Thursday 25th of April 2024 12:20:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
'சர்வதேச ஆசிரியர் தினமும் ஆசிரியர்களின் தொழில் திருப்தியும்' - ப.இராஜேஸ்வரன்

'சர்வதேச ஆசிரியர் தினமும் ஆசிரியர்களின் தொழில் திருப்தியும்' - ப.இராஜேஸ்வரன்


• கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாசிரியரின் தனிப்பட்ட தொழில்சார் அனுபவம், கட்டுரையாளரின் ஊடகப்பதிவுகள் மற்றும் ஆய்வார்களினால் ஆய்வுரீதியாக முன்வைக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டமைந்தவை.

• ஆசிரியர்களின் தொழில்திருப்தியில் பல காரணிகள் எதிர்மயமாக செல்வாக்குச் செலுத்துகின்றன. அதில் முதன்மைக்காரணியாகவும் சமகால ஆசிரியர்களின் போராட்டத்திற்கான முதன்மைப் பேசுபொருளாகவும் 'சம்பளஉயர்வு' காணப்படுகின்றது.

அறிமுகம்

மனிதவள உருவாக்கத்திற்கு கல்விச் செயன்முறை அடிப்படையாக அமைகின்றது. கல்விச் செயன்முறையின் தரம், வினைத்திறன், விளைதிறன், பயனுறுதித் தன்மை மற்றும் செயலாற்றுகை உயர்மட்டத்தில் அமைவதற்கு ஆசிரியர்களின் செயலாற்றுகை முக்கியமாகின்றது.

ஆசிரியர்களின் செயலாற்றுகை வினைத்திறன்மிக்கதாக அமைகின்ற போது கல்விச் செயன்முறையினூடான வெளியீடுகளும், கல்வியின் தொலைநோக்குகளும், பாடசாலைகளின் அடைவுகளும் ஆரோக்கியமானதாக அமையும். இத்தகைய பின்னணியில் ஆசிரியர்களின் செயலாற்றுகைக்கான அடிப்படைத்தளம் ஆசிரியர்களின் தொழில்சார்திருப்தி நிலைமையுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும், தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குகின்றது.

ஆசிரியர்களின் தொழில் திருப்தியை தீர்மானிப்பதில் பல்வேறு உள்ளக, புறவாரியான காரணிகள் நேராகவும், மறையாகவும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இக்காரணிகளின் தாக்கம் காரணமாக ஆசிரியர்களிடம் திருப்தியான அதேவேளை திருப்த்தியற்ற நிலைமைகள் உருவாகின்றன. கல்வியின் தரம் ஆசிரியர்களின் செயலாற்றுகையில் தங்கியுள்ளது. ஆசிரியர்களின் செயலாற்றுகைக்கு ஆசிரியர்களின் தொழில் திருப்தி அடிப்படையாக அமைகின்றது.

இன்று உலகலாவிய ரீதியில் ஆசிரியர்தினத்தை கொண்டாடுகின்ற அதேவேளை எமது நாட்டில் ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பின்னணியில் ஆசிரியர்களின் தொழில்திருப்தி தொடர்பில் அரசாங்கம், கல்விமுகாமைத்துவம் மற்றும் சமூகம் ஆசிரியர் தினத்தில் சிந்திப்பது அவசியமாகின்றது.

கல்வியும் ஆசிரியர்கள்

கல்வியானது தனியாள் மற்றம் தேசிய அபிவிருத்தியை தூண்டும் பிரதான காரணியாக விளங்குகின்றது. ஒரு பிள்ளையின் தனிப்பட்ட ஆளுமையையும் ஆற்றல்களையும் விருத்தி செய்யவும், சமூகமாற்றங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கான திறன்தகவுகளை வழங்குவது.இத்தகைய கல்வியை வழங்குகின்ற முகவராகவும், வளவாளராகவும் ஆசிரியர் மற்றும் ஆசிரியசேவை காணப்படுகின்றது. ஆசிரியர்கள் என்போர் ஆசிரியசேவையுடன் இணைந்த ஆளணியினரைக் குறிக்கும். ஆசிரியர்கள் பாடசாலையின் பிரதான வளமாகவும், கல்வியின் தரத்தை தீர்மானிக்கும் வளமாகவும் விளங்குகின்றார்கள். கல்வியின் தேசியக் கொள்கைகளையும் கல்வியின் தேசியக் குறிக்கோள்களையும் பாடசாலைகளின் தொலைநோக்குகளையும் பாடசாலைமட்ட கலைத்திட்டம் ஊடாக வெற்றிகரமாக அமுல்ப்படுத்துவதில் ஆசிரியர்களின் செயலாற்றுகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆசிரியர்களும் ஆசிரியர்சேவைப் பிரமாணக் குறிப்புக்களும்

'திருப்தியுடன் கூடிய ஆசிரியர் குழாத்தை உருவாக்கல். ஆசிரியர்களுக்கு இடையில் ஒரு கௌரவமான தொழில் உணர்ச்சியை கட்டியெழுப்புதல் விருப்புடனான ஒரு ஆசிரிய சேவையை வளரச்செய்து தங்கள் கடமைகளை திறம்படச் செய்யவும், ஆசிரியர்கள் வகுப்பறை உள்ளேயும் வெளியேயும் பயன்கள்பெற உதவுதல். பயனுள்ள திறமைகளை தமக்குள் விருத்தி செய்து நல்ல பேறுகளை பெற ஆசிரியர்களை தூண்டுதல்இ ஆசிரியர்களை நியமனம் செய்தல், பதவி உயர்வு வழங்கல், பயிற்சி மற்றும் அபிவிருத்தி விதிகள் ஆகிய குறிப்புக்கள் ஆசிரியர் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்வது தொடர்பான நடைமுறைகள் விதிமுறைகள், அதிகாரங்கள், மற்றும் நியாயம்கோரல் தொடர்பான நடைமுறைகள் தேசிய ஆசிரியர் இடமாற்றக்கொள்ளை ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன.

2021 ஆண்டு ஆசிரியர்தினம் – கருப்பொருள்

ஆசிரியர்களின் சிறப்பை சமூகமட்டத்தில் உணர்த்துகின்ற அதேவேளை அனைத்துமட்டங்களிலும் கவனத்தை ஏற்படுத்துகின்ற உணர்வுரீதியான தினமாக ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம்முறை UNESCO அமைப்பினால் 'Teachers at the heart of education recovery' என ஆசிரியர்களின் முதன்மைத்தன்மையை வெளிப்படுத்துகின்ற கருப்பொருள் வெளியப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஆசிரியர்கள் - ஆசிரியர்களின் சேவையின் உயர்தன்மை வலியுறுத்தப்படுகின்றது எனலாம்.

தொழில்திருப்தி

தொழில்திருப்தி என்ற பதமானது முதல் முறையாக Hop Pock என்பவரால் 1935இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரின் கருத்துப்படி தொழில்திருப்தி என்பது ஒருவரை, 'நான் எனது தொழிலில் திருப்தி அடைந்துள்ளேன்' என வெளிப்படையாக் கூறும் நிலைக்கு இட்டுச் செல்வதேயாகும். தொழில் மற்றும் திருப்தி ஆகிய இருபதங்களின் சேர்க்கையாக தொழில்திருப்தி எண்ணக்கரு காணப்படுகின்றது. அத்துடன் தொழில் என்பது வேலைச் செயற்பாட்டையும், திருப்தி என்பது வேலை செயற்பாடு மற்றும் வேலைச் சூழல் மீதான புலக்காட்சியைக் குறிக்கின்றது.தொழில்திருப்தி என்ற பதமானது ஒருவர் தமது தொழிலின் மீது கொண்டுள்ள மனப்பாங்கு மற்றும் உணர்ச்சி என்பவற்றைக் குறிப்பதாகும். தொழிலின் மீதான நேரான மற்றும் சாதகமான மனப்பாங்கானது தொழில் திருப்தியைக் குறிக்கிறது. தொழிலின் மீதான எதிர்மறை மற்றும் சாதகமற்ற மனப்பாங்கானது தொழில் திருப்தியின்மையைக் குறிக்கின்றது. தொழில்திருப்தியானது ஒரு பணியாளரின் தொழில் மீதான சாதனை மற்றும் வெற்றி சார்ந்த புலன் உணர்வாகும். இது பொதுவாக வெளியீடு மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு என்பவற்றுடன் நேரடியாகத் தொடர்புபட்டதாக விளங்குகின்றது.

சமகாலத்தில் ஆசிரியர்களின் தொழில்திருப்தி நிலைமைகள் தொடர்பில் பல எழுவினாக்கள் சமூமட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. அரசாங்கங்கள் மீதும் கல்விவளமுகாமை மீதும் ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. ஆசிரியர்களின் தொழில்திருப்தியில் நேரடியாக தொடர்புபட்டதாக கல்விசார் வளமுகாமைத்துவ நடைமுறைகள் அமைகின்றன. கல்விவளமுகாமையின் வினைத்திறனான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களின் தொழில்சார் திருப்திமட்டங்கள் தீர்மானிக்கப்படுவதை அனுபவரீதியிலும், ஆய்வுரீதியான முடிவுகள் ஊடாகவும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

ஆசிரியர் - தொழில்திருப்தி தொடர்பிலான ஆய்வுரீதியான முடிவுகள்

ஆசிரியர்கள் மற்றும் தொழில்திருப்தி நிலைமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் பல்வேறு காரணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆசிரியர்களின் தொழில்திருப்தியில் செல்வாக்குச் செலுத்துவதை உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையின் ஆசிரியவளமுகாமையில் சர்வதேசரீதியானதும் முன்மாதிரியானதும், ஆசிரியர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான வேலை நிலைமைகளை விருத்தி செய்தல், அடைவுகளை வலுவூட்டல், மேற்;பார்வை செய்தல், உதவியளித்தல், கவர்தல், வலுவூட்டல், அடைவை கணிப்பிடல் போன்ற மனிதவள முகாமைத்துவ அணுகுமுறைகள் பற்றியும், குறிப்பான நன்கு திட்டமிடப்பட்ட தேசிய மாகாண மட்டத்தில் பின்பற்றக்கூடிய ஆசிரியவளமுகாமை தொடர்பான நடைமுறைகளின் தேவை மற்றும் அகலமானதும், உயர்தரமானதுமான கல்வி ஆய்வு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. மனிதவளமுகாமை ஆசிரியர்களின் வினைத்திறனை மேம்படுத்துகிறது. வளமுகாமையின் கூறுகளான வேதனம், வேலைச்சூழல், வேலைப்பாதுகாப்பு ஆசிரியர்களின் தொழில் திருப்தியில் தொடர்பைக் கொண்டுள்ளன எனவும் வேலைச்சூழல், வேலைநிலைமை, மேற்பார்வையாளருடனான இடைத்தொடர்பு, வேலை இலக்கு, சுயநம்பிக்கைகள் பேன்ற காரணிகள் தொழில் திருப்தியில் நேர்த்தாக்கம் செலுத்துகின்றது.

ஊதியமானது ஒரு ஊழியர் தொழிலில் இருந்து பெற்றுக் கொள்ளும் பணரீதியான நன்மையாகும். இது ஊழியரின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. ஒவ்வொருவரும் ஒரு பொருத்தமான வெகுமதியை எதிர்பார்க்கிறார்கள். ஊதியமானது பக்கச்சார்பற்றதாக, நியாயமானதாக, சமமானதாக இருத்தல் வேண்டும். ஒரு பணியாளர் தனது ஊதியம் பக்கச் சார்பற்றதாகவும் சமமானதாகவும் இருப்பதாக உணரும் போது தொழில் திருப்தி ஏற்படுகிறது. ஊதியமானது தொழில்திருப்தியில் பெருமளவு பங்களிப்புச் செய்கிறது. இது இரண்டு காரணங்களால் சாத்தியப்படுகிறது. முதலாவதாக, பணமானது ஒருவரது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பிரதான கருவியாகச் செயற்படுகிறது. இரண்டாவதாக சம்பளமானது ஊழியர்கள் மீதான முகாமை சார் கரிசணையின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. எளிமையான, நியாயமான அவர்களின் எதிர்பார்க்கைகளுடன் ஒத்துப் போகும் சம்பளக் கட்டமைப்பையே பணியாளர்கள் விரும்புகிறார்கள். ஊதியமானது நியாயமானதாக, தொழில்சார் அடிப்படையாகக் கொண்ட, தனிப்பட்டதிறன் மட்டம், சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரம் போன்ற தகைமைகளைக் கொண்டு காணப்படின் திருப்தி கிடைக்கும் எனலாம்.

தேசிய மனிதவள உருவாக்கத்திற்கும் அறிவுச்சமூக உருவாக்கத்திற்கும் ஆசிரியர்களின் வகிபங்கு அடிப்படையாக அமைகின்றது. அதாவது ஆசிரியர்களின் பணியாற்றுகை தரமானதாகவும், வினைதிறனாகவும் அமைதல் அவசியமாகின்றது. ஆசிரியர்சேவைப் பிரமாணக்குறிப்புக்கள், தேசியமட்ட கல்விக் கொள்கைகள், சுற்றுநிருபங்கள் போன்றன ஆசிரியர்சேவை தொடர்பிலான முகாமைத்துவ நடைமுறைகளை வலியுத்தினாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பலவீனங்கள், ஊழல்கள் மற்றும் ஆரேக்கியமற்ற தன்மைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அத்துடன் அரசியல் செல்வாக்கு காரணமாக கல்வித்துறையில் நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன.

தொழில்திருப்தியை உறுதிப்படுத்துகின்ற போது ஆசிரியர்கள் வெற்றியை தக்கவைத்துக் கொள்கிறார்கள் அத்துடன் செயலாற்றுகையை உயர்வடையச் செய்கின்றது. மனிதவளமுகாமை ஊழியரின் தொழில் திருப்தியில் நேர்மயமான தொடர்பையும், செயலாற்றுகையில் குறிப்பான தாக்கத்தையும் செலுத்துகிறது. கல்வி முகாமைசார் ஆளணியினருக்கு காணப்படும் கடமைரீதியான சவால்கள், வலய மாகாணமட்ட தேசியமட்ட நடைமுறைகளின் சவால்கள் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைச் சவால்களும் சுட்டிக்காட்டப்படுட்டுள்ளன. ஆசிரியர்களின் செயலாற்றுகையின் வினைத்திறன் மற்றும் திருப்தி நிலைமை ஆசிரியவளமுகாமையின் அமுலாக்கத்தில் தங்கியுள்ளது. வளமுகமைத்துவத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஆரோக்கியமான இடைத்தொடர்புகள் அமைகின்ற போது கல்விச் செயலாற்றுகைகளும் பாடசாலைகளின் செயலாற்றுகை மற்றும் கல்வியின் அடைவுமட்டம் தரமானதாக அமையும்.

புறரீதியான காரணிகளான வாண்மைத்துவம், சம்பளம், ஒத்துழைப்பு, நிர்வாக அனுசரணை, பாதுகாப்பு, பாடசாலையில் கிடைக்கும் வளங்கள் தொழில்திருப்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. தற்காலத்தில் உலகளாவியரீதியில் ஆசிரியர்கள் பல்வேறு சவால்களை தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை, குறைந்தளவிலான பயிற்சி மற்றும் தாழ்நிலை அங்கிகாரம் என்பன அவற்றுள் முக்கியமானவை ஆகும்.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் விதப்புரைக்கு ஏற்ப பொதுக் கல்விக்கான கொள்கைகள் 1995 இல் உருவாக்கப்பட்டன. அதில் ஜந்து பிரதான செயற்பரப்புக்களில் கல்விமுகாமைத்துவமும் வளஏற்பாடும் உள்ளடக்கப்பட்டுள்ளன.அரசாங்கத்தினால் நாட்டின் தேசிய மனிதவ உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்காக வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் 5605 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதற்கான முதன்மையான நோக்கம் மனிதவளவிருத்தி அதாவது அறிவுச்சமூக உருவாக்கமாகும். கல்விக்காக பெருமளவு நிதிசெலவு செய்யப்படுகின்றது. இந்நிதி வீண்விரயமாவதை தவிர்ப்பதற்கும்; இலக்கை அடைவதற்கும் ஆசிரியர்களின் செயலாற்றுகை அடிப்படையாகின்றது. கல்வி முகாமைத்துவரீதியான குறைபாடுகள், பொருத்தப்பாடற்ற கலைத்திட்டம், குறைபாடான ஆசிரியவாண்மைத்துவப் பயிற்சிகள், தெளிவற்ற கல்விக் கொள்கைகள், திட்டமிடப்படாத கல்விக் கொள்கை மாற்றங்கள், அரசியல் தலையீடுகள் நிலவுகின்றன. மேலும் நிர்வாகம், நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஆசிரியர் பிரச்சினைகள், ஆளணிதேவைகள், செலவீனங்கள் மற்றும் ஆசிரியர் வேதனங்கள் அத்தியாயரீதியாக தொகுக்கப்பட்ட பரிந்துரைகள் ஆசிரியவளமுகமை தொடர்பிலான சவால்களையும் தொழில்திருப்தியின்மையையும் அடையாளப்படுத்துகின்றன.

இப்போது அரசியல் சுழற்சிகளுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் உள்ளன. பொதுக் கல்வி ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, வரிசைப்படுத்தல் மற்றும் பதவி உயர்வு ஆகியவை அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது .ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் சமூக மதிப்பு குறைவாக காணப்படுகிறது. இலங்கை ஆசிரியர்களின் தரவிருத்தி தொடர்பில் பல சவால்களை எதிர்நோக்குகின்றது. எதிர்காலத்தில் ஆசிரிய வாண்மையை விருத்தி செய்ய வேண்டி தேவை உள்ளது. அதிகாரரீதியான தலைமைத்துவம் எதிர்மறையான தாக்கத்தையும் ஜனநாயகரீதியான தலைமைத்துவம் நேரான தாக்கத்தையும் தொழில் திருப்தியில் ஏற்படுத்துகின்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் ஒரு தொழில்சார் தகைமை ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு ஒரு கட்டாயத் தேவை அல்ல எனவும் ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட கொள்கை எதுவும் இல்லை எனவும் கல்வித்தகைமை, கற்பிக்கும் பாடம் மற்றும் அனுபவம் ஆகியவற்றுக்கும் வேதனதிருப்திக்கும் வேறுபாடு காணப்படுகிறது. கல்வித்துறை ஆளணியினர் அவர்களின் கடமை பொறுப்புக்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் நடைமுறையில் சவால்கள் காணப்படுகின்றன. ஆசிரியர்கள் தமது வாண்மைத்துவம் நோக்கி ஊக்கமுடன் காணப்படுகின்றனர். அதேவேளை திருப்தியின்மையினால் வேறு தொழில் நாட்டத்துடனும் காணப்படுகின்றனர். பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணித்திருப்தி ஒரே மாதிரியாகக் காணப்படவில்லை. சமூக பொருளாதார மற்றும் ஐனநாயகச் சூழல் காரணிகள் பணித்திருப்தியை அடைவதற்கு முக்கிய செல்வாக்கு செலுத்துகின்றது. இக்கண்டறிதல் uerzberg இன் இரட்டைக் காரணி கோட்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

சம்பளம், வேலை நேரம், வேலைச் சூழல், திருமண நிலை ஆகியன தொழில் திருப்தியின் பிரதான காரணிகளாக செல்வாக்குச் செலுத்துகின்றன. மனிதவள முகாமைத்துவ நடைமுறைகள் குறிப்பான தாக்கத்தை தொழில்திருப்தி மட்டத்தில் ஏற்படுத்துகின்றன. முகாமைத்துவ கொள்கைகள் மனிதவள நடைமுறைகளுக்கு அடிப்படையாகின்றது. புறவாரியான காரணிகளான நட்டஈடு, ஊக்குவிப்பு கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவுகள் போன்றன ஆசிரியர்களின் செயலாற்றுகைகளில் ஊக்குவிப்பை ஏற்படுத்தி கல்வி வெளியீடுகளின் தரத்தை அதிகரிக்கின்றது. உள்ளார்ந்த ஊக்குவிப்புக்கள் அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக நேரான தாக்கத்தை தொழில் திருப்தியில் ஏற்படுத்துகின்றது. மனிதவள காரணிகளான பயிற்சி மற்றும் வாண்மைத்துவ விருத்திகள், தரக்கணிப்பீடு, எதிர்கால திட்டமிடல் முறைமைகள், தொழிலாளர் பங்குபற்றுதல்கள் மற்றும் நட்டஈடு வழங்கல் தொழில் திருப்தியில் செல்வாக்கு செலுத்துகின்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வெளிப்படைத் தன்மையின்மை, அரசியல் செயற்பாடு, சீரற்ற முகாமைத்துவம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் தொழில் திருப்தியின்மைக்கு காரணமாகின்றன தனியாள் பண்புகளாக அனுபவம், வருமானம், வயது, திருமண நிலை மற்றும் கல்வி பணித் திருப்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இசைந்து செல்லாத நேரசூசி, நன்மைகளற்ற வேலைகள், சுய கடமைகளை நிறைவேற்ற முடியாமை, இடமாற்றத்தில் காணப்படும் தலையீடுகள் திருப்தியின்மை உருவாக்குகின்றது. ஆசிரியர்களுக்கான மதிப்பு, பாடசாலையில் காணப்படும் விருப்பு, பாடசாலைத் தலைமையின் ஆதரவு, மாணவர் - பெற்றோர் - ஆசிரியர்களுக்கு இடையிலான இடைத் தொடர்பு, தொழில் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல், பாடத்திட்டத்தை நிறைவேற்றல் மற்றும் மாணவர்களைக் கையாளுதல் போன்ற காரணிகளுடன் தொழில் திருப்தி இணைந்துள்ளது.

நிர்வாக ஆதரவு இழப்பீடு, மனிதத் தெடர்பு, வாண்மை விருத்தி, பணியாளர் பாதுகாப்பு போன்ற காரணிகளும் ஆசிரியர்களின் தொழில் திருப்தியுடன் நேரடி தொடர்புபட்டது. ஆசிரியர்களின் வேலைச் சுமையைக் குறைக்கவும் தொழிலில் இருந்து விலகாமல் இருக்கவும் பணித் திருப்தியை மேம்படுத்தவும் ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும். சம்பளப் பற்றாக்குறை, வசதிக் குறைவு, பிந்திய பதவி உயர்வு, தங்குமிட வசிதியின்மைகள், பணிச் சமநிலையின்மை, நியமனம் ஒழுங்கின்மை, தொழில் திருப்தியின்மைக்கு காரணமாகின்றன. பொருத்தமற்ற கல்விக் கொள்கைத் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல்கள் ஆசிரியர் தொழில் திருப்தியின்மைக்கு காரணமாகின்றன. கல்வித்துறை ஆளணியினர் அவர்களின் கடமை பொறுப்புக்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் நடைமுறையில் சவால்கள் காணப்படுகின்றன.ஆசிரியர்கள் தமது வாண்மைத்துவம் நோக்கி ஊக்கமுடன் காணப்படுகின்றனர். அதேவேளை திருப்தியின்மையினால் வேறு தொழில் நாட்டத்துடனும் காணப்படுகின்றனர்.

வாண்மை தொழில் தொடர்பான குறைவான கணிப்பு திருப்தியின்மைக்கு காரணமாகின்றன. அதேவேளை வலுவானதும் நேர்மயமானதும் குறிப்பானதுமான தெடர்பு தொழில்திருப்திக்கும் மாணவர் செயலாற்றுகைக்கும் இடையில் காணப்படுகின்றது. கல்வித்தகைமை, கற்பிக்கும் பாடம் மற்றும் அனுபவம் ஆகியவற்றுக்கும் வேதனதிருப்திக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது. கல்விசார் முகாமையாளர்களிடம் குறைந்த மட்டத்திவான வேலை அர்ப்பணிப்பு, ஊக்கப்படுத்தல் குறைபாடுகள், பெறுப்பின்மை மற்றும் குறைவான தலைமைத்துவ ஆற்றல்கள் இடர்பாடுகளாக காணப்படுகின்றன. வலய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் நன்கு வரையறுக்கப்படவில்லை அல்லது போதுமானதாக செயல்படுத்தப்படவில்லை என்று கருதப்படுகிறது, இது மாகாண பாடசாலைகளின் மனிதவள முகாமைத்துவத்தை திறம்படச் செயல்படுத்துவதற்கு இடையூறாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

வேலை பாதுகாப்பு, மேற்பார்வை சமூகத் தொடர்பு, முடிவெடுத்தல், நிர்வாகம், வாண்மைத்துவ விருத்தி, மதிப்பளித்தல், சகஉத்தயோகத்தர் நடத்தை ஆகியவவை தொழில்திருப்தியில் செல்வாக்குச் செலுத்துகிறது. அங்கீகாரம் பதவிஉயர்வு, வேதனம், வேலைத்தள வசதிகள் எதிர்மறை தாக்கத்தை தொழில் திருப்தியில் செலுத்துகிறது. ஆண் மற்றும் பெண் காரணிகள் சமநிலையிலும், திருமணமான திருமணமாகாத நிலைமை சமநிலையிலும், தமிழ் ஆசிரியர்கள் முஸ்லீம் ஆசிரியர்களை விட அதிகமாகவும், தொழில் அனுபவம் சமநிலையிலும் கல்வித் தகைமை பல்வேறு தரநிலையிலும் தொழில்திருப்தி மட்டத்தை கொண்டுள்ளனர்.

பாடசாலைமட்ட மனிதவள முகாமை என்பது பாடசாலையின் இலக்கை அடைவதற்காக மனித வளத்தை நிர்வகிப்பதற்கு அடிப்படையாக அமைகின்றது. வேலை உலகிற்க ஏற்ப ஆசிரியர்களை நிர்வகித்தல் ஆசிரியர்களின் தேவைப்பாடுகளை இனங்காணல், வாண்மைத்துவ விருத்தி அடைவுகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனுகூலங்களை திட்டமிடல் போன்றவை அவசியமாகின்றது . ஆசிரியர்களின் வயது, பால், அனுபவம், தகைமை, நியமன வகை நேரான நிலைமையில் காணப்படுகின்றது. ஆனால் கல்வி முகாமையின் மனப்பாங்கு பிரதான சவாலாக உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பளம், வேலைச் சூழல் மற்றும் ஊக்கப்படுத்துதல் குறைவான மட்டத்தில் உள்ளது. அதே வேளை நிறுவனரீதியான செயலாற்றுகையிலும் செல்வாக்குச் செலுத்துகிறது. பாடசாலைச் சூழல் மற்றும் வேதனம், ஊக்கமளித்தல் காரணிகள் ஆசிரியர்களின் தொழில்திருப்தியில் குறிப்பான இடைத்தொடர்புகளை கொண்டுள்ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

முடிவுரை

கல்வி நடைமுறையில் ஆசிரியர்கள் முக்கியபங்கு வகிப்பதால் அவர்களின் தொழில் சார்ந்த தேவைகள் திருப்திப்படுத்தப்படல் வேண்டும். இல்லையேல் கொள்கையாளர்களின் முயற்சிகள் வீணாகிவிடும். தமது தொழிலில்திருப்தி கொண்டுள்ள ஆசிரியர்களே விளைதிறன்மிக்க பங்களிப்பை நல்குவார்கள். தமது தொழிலில்திருப்தி அடையாத ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு மற்றும் விளைதிறன் அற்றவர்களாகவும், தமது உச்சங்களை வெளிப்படுத்தாதவர்களாகவும் அமைந்து விடுவார்கள். தொழிலில் குறைந்தளவு திருப்தியானது கல்வித் துறையில் கூடுதலான பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே ஆசிரியர்கள் தமது வேலைத் தளங்களில் எந்தளவு சௌகரியமாக உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துதல் அவசியமாகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஆசிரியர் - தொழில்திருப்தி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு நிலைமைகளில்; ஆரோக்கியமற்ற போக்குகளை ஆய்வுகள் ஊடாவும் அனுபவரீதியிலும் உணரக்கூடியதாகவுள்ளது. அதேவேளை ஆசிரியர்களின் தொழில்திருப்திப் பண்புக்கூறுகளான சம்பளம், நியமனம், ஆட்சேர்ப்பு, பதவிஉயர்வு, இடமாற்றம், தரங்கணிப்பு, வாண்மைத்துவவிருத்தி, ஊக்கப்படுத்தல், ஆளணிப்பகிர்வு, மேற்பார்வை போன்ற காரணிகள் நேரான மற்றும் எதிரான தாக்கத்தை கொண்டுள்ளதையும் மற்றும் உள்ளக வெளியக காரணிகளான அரசியல் சமூகக் கராணிகள் மற்றும் தனிப்பட்ட காரணிகள் ஆசிரியர்களின் தொழில்திருப்தியில் குறிப்பாக செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்கப்படக்கூடியதாக உள்ளது. எதிர்காலத்தில் ஆசிரியர்களின் தொழில்திருப்தி மட்டத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கல்விமுகாமைத்துத்தினூடாக வலுப்படுத்துதல் அவசியமாகின்றது.

குறிப்பாக ஆசிரியர்களின் தொழில்திருப்தி, தொழில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பையும் உயர்த்துவதற்கு ஏதுவாக சம்பள முரண்பாடுகளை தீர்த்தல், ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழில் சங்கங்கள் முன்வைக்கின்ற தேவைப்பாடுகளை கல்வி அமைச்சு ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடி தீர்வுகளை எட்டுதல், இடர்காலத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்குதல், ஆசிரியவளமுகாமையை வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக முன்னெடுத்தல், win – win முகாமைத்துவ அணுகுமுறையை வலுப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பொருத்தமான வேலைச்சூழலை கல்விமுகாமை ஊடாக உறுதிப்படுத்துதல். இடமாற்ற நடைமுறைகளில் பின்தங்கிய பிரதேச சேவை மற்றும் வெளிமாவட்ட சேவையை மேலான கவனத்தில் கொண்டு தீர்மானங்களை எடுத்தல், மேற்பார்வை நடைமுறைகளில் தரமான வெளிப்பாடுகளுக்கு ஊக்குவிப்புக்களை போதுமானதாக வழங்குதல்,கடன்வசதிகளை உரியகாலத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை முன்னெடுக்க முடியும்.

ப.இராஜேஸ்வரன்,

விரிவுரையாளர்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி கோப்பாய்.


Category: கட்டுரைகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE