Wednesday 24th of April 2024 08:07:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாகாணசபை தேர்தலும் தமிழ் அரசியல் தலைமைகளும் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

மாகாணசபை தேர்தலும் தமிழ் அரசியல் தலைமைகளும் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை அரசியலில் மகாணசபைக்கான தேர்தல் களம் மீளவும் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பல தடவை அறிவிப்புக்களை வெளியிட்ட போதும் பின்பு கைவிட்ட தேர்தலை மீளவும் நடாத்த வேண்டிய தேவை இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அத்தகைய தேவை இந்தியாவினதும் ஜெனிவா அரங்கினதும் கையாள்கையாக காணப்படுவதாக குறிப்பிடுகின்ற போதும் நடைமுறையில் தேர்தலை பழைய தேர்தல் முறைமுறைக்குள் நிகழ்த்தவதற்கும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்றும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனாலும் இவ்வாறான அறிவிப்புக்கள் பலதடவை இலங்கை அரசாங்கம் வெளியிட்ட போதும் தேர்தலை நடாத்தாம ஒத்தி வைத்திருந்தது. இக்கட்டுரை மாகாகணசபை தேர்தலை வடக்கு - கிழக்கு தமிழ்தரப்பும் மக்களும் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை தேடுவதாக உள்ளது.

முதலாவது, இந்திய வெளிவிவகார செயலாளரும் இந்திய தரப்பும் 13ஆம் திருத்த சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக முன்மொழிந்து வருகிறது. அதுவும் இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் 13ஆம் திருத்த சட்ட அடிப்படையிலிருந்து தீர்வை நோக்குதல் என்ற கருத்து நிலையை முன்வைத்திருந்தார்.

எனினும் இவ்வளவு இழுபறிக்கு பின்னால் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் அரைகுறையான அதிகார கட்டமைப்பை கொண்டதாகவே இருக்க போகின்றது என்பது தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் உரையாடலில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. முழுமையான அமுல்படுத்தலின்றி பலவீனமான மாகாணசபையை ஒப்படைத்தல் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை தீர்வின்றிய பொறிமுறையாகவே விளங்கும் என்பதை கடந்த கால அனுபவத்தில் புரிந்து கொண்டுள்ளனர். ஜெனிவா அரங்கிலும் இந்தியாவின் தொடர்ச்சியான இராஜீக நகர்வாலும் முழுமையானதொரு மாகாண சபைக்கான தேர்தலை நடாத்தவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

ஆனால் அதனை தமிழ் அரசியல் தரப்பு உரையாடும் வெளிகள் இராஜதந்திரிகளோடு உரையாடாது வெறுமனே கருத்துக்களாக வெளிப்படுத்துவது எத்தகைய பயனையும் ஏற்படுத்த போவதில்லை. தமிழ்த்தரப்பு மாகாணசபைக்கான முழுமையான பக்கங்களை ஒப்புவிப்பதற்கான நடவடிக்கைகளையோ அல்லது 13 க்கு அப்பால் செல்வதற்கான நடவடிக்கைகளையோ இதுவரை முன்னெடுக்கவில்லை.

இரண்டாவது, வடக்கு-கிழக்கை மையப்படுத்திய மகாணசபைக்கான தீர்வு அதிகம் முரண்பாட்டை கட்சிகளுக்குள்ளேயும் மக்களுக்கிடையிலும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளருக்கான தெரிவில் ஒரே கட்சிக்குள்ளேயே குழப்பம் ஆரம்பித்துள்ளது. அத்தகைய குழப்பம் கட்சிக்குள்ளேயே அதன் வெற்றிக்கான வாய்ப்புக்களை சீர்குலைக்கும். அதிகாரமற்ற ஒரு மாகாணசபையை கையாளுவதற்கே இத்தகைய போட்டித்தன்மையோ, குழப்பமோ, முரண்பாடோ தேவையில்லை.

அதனால் கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் தனிமனித மோதல்களும் உடைவுகளும் பிரிவினைக்கான வாய்ப்பினை மேலும் மேலும் அதிகரிக்கும். பாராளுமன்ற தேர்தலில் பிரிந்து நிற்கும் கட்சிகள் அதிகமான வாக்குகளை சிதறவிட்டதோடு எதிர்த்தரப்பின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எனவே வடக்கு-கிழக்கு பலமான ஓர் ஐக்கிய முன்னணியினை நிறுவி இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்களை முன்னிறுத்தி அதிகாரமற்ற மாகாண சபையை கைப்பற்றுதல் அவசியமாகும். காரணம் அதுவோர் அதிகாரமற்ற அமைப்பு என்பதை உலகத்துக்கு தெரியப்படுத்த முயலுதல் வேண்டும்.

மூன்றாவது, மாகாண சபை தேர்தலில் வடக்கும் சரி, கிழக்கும் சரி பெரிய கட்சிகளையும் அதன் மூத்த உறுப்பினர்களையும் பிரதிநித்துவப்படுத்த போட்டியிடுகிறது. ஆனால் ஒரு அரசியல் மரபை உள்ளூராட்சி சபையிலிருந்து மாகாண சபைக்கும் மாகண சபையிலிருந்து பாராளுமன்றத்துக்கும் புதிய தலைமைகளை அறிமுகப்படுத்துவதும் வளர்த்தெடுப்பதுவும் அடிப்படை நியமமாக காணப்படுகிறது. அதனை நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலிலும் வடக்கு-கிழக்கில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் செயற்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து முதியவர்களுக்கும் அனுபவம் என்ற அடிப்டையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்பது எதிர்கால அரசியலையும் எதிர்கால சமூகத்தையும் சிந்திக்காததன் விளைவாகவே அமையும்.

அத்தகைய புதிய அறிமுகங்களை தமது அடிவருடிகளை முன்னிறுத்தாது ஆளுமையற்ற சலுகைகளுக்கு இடம்கொடுக்கக்கூடியவர்களை முன்னிறுத்தாது செயற்படுத்துவதோடு இழந்து போன தமிழ்த்தேசியத்தை மீட்டெடுப்பதற்கான ஆளுமையுடைய தலைமைகளை அறிமுகப்படுத்தல் அவசியமாகும். அதுமட்டுமன்றி பெண்களையும் இளைஞர்களையும் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவைப்பாடு சமகாலத்தில் எழுந்துள்ளது.

நான்காவது, இம்மாகாணசபை தேர்தல் தனித்து அரசியல் பிரச்சினைகளை மட்டும் முதன்மைப்படுத்தாது மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் அதற்கு உரித்தான சூழலையும் உருவாக்கக்கூடிய விதத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் முதல் வேட்பாளர்கள் வரை அறிமுகப்படுத்த வேண்டும். சாதாரண மக்களையும் அவர்களது வாழ்க்கை தரத்தையும் பாதுகாக்கும் பொறிமுறையொன்று மாகாண சபைக்கூடாக கட்டி வளர்க்கும் ஆளுமைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளே காணப்படுவதுடன் முன்வைக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் முதுகெலும்புடைய ஆளுமைகள் இனங்காணப்பட வேண்டும்.

இதனூடாக அடிப்படை பிரச்சினைகளுடைய தீர்வுகள் எட்டப்படுகின்ற போது மக்களும் தேசியத்தோடு வடக்கு-கிழக்கு பிரதேசத்தோடும் ஒன்றித்து இயங்குகின்ற சூழலும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஐந்தாவது, கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை வடக்கைவிட அதிக குழப்பங்களும் நெருக்கடிகளும் கொண்டிருக்கிறது. தமிழருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் அநேகமான அம்சங்கள் நெருக்கடிக்கு உள்ளாயுள்ளது. குறிப்பாக பெரும்பான்மை சிங்கள மக்களும் இஸ்லாமிய மக்களும் தமிழர்களுடைய வாக்கு விகிதாசாரத்தை ஈடுசெய்யக்கூடிய விதத்தில் காணப்படுவதோடு அத்தகைய சூழலில் எவ்வாறான அணுகுமுறையை பின்பற்றுவது என்பதில் கடந்த காலங்களில் பாரிய குழப்பங்கள் நிலவியது. கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீதான விமர்சனம் கிழக்கு மாகாணம் பொறுத்தே அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டது.

அவ்வாறான சூழல் மீளவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் காணப்படுகிறது. தமிழரசியல் கட்சிகளின் பிரிவினையும் தேசிய கட்சிகளின் செல்வாக்கும் பெரும்பான்மை மக்களது வாக்கு விகிதாசாரமும் தமிழ்-முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கிடையிலே இசைவை நோக்கி பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தை விட இவ்அதிகரிப்பு அதிகமாக வளர்ந்துள்ளது. ஆயினும் நடைமுறையில் தமிழ்த்தேசிய கட்சியிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதும் பிற சமூகங்களோடு ஒப்பந்த அடிப்படையிலும் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டள்ளது. அதனால் கிழக்கு மாகாணத்தில் வடக்கை போலல்லாது நிதானமான உத்திகளை வகுக்க வேண்டும். எல்லா சமூகங்களுடனும் ஒருங்கிணைந்து போகக்கூடிய ஆளுமைகளை தெரிவு செய்ய வேண்டும். அத்தோடு புதிய தலைமைகளை அறிமுகப்படுத்துவதும் அதற்கான வாய்ப்புக்களை ஒப்படைப்பதுவும் அவசியமானதாக தமிழர் அரசியல் தரப்பில் காணப்படுகிறது.

எனவே வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசிய தரப்பு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்வைத்து அதற்கான அரசியல் பக்கங்களை சரியாக அடையாளப்படுத்த செயற்படுதல் அவசியமாகும். அதிகாரமற்ற மாகாணசபை என்பது அடையாளப்படுத்தவது என்பது தமிழ்த்தரப்பாகவே இருத்தல் வேண்டும். ஆனால் அத்தகைய தமிழ்த்தரப்பு இலங்கை அரசியலோடும் பிராந்திய சர்வதேச அரசியலோடும் தமிழ்த்தேசிய பரப்பில் இருந்து கொண்டு பயணிப்பதற்கான கொள்கைவகுப்பும் உரையாடலும் செயற்பாடும் முதன்மையானது. அவ்வகை பொறுப்புடமையை தமிழ்த்தேசிய கட்சிகள் தமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை கடந்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையாக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினையாக கொண்டு செல்ல முயல்வது அத்தியவசியமான தேவைப்பாடாக எழுந்துள்ளது.

பிராந்திய மட்டத்தில் வலுத்துள்ள அதிகார போட்டிக்குள் மாகாண சபை தேர்தலும் அதன் தெரிவுகளும் தமிழ் மக்களின் அரசியலையும் அடிப்படை பிரச்சினைகளையும் முதன்மைப்படுத்துவது அதன் ஆளுமைகளில் தங்கியுள்ளது. எனவே ஐக்கியப்படுதல், பொது இணக்கப்பாட்டிற்கு வருதல், ஐக்கிய முன்னணியை கட்டுதல், மாகாண சபை தேர்தல் பொறிமுறையை தமிழ் மக்களின் அரசியல் பெறுமானத்தை உத்தரவாதப்படுத்த வழிவகுக்கும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE