுதி நிறைவேறினாலும் அவர் கைது செய்வதற்கான சாத்தியம் இல்லையென்றே நம்பப்படுகிறது.

சஜித் பிரோமதாச, சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் எவ்வளவுதான் கொக்கரித்தாலும் இதுகாலவரை சிறைச்சாலைகளில் இடம்பெற்று வந்த படுகொலைகள், கொடிய சித்திரவதைகளும் அவற்றால் இடம்பெற்ற உயிரிழப்புகளும் அரச தரப்பின் பின்னணியில் அதிகார பீடங்களின் முழுமையான அனுசரணையுடனுமே நடந்தன என்பதும் இதுவும் அவற்றின் தொடர்ச்சியே என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டும்.

எனவே அவற்றை முழுமையாகத் தடுக்கும் விதத்திலான வெகுஜன நடவடிக்கைகளையும் அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதை விடுத்து நெருப்புமிழும் அறிக்கைகளை வெளியிடுவதிலும் ஊடக சந்திப்புகளில் முழக்கம் செய்வதிலும் எவ்வித பயனுமில்லை. குறைந்தபட்சம் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமைகள் நிறுவனங்கள் மூலம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்குக் கொண்டு சென்று இலங்கை ஜனநாயகத்தின் போலித் தன்மையை அம்பலப்படுத்த வேண்டும்.

அதற்கான சாத்தியக் கூறுகள் எமது அரசியல்வாதிகளிடம் காணப்படாதது எமது மக்களின் சாபக்கேடு என்பது கசப்பான ஆனால் மறுக்கமுடியாத உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

21.09.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE