Sunday 24th of October 2021 06:47:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் இனப்பிரச்சினையும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையின் இனப்பிரச்சினையும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 76வது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் அதன் பொதுச் செயலர் அன்ரனியோ குட்றெஸ் அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தார். அவ்வுரையாடலின்போது அவர் இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுகளில் ஈடுபடத் தயார் எனத் தெரிவித்திருந்தார்.

ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் நெருங்கிவிட்ட போதிலும் இதுவரை ஜனாதிபதி இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது சர்வதேச மட்டத்திலோ எவ்வித முயற்சிகளையுமே மேற்கொண்டிராத நிலையில் திடீரெனப் புலம்பெயர் தமிழர்களுடன் பேசத் தயார் என அறிவித்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. சலுகையைத் தொடர்வதா ரத்துச் செய்வதா என்பதை வெகு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளின் அரசாங்கங்களில் புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கு உள்ளதென்பதை மறந்து விடமுடியாது. எனவே அவ்வறிப்பு புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் வீச்சை மட்டுப்படுத்த விடுக்கப்பட்ட ஒன்றாகவும் கருதமுடியும்.

அடிப்படையில் புலம் பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் இல்லை என்ற நிலையில் ஜனாதிபதி எந்தத் தரப்பினருடன் பேச விரும்புகிறார் என்பதே இப்போது எழும் கேள்வியாகும். பல்வேறு தரப்பினரும் பல்வேறு அணிகளாக விடுதலைப்புலி ஆதரவாளர்களாகவும் எதிர்ப்பாளர்களாகவும் தமிழ் மக்களின் விமோசனத்துக்கு உழைப்பவர்களாகவும் அப்படி உழைப்பவர்கள் என்ற பெயரில் தங்கள் சொந்த நலன்களைக் கட்டியெழுப்புபவர்களாகவும் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு நிறுவன மயப்பட்ட பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கி வருவதுடன் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பான விடயங்களை ராஜதந்திர ரீதியில் முன்னெடுத்துச் செல்வதில் புலம்பெயர் நாடுகளில் பயனுள்ள காரியங்களை மேற்கொண்டும் வருகின்றனர்.

அடுத்து, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சட்டவல்லுனர்கள், புலமையாளர்கள் முதலியோராகும். இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், தொடரும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் என்பன தொடர்பான தகவல்களைத் திரட்டி சர்வதேச சமூகத்தின் முன்பும், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பிடமும் முன்வைத்தும் நீண்ட கால நோக்குடைய விடயங்களைப் பயனுள்ள வகையில் மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் போர்க் கால நிதியாக புலம் பெயர் தமிழ் மக்களிடம் பெரும் தொகைப் பணம திரட்டப்பட்டது. அதிலிருந்து போர்த் தேவைகளுக்குத் தொடர்ந்தும் பணம் பெறும் வயைில் ஒரு பகுதி புலிகளின் ஆதரவாளர்களான தனி நபர்கள் பேரில் வர்த்தக, தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது. களத்திலும் புலத்திலும் புலிகள் இல்லாமல் போய்விட்ட நிலையில் இந்தத் தனி நபர்களில் பலர் இச் சொத்துக்களைத் தமது உடைமையாக்கிக் கொண்டனர். இவர்கள் தற்சமயம் தமது நாடுகளிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் முதலீடுகளைச் செய்து பெரும் நிறுவனங்களின் உரிமையாளர்களாகி விட்டனர். இவர்கள் தாங்களே புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டாலும் எமது பிரச்சினைகள் தொடர்பாகவோ மக்கள் நலன்கள் சார்பாகவோ எவ்வித செயற்பாடுகளையும் செய்வதில்லை. முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி அவர்களின் ஆற்றலைத் தங்கள் நிறுவனங்களின் நலன்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

நான்காவது தரப்பினர் வெளிப்படையான புலி எதிர்ப்பாளர்கள். இவர்கள் ஏதேவொரு விதத்தில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அல்லது அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் பாதிக்கப்பட்டிருப்பர். இவர்கள் முன்னாள் இடதுசாரிகள் சிலரும் அடங்குவர். சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சி பற்றிய வாய்ச்சொல் வீரர்களாக இருந்த நிலையில் அதிலிருந்து வெளியேறிய சிலர் உண்மையான தேசியவாதிகளான, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தனர். அன்று அவர்களைத் துரோகிகளாக வர்ணித்த அந்த இடதுசாரிகள் இன்று சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நாட்டை விற்கும் கோத்தபாய ராஜபக்ஷ்வின் ஆதரவாளர்களாக மாறி விட்டனர். இவர்களை இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் பாலூட்டி வளர்க்கின்றனர். இவர்களைப் புலி எதிர்ப்புப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவார்களேயொழிய பேச்சுகளில் ஒரு தரப்பாக இணைக்குமளவுக்கு இவர்களுக்கு எவ்வித சக்தியும் இல்லை.

அவ்வகையில் இலங்கை அரசாங்கம் இந்த நான்கு தரப்பினருடனும். அல்லது ஒன்றோ, இரண்டோ தரப்பினருடனும்தான் பேசவேண்டும்.

முதலிரு தரப்பினரும் இனப்பிரச்சினை விவகாரத்தை உள்ளூர் பொறிமுறை மூலம் மட்டுமே தீர்க்கப்படுமெனவும், சர்வதேசத் தலையீட்டை ஏற்கப் போவதில்லையெனவும் அரசாங்கம் தெரிவித்தமையைத் தாம் முற்றாகவே நிராகரிப்பதாகக் கூறிவிட்டனர். அத்துடன் சில நிபந்தனைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றினாலே பேசமுடியுமென எட்டு அமைப்பு களும் தெரிவித்துவிட்டன. எனவே முதல் இரு தரப்பினருடனும் பேசுவதற்கு அரசாங்கம் நிபந் தனைகளை நிறைவேற்றிவிட்டு பேசப் போவதில்லை. நான்காவது தரப்பினரைத் தமிழ் மக்கள் பொருட்படுத்தாதது போலவே அரசாங்கமும் மதிக்கப் போவதில்லை.

ஆனால், மூன்றாவது தரப்பு பேசுவதற்கான சாத்தியங்கள் கூடுதலாகத் தென்படுகிறது. அவர்கள் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யப்போவதாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும் கூறி அங்கு முதலீடு செய்வார்கள். சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதையோ வளங்கள் சூறையாடப்படுவதையோ பற்றி அக்கறைப்படாமல் அரசாங்கம் அனுமதி வழங்கும். இனப்பிரச்சினை விவகாரம் பற்றி காலவரையறையின்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஒருங்கே ஏமாற்றும் பணியை இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்வர்.

எனவே புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவது என்பது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்பதைச் சுமந்திரனோ, சம்பந்தனோ, அறியாமலில்லை. ஆனாலும் ஜனாதிபதியின் அந்த அறிவிப்பை இருவரும் வரவேற்றுள்ளனர்.

அடிப்படையில் கோத்தபாயவின் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விடுத்த அழைப்பானது இலங்கை எதிர்நோக்கும் ஒரு நெருக்கடிகளைத் தற்காலிகமாகவாவது தள்ளிப்போட மேற்கொண்ட ஒரு முயற்சியேயாகும்.

அதாவது, இலங்கை தற்சமயம் இரு நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ஒன்று –ஜி.எஸ்.பி. வரிச் சலுகை. மற்றது ஐ.நா, மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுல விரோத நடவடிக்கைகள் என்பன தொடர்பாக ஆதாரங்களையும் ஆவணங்களையும் சேகரித்தல்.

இந்த இரு விடயங்களிலும் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளின் வீச்சைக் குறைக்க அல்லது மழுங்கடிக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் ஒரு தந்திரமாகவே பார்க்கமுடியும். எனெனில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசியலில் புலம்பெயர் தமிழர்கள் ஏதோவொரு விதத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியளவுக்கு உள்ளனர் என்பது மறுக்கப்படமுடியாததாகும்.

எனவே புலம்பெயர் தமிழர்களிடம் பேச்சை நடத்தினாலோ, அல்லது பேச்சை நடத்தப் போவதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தினாலோ தம்மேல் மேற்கொள்ளப்படும் நெருக்கடிகளின் கன பரிமாணத்தைப் பலவீனப்படுத்த முடியும் என ஜனாதிபதி நம்பக்கூடும்.

ஜனாதிபதியின் அழைப்புக்கு உடனடியாகக் கிடைத்த பதில்களே எல்லோரையும் முட்டாள்கள் எனக் கருதும் அவரின் தந்திரம் தோல்வியடைந்து விட்டதை உணர்த்தியுள்ளது.

இலங்கையின் சில தமிழ் அரசியல் தலைமைகளை உள்ளார்ந்த புரிந்துணர்வுடன் ஏமாற்றுவதைப் போன்று அவர்களும் ஏமாறுவதைப் போன்று நடந்தும் அரசியல் சுத்துமாத்து புலம்பெயர் தமிழ் மக்களிடையே செல்லுபடியாகாது என்பதை இனியாவது ராஜபக்ஷ் அணியினர் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களுடன் பேசத் தயார் என விடுத்த அறிவித்தலும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய திரு.இரா.சம்பந்தன், திரு.எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த ஆதரவும் இலங்கை வாழ் தமிழ் மக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற மேற்கொள்ளும் ஒரு கூட்டு முயற்சி என்பதும் அது வெற்றி பெறப்போவதில்லை என்பதும் மறைக்கமுடியாத உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக : நா.யோகேந்திரநாதன்.

05.10.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE