Friday 19th of April 2024 01:32:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக; சமலுக்குக் கூட்டமைப்பு, முன்னணி எம்.பிக்கள் கூட்டாகக் கடிதம்

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக; சமலுக்குக் கூட்டமைப்பு, முன்னணி எம்.பிக்கள் கூட்டாகக் கடிதம்


மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"ஜனாதிபதியின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 'போகஸ்வெல' எனத் தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேனவின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும், பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச் சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு வவுனியா மாவட்ட தற்போதைய அரச அதிபரால் சமன் பந்துலசேனவின் கோரிக்கை முன்மொழிவாக அனுப்பிவைக்கப்பட்டது.

வடக்கு - வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றி அமைத்து அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும், இன நல்லிணக்கத்தைப் பாதிக்கின்ற செயலாகவும் இது அமையும் என்பதால் இந்த நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசின் இவ்வாறான செயல்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தங்களை நாடி நிற்கின்றோம்.

இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த போருக்கு வித்திட்டது. இன நல்லுறவைப் பாதிக்கும் விடயமாக அமைந்திருப்பதையும் நினைவுபடுத்துகின்றோம்" - என்றுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE