Monday 18th of March 2024 09:14:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
பலி கொள்ளப்பட்ட இரு பெரும் தேசியவாதிகள்! - நா.யோகேந்திரநாதன்!

பலி கொள்ளப்பட்ட இரு பெரும் தேசியவாதிகள்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் இருபெரும் தேசியவாதிகளைப் பலிகொண்டு தன்னைக் கறைப்படுத்திக் கொண்ட நாள் தான் செப்டெம்பர் 26.

1959ல் இலங்கையின் நேர்மையுடனும் துணிவுடனும் தன் தாய் நாட்டை ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து விடுவிக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பலி கொள்ளப்பட்டார்.

இரண்டாவதாக 1987 செப்டெம்பரில் தான் ஒப்பற்ற விடுதலை வீரனும், தன் தாய் மண்ணை அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட தியாகி திலீபன் பலி கொள்ளப்பட்டான்.

ஒருவர் ஏகாதிபத்தியச் சதியில் கொல்லப்பட்டார். மற்றவர் பிராந்திய வல்லரசின் நயவஞ்சகத்தால் கொல்லப்பட்டார்.

இருவருமே 28 ஆண்டுகள் இடைவெளியில் தாங்கள் பிறந்து, வளர்ந்து ஓடியாடி, விளையாடி, வாழ்ந்திருந்த மண்ணை அந்நிய அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கத் தங்களை அர்ப்பணித்தவர்கள்.

அதனால் தெற்கில் வாழும் உண்மையான தேசியவாதிகள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவையும் வடக்குக் கிழக்கு மக்கள் தியாகி திலீபனையும் உணர்வு பூர்வமாக அஞ்சலிக்கின்றனர். எத்தனை தடைகள் போடப்பட்டாலும் ஏற்றப்படும் சுடர்களை அணைக்கவும், தூவப்படும் மலர்களைக் கசக்கவும் எத்தனை துப்பாக்கிகள் அதிகார உயிர்ப்பசியுடன் வலம் வந்தாலும் நினைவஞ்சலிகள் நிகழ்த்தான் செய்கின்றன, சுடர்கள் கொழுந்து விட்டெரியத்தான் செய்கின்றன.

ஏனெனில் இவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் மக்களுக்காக உயிர் துறந்தார்கள், மக்களின் இலட்சிய வேட்கையாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்பட்டது. நாட்டை விட்டு பிரித்தானியர் வெளியேறிய போதும் தமது முகவர்களான ஐக்கிய தேசியக் கட்சியையே அரியணையில் ஏற்றி விட்டுச் சென்றனர்.

அவர்களால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின்படி இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றும் எந்த சட்டமும் பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியான மகாதேசாதிபதி ஒப்புதலளித்தாலே அது செல்லுபடியாகும். இலங்கையின் நீதிமன்றங்கள் வழங்கும் எந்த ஒரு தீர்ப்பையும் லண்டன் பிரிவு கவுன்சில் மாற்றியமைக்க முடியும். மகாதேசாதிபதியே முப்படைகளின் தளபதியாவார். பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர், தபால் மா அதிபர், படைத் தளபதிகள், பகிரங்க சேவை ஆணையாளர், தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்குக் கட்டளையிடும் அதிகாரம் மகா தேசாதிபதிக்கே உண்டு. பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் வெற்றி பெறும் கட்சித் தலைவரைப் பிரதமராக நியமிக்கும் அதிகாரமும் மகாதேசாதிபதிக்கே உண்டு.

அதாவது, இலங்கையின் சுதந்திரம் என்பது பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவே அமைந்திருந்தது.

தேசியவாதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிங்கள மகாசபையூடாக அரசியலில் புகுந்த பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சிறிது காலம் செயற்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கைகளுடன் உடன்பட முடியாத பண்டாரநாயக்க அதிலிருந்து வெளியேறி 1952ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். சிங்கள மகா சபையைக் கலைத்துவிட்டு தொழிலாளர்கள், விவசாயிகள், மதகுருமார், சுயபாஷை ஆசிரியர்கள், கிராமிய வைத்தியர்கள் என்ற கிராமிய பஞ்ச சக்திகளை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு தேசிய சக்தியாக உருவாக்கினார்.

1956ல் இடம்பெற்ற பாராளுமன்றம் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி சிங்களத்தை அரச கரும மொழியாக்கப் போவதான தனது களனி மாநாட்டுத் தீர்மானத்தை முன் வைத்துப் போட்டியிட்ட நிலையில் பண்டாரநாயக்க 24 மணி நேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்கப் போவதாகக் கூறிப் போட்டியிட்டார். பண்டாரநாயக்க 1956ல் தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினார்.

அதுமட்டுமின்றி அவர் பல முற்போக்கான நடவடிக்கைகளிலும் இறங்கினார். திருகோணமலையில் அமைந்திருந்த பிரித்தானிய கடற்படைத் தளத்தையும் கட்டுநாயக்காவில் அமைந்த றோயல் விமானப்படை முகாமையும் நாட்டைவிட்டு வெளியேற்றினார். தமிழரசுக் கட்சி இலங்கையை விட்டு பிரித்தானிய படைத்தளங்களை வெளியேற்ற வேண்டாமென பிரித்தானிய மகா ராணிக்குத் தந்தி அடித்ததன் மூலம் தங்கள் போலித் தமிழ்த் தேசியத்தையும் ஏகாதிபத்திய விசுவாசத்தையும் வெளிப்படுத்தினர். மேலும் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துப் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில் பண்டாரநாயக்க செல்வநாயகத்தை அழைத்து 1957 ஜுலையில் பண்டா – செல்வா ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இது தமிழரசுக் கட்சி முன் வைத்த சமஷ்டிக் கோரிக்கைக்கு நிகரான பிரதேச சபைகள் அமைப்பைக் கொண்டிருந்தது.

பிரித்தானிய படைத்தளங்களை வெளியேற்றியமை, அமெரிக்க எண்ணெய் விநியோக நிறுவனங்களைத் தேசிய மயமாக்கியமை, பஸ் தேசிய மயம் என்பனவற்றால் வெறுப்புற்று பண்டாரநாயக்கா ஆட்சியை விழுத்தத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன பண்டா – செல்வா ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இனக்குரோத உணர்வைச் சிங்கள மக்கள் மத்தியில் ஊட்ட ஆரம்பித்தார். பண்டாரநாயக்க நாட்டைப் பிரித்துத் தமிழர்களுக்குக் கொடுத்துவிட்டார் எனக் கூறி 1957 ஒக்டோபரில் கண்டி யாத்திரை மேற்கொண்டார். அது கம்பஹா எம்.பி. எஸ்.டி.பண்டாரநாயக்காவால் இம்புலுகொடையில் வைத்து அடித்து விரட்டப்பட்டது.

வடக்குக்கு சிங்கள ஸ்ரீ பொறித்த பஸ்கள் அனுப்பப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சி ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். அதையடுத்து ஜே,ஆர். தலைமையில் தென்னிலங்கையில் தமிழ் மொழியிலுள்ள பெயர்ப் பலகைகளை அழிக்கின்றனர். அத்துடன் தமிழ் மக்கள் மீதான வெறியாட்டம் ஆரம்பமாகிறது.

ஐ.தே.கட்சி பிக்குகள் பிரதமர் இல்லத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஒழிக்குமாறு கோரி நடத்துகின்றனர். மறுபுறம் தமிழ்ப் பகுதிகளிலும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடக்கவே 28.04.1958ல் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுகிறது. அதனையடுத்து ஐ.தே.கட்சியின் காடையர் மேற்கொண்ட இன அழிப்புக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லப்படுகின்றனர், ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

அவசரகாலச் சட்ட மூலம் இவ் அழிப்பு வெறியாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் ஜே.ஆர். நாடு பரந்தளவில் பண்டாரநாயக்க நாட்டைப் பிளவுபடுத்தித் தமிழர்களுக்கு விற்று விட்டார் எனக் கூறி புயல் வேகப் பிரசாரம் செய்கின்றார்.

26.09.1959 அன்று பண்டாரநாயக்க மக்கள் சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தபோது சோமராம தேரோ என்ற பிக்குவால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இப்படுகொலை தொடர்பாக களனி விகாரையின் பீடாதிபதி புத்தரகிந்த தேரர், ஜயவர்த்தன என்ற ஒரு ஆசிரியர், சோமராம தேரர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டு கடைசியில் மேன்முறையீட்டில் ஏனையோர் அனைவரும் விடுதலை செய்யப்பட சோமராம தேரருக்கும் ஜயவர்த்தனவுக்கும் தூக்குத் தண்டனையும், புத்தரகிந்த தேரருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

இப்படுகொலை தொடர்பான சதி களனி விகாரையை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. அதன் பீடாதிபதி புத்தர கிந்த தேரர் ஒரு சிறந்த கல்விமான், சோமராம தேரர் ஒரு ஆயுர்வேத கல்லூரி விரிவரையாளர். இவர்கள் இனவாதக் காரணங்களுக்காக உணர்ச்சி வசப்பட்டுக் கொலை செய்யக்கூடியவர்களல்ல. அது மட்டுமின்றி களனி ஜே.ஆரின் கோட்டை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது அந்நிய உளவு நிறுவனத்தின் திட்டமிடலின் மூலம் ஏற்கனவே திட்டமிட்ட முறையில் பண்டாரநாயக்க தொடர்பான இனவெறிக் கருத்துக்களைப் பரப்பி மக்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்திய பின்பே இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அவர் ஒரு தேசியவாதி என்பதும் அவரின் ஏகாதிபத்தி்ய எதிர்ப்பு நடவடிக்கைகளுமே காரணமாகும்.

எனவேதான் இது தேசியவாதியின் மீது நடத்தப்பட்ட ஒரு தேச விரோதப் படுகொலையாகும்.

1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக இலங்கையில் மேற்குலக முதலீடுகள் கொண்டு வரப்பட்டு அமெரிக்காவின் ஆதிக்கம் வலுவடைந்து வருவதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்தது. இவ்வாறான அமெரிக்கப் பிரசன்னம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்தியா உணர்ந்திருந்தது.

1983 இன அழிப்புக் கலவரம் காரணமாக 2 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததுடன் ஏராளமான இளைஞர்கள் போராளிக் குழுக்களில் இணைய ஆரம்பித்தனர். இதைச் சரியாகப் பயன்படுத்த முடிவு செய்த இந்திய உளவு நிறுவனமான “றோ” போராளிக் குழுக்களுக்குப் பணம், ஆயுதங்கள், பயிற்சிகள் என்பவற்றை வழங்கி அவர்களைப் பலப்படுத்தியது.

அதேவேளையில் வடக்கில் விடுதலைப் புலிகள் இராணுவத்தை முகாம்களை விட்டு வெளியேற முடியாதபடி ஒரு விதமான முற்றுகைக்குள் முடக்கியிருந்தனர்.

இனப்பிரச்சினை தொடர்பாகத் திம்புப் பேச்சுகள், பெங்களூர் பேச்சுகள் போன்று மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

புத்தளத்தில் நுரைச்சோலை, வொய்ஸ் ஒவ் அமெரிக்க ஒலி பரப்பு நி்லையம் நிறுவப்பட்டமையும் திருமலை எண்ணெய்க் குதங்கள் அமெரிக்காவுக்கு 30 வருடக் குத்தகைக்கு வழங்க மேற்கொண்ட முயற்சிகளும் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

வடக்கில் ஒப்பரேஷன் லிபரேசனில் புலிகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறிய இராணுவத்தின் மீது நெல்லியடியில் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்திப் பேரழிவை ஏற்படுத்தினர். அதன் காரணமாக இலங்கை இராணுவம் தடுமாறிய நிலையை “றோ” சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.

பல்வேறு அழுத்தங்களை இந்தியா மேற்கொண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதுடன், இந்திய அமைதிப் படை இலங்கையில் இறக்கப்பட்டது.

போராளிக் குழுக்களிடம் ஆயுதக் களைவு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இடைக்கால அரசு அமைக்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டபோதும் அதை ஜே.ஆர். பல்வேறு வழிகளில் குழப்பிக் கொண்டிருந்தார். அதேவேளையில் தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியும் புதிய பொலிஸ் நிலையங்களை நிறுவியும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து விடுதலைப் புலிகள் சார்பில் திலீபன் உண்ணாவிரதப் போரில் குதித்தான். இந்தியத் தரப்பினர் உண்ணாநோன்பைக் கைவிடுமாறு வலியுறுத்தினரேயொழிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்க மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் 12ம் நாள் திலீபனின் உயிர் பிரிந்தது. அடிப்படையில் திலீபன் இந்திய ஆக்கிரமிப்பாளரால் படுகொலை செய்யப்பட்டான்.

இலங்கையில் வரலாற்றில் இரண்டு உன்னதமான தேசியவாதிகள் செப்டெம்பர் 26ல் ஆக்கிரமிப்பாளர்களாலும் அவர்களின் முகவர்களாலும் படுகொலை செய்யப்பட்டனர்.

பண்டாரநாயக்கவின் தியாகத்தினால் கட்டிக்காக்கப்பட்ட சிங்களத் தேசியம் அவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுபிறப்புகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாலும் பொதுசன முன்னணியாலும் சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திலீபனின் தியாகத்தால் கட்டி வளர்க்கப்பட்ட தமிழ் தேசியம் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஐ.தே.கட்சிக்கும் ராஜபக்ஷ் குடும்பத்துக்கும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தேசியவாதிகளின் தியாகம் எவ்வாறு வரலாற்றில் காலங்காலமாக நின்று நிலைக்குமோ அவ்வாறே தேசியமும் வெட்டவெட்ட தழைத்து மீண்டும் நிலை பெறும் என்பது வரலாற்றின் மாற்ற முடியாத நியதியாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

26.09.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE