Saturday 20th of April 2024 11:09:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
உலகை புரட்டிய ஒக்டோபர் 10! - நா.யோகேந்திரநாதன்!

உலகை புரட்டிய ஒக்டோபர் 10! - நா.யோகேந்திரநாதன்!


1017 ஒக்டோபர்

இந்த நாள் உலக வரலாற்றில் தனக்கென ஒரு உன்னதத்தால் தன்னை அலங்கரித்து ஒப்பற்ற பெருமையைப் பெற்றது. அன்றுதான் உலகில் முதல் முதலாக ஒரு உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரம் பிரகடனம் செய்யப்பட்டது ஒரு பெரும் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய மாபெரும் புரட்சியின் ஆரம்பமாகவும் இனம் காணப்பட்டது.

அந்த மகத்தான புரட்சி உலகமெங்கும் ஏற்படுத்திய உணர்ச்சி பெரும் அலையாய் எழுந்து பல்வேறு நாடுகளிலுமுள்ள பாட்டாளி வர்க்கம் எழுச்சி பெற்றது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள், உட்படப் பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கமும், தேசிய சக்திகளும் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டன.

இன்று பல உழைக்கும் வர்க்க அரசியலதிகாரம் திசை திருப்பப்பட்டு மீண்டும் முதலாளித்துவப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டபோதிலும் சோஷலிசத் தத்துவங்களும் சோஷலிச நாடுகளும் இன்றுவரை ஏகாதிபத்திய சக்திகளின் கொடிய சுரண்டலுக்கும் மேலாதிக்கத்துக்கும் பெரும் சவாலாகவே விளங்கி வருகின்றன.

ஒக்டோபர் புரட்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி பலவித இன்னல்களுக்கும் பேரி்ழப்புகளுக்கும் முகம் கொடுத்தே முன்னேறிச் சென்று உலக வல்லரசாக எழுந்து நின்றது என்பது மட்டுமின்றி மனிதனை முதல் முதல் விண்வெளிக்கு அனுப்பி விஞ்ஞானத்திலும் ஒப்பற்ற சாதனை படைத்தது.

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் இவ்வாறங்கே வெம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையையே அறமாகித் தீர்த்த போதில் அம்மை மனங்கொண்டிட்டாள் அடி பரவி உண்மை சொல்லும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடுதல் விழியாவy நோக்கினாள்! முடிந்தான் காலன்.

இது சோவியத் புரட்சியின் வெற்றியால் மகாகவி சுப்பிரமணிய பாரதியிடம் எழுந்த பேரானந்தக் களிப்பில் எழுந்த பாடல்.

1905ல் ரஷ்யாவின் தொழில் நகரமான சென்ற். பிட்டஸ்பேர்க் நகரில் ஜனவரியில் பெரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பாகிறது. அவர்களின் 8 மணி நேர வேலை, போதிய ஊதியம் போன்ற கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படவே போராட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில் ஜப்பானிய – ரஷ்ய கப்பற்படை கப்பலான “பொட்டம்கின், கப்பலில் கடற்படையினருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகப் போராட்டம் வெடிக்கிறது. 1905 ஜூனில் வெடித்த ஆயுதப் போராட்டம் பரவி அக்டோபரில் சென்ற். பீற்றஸ் பேர்க்கில் புரட்சியாக வெடிக்கிறது. எனினும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டுப் புரட்சி தோற்கடிக்கப்படுகிறது.

தலைவர் லெனின் தலைமறைவாகி ஸ்பெயினுக்குப் பின்வாங்கி ரஷ்யாவில் மீண்டும் புரட்சியைக் கட்டியெழுப்பும் பணிகளை ஸ்டாலின், மாலங்கோவ் போன்ற தலைவர்கள் மூலம் முன்னெடுக்கிறார்.

1905ல் இடம்பெற்ற புரட்சியால் அமைக்கப்பட்ட “டூமா” என்ற பாராளுமன்றத்தை “கெரன்ஸ்கி” தலைமையிலான தேசிய முதலாளித்துவக் கட்சி 1917 பெப்ரவரியில் கைப்பற்றுகிறது. 1917ல் ஒக்டோபர் 10ல் லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்.

புதிய பாட்டாளி வர்க்கப் புரட்சிகர தேசம் மலர்கிறது. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டது மட்டுமின்றி இன ஐக்கியத்தின் மூலம் ஒரு முன்னேறிய மகிழ்ச்சிகரமான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்ற உண்மையை உலகுக்கு நடத்திக் காட்டிய ஒரே ஒரு தேசம் சோவியத் யூனியன் மட்டுமே.

“ஒன்றிணைந்த நாட்டில் பிரிந்து போகக் கூடிய உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட சுயாட்சி”

இதுதான் அவர்களின் இனப்பிரச்சினைத் தீர்வின் தாரக மந்திரம்.

அக்கொள்கை காரணமாக சோவியத் யூனியன் ஒரு வலிமை பெற்ற வல்லரசாக எழுச்சி பெற்றது. அங்கத்துவ தேசங்களும் வலிமை பெற்று தனித்தனி நாடுகளாகப் பிரிந்து வலிமை பெற்று நிற்கின்றன.

உலக மக்களைப் பொறுத்தவரை ஒக்டோபர் 10 எவ்வாறு புரட்சிகர அரசியலில் ஒரு திருப்பு முனையாக விளங்கியதோ அவ்வாறே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? நண்பர்கள் வேடத்தில் வரும் எதிரிகள் யார் என்பதை 1987 ஒப்டோபர் 10 மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது.

சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவரும் அழிவு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி், தமிழ் மக்களைக் காப்பாற்றப் போவதாகக் கூறி இலங்கையில் கால் பதித்த இந்திய அமைதிப் படை 1987.10.10 அன்றுதான் தமிழ் மக்களுக்கு எதிரான போரைப் பிரகடனம் செய்தது. அன்றே யாழ்ப்பாணத்திலிருந்து முன்னேறிய இந்தியப் படை கொக்குவில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டபோது, லெப்.கேணல் சந்தோஷம் உட்படப் பல பொது மக்களும் கொல்லப்படுகின்றனர். கோப்பாயில் இடம்பெற்ற தடுப்புச் சமரில் கப்டன் மாலதி வீரச்சாவடைகிறாள்.

சில நாட்களில் விடுதலைப் போராளிகள் மணலாற்றுக் காடுகளுக்குப் பின்வாங்குகின்றனர். இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சகல சுற்றி வளைப்புகளும் தோற்கடிக்கப்படுகின்றன. இறுதியில் 1990 முற்பகுதியில் இந்திய இராணுவம் அவமானத்துடன் இலங்கையை விட்டு வெளியேறுகிறது.

1905ம் ஆண்டு புரட்சி தோற்கடிக்கப்பட்டதுடன் பாட்டாளி வர்க்கம் உறங்கி விடவில்லை. பின்பும், நம்மைக் கட்டியெழுப்பி அரசியல் அதிகாரத்தை 1917ல் கைப்பற்றினர்.

1987ல் காடுகளுக்குப் பின்வாங்கிய விடுதலைப் போராளிகள் அதே காடுகளைத் தளமாகக் கொண்டே பெரும் இந்தியப் படையைத் தோற்கடித்து நாட்டை விட்டே வெளியேற்றினர்.

“சரியான கொள்கைகளும் சரியான இலட்சியங்களும் சரியான தந்திரோபாயங்களுடன் மேற்கொள்ளப்படும்போது வெற்றியடைவது நிச்சயம். சரியான கொள்கைகள் சில தந்திரோபாயத் தவறுகள் காரணமாகப் பின்னடைவுக்கு உட்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அது தோல்வியல்ல, பாடங்கள்? ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன் செல்லும்போது மீண்டும் வெற்றியின் கதவுகள் தானாகத் திறக்கின்றன”.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

10.10.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, உலகம், கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE