Wednesday 24th of April 2024 11:59:44 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீன வீரர்கள் மூவருடன் தியான்ஹே விண்வெளி  நிலையத்தை அடைந்தது ஷென்சோ -13 விண்கலம்!

சீன வீரர்கள் மூவருடன் தியான்ஹே விண்வெளி நிலையத்தை அடைந்தது ஷென்சோ -13 விண்கலம்!


சீனா தனியாக கட்டமைத்துவரும் தியான்ஹே விண்வெளி நிலையத்தின் இறுதிக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று அனுப்பப்பட்ட ஒரு பெண் உள்பட 3 விண்வெளி வீரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

ஷென்சோ -13 விண்கலத்தின் மூலம் நேற்று சனிக்கிழமை வடமேற்கு சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இவர்கள் விண்வெளிக்குப் புறப்பட்டனர்.

இந்தக் குழுவினர் இன்று பீஜிங் நேரம் முற்பகல் 9:50 மணிக்கு தியான்ஹே விண்வெளி மையத்துக்குள் நுழைந்ததாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அந்நாடு திட்டமிட்டுள்ளது.

‘தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹோங்போ ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் 16-ஆம் திகதி ‘சென்ஷு 12' விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு 90 நாட்கள் தங்கியிருந்து விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை செய்து வந்த அவர்கள் 3 பேரும் கடந்த மாதம் 17-ஆம் திகதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில் நேற்று ஷென்சோ -13 விண்கலத்தின் மூலம் புறப்பட்ட 3 பேரும் 6½ மணி நேர பயணத்துக்கு பிறகு தியான்ஹே விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று காலை தெரிவித்தது.

இந்த விண்வெளி வீரர்கள் 3 பேரும் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ‘தியான்ஹே' விண்வெளி நிலையத்தின் இறுதி கட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE