Friday 19th of April 2024 02:18:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
நோா்வே தலைநகர் ஒஸ்லோவில் வில், அம்புடன் ஆயுததாரி மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் பலி!

நோா்வே தலைநகர் ஒஸ்லோவில் வில், அம்புடன் ஆயுததாரி மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் பலி!


தலைநகர் ஒஸ்லோவின் தென்மேற்கில் உள்ள காங்ஸ்பெர்க் நகரில் வில், அம்பு ஆகிய ஆயுதங்களைக் கொண்டு ஒருவர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை 18:13 மணியளவில் (16:13 GMT) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டு ஐவரைக் கொலை செய்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்வதற்கு முன்னர் அவருக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் பயங்கரவாத செயலா? அல்லது தனிநபர் தாக்குதலா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இது திகிலூட்டும் தாக்குதல் என நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார். தாக்குதலால் பலர் அச்சத்தில் உறைந்துள்ளனர். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என தாக்குதலை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவா் குறிப்பிட்டார்.

காங்ஸ்பெர்க்கின் மேற்குப் பகுதியில் உள்ள கூப் எக்ஸ்ட்ரா வணிக வாளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்தவர் மீது கொலையாளி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் சம்பவ நேரம் வணிக வளாகத்தில் இருந்த கடமையில் இல்லாத பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார்.

உள்ளூர் நேரப்படி 18:47 மணிக்கு தாக்குதலாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட முன்னர் தாக்குதலாளிக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வணிக வளாகத்துக்குள் இருந்து ஆட்கள் அச்சத்துடன் கத்தும் சத்தம் கேட்டது. ஒரு நபர் வில், அம்புடன் அங்கு நின்றிருந்தார். சிறிது நேரத்தில் வணிக வளாகத்துக்குள் இருந்து உயிரச்சத்துடன் ஆட்கள் வெளியே ஓடி வருவதைக் கண்டேன் என சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலாளி வில், அம்பு தவிர வேறு ஆயுதங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தினாரா? என்பது தெரியவில்லை அது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர் என காங்ஸ்பெர்க் நகர முதல்வர் ஆஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாக்குதலை அடுத்து சம்பவ இடத்துக்கு அம்புலன்ஸ், பொலிஸ் கார்கள் மற்றும் ஹெலிகப்டர்கள் உட்பட டசின் கணக்கான அவசர வாகனங்கள் விரைந்தன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களில் சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் நிலைமை குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என நோர்வே நீதி அமைச்சர் மோனிகா மெலாண்ட் அலுவலகம் ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையாக துப்பாக்கிகளை எடுத்துச் செல்லுமாறு நோர்வே பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக நோர்வே பொலிஸார் உள்நாட்டில் கடமையின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: நோர்வே, ஒஸ்லோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE