Thursday 18th of April 2024 02:49:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரு அமைச்சரின் தேசபக்த அழைப்பு! - நா.யோகேந்தி்ரநாதன்!

ஒரு அமைச்சரின் தேசபக்த அழைப்பு! - நா.யோகேந்தி்ரநாதன்!


கடந்த சில வாரங்களின் முன்பு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் நாடு சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கம் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க, தனியார் ஊழியர்களும் தங்கள் ஒரு மாதச் சம்பளத்தை வழங்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். அதற்கமைவாகச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒரு மாத ஊதியத்தை அரச நிதிக்கு வழங்கியிருந்தனர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தங்கள் மாத ஊதியத்தின் அடிப்படையில் கடன் பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாகத் தங்கள் மாத ஊதியத்தை வழங்க முடியாதெனவும் அறிவித்து விட்டனர்.

அத்துடன் உறக்கத்துக்குப் போய்விட்ட அந்த அழைப்பு தற்சமயம் மீண்டும் துயில் எழுந்து விட்டது. அமைச்சர்தான் அந்த விடயத்தைக் கைவிடவில்லையெனவும் அது தொடர்பாக தான் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு இப்படி ஒரு ஆசை வந்ததில் ஆச்சரியப்பட இடமில்லை. இலங்கை அரசியலில் ஜனாதிபதியையோ, பிரதமரையோ குளிர வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் இடம்பெறுவது அப்படி ஒன்றும் அதிசயமல்ல. இப்படியான அறிவித்தல் மூலம் நம்பிக்கைக்குரிய நல்ல அமைச்சராக விளங்க முடியுமென அவர் கருதியுமிருக்கலாம்.

எப்படியிருந்த போதிலும் நாட்டின் அந்நியச் செலாவணி வருமானம் கடன் தவணைப் பணமும் வட்டியும் கட்டமுடியாத நிலையில் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்கள் கடும் நிபந்தனைகளுடன் தயங்கித் தயங்கிக் கடன் வழங்கி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. சலுகையை இரத்துச் செய்யும் அறிகுறி தென்படும் இந்த நிலையில் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது உண்மை.

அதிலிருந்து மீள அமைச்சர் மக்களினதும் அரச தனியார் ஊழியர்களதும் பங்களிப்பைக் கோரியுள்ளார்.

இவ்வாறு நெருக்கடிகள் எழுவதும் சில ஆட்சியாளர்கள் மக்களின் பங்களிப்புடன் வெற்றி கண்டும் துரிதமாக முன்னேறியமை உலக வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்களல்ல.

1960 காலப்பகுதியில் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்குமிடையே ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடு காரணமாக சோவியத் திடீரென சீனாவுக்கு வழங்கி வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் இடைநிறுத்தியது. பிரமாண்டமான திட்டங்களை அமுல்படுத்த சீனாவால் முடியாத நிலையில் மாஓ சேதுங் அஞ்சி விடவில்லை.

“யாங்ஷியின் சீ்ற்றத்தைக் கட்டுப்படுத்துவோம்” என்ற அறைகூவலை விடுத்தார். வருடாவருடம் யாங்ஷி நதியில் வெள்ளப் பெருக்கால் பல இலட்சம் சீன மக்கள் மடிந்தனர். எனவே யாங்ஷிக்கு அணை கட்டுவதன் மூலம் தரிசு நிலங்களையெல்லாம் விளை நிலங்களாக மாற்றவும் சீனாவின் பெரும் பகுதியை மின்சார மயப்படுத்தவும் பல்லாயிரம் மைல்கள் போக்குவரத்தைச் சுலபப்படுத்தவும் முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் ஐந்து இலட்சம் மக்கள் உணவுக்கும் உடைக்கும் மட்டும் பணியாற்றுவது எனக் களமி்றங்கினர். எந்தவித கனரக வாகனங்களின் துணையுமின்றி உழவு இயந்திரங்கள், ஒரு சில்லு வண்டிகள். மண் வெட்டி, கூடைகள் என்பவற்றைக் கொண்டே வேலைகள் இடம்பெற்றன. இரண்டு வருடங்களில் “யங்ஷி” அணை நிமிர்ந்து நிற்க அதன் மேலால் ரயிலும் வாகனங்களும் என இரு வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதைப் பாடமாகக் கொண்ட ஏனைய சீன மக்களும் தங்கள் கடும் உழைப்பினால் தங்கள் தங்கள் பகுதிகளைச் சுபீட்சமான பூமிகளாக மாற்றினர்.

தமது சொந்த நாட்டு வளங்களிலும் சொந்த நாட்டு மக்களின் உழைப்பிலும் வேகமாக வளர்ச்சியடைந்த சீனா இன்று உலகப் பொருளாதார, இராணுவ, அரசியல் வல்லரசாக உருவாகி விட்டது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கு நிதியை அள்ளி வழங்குமளவுக்கு அது வலிமை பெற்றுவிட்டது.

அப்படியொரு ஆசை அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்குமம் வந்திருக்கலாம்.

எனினும் இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது?

இலங்கையில் தற்சமயம் நிலவும் நிலைமையில் மக்கள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி பணத்தை வழங்கினால் அது தேசத்தின் அபிவிருத்திக்கும் மக்கள் நலன்களுக்கும் பயன்படுமா அல்லது சில பண முதலைகளின் பைகளுக்குள் போய் விடுமா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்குமா?

நாட்டில் வெள்ளைப் பூட்டுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரும் மோசடி பணிப்பாளர் ஒருவரின் ராஜினாமா மூலமே அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு மருந்துக் கூட்டுத்தாபனத்தில் இணையத் தளத்தில் தரவுகளை அழித்து மேற்கொண்ட மோசடி தொடர்பாக இரு தொழில்நுட்பவியளார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரிசிக்கு விதிக்கப்பட்ட நிர்ணய விலை அரிசி ஆலை உரிமையாளர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டு விட்டது. அதேபோன்று பால்மா, எரிவாயு என்பவற்றின் விலையும் அவற்றின் இறக்குமதியாளர்களின் மிரட்டல் காரணமாக மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.

அவை ஒருபுறமிருக்க நாட்டின் மிகப் பெரும் மோசடிகளான மத்திய வங்கிப் பிணை முறி மோசடி, அவன்காட் நகரும் ஆயுதக் களஞ்சிய மோசடி போன்ற பல வழக்குகள் பயனுள்ள முடிவுகளைத் தரும் என்பதற்கு எவ்வித அறிகுறியும் இல்லை. பயங்கரக் கொலைக் குற்றவாளிகள், போதைவஸ்து மன்னர்கள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுகின்றனர்.

இன்னொருபுறம் கொழும்பு துறைமுக நகரம், வெரப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம், திருமலை என்ணெய் குதம் என்பன வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு, கொழும்பு மேற்கு முனையம் இந்திய அத்வானி நிறுவனத்துக்கும் கையளித்தாகிவிட்டது.

இந்த நிலையில் எமது மக்களின் தியாகங்களும் கடும் உழைப்புகளும் எங்கு போய்ச் சேரும் என்பதற்கு அமைச்சர் பந்துல பதில் வழங்குவாரா?

சீனாவில் உயர்மட்டத் தலைவர்களிலிருந்து அடிமட்ட மக்கள் வரை நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்துப் பணி செய்தனர். அதனால் அந்த நாடு வேகமாக முன்னேறியது.

இங்கு சாதாரண மக்களிடம் கடும் உழைப்பையும், தியாகங்களையும் கோரும் கூட்டம், கொள்ளை இலாபம் அடிக்கும் பெரும் முதலைகளையும் மோசடிக் கும்பலையும் ஊழல் பேர்வழிகளையும் தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் வரை நாடு பயன்பெறுமா?

உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஊழல் கோலோச்சும் ஒரு நாட்டில் மக்களின் அர்ப்பணிப்பாலும் கடும் உழைப்பாலும் எதையும் சாதிக்க முடியுமா?

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

12.10.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE