Sunday 24th of October 2021 06:39:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
வலுப்படும் இராணுவ மயமும் நிறைவேறாத எதிர்பார்ப்புகளும்! - நா.யோகேந்திரநாதன்!

வலுப்படும் இராணுவ மயமும் நிறைவேறாத எதிர்பார்ப்புகளும்! - நா.யோகேந்திரநாதன்!


நாட்டில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மா, சீனி, பால்மா, பருப்பு, கருவாடு போன்றவற்றின் விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் சென்ற நிலையில் மக்கள் நாளாந்த உணவுத் தேவையையே நிறைவேற்ற முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டிருந்தது. அதேநேரத்தில் கொரோனாத் தாக்கமும், அதன் காரணமாக அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தும் ஊரடங்கும் மக்களின் தொழில்வாய்ப்புக்களை முடக்கி வருமான வழிகளை பாதிக்க வைத்த நிலையில் மக்கள் மேலும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை எழுந்தது.

இப்படியான ஒரு நிலையில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், விற்பனை போன்ற சகல விடயங்களும் அவரின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டதுடன் அந்த ஆணையாளராக உயர் மட்ட இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டு அத்தியாவசிய சேவைக் ஆணையாளரின் அதிகாரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டன.

எனவே அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தால் முழுமையாகப் பயன்படுத்தி இராணுவப் பாணியில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தை உதாசீனப்படுத்தி பதுக்கல், மோசடி, சிவப்பு நாடா நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடும் வர்த்தக முதலைகள் மீதும் அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பத்தில் அப்படியான ஒரு தோற்றப்பாடு தென்பட்டதை மறுப்பதற்கில்லை.

கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் வேறு சில நகரங்களிலும் பதுக்கி வைக்கப்பட்ட பெருந்தொகைச் சீனி நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்ட பெருந்தொகையான சீனி வரியில்லாமலே எடுத்துச் செல்ல இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவ்வகையில் கைப்பற்றப்பட்ட பல்லாயிரம் தொன் சீனி இலங்கையின் பல மாதத் தேவைக்கும் போதுமானதெனக் கூறப்பட்டது.

பாவனைப் பொருட்களைப் பதுக்கி வைப்பதும், பதுக்கி வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை அதிகரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதுமட்டுமின்றிப் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பதுக்கப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்யவும் முடியும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டப் பணம் விதிக்கவும் முடியும்.

ஆனால் அரசாங்கம் கைப்பற்றப்பட்ட பதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனிக்கு 1 கிலோவுக்கு 110 ரூபாப்படி பணம் வழங்கியுள்ளது. இதில் சீனி வரி 80 ரூபாவிலிருந்து 25 சதமாகக் குறைக்கப்பட்டிருந்தபோது இறக்குமதி் செய்யப்பட்ட 1 இலட்சத்து 40 ஆயிரம் தொன் சீனியும் அடங்குமெனவும் அது கிலோ 84 ரூபாவுக்கு விற்கப்படமுடியுமெனவும் கூறப்படுகின்றது. ஆனால் அரசாங்கம் கைப்பற்றப்பட்ட சீனி அனைத்தையும் 110 ரூபா விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இப்படியான நடைமுறைகள் மூலம் பதுக்கல்., செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தல் என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக ஒரு இராணுவ உயரதிகாரி நியமிக்கப்பட்டு, அவசர காலச் சட்ட விதிகள் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் வர்த்தக முதலைகளுக்கு ஏன் இப்படி மோசடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது என்பது புரிந்து கொள்ளப்படமுடியாதுள்ளது.

இங்கு சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டமை வர்த்த முதலைகளின் நலன்களைப் பாதுகாக்கவா அல்லது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

கைப்பற்றப்பட்ட சீனி ச.தோ.ச. மூலமும் தனியார் விற்பனை நிலையங்களிலும் ரூ 114 க்கு விற்கப்படுமெனவும் கூறப்பட்டது.

ச.தொ.ச. நிறுவனங்களில் கொரோனா தொற்று நிலையிலும் நீண்ட வரிசைகளைக் காணமுடிகிறது. எனினும் சிலர் சீனி கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

ச.தொ.ச. நகரப் புறங்களில் மட்டுமே இயங்குகின்றன. ஏனைய வியாபார நிலையங்கள், குறிப்பாக மலையகப் பகுதிகள் என்பனவற்றில் விலை குறையவேயில்லை. வர்த்தகர்கள் தாம் வாங்கிய விலைக்கேற்ற வகையிலேயே விற்கமுடியுமெனத் தெரிவிக்கின்றனர்.

தற்சமயம் கார்கில்ஸ், கீல்ஸ் நிறுவனங்கள் மூலமும் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அந்த நிறுவனங்கள் பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட சீனி புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தொகையில் ஒரு பகுதி பதுக்கல்காரர்களின் கைகளுக்குப் போகாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

தற்சமயம் நாட்டில் 17 மாதங்களுக்கான சீனி கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் மக்களுக்கு கட்டுப்பாட்டு விலைக்கு போதியளவு வழங்க்கப்படாமைக்கு யார் காரணம்? விநியோகம் திட்டமிட்டமுறையில் குழப்பப்படுகிறதா? அதை ஏன் சரிசெய்ய முடியவில்லை.

அதேவேளையில் வடமத்திய மாகாணத்திலும் அம்பாறையில் பதுக்கி வைக்கப்பட்ட ஏராளமான நெல்லு, அரிசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பாறையில் கைப்பற்ற நெல்லு சாராய உற்பத்திக்காகப் பதுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு லக்ஷ்மன் அழகியவன்ன மில் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்க விற்கச் சம்மதம் தெரிவித்தாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுப்பாட்டு விலையைத் தீர்மானிப்பது யார் என்பது தான் இப்போ எழும் கேள்வியாகும். 3 மாதங்களின் முன்பு 85 ரூபா விற்கப்பட்ட அரிசி தற்சமயம் 150 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. ஆனால் வர்த்தகர்கள் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல்லு 50 ரூபாவுக்கே கொள்முதல் செய்தனர் என்பது முக்கிய விடயமாகும். இன்னொருபுறம் பிறிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையைப் 12 ரூபாவால் அதிகரித்துள்ளது. ஆனால் அமைச்சர் இறக்குமதியாளர்கள் மா விலையை அதிகரிக்கப் போவதில்லை என வாக்களித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம், விற்பனை பெரும் வர்த்தக முதலைகளின் கையில் இருக்கும் வரை விலையுர்வைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாயிருக்கப் போவதில்லை. அரசாங்கத்திலுள்ள தீர்மானிக்கும் சக்திகளுக்கும் பெரும் வர்த்தக முதலைகளுக்குமிடையே ஒரு புரிந்துணர்வு உள்ளதாகவே எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவதை நம்பத்தான் வேண்டும் போலுள்ளது.

அடிப்படையில் இராணுவமயம் மூலம் ஊழல், மோசடி, பதுக்கல், போதைபை் பொருள் வர்த்தகம் என்பன கட்டுப்படுத்தப்படுமெனவும், கொரோனாவின் முதலாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைப் போன்று அடுத்த அலைகளும் கட்டுப்படுத்தப்படுமெனவும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுமெனவும் போக்குவரத்து சுமுகமான நிலைக்குக் கொண்டு வரப்படுமெனவும் மக்கள் கொண்டிருந்த எந்தவொரு எதிர்பார்ப்புமும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பயங்கரக் குற்றம் புரிந்தவர்கள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டதுடன், கடத்தல், கொலை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. மக்களே, அரச பணியாளர்களோ தங்கள் உரிமைகளுக்கோ, அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுக்கவோ, போராட்டங்கள் நடத்தவோ முடியாமல் அவசரகாலச் சட்டம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

மேலும் பல வர்த்தக முதலைகள் தமக்கு அரசாங்கம் தீர்த்த விலையில் விற்பதானால் நட்டம் ஏற்படுவதாகச் சொல்லி இறக்குமதிகளை நிறுத்துகிறார்கள். அதன்மூலம் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றது. இராணுவ நடவடிக்கை மூலம் அப்பதுக்கல்கலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதை நியாயப்படுத்தி அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இராணுவ மயம் மூலமும் அவசரகாலச் சட்ட மூலமும் மக்களுக்குப் பயனுள்ள நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வர்த்தக முதலைகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தங்கள் பிரச்சி்னைகளுக்காக போராட்டங்கள் நடத்துவதற்கு எதிரான ஒடுக்குமுறைகளும் தொடர்கின்றன.

எனவே இராணுவ மயத்தின் தீமைகளை மட்டுமே முகம் கொடுக்குமளவுக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் முறியடிக்கப்பட்டுள்ளன என்பதும் ஊழல், மோசடிகாரர்களுக்கும் பதுக்கல் பேர்வழிகளுக்கும் வாய்ப்புகள் உருவாகியிருப்பதுமே நடைமுறை உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

28.09.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE