Sunday 24th of October 2021 05:31:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கானுடன் நல்லுறவை பேண முன்வாருங்கள்; சர்வதேசத்திடம் நேசக் கரம் நீட்டும் தலிபான்கள்!

ஆப்கானுடன் நல்லுறவை பேண முன்வாருங்கள்; சர்வதேசத்திடம் நேசக் கரம் நீட்டும் தலிபான்கள்!


ஆப்கானிஸ்தானுடன் நல்லுறலைப் பேண சா்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் ஆப்கானில் பெண்கள் மற்றும் சிறுமிகளில் கல்வி பெறும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்ற சா்வதேச நாடுகளின் கோரிக்கை தொடர்பிலான உறுதிமொழிகளை வழங்குவதை அவா் தவிர்த்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளை கல்வி கற்க அனுமதித்தல், வேலைக்குச் செல்ல அனுமதித்தல் போன்ற விடயங்களில் முடிவுகளை எடுக்க கால அவகாசம் தேவை எனவும் அவா் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நீடித்த அமெரிக்காவின் இராணுவத் தலையீடு முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு பெரும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மத்திய வங்கி சொத்துகளில் பில்லியன் கணக்கானவை முடக்கப்பட்டுள்ளன. அத்துடன், சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதிக்கான அணுகலை நிறுத்திவிட்டன.

அத்துடன், வங்கிகளில் பணம் இல்லாததால் ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

இந்த நெருக்கடிகளால் குறைந்தது 18 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டோஹாவில் மோதல் மற்றும் மனிதாபிமான ஆய்வுகளுக்கான மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றுப் பேசிய ஆப்கானிஸ்தானின் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, சர்வதேச சமூகம் எங்களுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு ஒத்துழைத்தால் மட்டுமே நாமும் உலகத்துடன் நேர்மறையான வழிகளில் இணைந்து செயலாற்ற முடியும் எனவும் அவர் கூறினார்.

ஆனால் சர்வதேச சமூகத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான பெண்கள் உயர்தர கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலிபான்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தலிபான்களின் இஸ்லாமிய இராச்சிய அரசு கவனமாகவே நகர்கிறது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று சில வாரங்களே ஆகின்றன. 20 ஆண்டுகளாக சர்வதேச சமூகத்தால் செயற்படுத்த முடியாத சீர்திருத்தங்களை நாங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்றும் அமீர் கான் முத்தாகி கூறினார்.

முன்னைய அமெரிக்கா சார்பு ஆப்கான் அரசிடம் அதிக நிதி ஆதாரங்கள் இருந்தன. அவர்களுக்கு வலுவான சர்வதேச ஆதரவும் இருந்தது. இவை எதுவும் இல்லாமல் இரண்டு மாதங்களில் அனைத்து சீர்திருத்தங்களையும் செய்யுமாறு சா்வதேசம் எவ்வாறு வலியுறுத்த முடியும்? எனவும் அவா் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என எச்சரித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், அங்கு பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டுமென நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய குடெரெஸ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை ஏற்க மறுக்கும் தலிபான்களில் செயற்பாடு அவர்களின் கனவுகளை சிதைக்கும். பெண்கள் வேலைக்குச் செல்வதை தலிபான்கள் தடுத்தால் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது எனவும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE