Saturday 4th of December 2021 01:44:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவாலும் அமெரிக்காவாலும் அரணமைக்கப்படும் இலங்கையின் ஆட்சி! - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இந்தியாவாலும் அமெரிக்காவாலும் அரணமைக்கப்படும் இலங்கையின் ஆட்சி! - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


தென்னிலங்கை அரசாங்கம் உள்நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அவ்வாறே விலையேற்றமும் சம்பள உயர்வு பற்றிய சச்சரவுகளும் தீர்வின்றி நீடித்ததொன்றாக காணப்படுகிறன. ஆனால் கடந்த பல மாதங்களாக பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் அதிக முரண்பாட்டை எதிர்கொண்ட இலங்கை அதற்கான தீர்வை எட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவாலும் இந்தியாவாலும் அதிக அதிருப்தியை அனுபவித்த ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் அதிலிருந்து மீண்டு ஆரோக்கியமான சூழலுக்கு நகர்ந்திருப்பது சமகால நிகழ்வுகள் பதிவுகளாக வெளிவருகின்றன. இக்கட்டுரையும் இந்தியாவாலும் அமெரிக்காவாலும் அரண் அமைக்கப்பட்ட இலங்கை என்பதை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

முதலாவது, இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட உள்ள ஜூலி சங் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதொரு அம்சமாகும். அவர் அண்மையில் செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் முன் கருத்து வெளியிடுகையில் பின்வரும் விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தார்.

ஒன்று, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் அமெரிக்காவும் இலங்கையும் வலுவான பங்காளிகளாக செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.

இரண்டு, இலங்கை இந்து சமுத்திரத்தின் இதயத்தில் உள்ளது. அது மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. உலகளாவிய கடற்பாதைகள் மற்றும் வர்த்தக வழிதடங்களை கொண்டுள்ள முக்கிய துறைமுகங்கள் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ-பசுபிக்குக்கு மிக அவசியமானதாகும். இது அமெரிக்காவின் சிவில் சமூகங்களை, தனியார் துறையினரை உள்ளடக்கி பொது மக்களுடனான இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவினை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

மூன்று, பேண்தகு சூழல் மற்றும் தொழிலாளர் தராதரங்களை கருத்தில் கொள்ளும் வெளிப்படை தன்மை, சர்வதேச சட்டத்துக்கான மதிப்பு, நல்லாட்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட உட்கட்டமைப்பு முதலீடுகளை ஊக்குவிக்க அமெரிக்கா முயல்தல் அவசியம்.

நான்கு, இலங்கையின் வர்த்தகத்தில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகைகளை வழங்க வேண்டும். இது வலுக்கட்டாயமாக கடன் வழங்குவதையும், இரகசிய ஒப்பீட்டுகளுக்கான மாற்றீடுகளை உருவாக்குவதோடு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி, வங்கி போன்றவற்றின் மூலம் அமெரிக்கா தன்னிடமுள்ள சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

ஐந்து, கடல்சார் அழிவுகளையும் அதன் தராதரங்களையும் பேண வேண்டியதன் அவசியத்தையும் அமெரிக்கா உணர்ந்திருப்பதோடு கொழும்பு துறைமுகத்தின் அருகில் அண்மையில் நிகழ்ந்த பேர்ள் கப்பலின் விளைவுகளை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

ஆறு, அமெரிக்காவின் மனிதாபிமான உதவி அவசர சூழ்நிலைகளில் நடவடிக்கைகளை எடுப்பதற்கான திறன் மற்றும் அதன் சுற்றுச்சூழல் கண்காணிப்பு சாதனம் அத்தகைய நெருக்கடியிலிருந்து இலங்கையை பாதுகாப்பதற்கு அவசியமாகும்.

ஏழு, இலங்கை ஆசியாவிலேயே பழமையான ஜனநாயக நாடு. நினைத்து பார்க்க முடியாத வன்முறைகள் மத, இனரீதியான பிளவுகளை எதிர்கொண்டு உள்நாட்டு யுத்தத்தின் துயரத்திலிருந்து மீண்ட நாடு.

என்று குறிப்பிட்டதோடு ஜூலி சங் தனது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டால் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் வலுவான சிவில் சமூகத்துக்கான ஆதரவு தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பாதுகாப்பதற்கு தாம் குரல் கொடுப்பது என்றும், ஜனநாயகமே அமெரிக்காவின் வெளிவிவிவகார அணுகுமுறையின் மையம் என்றார். இதனோடு இருதரப்பு உறவுகளுக்கு மிகவும் பெறுமதியான பங்களிப்பை வழங்கும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் நாம் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டாவது, புத்த பெருமான் பரிநிர்வாணமடைந்த குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்திற்கு முதலில் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை குழுவினர் இந்தியாவுடனான மதரீதியிலான உறவை பலப்படுத்தும் விதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒன்று, புத்தபகவானின் புனித கபிலவஷ்து சின்னங்களை பாதுகாத்துவரும் மகா விகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வன்சன மகிந்த வன்ச நாயக தேரர் அவர்கள் அப்புனித சின்னங்களை குஷிநகருக்கு எடுத்து சென்றுள்ளார். அதற்கான இந்திய அரசாங்கத்தின் முழுமையான அரச கௌரவம் வழங்கப்பட்டதோடு குஷிநகர் மற்றும் சாரநாத் உட்பட்ட பல இந்திய நகரங்களில் அவை காட்சிப்படுத்த உள்ளதாகவும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இரண்டு, இந்தியாவின் பௌத்த வளாகத்தின் மையப்புள்ளியான குஷிநகர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான மக்கள் தொடர்புகளை மேலும் பலப்படுத்துமென இந்திய தரப்பு அறிவித்துள்ளது. இது இந்திய-இலங்கை மக்களுக்கிடையிலான உறவை பலப்படுத்தும் ஒரு பணியென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று, இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாகரீக உறவுகளையும் இரு தரப்பு உறவின் கலாச்சார ஆத்மீக மற்றும் மொழியியல் பிணைப்புகளுக்கு பௌத்த மதம் மையமானதென இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.

நான்கு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த மிக உயரிய பரிசு பௌத்தம் என இலங்கைக்கான தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்பை கொண்ட பகவத் கீதையின் முதல் பிரதியை நாமல் ராஜபக்ஷ பரிசாக வழங்கினார்.

ஐந்து, இலங்கை தூதுக்குழு குஷிநகருக்கு எடுத்துச்சென்ற மிகப்பிரதான பண்பாட்டு சின்னங்களாக இலங்கையின் புகழ்பெற்ற ஓவியர் சோலியாஸ் மென்டிஸ் வரைந்த அசோகரின் மகன் அரஹத் பிக்கு மகிந்த புத்தரின் செய்தியை இலங்கையின் மன்னர் தேவநம்பியா திஸ்ஸாவுக்கு வழங்குவதை சித்தரிக்கும் சுவரோவியமும், புத்தர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் புனித போதி மரத்தின் மரக்கன்றை தாங்கி அசோகரின் மகள் தெறி பிகுனி சங்கமித்தாவின் இலங்கை வருகையை காட்டும் மற்றோர் சுவரோவியமும் இந்தியாவிற்கு களனி ராஜமகா விகரையில் அன்பளிப்பாக வழங்கப்படுமென இந்தியாவிற்கான இலங்கை தூதரகம் தி ஹிந்துவிற்கு தெரிவித்தள்ளது.

எனவே, மேற்குறித்த இரு தேசங்களும் இலங்கையுடனான உறவு பலப்படுத்துவதில் பரஜ்பரம் இரு தரப்புக்களும் ஒன்றிணைகின்றன. இதற்கான அடிப்படை ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டம் என்பதே துயரமான செய்தியாகும். இலங்கை அண்மையில் எதிர்கொண்ட அனைத்து பிராந்திய சர்வதேச நெருக்கடிகளையும் சரிசெய்வதில் வெற்றி கண்டுள்ளது. அமெரிக்காவும் இந்தோ-பசுபிக் உபாயத்தில் இலங்கையை ஈர்க்கும் விதத்தில் இராஜீக நகர்வுகளை முன்னிறுத்தி இலங்கை துறைமுகங்களோடு நெருக்கமான உறவை வகுத்துள்ளது. இந்தோ-பசுபிக்கின் முக்கியமான நிலையமாக இலங்கையை மாற்றுவதில் அமெரிக்காவிற்கு உள்ள விருப்பத்தை ஜூலி சங் வெளிப்படுத்தியுள்ளார். எனவே அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் ஏற்படக்கூடிய அனைத்து நெருக்கடிகளையும் அரசாங்கம் எதிர்கொள்ளக்கூடிய உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளதெனவும் ஜூலி சங் தனது செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். தென்னிலங்கையின் ஆட்சியை பாதுகாப்பது பேணுவது பராமரிப்பதிலும் அமெரிக்கர்களுக்கு அதிக பங்குண்டது என்பதனை ஜூலி சங்கின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன.

அவ்வாறானதொரு கோணத்திலேயே குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தினது நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளது. சீன எதிர்ப்புவாதத்தை முன்னிறுத்திய இந்தியா இலங்கையின் விட்டுக்கெர்டுப்புகளாலும் அணுகுமுறையாலும் இலங்கை-இந்தியா நட்புறவாக ஒன்றினைவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதனடிப்படையிலேயே இலங்கை-இந்திய உறவு இந்தோ-பசுபிக் உபாயத்துக்குள்ளும் தனித்துவ அடையாளத்துக்குள்ளும் இயங்க ஆரம்பித்துள்ளது. இத்தகைய உறவின் மூலாதாரம் பௌத்த கலாசாரமாகும். பௌத்த கலாசாரத்தை முன்னிறுத்தி இலங்கை-இந்திய உறவை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் பலப்படுத்தி உள்ளனர்.

எனவே, தென்னிலங்கையின் ஆட்சியானது, இந்தியாவாலும் அமெரிக்காவாலும் பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய உறவு நிலையை பலப்படுத்துவதில் இலங்கையின் இராஜதந்திரிகளின் முனைப்பான நடவடிக்கைகளே காரணமாகும். ஈழத்தமிழர் தமது பலவீனமான அரசியலால் அனைத்து வாய்ப்ப்புக்களையும் இழப்பதோடு மட்டுமன்றி பிராந்திய சர்வதேச சக்திகளின் முதலீட்டு இனமாக மாறிவருகிறது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE