Sunday 24th of October 2021 05:12:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவின் தோற்றத்தைக் கண்டறியும்  இறுதி முயற்சியாக புதிய நிபுணர் குழு நியமனம்!

கொரோனாவின் தோற்றத்தைக் கண்டறியும் இறுதி முயற்சியாக புதிய நிபுணர் குழு நியமனம்!


கொரோனா வைரஸின் தோற்றத்தைக் கண்டறியும் மற்றொரு முயற்சியாக 26 நிபுணர்கள் அடங்கிய புதிய அறிவியல் ஆலோசனைக் குழுவொன்றை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா வைரஸின் தோற்றத்தைக் கண்டறியும் கடைசி முயற்சியாக இந்த நிபுணர் குழு தனது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீன நகரமான வுஹானில் கொரோனா வைரஸ் முதன்முதலில் தோற்றம் பெற்றதாகக் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னரும் அது முதலில் எவ்வாறு பரவியது? என்பது குறித்த கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வுஹான் விலங்குணவுச் சந்தையில் விலங்குகளிடமிருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதா? அல்லது ஆய்வகத்தில் இருந்து கசிந்து பரவியதா? என புதிய நிபுணர் குழு ஆராயும்.

எனினும் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்து பரவியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சீனா உறுதியாக மறுத்து வருகிறது.

கடந்த பெப்ரவரியில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவொன்று வைரஸின் தோற்றம் குறித்து சீனா - வுஹான் நகரில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுகளின் பின்னர் இந்தக் குழு உறுதியான முடிவுக்கு வரவில்லை. வெளவால்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் எனத் தெரிவித்த இந்தக் குழுவினர், இது குறித்து மேலதிக ஆழமான ஆய்வுகள் தேவை என அறிவித்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆராயும் முயற்சிகளுக்கு சீனா முழுமையாக ஒத்துழைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீனா உரிய தரவுகளை வழங்க மறுப்பதாலும் வெளிப்படைத்தன்மை இல்லாததாலும் விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.

தற்போது முன்மொழியப்பட்ட புதிய குழுவில் முன்னர் வுஹானுக்கு விஜயம் செய்து ஆய்வுகளை முன்னெடுத்த ஆறு நிபுணர்கள் அடங்குகின்றனர்.

இதேவேளை, புதிய குழு கொரோனா வைரஸ் தவிர ஏனைய அதிக ஆபத்துள்ள நோய்க்கிருமிகளின் தோற்றம் குறித்தும் ஆராயும்.

எதிர்காலத்தில் மற்றொரு தொற்று நோய் நெருக்கடியைத் தவிர்க்க புதிய வைரஸ்களில் தோற்றம் குறித்துப் புரிந்துகொள்வது அவசியம் என டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

இதற்கிடையே, உலக சுகாதார அமைப்பின் புதிய நிபுணர் குழுவின் ஆய்வுப் பணிகள் அரசியலாக்கப்படக்கூடாது என ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான சீனாவின் தூதர் சென் சூ தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE