Monday 29th of November 2021 06:34:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல் 77! - நா.யோகேந்திரநாதன்!

எங்கே தொடங்கியது இனமோதல் 77! - நா.யோகேந்திரநாதன்!


ஆட்சியாளர்களின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு! - நா.யோகேந்திரநாதன்!

'எமது ஜுலை தமிழின அழிப்பினூடாக சிங்கள தேசம் இறுதியாக ஒரு செய்தியை தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தமிழர் தேசத்திற்கும் உலகுக்கும் அறிவித்தது. மிதவாதத் தமிழ்த் தலைவர்கள், தமிழர் உரிமைகளுக்காக சிங்களப் பெரும்பான்மை அரசுடன் ஜனநாயக வழிமுறைகளில் போராடுவதால் எவ்விதமான நியாயமான தீர்வையும் எட்டப் போவதில்லை என்பது முதலாவது செய்தியாகும். சிறுபான்மைத் தமிழருக்கு எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடும் அதை முன்னின்று நடத்தும் இளைஞரோடும் இணைந்து தமது தேசத்தின் விடுதலைக்குப் போராடுவதைவிட வேறு வழியில்லையென்பதை மிகவும் தெளிவாக இரண்டாவது செய்தி அறிவித்தது. தமிழர் தமது பாரம்பரிய பிரதேசமும் அவர்களுக்குச் சொந்தமானதுமான வடக்குக் கிழக்கில் வாழ்ந்தாக வேண்டுமேயொழிய சிங்களப் பெரும்பான்மையினர் வாழ்கின்ற தென்னிலங்கையில் அல்ல என்ற செய்தியை தமிழருக்கும் சிறப்பாகச் சர்வதேசத்துக்கும் உரத்துக் கூறியமை மூன்றாவது செய்தியாகும். ஸ்ரீலங்கா ஒருநாடு, அங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சிங்கள தேசம், மற்றது தமிழ்த் தேசம் என்பதைச் சிங்கள தேசம் தன் செய்கையால் காட்டி விட்டது'.

இது கி.மு.300 ஆண்டு தொட்டு கி.பி.2000 வரையிலான இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றாளர் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கையில் தமிழர்' என்ற நூலில் 1983ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இன அழிப்புக் கலவரம் தொடர்பாகவும் அது வெளிப்படுத்திய செய்திகள் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட கருத்தாகும்.

ஒரு தேசிய இனம் தனது மொழி, கலாச்சாரம், வாழிடம் என்பவற்றுக்கு உரிமை கோரி அவற்றைப் பேணி, வளர்த்துச் செழுமைப்படுத்துவது இயல்பான விடயமாகும். ஆனால் இலங்கையில் இலங்கை சிங்கள பௌத்த மக்களுக்குச் சொந்தமானது என்ற மகாவம்சம் சிந்தனை பௌத்த மதகுருமாரால் பரப்பப்பட்டு வந்தது.

இக்கருத்தியல் அநகாரிக தர்மபாலவால் நிறுவனமயப்பட்டு, தேசிய உணர்வு என்பது ஏனைய இனங்களுக்கெதிரான காழ்ப்புணர்வாகவும் குரோத உணர்வாகவும் வடிவம் கொடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.

சிங்கள மேட்டுக்குடியினர் தங்கள் மேலாதிக்கத்தையும், அதிகாரத்தையும் நிலைநிறுத்த அக்கருத்தியலை இறுகப்பற்றி சிங்களவரிடம் மக்கள் மயப்படுத்தினர்.

அதன் செயல்வடிவமே 1915ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், உயிர்ப்பலிகளும், பேரழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை சுதந்திரம் பெற்றபின்பு இப்போக்கு தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்ட நிலையில் மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், தனிச் சிங்களச் சட்டம், அரசியலமைப்பினூடாகத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பிரஜைகளாக்கப்பட்டமை போன்றவற்றால் தொடர்ந்து இன ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுத்த போதெல்லாம் இன அழிப்புக் கலவரங்கள் மூலமும் உயிர்ப் பலிகள், சொத்தழிப்பு, இராணுவ நடவடிக்கைகள் என்பன மூலமும் பதிலளிக்கப்பட்டன.

தமிழ்த் தலைமைகள் உணர்ச்சியூட்டும் மேடைப் பேச்சுகள் மூலமும் நடவடிக்கைகள் மூலமும் தமிழ் மக்களை எழுச்சி கொள்ள வைத்த போதிலும் தங்கள் ஆட்சியாளர்களுடன் மென்போக்கையும் விட்டுக் கொடுப்புகளையும் மேற்கொண்டு வந்தனர்.

எப்படியிருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது சத்தியாக்கிரகம், பாதயாத்திரை, எழுச்சி மாநாடுகள் போன்ற போராட்டங்களை நடத்துவதும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஒரு சமரசப் போக்கைக் கடைப்பிடிப்பதுமாகத் தமிழ்த் தலைமைகள் ஒரு பக்கச் சார்புப் போக்கைக் மேற்கொண்டு வந்தன. 1965 –1969 காலப்பகுதியில் தமிழரசுக் கட்சி ஐ.தே.கட்சி ஆட்சியில் பங்காளிகளாக இருந்து செயற்பட்ட போதிலும் ஒரு சிறு பிரச்சினையைக் கூடத் தீர்க்க முடியவில்லை.

1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தனிநாட்டுக் கோரிக்கை தமிழர் விடுதலைக் கூட்டணியால் பிரகடனப்படுத்தப்பட்டது. 1977ல் ஐ.தே.கட்சி ஆட்சிப் பீடமேறிய பின்பு 1977, 1981 ஆகிய காலங்களில் இனக் கலவரங்கள் என்ற பேரிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பேரிலும் யாழ். நூலகம், நகரம் எரிப்பு, உயிர்ப்பலிகள், சொத்தழிப்பு என அடுத்தடுத்து இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் பெரும் அநீதிகள் மத்தியிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை ஒருபுறம் ஒதுக்கி விட்டு அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்தியது.

எனினும் இராணுவக் கொடுமைகள் தொடர்ந்த வண்ணமுமிருந்த நிலையில் 1983 ஜுலை 23ல் விடுதலைப் புலிகள் ரோந்து சென்ற இராணுவ அணி மீது தாக்குதல் தொடுத்தனர். அதில் 13 படையினர் கொல்லப்பட்டனர்.

ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் இனவெறி தூண்டப்பட்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன 13 படையினர் கொல்லப்பட்டதை வைத்து இன அழிப்பை நாடு பரந்த ரீதியில் விரிவாக்குவதென முடிவெடுத்தார்.

எனவே உயிரிழந்த படையினரின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் 24ம் திகதி மாலை இறுதிக் கிரியைகளுக்காகக் கொண்டு வரப்படுமென அறிவிக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக கனத்தையில் கூட ஆரம்பித்த மக்கள் மாலை ஏழு மணியளவில் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். நேரமாக நேரமாகக் கூட்டத்தில் குழப்பநிலை உருவாகிறது. படையினரின் சடலங்கள் இறுதிக் கிரியைகளுக்காக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும்படி கோஷமிடுகின்றனர்.

ஒருகூட்டம் சடலங்களைப் புதைக்க வெட்டப்பட்டிருந்த குழிகளை மூடியும், ஈமக் கிரியைகளுக்கான தயாரிப்புகளைத் தூக்கியெறிந்தும் கலாட்டா செய்கின்றனர். இந்த நிலைமையில் பொலிஸ் அதிரடிப்படை களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இரவு பத்து மணியளவில் படையினரின் உடல்கள் இராணுவத் தலைமையகத்தில் வைத்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுமென ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. பெற்றோர் வாகனங்களில் ஏற்றப்பட்டு இராணுவத் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

கனத்தையில் கூடியிருந்தவர்கள் சிறிது சிறிதாகக் கலைய ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஒரு கூட்டத்தினர் தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்து அங்குள்ள பெட்டிக் கடைகளில் மறைத்து வைத்திருந்த 'பெற்றோல்' ரின்களைக் கையில் எடுத்துக் கொண்டு வீதியில் இறங்குகின்றனர்.

கனத்தையிலிருந்து பொரளைச் சந்தி வரை இருந்த தமிழரின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பன தாக்கப்பட்டு எரியூட்டப்படுகின்றன. கண்ணில்படும் தமிழர்கள் ஆண்கள், பெண்கள், முதியோர்கள், சிறுவர்கள் என அனைவரும் நையப்புடைக்கப்படுகின்றனர். சில தமிழ்ப் பெண்கள் ஓடிப்போய் அயலிலுள்ள சிங்கள வீடுகளில் தஞ்சமடைகின்றனர். அவ்வாறான உதவி செய்த சிங்களவரும் அவர்களின் வீடுகளும் தாக்கப்படுகின்றன. இவ்வாறு கனத்தையில் தொடங்கிய வன்முறைகள் பொரளைப் பகுதிகளெங்கும் விரிவடைகின்றன. கும்பல் கும்பலாக வௌ;வேறு இடங்களுக்கும் சென்ற காடையர்கள், கொலை, கொள்ளை, தீயிடல் போன்ற வெறியாட்டத்தைத் தடுப்பார் எவருமின்றித் தொடர்கின்றனர்.

அதேவேளையில் பொறளையில் தமிழரின் வீடுகளும், வர்த்தக நிலையங்களும் பற்றியெரிந்து கொண்டிருந்த நிலையில் தமிழருக்கெதிரான வன்முறைகள் தெமட்டகொடை, மருதானை, கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை போன்ற பகுதிகளிலும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பிரதமர் பிரேமதாசவின் கையாளான மாநகர சபை உறுப்பினர் சுகததாஸ என்பவனின் தலைமையில் கோட்டை, புறக்கோட்டை, நாரஹென்பிட்டிய ஆகிய பகுதிகளில் வெறியாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

அன்று இரவு 2 மணியளவில் ஓரளவு வன்முறைகள் ஓய்வுக்கு வருகின்றன. பல இடங்களில் பொலிஸார் முன்னிலையிலேயே வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இன்னொருபுறம் சில இடங்களில் இராணுவத்தினர் தங்கள் வாகனங்களிலிருந்து பெற்றோல் எடுத்துக் காடையர்களுக்கு வழங்கியமையையும் அவதானிக்க முடிந்தது.

24ம் திகதி இரவு 2.00 மணிக்கு நிறைவுக்கு வந்த இன அழிப்பு வெறியாட்டம் 25ம் திகதி அதிகாலை ஆரம்பமாகி புறக்கோட்டையிலுள்ள தமிழர்களின் மொத்த வியாபார நிலையங்கள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டதுடன் ஒல்கொட் மாவத்தை, பிரிஸ்டல் கட்டிடம், யோர்க் வீதி, பெய்சி வீதி, குமரன் வீதி என எல்லா இடங்களிலும் கொலைகளும், தாக்குதல்களும் கொள்ளைகளும் தொடர்கின்றன. நாலாம் குறுக்குத் தெருவில் எரியூட்டப்பட்ட மொத்த வியாபார நிலையம் ஒன்றுக்குள் அதன் உரிமையாளர் தூக்கி வீசப்பட்டு உயிருடன் தீமூட்டிக் கொல்லப்படுகிறார்.

வெள்ளவத்தையில் அன்று காலை ஆரம்பமான கலவரம் தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவ என வெறியாட்டம் பரவுகின்றது. வெள்ளவத்தை சொய்ஸாபுர அடுக்குமாடித் தொடர்களுக்குள் உட்புகுந்த காடையர்கள் வாக்காளர் டாப்புகளை வைத்துக்கொண்டு தமிழர்களை இனங்கண்டு வேட்டையாடுகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தாக்கப்பட்டுக் கைகள் கட்டப்பட்டு அரைக் காற்சட்டையுடனும் பெனியனோடு வீதிக்கு இழுத்து வரப்படுகிறார். அவரின் முன்னாள் மெய்ப்பாதுகாவலரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மக்ஸி பெர்னாண்டோ அவரைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரான சிவசிதம்பரத்தின் வீடு எரியூட்டப்பட்டது.

ஹெந்தளையில் உள்ள குணரத்தினம் அவர்களுக்குச் சொந்தமான சினிமா ஸ்ரூடியோ எரிக்கப்படுகிறது. இதில் பல அரிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிங்கள, தமிழ் படப் பிரதிகள் எரிந்து சாம்பலாகின. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் கம்பர எலிய, கொலுகதவத்த போன்ற சர்வதேசப் பரிசு பெற்ற படங்களும் தமிழில் வெளிவந்த தரமான படங்களான பொன்மணி, குத்துவிளக்கு, வாடைக்காற்று என்பனவும் அழிக்கப்பட்டன. மகாராஜா நிறுவனத்தின் தொழிற்சாலைகள், ஞானம் நிறுவனத்தின் 'சின்ரேக்ஸ்' புடவை உற்பத்தி நிறுவனம் என்பனவும் முற்றாகவே எரித்தழிக்கப்பட்டன. இவற்றால் ஏற்பட்ட நஷ்டம் 800கோடி என்பதுடன் 15,000 சிங்களத் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

இக்கலவரத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் எந்தவொரு நாகரீகமான சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும். அதேபோன்று இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அநாகரீகம் என்ற எல்லையையும் மீறி ராஜதந்திர உறவுகளையே மதிக்காத ஒரு மிலேச்சத்தனமாகும்.

கடவத்தையில் ஒரு நோயாளி அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்படுகிறார். வெள்ளவத்தையில் ஒரு மருத்துவர், அவரது மனைவி, இரு பிள்ளைகள் ஆகியோர் உயிருடன் எரித்துக் கொல்லப்படுகின்றனர்.

25.07.83 அன்று மாலை ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகின்றது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமலே பொலிஸாரின் முன்னிலையில் புத்தபிக்குகளின் தலைமையில் வன்முறைகள் இடம்பெறுகின்றன.

28ம் திகதி கலவரங்கள் பதுளை, லுணகலை, நுவரெலியா என மலையகத்துக்கும் பரவுகின்றது. மேலும் அது கண்டி, இரத்தினபுரி உட்படப் பல பகுதிகளுக்கும் பரவுகின்றன. தொண்டமான் அதிகாரமுள்ள அமைச்சராக இருந்தபோதும் மலையக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

இவ்வாறு நாடு பரந்த ரீதியில் ஏறக்குறைய 3,000 தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு பல ஆயிரம் பெறுமதியான தமிழர்களின் சொத்துகள் கொள்ளையிடப்பட்டும் அழிக்கப்பட்டும் வெறியாட்டம் நடத்தப்பட்டபோது அவற்றைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி ஜனாதிபதியோ அமைச்சர்களோ வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமன்றி 29.07.1983ல் இடம்பெற்ற அமைச்சரவையில் பிரிவினைவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.

அன்றிரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜே.ஆர்.ஜயவர்த்தன பிரிவினைவாதிகள் மேற்கொண்ட வன்முறைகள் சிங்கள மக்களைச் சினம்கொள்ள வைத்துவிட்டன எனவும் அதன் காரணமாகவே பிரிவினைவாதச் சட்டத்தைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனது நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை வெறியாட்டத்துக்கு வருத்தப்படாது பெருமைப்படும் ஒரு அதிபர் அவரைவிட உலகில் வேறு யாரும் இருக்கமுடியாது என்பது மறைக்கமுடியாத உண்மையாகும்.

தொடரும்...

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE